12.08.2017 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்குக் கவிக்கோ மன்றத்தில் நஸாயீ தமிழாக்கம் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது.
நீங்கள் எத்தனையோ நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருப்பீர்கள். விழாத் தலைவர், நூல்களை வெளியிடுவோர், முதல்படி பெறுவோர், வாழ்த்துரை வழங்குவோர், பாராட்டுரை வழங்குவோர், தொகுப்புரை வழங்குபவர், நன்றியுரை வழங்குபவர் என்று மேடை நிறைந்திருக்கும். ஆனால் எந்த நூல் வெளியிடப்பட இருக்கிறதோ அந்த நூல் கண்ணிலேயே தென்படாது. அட்டைகூடத் தெரியாத அளவுக்கு வண்ணத்தாளில் சுற்றப்பட்டு, அது போதாதென்று அதன்மீது வண்ண ரிப்பனையும் இறுக்கமாகக் கட்டி, ஏதோ கைதி மாதிரி, மேடையில் உள்ள சிறிய மேசையில் வைக்கப்பட்டிருக்கும். வெளியீட்டின்போதுதான் அந்த நூல் மீண்டும் விடுதலை பெற்று நம் கைகளில் குழந்தையைப் போல் சிரிக்கும்.
புத்தகம் என்பது உயிருடன் வாழ்ந்த, வாழ்கின்ற மனிதனின் படைப்பாக்கம்தானே? அந்த உயிருள்ள மனிதனின் இதயம்தானே அந்த நூலினுள்ளும் துடித்துக்கொண்டிருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் அந்த நூலின் ஆசிரியர் இறந்துபோயிருக்கலாம். ஆனால் அவருடைய உயிரின், உணர்ச்சியின் துடிப்புகள்தாமே அந்த நூல்? இதை முஸ்தபா அண்ணன் உணர்ந்திருப்பார் போல. நஸாயீ நூல் வெளியீட்டு விழாவில் மேடை நாயகர்கள் யார் தெரியுமா? நம்புங்கள், வெளியீடு கண்ட ஆறு புத்தகங்களும் மன்னர்கள் போல் ஆறு நாற்காலிகளில் கம்பீரமாய் அமர்ந்திருந்தன.
விழா விருந்தினர்களான முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கவிஞர் மு. மேத்தா, பழ.கருப்பையா, பேராசிரியர் அ. மார்க்ஸ், முனைவர் சதக்கத்துல்லாஹ், ஆளூர் ஷா நவாஸ், ராணி இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா. சாமி, அருட்தந்தை சேவியர், மௌலவி கம்பம் பீர்முஹம்மது பாகவி, இளம்முனைவர் மௌலவி சதீதுத்தீன் பாகவி, நஸாயீ நூலின் மேற்பார்வையாளர் மௌலவி யூசுஃப் மிஸ்பாஹி, நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி ஆகிய அனைவருமே மேடையில் அல்லாமல் அரங்கில்தான் அமர்ந்திருந்தனர். பேசும்போது மட்டும்தான் மேடை. உண்மையிலேயே இதுதான் வித்தியாசமான விழா.
நூல்கள் வெளியீட்டு விழா என்றால் இனி நூல்கள்தாம் மேடை நாற்காலிகளை அலங்கரிக்க வேண்டிய நாயகர்கள் என்பதை தமிழ் இலக்கிய உலகிற்கு ரஹ்மத் பதிப்பகமும் அண்ணன் முஸ்தபா அவர்களும் உணர்த்திவிட்டார்கள். இந்த வித்தியாசமான சிந்தனையையும் ஏற்பாட்டையும் வாழ்த்துவதற்குச் சொற்கள் இல்லை. உண்மையிலேயே புத்தகங்கள் மகிழ்ந்த புதிய திருநாள்!
மௌலவி மஸ்தான் அலீ பாகவி உமரி, மௌலவி பஸ்லுர் ரஹ்மான் உமரி, மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பயீ, மௌலவி வி.எஸ். முஹம்மது காசிம் பாகவி, மௌலவி அப்துல் ஸமது பாகவி, மௌலவி சைஃபுர் ரஹ்மான் பிலாலி, மௌலவி ஜீலானி மிஸ்பாஹி, மௌலவி அப்துர் ரஸ்ஸாக் பிலாலி, டாக்டர் ஜாகிர் ஹுசைன் பாகவி உள்ளிட்ட ஆலிம்கள், பிறதுறை அறிஞர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக வருகை புரிந்திருந்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.
-சிராஜுல் ஹஸன்
நூலின் பெயர்: சுனனுந் நஸாயீ (நபிமொழித் தொகுப்பு)
மூலநூலாசிரியர்: அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்- 215-303 ஹிஜ்ரீ)
தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
விலை: ரூ. 400/-
வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதானச் சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை-4
தொடர்புக்கு: 94440 25000
===================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக