வியாழன், 16 நவம்பர், 2017

இலக்கை உயர்வாக்கு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==========================================

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்திற்கேற்பவே உயர்வடைகின்றான்; முன்னேறுகிறான். மனதில் ஆழமான வேட்கையும் உயர்வான இலக்கும் இருந்தால் அவன் அதை நிச்சயம் அடைவான். மனதில் மிகச் சிறிய இலக்கும் தாழ்வான எண்ணமும் இருந்தால் தாழ்வான நிலையில்தான் அவனுடைய வாழ்க்கை அமையும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இலக்குகளில் உயர்வானதையே விரும்புகின்றான்; அவற்றில் மிகவும் கீழானதை வெறுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஅஜமுல் அவ்சத்)

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி இலக்கு சொர்க்கத்தை அடைவதுதான். சொர்க்கத்தில் எட்டு வகையான உயர்மதிப்பு உள்ளது. அதில் மிக உயர்ந்த எட்டாவது சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்சையே அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ: 2790) இதன்மூலம் "இலக்கை உயர்வாக்கு' எனும் பாடத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தருகின்றார்கள்.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீரின் அளவிற்கே மலரின் தண்டு நீண்டிருக்கும். அதுபோலவே ஒருவர் தம் உள்ளத்தில் எண்ணும் அளவிற்கே அவருடைய வாழ்க்கை உயர்ந்திருக்கும் எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உள்ளத்தின் எண்ணத்தை விசாலப்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமாக உள்ள ஒருவன் மக்களிடம் கையேந்தியே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணி, அதையே தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். காலப்போக்கில் நிறையப் பணத்தைச் சேர்த்துவிடுகின்றான். என்னதான் அவன் பணத்தைச் சேர்த்தாலும் "பிச்சைக்காரன்' எனும் பெயர்தான் அவனுக்குக் கிடைக்கும்.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவன், "பிறரிடம் கையேந்துவது இழுக்கு' என்றெண்ணி, தன்னால் இயன்ற வேலையைச் செய்கிறான்; சின்னச்சின்னப் பொருள்களை விற்பனை செய்கிறான்; அதில் கிடைக்கும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு நிம்மதியோடும் தன்மானத்தோடும் வாழ்கிறான். மேற்கண்ட இரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உயர்வான வாழ்க்கை என்ற உண்மை புலப்படும்.

வாழ்வதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவரவர் கையில் உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொறுத்து அவரின் வாழ்க்கை மதிப்புமிக்கதாகவோ தரம்தாழ்ந்ததாகவோ மாறுகிறது.  திருடுதல், பிச்சையெடுத்தல், ஏமாற்றுதல், பொய்சொல்லுதல், கொள்ளையடித்தல், கையூட்டுப் பெறுதல் உள்ளிட்ட எத்தனையோ இழிவான, கீழ்த்தரமான வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கலாம்.  ஆனால் இவையெல்லாம் அவனுக்கு உயர்மதிப்பைப் பெற்றுத்தரா. இவையெல்லாம் அவரவரின் தாழ்வான எண்ணத்தையும் கீழான மனோநிலையையுமே காட்டுகின்றன.

மேலான எண்ணமும் உயரிய இலக்கும் உடையோர் இத்தகைய இழிவான வாழ்வைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். நம்மால் பிறர் வாழ வேண்டும்; ஏழைகள் பயன்பெற வேண்டும்; நம் உழைப்பில் பிறர் உண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களே உயரிய இலக்குடையோர்.

உயர்வான இலக்கை அடைய வைராக்கியம் கொண்டோர், தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற தடைகளையோ சிக்கல்களையோ ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். எத்தனை துன்பம் வந்தபோதிலும், இடர்ப்பாடுகள் குறுக்கிட்டபோதிலும் அடைய வேண்டிய இலக்கைத் தொடுகின்ற வரை ஓயமாட்டார்கள். அத்தகையோர் "வைராக்கிய மனம் கொண்டோர்' என்றும் "மனத்திட்ப மிக்கோர்' என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

(நபியே!) மனத்திட்பமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. (46: 35) தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் நரகத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்ற உயர்ந்த இலக்கையும் இலட்சியத்தையும் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமும் ஏகத்துவக் கொள்கையை நயமாக எடுத்துரைத்தார்கள். அதனால் அவர்கள் எதிர்கொண்ட இடர்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் சடைவும் சோர்வும் ஏற்பட்டபோதுதான், அல்லாஹ் மேற்கண்ட அறிவுரையை அவர்களுக்கு வழங்குகின்றான்.

உயரிய இலட்சியத்தையும் இலக்கையும் கொண்டோர் தாம் அதை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கண்டு மிரண்டுபோய்விடக்கூடாது; சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடக்கூடாது. மாறாக எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை மேற்கண்ட இறைவசனம் உள்ளூர உணர்த்துவதை அறியலாம்.

அவ்வாறு பல்வேறு சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொண்ட பின்னர்தான் பல்வேறு அறிஞர்கள் பற்பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் தம் ஆய்வின் தொடக்கத்திலேயே வெற்றியை எதிர்பார்த்திருந்தாலோ, தோல்வியைக் கண்டு துவண்டு  போயிருந்தாலோ அவர்கள் தம் கண்டுபிடிப்புகளை உலகோருக்குக் கொடையாகக் கொடுத்திருக்க முடியாது. பல்வேறு சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொண்டு, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு முயற்சிக்குப்பின் முயற்சி எனக் கடுமுயற்சி செய்து, அடைய வேண்டிய இலக்கை அடைந்தே தீருவது என வைராக்கிய எண்ணம் கொண்டதால்தான் இன்று நாம் பல்வேறு வசதிகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால், மனம் நொந்து, நெக்குருகித் தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்வோர் உயரிய இலட்சியத்தைத் தம் மனத்தில் விதைத்துக்கொள்ளாதவர்கள்; தோல்வியை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள்; மதிப்பெண்ணுக்குள்தான் வாழ்க்கை உள்ளதென குறுகிய எண்ணம் கொண்டவர்கள். மாறாக, ஒரு தடவை தோற்றாலும் அதற்கான மாற்று வழியை அறிந்து மறுமுறை வென்று தம் இலட்சியத்தை அடைய முனைவதே உயரிய இலக்குடையோர் செய்யும் பணி.

மனத்தைத் தளர விட்டுவிட்டால் உயரிய இலட்சியத்தை ஒருபோதும் அடைய முடியாது. மன உறுதிதான் நம்முடைய உந்து சக்தி. அதை வைத்துக்கொண்டுதான் நாம் மேல்நோக்கி நகர முடியும். எனவே உயரிய இலட்சியத்தை அடையத் துடிப்போர் மனத்தையும் தன்னம்பிக்கையையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதற்கான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்.
"எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களுள் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.'' (நூல்: முஸ்லிம்: 628) ஒரே ஒரு பதவிதான். அது தமக்குக் கிடைக்க வேண்டுமென உயரிய இலக்கை எண்ணியுள்ளார்கள். அது அவர்களுக்கே கிடைக்க நாம் அல்லாஹ்விடம்  பரிந்துரை செய்தால் அதற்குப் பிரதிபலனாக, நமக்குச் சொர்க்கம் கிடைக்க அவர்கள் பரிந்துரை செய்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு பெரிய இலக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உயரிய இலக்கைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்கான சான்றாக உமர் (ரளி) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்ளலாம்: "உங்கள் மனஉறுதி பலவீனமடைந்துவிட வேண்டாம். மனஉறுதி பலவீனமடைந்துவிட்டால் உயரிய இலக்கை அடைவதைவிட்டு அது உங்களைத் தூரமாக்கிவிடும்.'' 

நாம் கொள்ளும் இலக்கு உயர்வானதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர்வானதை அடைய முடியும். உயரிய இலக்கை மனத்தில் கொண்டோர், முன்னேற வேண்டும் என்ற ஆசையைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி மனத்தைத் திருப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அடைய வேண்டிய இலக்கை மீண்டும் மீண்டும் மனத்தில் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க வேண்டும். அதை அடையும் வரை அதற்கான முயற்சியைக் கைவிடக் கூடாது. இவ்வாறு செயல்பட்டால் யாரும் உயர்வான இலக்கை அடையலாம். அத்தோடு, "நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்புச் சாட்டுபவர்களை நேசிக்கின்றான்'' (3: 159) எனும் இறைவசனத்திற்கேற்ப அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து அடியெடுத்து வைத்தால் கொண்ட இலக்கை எளிதில் அடையலாம். 
=================================================================





கருத்துகள் இல்லை: