திங்கள், 18 மே, 2026

தோல்வியை ஏற்கும் மனம் வேண்டும்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

 

வாழ்க்கையில் வெற்றி-தோல்வி மாறி மாறி வரும். அதுதான் இயற்கை நியதி. வெற்றிபெறும்போது மகிழ்ச்சியடைகின்ற நாம் தோல்வியடைகின்றபோது அதை ஏற்றுக்கொள்ளும் மனத்திட்பம் நமக்கு இருப்பதில்லை. இன்று தோற்றவன் நாளை வெற்றிபெறலாம்; இன்று வென்றவன் நாளை தோற்கலாம். ஆக இது ஒரு சுழற்சி முறையாகும். மனிதர்கள் சிலர் வெற்றியைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றார்கள்; தோல்வியைக் கண்டால் துவண்டுபோய் விடுகின்றார்கள். அதன்பின் அடுத்த தடவை போட்டியிலிருந்து விலகிவிடுகின்றார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 

 

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத(அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின்மீது வந்தார். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்று கூறினார்கள். (புகாரீ: 2872) தாம் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் தம்முடைய ஒட்டகத்தை மற்றோர் ஒட்டகம் முந்திவிட்டதை மதிப்புக் குறைவாக எடுத்துக்கொள்ளாமல், ‘இதுதான் அல்லாஹ்வின் நியதி’ என்று கூறி, மனித மனங்களைச் செம்மைப்படுத்தினார்கள். தோல்வியை ஏற்க எப்போதும் தயாராகவே இருந்தார்கள்.

 

 

உலக அதிவேக மனிதராக அறியப்படுகிற உசேன் போல்ட், இலண்டனில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்றபோது ஜஸ்டின் கேட்லின் (Justin Gatlin) என்பவரிடம் தோற்றுப்போனார். 2008 முதல் 2016 வரை மூன்று தடவை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்; 100மீ, 200மீ, பந்தயங்களில் பல உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்; இறுதியில் ஒருவரிடம் தோற்க நேரிட்டபோது அந்தத் தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டார். இதுவே பக்குவப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடு.

 

 

மின்சாரத்தின் மூலம் எரிகின்ற மின்விளக்கைக் கண்டறிந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால் அவர் அதைக் கண்டறியுமுன் ஆயிரக்கணக்கான தடவை தோல்வி கண்டார். அந்தத் தோல்விகள் அவரை முடக்கிவிடவில்லை.  மாறாக ஒவ்வொரு தடவை தோல்விக்குப் பின்னரும், ‘இந்த முறைப்படி எரிய வைக்க முடியாது என்பதைக் கண்டறிந்தேன்’ என்று கூறினார். அதைத் தோல்வியாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து முயன்று இறுதியில் மின்விளக்கைக் கண்டுபிடித்துப் பொதுமக்களுக்குப் பயன்படும்படி செய்தார்.

 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஒரு தடவை ஓட்டப்போட்டி வைத்தார்கள். அதில் தம் மனைவியிடம் தோற்றுவிட்டார்கள்.  (இருப்பினும் அத்தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள்.) பின்னர் ஒரு தடவை ஓட்டப்போட்டி நடத்தினார்கள். அப்போது ஆயிஷாவின் உடல் பருமனாகிவிட்ட காரணத்தால், அவரைவிட முந்தி, வென்றுவிட்டார்கள். (அச்சமயத்தில் அவர் தம் மனம் வருத்தமடையக் கூடாது என்பதற்காக) ‘இது ஏற்கெனவே உள்ள உனது வெற்றிக்குச் சமமாக ஆகிவிட்டது’ என்று கூறித் தேற்றினார்கள். (தாருகுத்னீ: 3819)

 

 

ஆக நபியவர்கள் தோற்றபோது, தாம் ஓர் இறைத்தூதராக இருப்பதால் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக இயல்பாகத் தம் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். இருப்பினும் இதில் மற்றொரு செய்தியும் உள்ளது. நபியவர்கள் தம் மனைவி ஆயிஷாவுக்காக வேண்டுமென்றே தோற்றார்கள். வெற்றிபெற்ற ஆயிஷா மகிழ்ச்சியடைந்தார்கள். எனவே நாம் விட்டுக்கொடுப்பது மற்றவருக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றிருந்தால், விட்டுக்கொடுப்பதே சிறந்தது. அதிலும் குறிப்பாக மனைவிக்காக விட்டுக்கொடுப்பது சாலச் சிறந்தது.

 

 

வெற்றி, தோல்வி இரண்டும் ஒருவரது வாழ்க்கையில் மாறி மாறி வரக்கூடியதுதான். ஒவ்வொன்றையும் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வெற்றியடையும்போது, ‘மற்றவர் யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது’ என்ற எண்ணம் நம் மனத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வல்லவனுக்கு மேல் வல்லவன் ஒருவன் இருப்பான்’ என்பதுதான் உலக இயல்பு. இன்று வெற்றி பெற்றுள்ள நாம், நாளை யாரிடமாவது தோல்வியைத் தழுவலாம். அத்தகைய உணர்வோடு உள்ள நம்மை யாரும் மனத்தளவில் சோர்வடையச் செய்துவிட முடியாது. ஏனெனில் வெற்றி பெறுகிறபோது உவகைகொள்கிற நாம், தோல்வியைத் தழுவும்போது அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

 

 

பள்ளி மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். நிறைய மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, அவரவரின் தேர்வு எண் வெளியிடப்பட்டதும் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தோல்வியடைந்தோர்  சிலர் தம் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலாமல் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். அல்லது அத்தோடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இப்போதெல்லாம் தேர்ச்சி பெறாதோர் தற்கொலை செய்துகொள்வதைவிட, எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றோர்தாம் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க வேண்டும்.

 

 

எதிர்பார்த்த இலாபம் கிடைக்காவிட்டாலோ, வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டுவிட்டாலோ தாங்க முடியாத துயரத்தை அடைகின்றார்கள். மனதளவில் துவண்டுபோய்விடுகின்றார்கள். இத்தகையோர் இத்தருணத்தில் தம்மைத் தாமே திடப்படுத்திக்கொண்டு, தமக்குத்தாமே ஆறுதல் கூறிக்கொண்டு, ‘படைத்தோன் இறைவன் நிச்சயம் இந்நிலையை மாற்றியமைப்பான்’ என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து அவ்வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதுதான் பெரும்பாலான வியாபாரிகளுக்கு இன்றையத் தேவை. ஒன்றில் தோற்று, மற்றொன்றைத் தொடங்குவது, அதிலும் தோற்று மற்றொன்றைத் தொடங்குவது எதிலும் ஆழ்ந்த அனுபவத்தைத்  தராது. எனவே தோல்விக்கு என்ன காரணம் எனக் கண்டறிந்து அதைச் சரிசெய்து, மீண்டும் புத்துணர்வோடு வியாபாரத்தைத் தொடர வேண்டும்.

 

 

பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியடைகின்ற நாம் பதவி இறக்கப்பட்டால், அல்லது உயர் பதவியிலிருந்து இரண்டுபடி கீழ்நிலைப் பதவியில் போடப்பட்டால் அதிர்ந்துவிடுகின்றோம். ஆனால் பதவி என்பது இறைவன் தருவது, அவன் நாடினால் உயர்த்துவான்; அவன் நாடினால் கீழே தாழ்த்துவான் என்ற உறுதியோடு நடைபோட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: “எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3: 26)

 

 

இவ்வசனத்தின் கருத்தை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, இறைநம்பிக்கையோடு பதவியில் இருப்போர் எதிர்பாராவிதமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, உயர் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டாலோ தளர்ந்துபோய்விட மாட்டார்கள். மாறாக இயல்பாகச் செயல்படுவார்கள்.

 

 

இஸ்லாமிய வரலாற்றில் அத்தகைய ஒருவரை நாம் காணலாம். அவர்தாம் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போராடி வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்தார். பின்னர் உமர் இப்னு அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் கூஃபா நகரத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 

 

நல்லவிதமாகத் தம் ஆளுநர் பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு வகையில் அம்மக்களுக்கு அவர் செய்த செயல் பிடிக்கவில்லை. அதனால் கூஃபாவின் மக்கள், ஸஅத் பின் அபீவக்காஸைப் பற்றி உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டனர். அதனால், முஹம்மது பின் மஸ்லமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஸஅதிடம், “உமர் ரளியல்லாஹு அன்ஹு உங்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, உங்களுக்குப் பதிலாக வேறொருவரை நியமித்துவிட்டார்கள்” என்ற செய்தியைச் சொல்லி, அவரை "என்னிடம் வரச்சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பினார்கள். 

 

ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அங்கு வந்து, உமர் பின் அல்-கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு,  “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உம்மைத் திறமையின்மை அல்லது துரோகத்தின் காரணமாகப் பதவியிலிருந்து நீக்கவில்லை; மாறாக, மக்கள் உம்மைப் பற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதாலும், அவர்களுக்கு என் நியாயத்தைக் கூற விரும்பியதாலும்தான்” என்று கூறினார்கள். (தாரீகுத் தபரீ)

 

அச்செய்தியைக் கேட்டதும், எவ்வித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி, உடனடியாக ஆளுநர் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, சாதாரண குடிமக்களுள் ஒருவராக வாழத் தொடங்கினார். இதுதான் பக்குவம் என்பது. தோல்வியை-பதவி இறக்கத்தை மனதார ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விற்காகவே போராடுவோர் எந்த நிலையிலும் அப்பதவியை இழக்கவும் தோல்வியை ஏற்கவும் தயாராகவே இருப்பார்கள். ஏனெனில் அப்பதவி அவர்களின் உள்ளத்தில் எவ்வித உயர்வையோ பெருமையையோ ஏற்படுத்தியிருக்காது.

 

உல்லாசப் பயணம் செல்வதாக முதல் நாள் திட்டமிடுகின்றோம்; பயணத்திற்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன; பிள்ளைகள் எல்லோரும் ஆவலோடு இருக்கின்றார்கள். மறுநாள் புறப்படுவதற்குமுன், கணவனுக்கோ மனைவிக்கோ அவசர வேலை வந்துவிட்டது. அல்லது உறவினர்கள் யாரோ ஒருவர் இறந்துவிட்டார்; அல்லது நோய்வாய்ப்பட்டுவிட்டார். அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அல்லது ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு, அந்தப் பயணம் தடைபட்டுவிட்டது. இந்த நேரத்தில் கணவனோ மனைவியோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதோ கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவதோ கூடாது. “சரி, பரவாயில்லை. இன்னொரு நாள் நாம் செல்வோம்” என்று கூறி, தவிர்க்க முடியாக் காரணத்தால் தடைபட்ட அச்சூழ்நிலையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் தோல்வியைக் கண்டு மனந்தளராத மனத்திட்பம் உடையோர்க்கு அழகு.

 

 

உறவினர்கள் சிலர் நம் வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வருவதாகச் சொல்கிறார்கள். நாமும் அந்நாளில் உற்சாகமாக எழுந்து அவர்களுக்காகவே சிறப்பான விருந்து ஏற்பாடு செய்கிறோம். திடீரெனச் செல்பேசியில் ஓர் அழைப்பு வருகிறது. “அண்ணி, எங்களால் இன்று உங்கள் வீட்டிற்கு வர இயலவில்லை; நாங்கள் இன்னார் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அங்கு நாங்கள் சாப்பிட்டுக்கொள்கிறோம். இன்னொரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறோம்” என்று கூறித் தம் வருத்தத்தைத் தெரிவிக்கின்றார்கள்.

 

 

அதைக் கேட்ட நாம், மிகுந்த சினம்கொண்டு, “உங்களுக்காகவே கறியெல்லாம் வாங்கி, பிரியாணி சமைத்து வைத்திருக்கிறோம். நீங்கள் வராவிட்டால் எப்படி, நாங்கள் அந்த உணவையெல்லாம் என்ன செய்வது” என்று சொல்லாமல், “சரி, பரவாயில்லை. இன்னொரு நாள் கண்டிப்பாக வாருங்கள்” என்று கூறி அவர்களுக்கு எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சூழ்நிலையை நாம் புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக “நீங்கள் எங்களை மதிப்பதே இல்லை; நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை; நாங்கள் உங்களுக்காகவே சமைத்துவிட்டோமே; நாங்கள் இப்படிச் செய்திருந்தால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா; இனி உங்களோடு நான் பேசவே மாட்டேன்” என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கக்கூடாது.

 

 

ஆக இது போன்று எதிர்பாரா நிகழ்வுகள் அவ்வப்போது நம் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நாம் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் புரிந்துகொண்டால் நாம் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழலாம். மாறாக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நம் நண்பர்களையும் உறவினர்களையும் கோபித்துக்கொண்டு, அவர்கள் எதிர்பாராவிதமாகச் செய்ததை வேண்டுமென்றே செய்ததாக, எதிர்மறையாக எண்ணிக்கொண்டு, அதையே நம் மனத்தில், மாடு அசைபோடுவதுபோல் மீண்டும் மீண்டும் அதை நினைவுகூர்ந்து நம்முடைய மகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.

 

 

பாத்திரத்திற்கேற்பத் தண்ணீர் தன்னை மாற்றிக்கொள்வதைப்போல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மை நாம் மாற்றிக்கொண்டால்-தகவமைத்துக்கொண்டால் நாம் நம் வாழ்வில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். மாறாக என்றென்றும் மகிழ்ச்சியாகவே வாழ்வோம். அத்தகைய மனநிலையை உயர்ந்தோன் அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

=============================

திங்கள், 4 மே, 2026

தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவையின் மருத்துவ விழிப்புணர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


கண்ணியத்திற்குரிய உலமாக்களே! சமுதாயச் சொந்தங்களே!


தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவையின் மருத்துவ விழிப்புணர்வு


உறுப்பு மாற்றுச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைக்காகப் பொருளாதார உதவி நாடி ஒவ்வொரு நாளும் நம் சமுதாய மக்கள் பள்ளிவாசலை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று எந்நாள் வசூல் செய்து, எப்போது சிகிச்சை செய்வது? அதற்குத் தீர்வு காணும் விதத்தில் மிலாப் பவுண்டேஷன்  (Milaap)  உள்ளது. அது ஓர் உலகளாவிய உதவி மையம். அதற்கென ஓர் இணையதளம் உள்ளது. அதில் பதிவுசெய்தால் அவர்களுடைய சிகிச்சைக்குத் தேவையான பணத்தை அந்த நிறுவனம் குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் செலுத்திவிடும். 


சான்றாக, சென்னை- குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனைக்குச் சென்று ஒருவர் தமக்கான நோய் விவரத்தைக் கூறினால் அங்குள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு, முதற்கட்டச் செலவுத்தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான செலவு எவ்வளவு ஆகும் உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்துவிடுவார்கள். பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பலாம். அதற்கான தொகையை அந்த நிறுவனம் நேரடியாக அந்த மருத்துவனையின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். இந்த விவரத்தை ஆலிம்களும் சமுதாயப் பிரமுகர்களும் தெரிந்து வைத்துக்கொண்டு நம் சமுதாயச் சகோதர சகோதரிகளுக்குத் தெரிவித்தால் அவர்கள் பயன்பெறுவார்கள்.


ரெலா மருத்துவமனை தொடர்பு எண்: 

044 6666 7777 / 

044 6666 7732 


அன்புடன்:

முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி

அமைப்புச் செயலாளர்

தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவை 

சனி, 25 ஏப்ரல், 2026

அன்பு அல்லாஹ்வின் அருட்கொடை!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இவ்வுலகில் தோன்றிய ஒவ்வோர் உயிரினமும் தத்தம் இனத்தின்மீது அன்பு காட்டுகிறது. ஆனால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு மகத்தானது. அன்பு எனும் ஒற்றை நூலில்தான் ஒவ்வோர் உள்ளமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்பெனும் நூல் வழியாகத்தான் நாம் பிறரின் உள்ளத்தில் இடம் பிடிக்க முடிகிறது. அன்பு மட்டும் இல்லையென்றால் இவ்வுலகில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் போயிருக்கும். இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும்.

 

 

அன்பு அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாக இருப்பதால் அதனை யாரும் பணம் கொடுத்துப் பெற முடியாது. அது அல்லாஹ்வே அவரவர் உள்ளத்தில் விதைப்பதாகும். அல்லாஹ் நாடியோருக்கே அத்தகைய அன்புள்ளம் வாய்க்கிறது. மற்றோர் அன்பற்றவர்களாகவும் கல்நெஞ்சினராகவும் வாழ்ந்து மடிகின்றனர். அன்புள்ளோர் மட்டுமே அல்லாஹ்வின் அருளால் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்கள். அன்பெனும் அருட்கொடையை அல்லாஹ்வே வழங்குவதாகப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

புவியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். (8: 63)

 

 

ஆம்! எவ்வளவுதான் பணத்தைச் செலவு செய்தாலும் ஒருவரின் உண்மையான அன்பைப் பெற்றுவிட முடியாது. நாம் செலவழிக்கின்றபோது அன்பு கொண்டவனைப்போல் பாசாங்கு காட்டுவதும் செலவழித்து முடித்தபின் அன்பே இல்லாதவர்களைப்போல் அகன்றுவிடுவதும் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகளாகும்.

 

 

அன்புக்கு நிபந்தனை கிடையாது: உண்மையான அன்புக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. பெற்றோரின் அன்பு இதில் முதலிடம் வகிக்கிறது. பின்னர் கணவன்-மனைவியின் அன்பு. பிறகு அடுத்தடுத்த அன்பு இடம் வகிக்கிறது. பெற்றெடுத்த பிள்ளைமீது பெற்றோர் காட்டுகின்ற அன்பு நிபந்தனையற்றதாகும். எதிர்காலத்தில் பிள்ளைகள் ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்துத் தருவார்கள் என்ற அற்பமான எந்த எதிர்பார்ப்புமின்றி அவர்கள் தம் பிள்ளைகள்மீது அன்பு செலுத்துகின்றனர். பெற்றெடுத்த பிள்ளைகளைப் பராமரித்து வளர்ப்பதும், கல்வியறிவைப் புகட்டுவதும், ஒழுக்கமிக்கோராக உருவாக்குவதும் பெற்றோர் தம்முடைய பிள்ளைகள்மீது செலுத்தும் அன்பின் வெளிப்பாடுதான் என்றால் மிகையில்லை.

 

 

ஒருவர் பிறர்மீது செலுத்தும் அன்பானது அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவனது அருட்கொடை மட்டும் இல்லையென்றால் யாரும் யார்மீதும் அன்பு செலுத்தியிருக்க மாட்டார்.  அதற்கான சான்றாக அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். (3: 159) ஆகவே ஒருவர் அதீத அன்பு கொண்டவராக நடந்துகொள்வதும் ஒருவர் கல்நெஞ்சம் கொண்டவராக நடந்துகொள்வதும் அல்லாஹ் அவரவர் இயல்பிலேயே படைத்த குணமாகும். அது அவனது அருளும் கருணையுமாகும். எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சமுதாய மக்கள்மீது மிகுந்த அன்புடையோராக நடந்துகொண்டார்களென்றால் அது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். அவர்கள்மீது அல்லாஹ் காட்டிய கருணையாகும். அதுபோன்றே இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர் மீது காட்டும் அன்புக்கும் கருணைக்கும் அல்லாஹ்வே காரணமாவான். அவனுடைய அருட்கொடையாலேயே நாம் அன்புடையோராக வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் அன்பு குறைந்து வருகிறபோதெல்லாம், அதை மிகுதியாக வழங்குமாறு அல்லாஹ்விடமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

 

தம்பதியர் அன்பு: கணவன் தன் மனைவி மீதும் மனைவி தன் கணவன்மீதும் காட்டுகிற அன்பு காதல் எனப்படுகிறது. அந்த அன்பின் நூலில்தான் கணவன்-மனைவி இருவரின் அன்பு இணைக்கப்பட்டுள்ளது. அந்த அன்புதான் இரவு பகலாக உழைத்து, தன் மனைவியைக் காக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வைக் கணவருக்கு ஊட்டுகிறது; அந்த அன்புதான் மற்றவரைவிடத் தன் கணவனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வைத் தூண்டுகிறது; இல்வாழ்வில் நேரிடுகிற துன்பம், சிரமம், வறுமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒழுக்க நெறியைப் போதிக்கிறது.

 

 

அன்புக்கு அன்பே பரிசு: நாம் பிறர்மீது காட்டுகிற நிபந்தனையற்ற அன்பானது நமக்கே திரும்பக் கிடைக்கிறது. வகுப்புத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் என அனைவரிடமும் நாம் அன்பு காட்டும்போது அவர்களும் நம்மீது அன்பு காட்டத் தொடங்குவார்கள். யார் முதலில் தொடங்குவது என்பதிலேயே காலம் கடந்துவிடுகிறது. எனவே முதலில் நாம் அன்பாகப் பழகத் தொடங்கினால் அவர்கள் தாமாக நம்மீது அன்பு காட்டத் தொடங்கிவிடுவார்கள். ஒருவரைக் கடந்து செல்கிறபோது அவரைப் பார்த்து நாம் வெளிப்படுத்துகிற ஒரு புன்னகை நாளடைவில் அவரின் உள்ளத்தில் நாம் இடம்பெற்றுவிடக் காரணமாக அமைந்துவிடுகிறது.

 

 

முகமன் அன்பை வளர்க்கிறது: மனிதர்கள் மத்தியில் அன்பு ஏற்படுவதற்கான ஓர் அழகிய வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அதை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினால், அனைவரும் நம்மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள். (முஸ்லிம்: 93)

 

 

ஒருவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்முறுவலோடு ஸலாம் உரைத்தால், இயல்பாகவே நாம் அவருடைய மனத்தில் இடம்பிடித்துவிடுவோம். பின்னர் அவர் முந்திக்கொண்டு நமக்கு முகமன் கூறத் தொடங்கிவிடுவார். அதுவே காலப்போக்கில் நமக்கும் அவருக்குமிடையே அன்பு வளரக் காரணமாகிவிடும். இத்தகைய எளிய நடைமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்திருக்க, நாம் அதைக் கைவிட்டுவிட்டு, ‘என்மீது அன்பு காட்ட யாருமில்லையே’ என ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

 

 

அன்பு கோபம் கொள்ளும்: நம்மீது அன்புள்ளவருக்குத்தான் நம்மீது கோபம் வரும். நம்மீது ஒருவர் கோபம் கொள்கிறார் என்றால் அவர் நம்மீது அன்புகொண்டுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சான்றாக, நம் பிள்ளைகள் தொடர்வண்டியிலோ பேருந்திலோ படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தால், “உள்ளே வா, கீழே விழுந்துவிடுவாய்” என்று கோபத்தோடு சொல்வோம் அல்லவா? அது நாம் அவர்கள்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடுதானே? ஆக அன்பும் அக்கறையும் உள்ளவர்தாம் நம்மீது கோபம் கொள்வார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மீது அன்புள்ளவர், நாம் வெளியே செல்லும்போது, “பார்த்து, கவனமாகச் சென்றுவா” என்பார். நமக்காகப் பிரார்த்தனை செய்வார். “மழை வருவதுபோல் தெரிகிறது. குடை எடுத்துச் செல்; மழைக் கவசம் (ரெயின் கோட்) எடுத்துச் செல்; நிதானமாகச் செல்” என்றெல்லாம் கூறுவார். நம் வீட்டிலுள்ள முதியோர் அவ்வாறு கூறினால், அவர்கள்மீது நாம் எரிந்துவிழாமல், அவர்களின் வார்த்தைகளை அன்போடு ஆமோதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

 

அன்பு எதையும் பிறருக்குக் கொடுக்கும்: அன்புள்ளம் கொண்டோர் நாம் நேசிக்கும் அன்பருக்காக எதையும் கொடுக்க முன்வருவர். தமக்கு இல்லையென்றாலும் தம் அன்பருக்குக் கொடுக்க நினைப்பர்.  சான்றாக, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தம் அன்புக்குரிய கணவரான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கொண்டிருந்த அதீத அன்பின் காரணமாகத் தம்மிடமிருந்த செல்வத்தையெல்லாம் ஏழை எளியோருக்குச் செலவு செய்ய அவர்களுக்கு வழங்கினார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நேரத்தில் தம் செல்வத்தை எந்தவித நிபந்தனையுமின்றி நபியவர்களுக்கு வழங்கினார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; அன்பின் அடையாளம்.

 

 

ஆக அன்பு எனும் அருட்கொடை அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும். அதை அவன் யாருக்கு விரும்புகிறானோ அவருக்கே வழங்குகின்றான். எனவே நாம் அவனது அன்பு எனும் அருட்கொடையை  மிகுதியாக அவனிடமே கேட்டுப் பெற்று, நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம். குறிப்பாகப் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.

=============================








திங்கள், 6 ஏப்ரல், 2026

புதிய வெளியீடு

 

---------------------------

 

நூலின் பெயர்: திருக்குர்ஆன் வார்த்தைகளின் தொகுப்பு

 

ஆசிரியர்: டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம்

 

தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D

 

ஆண்டு: 2025

 

பக்கங்கள்: 92

 

விலை: ₹130

 

வெளியீடு: நாணல் 82, மூர் தெரு, சென்னை – 600001

தொடர்புக்கு: 87546 24916

----------------------------------------------------------------------------------------------------------

 

தமிழாக்கம் தந்தோனுரை

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

 

 

அருங்கருத்துகளை ஆழமாகப் பொதிந்துள்ள அருள்மறையை அவனியோர்க்கு அருளிய அன்பாளன் அல்லாஹ் ஒருவனையே அனைத்துப் புகழும் அடையட்டும். வையத்தோர்க்கு வழிகாட்டியாய் வந்து சீரான வழிகாட்டிய அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், உற்ற தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் நிறைவாகப் பொழியட்டும்.

 

 

“அல்லாஹ்வின் வேதத்தில் குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை என்ற அடிப்படையில் அவருக்கு உண்டு” (திர்மிதீ 2009) என்று கூறித் திருக்குர்ஆன் ஓதலை ஊக்கப்படுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதனைச் சிரமேற்தாங்கி முஸ்லிம்கள் பலர் திருக்குர்ஆனைத் தொடர்படியாக ஓதிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

 

மனிதர்களின் அறிவுரைக்காகவே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிமையாக்கி இருக்கின்றோம். எனவே, அறிவுரை பெறுவோர் எவரேனும் உண்டா (54:17) என்று உயர்ந்தோன் அல்லாஹ் வினாத் தொடுக்கின்றான். பொருள்புரியாமல் வெறுமனே ஓதினாலும் ஓரெழுத்துக்குப் பத்து நன்மை கிடைத்துவிடும் என்றாலும் அத்தோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் இக்குறு நூல். இதனை டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துர் ரஹீம் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளார்.

 

 

இந்த நூலை முதன்முதலாகப் படித்த சகோதரர் துரை அப்பாஸ் என்பவர் இதனைத் தமிழ்கூறு நல்லுலகிற்குக் கொடையாகத் தர வேண்டும் என்று தீரா வேட்கை கொண்டார். அதற்காகத் தொடர்ந்து முயன்றார். அதனைக் குவைத்தில் இயங்கி வருகின்ற ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் தாவா அஸோசியேஷன் எனும் தமிழர் அழைப்புப் பணிச் சங்கத்தில் கூறினார். அச்சங்கம் இதனை வெளியிட முன்வந்தது. இதை உரிய முறையில் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அணுகினார்கள்.

 

 

 

அப்போது நான் ஏற்கெனவே சில நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்ததால், "என்னால் இப்போது இயலாது" என்று கூற “இது சின்னஞ்சிறு நூல்தான்; தாங்களே செய்து கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள். சரி, திருக்குர்ஆனுக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே என்றெண்ணி தமிழாக்கம் செய்ய இசைந்தேன். இதோ அல்லாஹ்வின் பெருங்கருணையால் தற்போது ஓர் அழகிய நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது.

 

 

இந்நூலைப் படிக்கின்ற நீங்கள் திருக்குர்ஆனின் பெரும்பாலான பகுதியை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். மூலமொழி அரபியில் இதன் பொருள் என்னவென்பதைப் படித்து அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இது ஒரு பயனுள்ள நூலாகும். தற்கால இளைஞர்களும் இளைஞிகளும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 

 

 

இச்சிறிய நூலை நீங்கள் படிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உயர்ந்தோன் அல்லாஹ் நம் முயற்சிகளுக்குரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக. இந்நூலை எழுதிய மூலநூலாசிரியருக்கும் இதனை மனமுவந்து வெளியிட்டோருக்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குவானாக. ஃபெடரேஷன் ஆஃப் இஸ்லாமிக் அஸோசியேஷன் இன்னும் பற்பல பயனுள்ள நூல்களை வெளியிட அல்லாஹ் அருள்புரிவானாக.

 

அன்புடன்

 

மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி

 

குறிப்பு: இந்நூல் மகளிர் அரபுக்கல்லூரி (முஅல்லிமா, முபல்லிஃகா, ஸாலிஹா) மாணவியர்க்குப் பாடத்திட்டத்தில் வைக்கத் தகுதியானது. 




திங்கள், 23 மார்ச், 2026

உன்னால் இயன்றதைக் கொடு!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கொடுப்போரைவிடப் பெறுவோரே நம்முள் பெரும்பாலோர் உள்னனர். ஆனால் பெறுவதைவிடக்  கொடுப்பதில்தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. எனவேதான் கொடுப்போரைவிடப் பெறுவோர் நிறைந்துள்ளனர். பிறரிடமிருந்து எதையாவது பெறுவதிலேயே குறியாக உள்ளனர். உறவினர்கள் கொடுக்கமாட்டார்களா, மருமகள் வீட்டிலிருந்து கொடுக்கமாட்டார்களா, அண்டை வீட்டார் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

 

அத்தகையோர் அதை அப்படியே மாற்றி யோசிக்கலாமே? உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும்; அண்டை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும்; நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்; மார்க்கப் பணியாற்றுவோருக்குக் கொடுக்க வேண்டும்; கடன்பட்டோருக்குக் கொடுக்க வேண்டும்; பொருளாதார நெருக்கடியால் திருமணம் செய்ய முடியாமல்  காத்திருப்போருக்குக் கொடுக்க வேண்டும்; கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழ்மையில் வாடுவோருக்குக் கொடுக்க வேண்டும் எனப் பட்டியல் போட்டு உதவி செய்ய முன்வரலாம்.

 

 

எதைக் கொடுப்பது: பொருளாதார வசதியுடையோர் தம் பணத்தால் பிறருக்கு உதவிசெய்வார்கள்; தர்மம் செய்வார்கள். அதன்மூலம் நன்மையை ஈட்டிக்கொள்வார்கள். ஆனால் பொருளாதார வசதி இல்லாதோர் எப்படிக் கொடுப்பது, எதைக் கொடுப்பது? அதற்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டியுள்ளார்கள். உழைத்துச் சம்பாதித்துத் தானும் உண்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். உடல் வலிமையுள்ளோர் தம் உடலால் உதவ வேண்டும். அறிவு வலிமையுடையோர் தம் அறிவைப் பயன்படுத்திப் பிறருக்கு உதவ வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள் தம் குருதி கொடுத்து உதவ வேண்டும். ஆக பிறருக்குக் கொடுக்க, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று உள்ளது.  யாருக்கு எது இயலுமோ அதை அவர் கொடுக்கட்டும்.

 

 

இது குறித்த நபிமொழி ஒன்று திர்மிதீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “உன் சகோதரனின் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்வதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம் ஆகும். திக்குத் தெரியாத பகுதியில் (தடுமாறும்) ஒருவருக்கு வழிகாட்டுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். கண்பார்வையற்ற ஒருவரைக் கவனிப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும். நடைபாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு ஆகியவற்றை அகற்றுவதும் நீ செய்யும் தர்மம் ஆகும். உனது வாளியிலுள்ள தண்ணீரை உன் சகோதரனின்  வாளியில் ஊற்றிக்கொடுப்பதும் நீ செய்யும் தர்மம் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1879)

 

 

 

ஒவ்வொரு நற்செயலும் தர்மம் ஆகும் (புகாரீ: 6026). இந்த நபிமொழியின் அடிப்படையில் பிறருக்கு உதவுதல், பிறரைத் தம் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளுதல், பிறரின் சுமையைச் சுமந்து செல்லல், பிறரின் சுமையை அவர்தம் தலையில் தூக்கிவைத்துவிடுதல், சுமைகளை வண்டியில் ஏற்றிவிடுதல், கல்வி கற்பித்தல், விளையாடக் கற்பித்தல், தொழில்களைக் கற்பித்தல், வழிதெரியாதோருக்கு விழியாய் இருந்து வழிகாட்டுதல், பார்வையற்றோர் தேர்வெழுத எழுத்தராகச் (ஸ்க்ரைப்) செயல்படுதல், முகவரி தெரியாதோருக்கு முகவரி கூறி வழிகாட்டுதல், பிறரின் வாளியில் அல்லது குடத்தில் தண்ணீர் இறைத்து ஊற்றுதல், எழுதத் தெரியாதோருக்கு எழுதிக் கொடுத்தல், விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யத் தெரியாதோருக்கு அதைப் பூர்த்தி செய்துகொடுத்தல் உள்ளிட்டவை அறச் செயல்களே ஆகும்.

 

 

ஒவ்வொரு முஸ்லிம்மீதும் தர்மம் (செய்ய வேண்டிய கடமை) உள்ளது” (புகாரீ: 1445) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி ஒவ்வொருவரையும் தற்சார்புள்ளவராக வாழத் தூண்டுகிறது. பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழப் பழக்குகிறது. அவ்வாறு தம்மிடம்  பொருளாதார வசதியில்லாதவர் தம் சுயமுயற்சியால் உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் வழங்க வேண்டுமென்கிறது. அதற்கும் இயலாவிட்டால் நன்மையை ஏவு என்கிறது. இது எல்லோருக்கும் மிக எளிதானது. பிறர் தவறான வழியில் செல்வது கண்டு, ‘நமக்கென்ன’ என்று இருந்துவிடாமல் பிறர் நலம் நாட வேண்டும் என்ற அடிப்படையில், ‘தொழுகச் செல், தர்மம் செய், ஏழைக்கு உதவு, பசித்தோருக்கு உணவளி’ என்று பிறருக்குச் சொல்லலாம். அதன் மூலம் ஒருவர் நன்மையை ஈட்டிக்கொள்ளலாம். சரி, அதற்கும் இயலவில்லை; பிறரை ஏவும் அளவிற்குத் துணிவில்லை என்றால் யாருக்கும் தீமை செய்யாமல் இரு. அதுவே உனக்கு நன்மைதான் என்று நபியவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.

 

 

ஆக ஒருவர் தம்மால் இயன்றதைப் பிறருக்குக் கொடுத்துதவ வேண்டும் என்று நபியவர்கள் தூண்டுகின்றார்கள். ஒருவர் பிறருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார். அதனால் பிறரிடம் தேவையாவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதனால்தான்  பிறருக்குக் கொடு என்று நபியவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கொடுப்பதுதான் நம்மை மேம்படுத்திக்கொள்ளும் வழியாகும்.

 

 

பிறரை மகிழ்வித்தல்: இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் பலரும் எண்ணுவது, நகைச்சுவை (ஜோக்) சொல்லிச் சிரிக்க வைத்தல் என்பதைத்தான். இஸ்லாமிய மார்க்கம் அதைச் சொல்லவில்லை. மாறாக நாம் உழைத்து இல்லாதோருக்கு வழங்குகிறபோது, அதைப் பெறுவோர் மகிழ்வர்; நாம் உழைத்த பணத்தில் ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுக்கும்போது அதைப் பெறுவோர் மகிழ்வர்; நாம் உழைத்த பணத்தில் பிறருக்கு உணவு வாங்கிக் கொடுக்கும்போது அதைப் பெறுவோர் மகிழ்வர். அந்த மகிழ்ச்சியைத்தான் நாம் பிறரிடம் கொண்டுவர வேண்டும்.

 

 

இது குறித்த நபிமொழியைப் பாருங்கள். உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “எந்தச் செயல்கள் மிகச் சிறந்தவை?” என்று கேட்கப்பட்டது. “ஓர் இறைநம்பிக்கையாளருக்கு (முஃமினுக்கு) மகிழ்ச்சி அளிப்பதே சிறந்த செயல்களில் ஒன்றாகும். அதாவது, அவனுடைய பசியைத் தீர்க்க நீ அவனுக்கு உணவூட்டுவது, அல்லது அவன் நிர்வாணத்தை (உடை இல்லாத நிலையை) நீ ஆடையிட்டு மறைப்பது, அல்லது அவனுடைய தேவையை நீ நிறைவேற்றிக் கொடுப்பது” என்று கூறினார்கள். (முஅஜமுல் அவ்ஸத்: 5081)

 

 

ஆக நம்மால் இயன்றதைப் பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. இதனால்தான், “(பெறுவதற்காகத்) தாழ்ந்த கையைவிட (வழங்குவதற்காக) உயர்ந்த கையே மேலானது” என்று கூறினார்கள். நாம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் நம் கை மேலே இருக்கிறது. நம் கை மேலோங்குவதைப்போல் நம் வாழ்க்கையும் மேலோங்கும். எனவே நம்மால் இயன்றதைக் கொடுத்துக்கொண்டே இருப்போம். வாழ்வில் உயர்வடைவோம்.

=================

 




 


ஒழுக்கம் கைவிடேல்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம்’ என்று ஒழுக்கத்திற்கு வரையறை செய்யப்படுகிறது.  ஒழுக்கம் குறித்து எல்லாச் சமயங்களும் வேத நூல்களும் தமிழ் இலக்கிய நூல்களும் கூறியுள்ளன. நம் முன்னோர்கள்  ஒழுக்கத்தோடும் சுய கட்டுப்பாட்டோடும் வாழ்ந்து வந்தார்கள். தற்காலத்தில் நம்மைச் சுற்றி, ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட செயல்களே அதிகம் அரங்கேறுகின்றன. ஒழுக்கம் தவறியோர் நம்மைச் சுற்றிப் பலர் வாழ்கின்றார்கள். இதனைக் காணும்போது, ‘நாமும் அப்படி வாழ்ந்தால் என்ன தவறு’ என்ற மனநிலை நம்முள் சிலருக்கு ஏற்படலாம். இத்தகைய தடுமாற்ற நிலை ஏற்படும்போதுதான், ‘நான் ஒருபோதும் ஒழுக்கம் தவற மாட்டேன்’ என்று நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம் பேணுவதன் முதற்படி, நாணம் பேணுவதுதான். அந்த நாணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாணமில்லாப் பெண்களும் ஆண்களும் பெருகி வருகிறார்கள். ‘ஒழுக்கம்’ என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, ஆடையொழுக்கம்தான். அதில் ஆண்களும் பெண்களும் நாணம் துறந்த ஆடைகளையே அணிகின்றார்கள். அதையெல்லாம் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அத்தகைய அறிவுரை கூறுவோரைப் பரிதாபமாகவும் பரிகாசமாகவும் பார்க்கின்றார்கள். இதுவே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள்-இளைஞிகளின் நிலையாகும்.



அணிகின்ற ஆடையிலேயே ஒழுக்கம் தவறுகின்றபோது, பிறகு அதைத் தாண்டியுள்ள பல்வேறு ஒழுக்கங்களை எவ்வாறு அவர்கள் பின்பற்றுவார்கள்? பெரியோரை மதித்தல், சிறியோரிடம் அன்பு காட்டுதல், பெற்றோரின் பேச்சைக் கேட்டல், ஆசிரியருக்கு மரியாதை செலுத்துதல், குப்பைகளைத் தெருவில் வீசாமல் குப்பைத் தொட்டியில் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போடுதல், போக்குவரத்து விதிகளை மதித்தல், நியாய விலைக் கடையில் வரிசை முறையைப் பேணுதல் முதலான பல்வேறு ஒழுக்கங்கள் உள்ளன.


 

உயர் பதவியில் உள்ள ஒருவர், தம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில்  அரசு மதுக்கடையில் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியபின் வீதியில் புரண்டால் அவரது மதிப்பு என்னாகும்? ஒருவர் தாம் பணியாற்றுகிற அரசு அலுவலகத்தில் கையூட்டு பெற்றதற்காகப் பலர் முன்னிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாததால் கடன்கொடுத்தவர் அவர் வீட்டின்முன் பலர் முன்னிலையில் கூச்சலிட்டுச் சண்டையிட்டால் அவரது மதிப்பு என்னாகும்? வீட்டு வாடகையை உரிய முறையில் கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து தகாத வார்த்தைகளைக் கூறினால் அவரது மதிப்பு என்னாகும்?  



மது அருந்துதல் ஓர் ஒழுக்கக்கேடான செயல் ஆகும். அதனால் உயர்பதவியில்ய உள்ளவன்கூடத் தன் மதிப்பை இழக்கின்றான். புகைபிடித்தல், பான்பராக் போன்ற  போதைப் பாக்குகளை மெல்லுதல் இவையெல்லாம் ஒழுங்கீனமாகும். இப்பழக்கம் உள்ளவரின் வாயிலிருந்து எப்போதும் துர்வாடை வீசும். அத்தகையவரிடம் பிறர் அண்மி வந்து பேசச் சங்கடப்படுவார்கள். மேலும் ஒருவர் தம் பேராசையால் குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கையூட்டு வாங்குவது ஒரு வகையான ஒழுங்கீனமாகும். கடன் வாங்கினால் உரிய முறையில் திரும்பச் செலுத்துவதுதான் ஒழுக்கமுடையோர் செய்யும் செயலாகும். உரிய முறையில் செலுத்தாமல் இழுத்தடிப்பதோ, ஏமாற்ற நினைப்பதோ ஒழுங்கீனமாகும். வீட்டு வாடகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுத்துவிடுவதுதான் ஒழுக்கமுடையோரின் பண்பாகும்.


     

ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு ஆகும். ஒவ்வொருவரும் தமக்கெனச் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பொய் பேசாமை, வாக்குறுதி மீறாமை, கையூட்டு பெறாமை உள்ளிட்டவை அதில் அடங்கும். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதைப் பார்க்கின்ற இளவயதினர் தாமும் இப்படி நடந்துகொண்டால்  என்ன என்ற சிந்தனைக்கு வந்துவிடக் கூடாது. மாறாக ‘மக்கள் பலர் வரம்பு மீறினாலும் நான் என்றென்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவனாகவே இருப்பேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஒழுக்கம்தான் ஒருவரை உயர்த்தும்; உயர் பதவிகளைக் கொடுக்கும்; மக்களிடம் மரியாதையைப் பெற்றுத் தரும்; நண்பர்கள், உறவினர்கள், சமூக மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருந்ததால்தான் அவர்களை ‘அல்அமீன் - நம்பிக்கைக்குரியவர்’ என்று மக்கள் அழைத்தனர். அவர்களை நம்பி பலர் தம் பணத்தைக்  கொடுத்து வைத்தனர். அவற்றையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றார்கள். ஆக நம்முடைய ஒழுக்கத்தால்தான் மக்களுக்கு நம்மீதான நம்பகத்தன்மை உண்டாகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 



ஒழுக்கமில்லா வாழ்க்கை பற்பல தீமைகளைக் கொண்டுவரும். நம்பிக்கை இழப்பு, அவமதிப்பு, சமூகப் புறக்கணிப்பு முதலானவை ஏற்படும். யாரும் அத்தகையவரை மதிக்க மாட்டார்கள்; அவரிடம்  ஆலோசனை கேட்க மாட்டார்கள்; யாரும் உதவி கேட்க மாட்டார்கள்; கனிவோடு பேச மாட்டார்கள்; சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவே வாழ்வார். ஒழுக்கம் தவறினால் எல்லாம் தவறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


நமக்குள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள நல்ல சூழலில் இருப்பது அவசியம். நல்ல நண்பர்களோடு சேர்தல், நல்ல நல்ல நூல்களை வாசித்தல், மூத்தோரின் அறிவுரையைக் கேட்குதல், நேரத்தை மதித்து அதற்கான அட்டவணையைப் பின்பற்றுதல், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல், எதிலும் பொறுப்புணர்வோடு இருத்தல் முதலானவை  ஒழுக்கத்தை மேன்மேலும் வளர்க்கும்.



இஸ்லாமிய மார்க்கம் ஒழுக்கத்தையே முதன்மையாகப் போதிக்கிறது. ஆசிரியரை மதித்தல், மூத்தோரை மதித்தல், வெட்கம் பேணுதல், பார்வையைப் பேணுதல் உள்ளிட்ட ஏராளமான ஒழுக்கங்களைப் போதிக்கிறது. ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, “நிச்சயமாக நீர் உயர்ந்த ஒழுக்கத்தில் உள்ளீர்” (68: 4) என்று அல்லாஹ் கூறுகின்றான். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையே ஒழுக்கமான வாழ்க்கைக்கு முன்னோடியாக உள்ளது. அதையே முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள்.


  

ஒழுக்கத்தைப் பேணும் மனிதர் சமூகத்தில் நல்ல குடிமகனாக, நீதியை நிலைநாட்டுபவராக, மனித உள்ளங்களைச் சீர்திருத்துபவராக, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவராக, அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்பவராக, எல்லோரையும் மதிப்பவராகத் திகழ்வார். “நல்லொழுக்கத்தை நிறைவு செய்யவே நான் அனுப்பப்பட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆகவே ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நல்வழியைப் பின்பற்றி நடந்தால் அவர் மிகுந்த ஒழுக்கமுடையவராக மாறிவிடுவார். 



உண்மை பேசுதல், பொறுமையை மேற்கொள்ளுதல், பணிவாக இருத்தல், பிறர்மீது இரக்கம் காட்டுதல், பிறரின் குற்றங்குறைகளை மறைத்தல், பிறரின் தொல்லைகளைச் சகித்துக்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் ஒழுக்க வாழ்க்கையை மேற்கொள்வோர் கடைப்பிடிக்கும் நற்குணங்கள் ஆகும்.  ஆக ஒழுக்கமான வாழ்க்கை பல்வேறு நற்பண்புகளை நம்முள் தோற்றுவிக்கிறது. 




கொடுத்த வாக்கை நிறைவேற்றல், சொன்ன நேரத்திற்குச் சென்றடைதல், நம் செல்பேசியில் பிறரின் அழைப்பைத் தவறவிட்டிருந்தால் அவரை அழைத்துப் பேசுதல், வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தால் அதற்குப் பதிலுரைத்தல், விளக்கம் கேட்டிருந்தால் விளக்கமளித்தல், தெரியாதவற்றைத் ‘தெரியாது’ என்று சொல்லல், விருந்துக்கு அழைத்திருந்தால் அதில் கலந்துகொள்ளுதல் இவை அனைத்தும் ஒழுக்கம் சார்ந்தவையே ஆகும். 



ஆக இன்றைய நவீன உலகில் பலர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அத்தகையோரைப் பார்க்கின்ற நமக்கு, ‘நாமும் அவர்களைப் போல் ஆகிவிடலாமா’ என்ற சிந்தனை வராமல் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதே நம்மை மேன்மேலும் உயர்த்தும். வெட்க உணர்வின்றி ஆடவரும் பெண்டிரும் வாழும் இக்காலத்தில் நாம் ஒழுக்கத்தைப் பேணி வாழ்வது அல்லாஹ்வின் அன்பைப் பெறவும் அவனுடைய தூதரின் அன்பைப் பெறுவதற்காகவும்தான் என்பதை நினைவில் கொண்டு, ‘ஒருபோதும் ஒழுக்கம் கைவிடேன்’  என்று உறுதிமொழியேற்று வாழ்வோம்.

====================================