சனி, 11 ஜனவரி, 2025

விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல் தொடர்-5)

 


-நூ. அப்துல் ஹாதி பாகவி

 

இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, அவர் தம் மொழிபெயர்ப்புப் பணியை உரிய முறையில் செய்துகொண்டே வந்தார். அதில் வந்த வருமானம்தான் அவர் ஸகாத் வாங்காமைக்குக் காரணம். அதாவது தமக்குத் தேவையான பணத்தை உழைத்து ஈட்டிக்கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் கையேந்திப் பெறக்கூடாது என்று அவர்தம் ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால்தான் பிறரிடம் அவர் கையேந்துவதில்லை. மேலும் ஸகாத் என்பது மக்களின் அழுக்குகள்என்ற ஹதீஸை அவருடைய உஸ்தாத், சொன்னது அவர்தம் மனத்தில் ஆழமாகப் பதிவாகிவிட்டதால் அதை வாங்குவதை அவர் விரும்புவதில்லை. 

 

அவர் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார். அரபியிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் என இரண்டு மொழிகளிலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றவர்.  அதனால்தான் இவரைத் தேடிப் பலர் வருகின்றனர். அது மட்டுமின்றித் தமிழ் இலக்கணத்தில் போதிய திறன் இருப்பதால் தமிழைப் பிழையின்றி எழுதவும் திருத்திக்கொடுக்கவும் தெரியும். அதனால் மொழிபெயர்ப்புப் பணி மட்டுமின்றி, நூலைச் செப்பனிட்டுத் தருகிற மெய்திருத்துநர்பணியையும் செய்துவருகிறார்.

 

சென்னை தி.நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஷாஹின் என்பவர், தம்முடைய கடைக்கு வருமாறு அஹதுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று அவரது கடைக்குச் சென்றார். அங்கு ஒரு பேராசிரியரும் அமர்ந்திருந்தார். அப்போது அந்தக் கடை உரிமையாளர் ஷாஹின், “ஆன்மிகம் சார்ந்த ஓர் அரபி நூல் இருக்கு. அதன் சில பகுதிகள் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்போது நாமே அதை முழுமையாகத் தமிழாக்கம் செய்து வெளியிட எண்ணியுள்ளோம். அப்பணியை நீங்கதான் எங்களுக்குச் செய்து கொடுக்கணும்என்றார்.

                           

ஓகே பாய். இன் ஷாஅல்லாஹ் செய்யலாம்என்றார் அஹத்.

 

ஒரு பக்கத்துக்கு எவ்வளவு கேக்குறீங்க?” என்று ஷாஹின் கேட்க, ஒரு பக்கத்துக்கு ஐநூறு ரூபாய் ஆகும் பாய்என்றார். அதைக் கேட்ட அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னது ஐநூறு ரூபாயா? ஏற்கெனவே செய்தவருக்கு நாங்க நூறு ரூபாய்தான் கொடுத்தோம். அவர் இப்போது இறந்துபோய்விட்டார் என்பதற்காகத்தான்  உங்களிடம் கொடுக்கலாம்னு நெனக்கிறோம். நீங்க என்னன்னா இப்படிப் பேசுறீங்களே?” என்றார்.

 

தம்பி அஹத், இந்த நூல் மிகப்பெரிசு. இவ்வளவு பணம் கேட்டா எப்டி? அவ்வளவு பணம் கொடுத்து, அதை வெளியிட்டு, விற்பனை செஞ்சா, அவருக்கு ஏதாவது மிஞ்சுமா என்ன? அவரும் அச்சிட்டு, வெளியிடப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதா, இல்லையா? எனவே பார்த்துச் சொல்லுங்க அஹத்என்று பேராசிரியர் பேசினார்.

 

சரி, ஒரு பக்கத்துக்கு நானூறு ரூபாய் கொடுக்கச் சொல்லுங்க சார்என்றார்.

இந்த அளவிற்கு அதிகமா பணம் கேட்பது நீங்க மட்டும்தான். எத்தனையோ பேர் தமிழாக்கம் செய்யுறாங்க. இப்டி யாரும் கேட்டதே கிடையாதுஎன்றார் ஷாஹின்.

அப்படின்னா, அவர்களுள் யாரையாவது அழைத்து, அவர்களிடமே இதை ஒப்படைத்திருக்கலாமே? என்னை ஏன் அழைச்சீங்க பாய்?” என்றார்.

 

உங்களுக்கு இந்தத் துறையில் மிகுந்த அனுபவம் இருக்கு. நீங்க நல்லா, தெளிவா, எளிய நடையில் செய்வீங்கன்னு என் நண்பர் சொன்னார். அத்தோடு நம்ம பேராசிரியரும் சொன்னார். அது மட்டுமில்ல, நீங்க தமிழாக்கம் செய்த நூல்களை நான் படிச்சிருக்கேன். அது எளிமையா புரியும் வகையில் இருந்துச்சு. அதனாலதான் உங்களிடம் ஒப்படைக்கலாமேன்னு நெனச்சேன்என்றார்.

 

என்னைப் பத்தி நீங்களே சொல்லிட்டீங்க. அதாவது மத்தவங்க செய்யிற மொழிபெயர்ப்பும் நான் செய்யிற தமிழாக்கமும் சமம் கிடையாது. மத்தவங்க செய்யிறது மொழிபெயர்ப்பு; நான் செய்யிறது தமிழாக்கம். அது மட்டுமில்ல, மத்தவங்க செய்வதை, இன்னொருவர் டைப் செய்யணும். அதை ப்ரூஃப் பாக்கணும். ரெண்டு மூனு ஆள் தேவைப்படும். காலமும் கடந்து போய்க்கிட்டே இருக்கும். ஆனா நான் செய்யிற தமிழாக்கத்தை நானே தட்டச்சு செய்து, இலக்கணப் பிழைகளைக் களைந்து, வாசக அமைப்பைச் சீராக்கி, அச்சிடத் தயார்நிலையில் தந்துடுவேன். நீங்க லேஅவுட் போட்டு, அப்படியே அச்சிட்டு, விற்பனைக்கு அனுப்பிடலாம்என்றார்.

 

என்னதான் இருந்தாலும் நீங்க கேட்பது ரொம்ப அதிகம்தான்என்றார் ஷாஹின். 

பாய், இசையமைப்பாளர் தாஜ்நூரைத் தெரியுமா? என அஹத் கேட்க, “ஆம், தெரியும்என்றார்.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானைத் தெரியுமா பாய்?” என்று கேட்க, “ஆம், நன்றாகத் தெரியுமேஎன்றார்.

 

அந்த ரெண்டு பேர்ல யார் அதிகமா சம்பளம் வாங்குறவருன்னு தெரியுமா? ஒரு படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமானுக்கு எவ்வளவு சம்பளம்? அதேபோன்ற ஒரு படத்துக்கு இசையமைக்க தாஜ்நூருக்கு எவ்வளவு சம்பளம்? இருவரும் பாய்தான். இருவரும் இசையைத்தான் அமைத்துக்கொடுக்குறாங்க. இருவருள் ஒருவருடைய சம்பளம் கோடிகளில், மற்றொருவரின் சம்பளம் இலட்சங்களில்... ஏன் இந்த வித்தியாசம்னு தெரியிதா பாய்?” என்றார்.

 

பேச வார்த்தையின்றி அமைதியானார் ஷாஹின். இவ்வளவு சொல்லியும் அவர் தம்முடைய நூறு ரூபாயைத் தாண்டி வரவே இல்லை. இது ஒத்துவராது என்று எண்ணியவாறே அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் அஹத்.

 

புத்தக வியாபாரியான அவர் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் உழைப்பைச் சாப்பிட நினைக்கிறாரே தவிர அவர்களும் வாழட்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.  

                                                                                                                                                                               

அஹத் அந்தப் பள்ளியில் இமாமாக நீண்ட காலம் இருப்பதோடு, ஜமாஅத்துல் உலமா சபையிலும் பொறுப்பு வகித்து வந்தார். மக்களுக்குச் சேவை செய்யும் எந்த வாய்ப்பையும் அவர் நழுவ விட்டதில்லை. அவ்வாறுதான்   சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அவற்றை நேரடியாகச் சென்று விநியோகிக்க ஆள் தேடியபோது   அஹத் இமாம் முன்வந்தார். அப்பகுதியைச் சார்ந்த தலைவர், செயலாளர் ஆகியோருடன் இவரும் சென்று தேங்கிக் கிடந்த நீரில் நடந்து சென்று நிவாரணப் பொருள்களை வீடு வீடாக வழங்கினார்.

 

மாவட்ட அளவில் துணைத்தலைவர் பொறுப்பு வகித்தார். பின்னர் சென்னை மாவட்டத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். சென்னை மாவட்டத் தலைவர் ஆனதும் உலமாக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். உலமாக்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதற்குச் சில நிபந்தனைகளையும்  முன்வைத்தார். ஏனெனில் மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் சுயமாக வெளிப்பட வேண்டும். அதுதான் அவருக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும். எனவே யார் டைப்பிங் சென்டர் சென்று தட்டச்சு பழகி, அதற்கான தேர்வை எழுதி, சான்றிதழ் பெற்று வருகின்றாரோ அவருக்கு லேப்டாப் இலவசம்என்ற தகவலை வெளியிட்டார். 

 

ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த அதிரடித் திட்டத்தைச் சவாலாக ஏற்ற இளம் உலமாக்கள், ஆங்காங்கே உள்ள டைப்பிங் சென்டர் சென்று, தட்டச்சு பழகினார்கள். அதற்கான தேர்வையும் எழுதி, சான்றிதழ் பெற்றுவந்தார்கள். அவ்வாறு துடிப்போடு வந்தோர் இருபத்தைந்து பேர். எனவே அவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது.

 

அடுத்து, பள்ளிவாசலில் இமாமாக உள்ளோர் தம் இருப்பிடத்திலிருந்தே கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் செய்ய இயலுகிற பணிகள் என்னென்ன என்பதை ஒரு பயிலரங்கு மூலம் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிலரங்கில், ஆன்லைன் பணிகள், தட்டச்சுப் பணிகள், டிசைனிங், ஆன்லைன் வகுப்பு நடத்துதல், மொழிபெயர்ப்புச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைக் கணினி நிபுணர் கற்பித்தார். அதனால் ஆலிம்கள் பலர் பயனடைந்ததோடு  தொழில்களைத் தொடங்கிச் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள்.  

 

***

 

ஒரு நாள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறப்போவதாகச் செய்தியறிந்து, குறிப்பிட்ட நாளில் அஹத் அங்கு சென்று கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஆலிம்கள் யார் யார் என்று பார்த்தால் அது அவர் மட்டுமே.

 

அதாவது தமிழ்மொழி நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிறமொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதும்தான் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக கூட்டப்பட்ட கூட்டம்தான் அது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அஹத், இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பு வகித்திருந்த ஐஏஎஸ் ஆஃபிஸரிடம், “சார், அரபியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டார். ஆம். இருக்கு. நீங்க முஹம்மது அலியைச் சந்திங்கஎன்று கூறினார்.

 

யாருங்க முஹம்மது அலி?” என்று கேட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் அப்போதுதான் வேறு எங்கோ சென்றுவிட்டு உள்ளே நுழைந்தார். இதோ அவர்தான் முஹம்மது அலிஎன்று அவரை அறிந்தவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அவரைச் சந்தித்து, “அரபிக்கான வாய்ப்பு உண்டா? நான் அரபியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவன்என்று கூறினார்.

 

அப்படியா? அரபி மட்டுமில்லை. உர்தூவுக்கும் எனக்கு ஆள் வேண்டும். நீங்க பிறகு பேசுங்க. இதோ என்னுடைய விசிட்டிங் கார்டுஎன்று கூறி அவருடைய முகவரி அட்டையைக் கொடுத்துவிட்டு, “உங்களுடைய நம்பர் சொல்லுங்கஎன்றார். அவர் தம் நம்பரைச் சொல்வதற்குப் பதிலாக, தம்முடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதை வாங்கித் தம் சட்டைப்பையில் வைத்தவாறே அவசரமாக எங்கோ அவர் சென்றுகொண்டிருந்தார்.

 

அஹதுதான் எப்போதும் பொதுநலம் விரும்பிஆயிற்றே. அதனால் தாம் சென்றுவந்த கூட்டத்தைப் பற்றியும் அரபி, உர்தூ மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அத்தகைய திறன் உள்ளவர்கள் இவரைத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் முகநூலில் ஒரு பதிவு போட்டு, முஹம்மது அலியுடைய செல்பேசி எண்ணையும் பதிவிட்டுவிட்டார்.

 

அந்தப் பதிவைப் படித்த ஆலிம்கள் பலர் முஹம்மது அலியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். என்னுடைய நம்பரை உங்களுக்கு யார் கொடுத்தார்? என்று கேட்க, “அஹத் இமாம்தான் தம்முடைய முகநூல் பதிவில் போட்டிருந்தார்என்று கூறினார்கள்.

 

அதில் சென்று அந்தப் பதிவைப் படித்துவிட்டு, அப்துல் அஹதைத் தொடர்புகொண்டார். முகமன் கூறிவிட்டு நன்றி கூறினார். அரபி மொழிபெயர்ப்பாளர்களை நாம் எங்கே போய்த் தேடுவது என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு எல்லா வேலைகளையும் எளிதாக்கிவிட்டீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. நாம் ஒரு நாள் நேரடியாகச் சந்திப்போம். இது தமிழ்நாட்டு அரசின் மிகப்பெரும் திட்டம். இதன்மூலம் நானும் நீங்களும் மட்டும் பயன்பெறக் கூடாது. எல்லோருக்கும் இதனுடைய பயன் சென்று சேரணும்; அதற்காக நாம் முயற்சி செய்யணும்என்றார்.

 

அதனால்தான் பாய், நான் முகநூலில் பதிவுபோட்டேன். யாருக்கெல்லாம் திறமை இருக்கோ அவர்கள் அனைவரும் பயன்பெறட்டும். அதுதானே நமது நோக்கம்?” என்று அஹத் கூறினார்.

 

சரி ஹஜ்ரத், ஒரு நாள் நாம் சந்திப்போம்என்று கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.

 

ஒரு வாரத்திற்குப்பின் அஹதுடைய இருப்பிடத்திற்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நீங்க இதுவரை மொழிபெயர்ப்புச் செய்த நூல்களைக் காட்டுங்க பார்க்கலாம்என்றார்.

 

அவர் இதுவரை செய்த நூல்களை எடுத்து அடுக்கி வைத்தார். அவற்றைப் பார்த்ததும், அவர் மலைத்துப் போனார். என்னங்க ஹஜ்ரத், இவ்வளவு நூல்களா? இவையெல்லாமே நீங்க மொழிபெயர்த்தவையா?” என்று ஆச்சரியப்பட்டார். இவ்வளவு நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்தும் நீங்க தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்பு விருதுக்கு ஏன் விண்ணப்பிக்கல?” என்று கேட்டார்.

 

அது பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க வேண்டுமானால் வழிகாட்டுங்க. அதன்படி நான் செய்யிறேன்என்றார்.

 

இப்ப நாம செய்யப்போற பிராஜக்ட்ல ஒரு முக்கியமான நூல் இருப்பதாகச் சொன்னீங்களே அது என்ன?” என்று அவர் கேட்க, “அதுவா, ‘முஸ்லிம்களின் வியத்தகு கண்டுபிடிப்புகள்என்ற நூல்தான்என்றார்.

 

அதை முதலில் நீங்க மொழிபெயர்ப்புச் செய்யத் தொடங்குங்க. அதையே விருதுக்குரிய நூலாக நாம் பரிந்துரை செய்வோம் இன் ஷாஅல்லாஹ்என்று ஆர்வமூட்டினார்.

 

ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சைக் கேட்ட அஹத், அந்த அரபி நூலை ஓராண்டுக் கால கடின உழைப்பில் தமிழாக்கம் செய்து முடித்தார். பின்னர் அது தமிழ்நாட்டு அரசு நூலகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. அதன்பிறகு அந்த நூலின் பிரதி ஒன்றைச் சேர்த்து வைத்து, ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

 

***

அஹத் தம் மாணவர்களைப் பார்த்துப் பொதுவாகச் சொல்லும் ஒரு கூற்று, “படிக்கின்ற புத்தகத்தையும் படித்துக்கொடுக்கின்ற ஆசிரியரையும் மதிக்கணும்என்பதுதான். அந்த வகையில் அதை அவர் செயல்படுத்தவும் செய்தார். தம்முடைய ஆசிரியர்கள் சென்னை வந்தால் அவர்களைச் சென்று சந்திப்பதும் அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களின் துஆவைப் பெற முயல்வதும் அவரின் வழக்கம்.

 

அரபுக் கல்லூரியில் அஹதைச் சேர்க்கத் தயங்கிய முதல்வர் அவர்களைச் சென்னையில் அவரின் மகள் வீட்டில் சந்திக்கச் செல்வார். அவர் செல்லும்போதெல்லாம், அங்கே அவர் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிகழ்வைப் பற்றி அவரிடமே நெகிழ்ச்சியுடன் அந்த உஸ்தாத் கூறுவார். அவர் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் அஹத்; ரொம்ப சந்தோஷமா இருக்குஎன்று மகிழ்ச்சியுடன் கூறுவார். அவர் அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, உஸ்தாதிடம் அணிந்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்.

 

தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹஜ்ரத் அவர்களின் மனங்குளிரும் விதமாக நான் உருவானதையேஎன் உஸ்தாதுக்கு நான் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்என்பார் அஹத்.

 

***

 

விண்ணப்பம் அனுப்பியதை மறந்துவிட்டுத் தமிழாக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு மாதத்திற்குப்பின் தமிழக அரசின் கடிதம் ஒன்று வந்தது. அதைப் பிரித்துப் படித்தபோது அல்ஹம்து லில்லாஹ்என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர். விருதைப் பெற குறிப்பிட்ட தேதியில் நேரடியாக வந்து கலந்துகொள்ளுங்கள்என்று அக்கடிதம் தெரிவித்தது.

 

இவ்வளவு காலம் அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்து வந்த எழுத்துப் பணிக்கும் தமிழாக்கப்பணிக்கும் இன்று அவன் அங்கீகாரம் வழங்கியுள்ளதை இறைநம்பிக்கையாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படுகிற நற்செய்தியாக எடுத்துக்கொண்டார். இவ்வளவு காலம் செய்த கடின முயற்சிக்கும் உழைப்பிற்குமான பரிசாக இந்த விருதைக் கருதி மகிழ்ந்தார்.

 

இதோ குறிப்பிட்ட நாளும் வந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெறத் தலைமைச் செயலகத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். செய்தியறிந்த பலர் அஹதை வாழ்த்திப் பாராட்டினார்கள்.                                                                                                                       (முற்றும்)

===================



வெள்ளி, 10 ஜனவரி, 2025

வாசிக்கத் தொடங்குவோம் / Let’s start to read


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி
இமாம்
மதீனா மஸ்ஜித்
பட்டினப்பாக்கம்
சென்னை-28
10 01 2025
09 07 1446

புதன், 8 ஜனவரி, 2025

தடைகளை உடைக்காதீர்!

   

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

படைத்தோன் அல்லாஹ் மக்கள் அனைவரும் சீராகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்காகவே வரையறைகளை அமைத்தான். அந்த எல்லைக்குள் இருந்தவாறே எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே கட்டுப்பாடுகளை விதித்தான். அந்த வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறினால் மனித வாழ்க்கை சீரழியும். அவ்வாறு இறைவன் விதித்த வாழ்வியல் கட்டுப்பாட்டை மீறித்தான் இன்றைய சமூக மக்கள் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்; அதனால் பற்பல சிரமங்களையும் சங்கடங்களையும் நாள்தோறும் அனுபவித்து வருகின்றார்கள்.

 

விருப்பத்தோடு கூடிவாழ்தல்: ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதற்கான மிக எளிதான வழிமுறையை இஸ்லாம் வகுத்துள்ளது; பிற சமயங்களும் வகுத்துள்ளன. ஓர் ஆண் உரிய மஹர் கொடுத்து, ஒரு பெண்ணைச் சாட்சிகளின்  முன்னிலையில் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டு அப்பெண்ணைக் கைப்பிடிப்பதே இஸ்லாமியத் திருமண முறை. இந்தச் சமூகக் கட்டமைப்பை உடைக்கிறது இன்றைய ஊடகம். கட்டற்ற சுதந்திரம்என்ற மாயையை இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் மத்தியில் பரப்பிவருகிறது.

 

ஓர் இளைஞனும் இளைஞியும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, “நாங்கள் இருவரும் நண்பர்களாகச் சேர்ந்து (Living together) வாழ்கிறோம்; எங்களுக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்வோம்; இல்லையேல் பிரிந்துவிடுவோம்என்று சாதாரணமாகக் கூறுகின்றார்கள். சமூகக் கட்டமைப்புகளை உடைக்கின்ற இந்தப் பழக்கமானது மேலை நாட்டுப் பழக்கமாகும். இத்தகைய விபச்சார வலைக்குள் முஸ்லிம் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கியுள்ளது அவர்களின் அறியாமையாகும்.

 

ஒரு காஃபி குடிக்க, அந்தக் கடையையே யாராவது வாங்குவாங்களா?” என்பது போன்ற திரைப்பட வசனங்களுக்குள் சமூகச் சீர்கேடு ஒளிந்துள்ளது. சமூகக் கட்டமைப்புகளை உடைக்கும் சதிவேலையைத்தான் இன்றைய திரைப்பட வசனங்கள் செய்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் விபச்சாரத்தை ஊக்குவிக்கின்றன. திருமணத்திற்கான சமூக வரையறைகளை மீறுகின்றன.

 

தற்கால இளைஞர்களின் போக்கிற்கேற்பச் சென்னை உயர்நீதி மன்றமும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது மனவிருப்பத்தோடு ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகாது என்று தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கிடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்  அவர்கள் முறைப்படி குடும்ப நல நீதிமன்றத்தை நாட முடியாது. ஏனெனில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே அவர்கள் வழக்குத் தொடுக்க  எந்தத் தார்மிக உரிமையும் இல்லை எனச் சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. ஆகவே சமூக வரையறைகளையும் வரம்புகளையும் மீறும் போக்கை இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் கைவிட வேண்டும். 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களுள் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே யார் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள் கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர்  வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது; அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே... (புகாரீ: 52)

 

உணவுக் கட்டுப்பாடு: படைத்தோன் அல்லாஹ் மனித இனம் உண்ணத் தகுந்தவற்றையும், உண்ணத்தகாதவற்றையும் தெளிவுபடுத்தியுள்ளான். உண்ண அனுமதிக்கப்பட்டவை மனித உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை; உண்ணத்தகாதவை என்று இறைவன் தடைவிதித்தவை  மனித உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும். அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவற்றை உண்பது கூடாது என இறைவன் தடைவிதித்திருக்கின்றான். ஆனால் இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் உணவகங்களில் அசைவ உணவுகளை எந்தவிதத் தடை உணர்வும் இல்லாமல் உண்கின்றார்கள். அதை அறுத்தவர் யார்? அது முறைப்படி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதா என்றெல்லாம் எவ்வித ஆய்வுமின்றி, உறுத்தலுமின்றி உண்கின்றார்கள்.

 

சந்தேகமான அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘பிஸ்மில்லாஹ்என்று கூறிவிட்டால் அது ஹலால் ஆகிவிடும் என்று மக்கள் சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அது அவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. அதற்கான ஆதாரமாகப் பின்வரும் நபிமொழியை முன்வைக்கின்றனர்.

 

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! மக்கள் சிலர் எங்களிடம் இறைச்சியை (அன்பளிப்பாக)க் கொண்டுவருகின்றார்கள். அதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியவில்லை (நாங்கள் என்ன செய்வது)? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறிச் சாப்பிடுங்கள்என்று கூறினார்கள். அதாவது அம்மக்கள் இஸ்லாத்திற்குப் புதிதாக வந்தவர்கள் ஆவர். (இப்னுமாஜா: 3174/ 3165) 

 

இந்த நபிமொழியில் பதிவுசெய்யப்பட்டுள்ள  புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்என்ற வாக்கியம்  கூர்ந்து நோக்கத்தக்கது. அதாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அறுத்த இறைச்சியில் சந்தேகம் வந்தால், அங்கு பிஸ்மில்லாஹ் சொல்லிவிட்டுச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதைத்தான் இந்நபிமொழி கூறுகிறதே தவிர அறுத்தவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை; பிஸ்மில்லாஹ் சொல்லிச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்என்பது பொருளன்று.

 

ஹலால் சான்றிதழ் ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் கூறிக்கொண்டிருக்கின்ற  இக்காலத்தில், நாம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஷைத்தான்கள் முஸ்லிம்களை ஹராம் இறைச்சியைச் சாப்பிட வைக்க முயல்கின்றார்கள். அதிலிருந்து நாம் முற்றிலும் விலகிக்கொள்ள வேண்டும். பின்வரும் நபிமொழி கூர்ந்து நோக்கத்தக்கது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: திண்ணமாக ஷைத்தான்கள் தம்முடைய நேசர்களிடம் (மறைவான செய்திகளை) அறிவிக்கின்றார்கள் (என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்அன்ஆம்: 121). “எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதோ அதை உண்ணாதீர்கள். எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைச் சாப்பிடுங்கள்என்று (ஷைத்தான்களின் நேசர்கள் ஆகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். எனவேதான் அல்லாஹ் (இறைநம்பிக்கையாளர்களுக்குக்) கூறுகின்றான்: எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைச் சாப்பிடாதீர்கள்.  (இப்னுமாஜா: 3173/ 3164) 

 

யாருக்கும் கட்டுப்படாமை: இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் பெரும்பாலோர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிச் செயல்படுவோராகவே உள்ளனர். பெற்றெடுத்துப் பராமரித்து வளர்த்துப் பாதுகாக்கின்ற பெற்றோருக்கும் கட்டுப்படுவதில்லை; அறிவைக் கற்றுக் கொடுத்து, ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்படுவதில்லை; மதிப்பதில்லை. இந்த இரு சாரார்தாம் பிள்ளைகளைக் கண்டிக்கக்கூடிய இடத்தில் இருக்கின்றார்கள். இந்த இரு சாராருக்கும் கட்டுப்படாத அவர்கள் வேறு யாருக்குக் கட்டுப்படப்போகிறார்கள்? ‘தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதுஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதையோ தந்தை சொர்க்கத்தின் நடுக்கதவுஎன்று கூறியதையோ அவர்கள் ஊன்றிப் படிக்கவில்லை. அதனால்தான் பெற்றோருக்குக் கட்டுப்படாத நிலை நீடிக்கிறது.

 

தேர்வுக்காகப் படிப்பதற்கு விடுமுறை விட்டுள்ள அந்நாள்களில், படிக்காமல் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்து, “படிக்கின்ற நேரத்தில் ஏன் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருக்கிறாய்என்று பெற்றோர் கண்டித்ததற்காக, அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான். நீண்ட நேரம் செல்ஃபோன் பார்த்துக்கொண்டிருந்த மகனைக் கண்டித்த தாய், அவன் கையிலிருந்த செல்ஃபோனைப் பறித்துக்கொண்டதால் அத்தாயைத் தாக்குகிறான் மகன். இவ்வாறு சிறுவர் முதல் இளைஞர்கள் வரை செல்ஃபோனுக்குள் மூழ்கிக் கிடக்கின்றார்கள். அதிலிருந்து அவர்களால் வெளிவர இயலவில்லை.

 

பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமலும், சமூகக் கட்டுப்பாட்டிற்குள் சிக்காமலும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள். அதனால்தான் யார் கண்டித்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்த்துத் தாக்குகின்றார்கள்; அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள். குற்றங்களைச் செய்துவிட்டு, காவல்துறையில் மாட்டிக்கொண்டபின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றார்கள்.

 

வரம்புமீறிய கலந்துரையாடல்: இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயனால் அந்நிய ஆண்-பெண் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொண்டு பேச முடிகிறது. செல்ஃபோனில் வாட்ஸ்ஆப் மூலம் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசக்கூடிய வசதி உள்ளது. அதனால் ஒரு பெண் தனக்குத் தொடர்பு இல்லாதவர்களோடு பேசத் தொடங்குகிறாள்.  ஆண் வீசுகின்ற வலையில் சிக்கிக்கொள்கிறாள். இதனால் ஆண்-பெண்ணுக்கென இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வகுத்த எல்லைக்கோடு தாண்டப்படுகிறது; மீறப்படுகிறது.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' (அதாவது அறவே சந்திக்கக் கூடாது) என்று கூறினார்கள். (புகாரீ: 5232)

 

கள்ளத்தொடர்பு: திருமணம் முடிக்கப்பெற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு, அவ்விருவரும் வரம்புமீறிய பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். காலப்போக்கில் அவ்விருவரும் ஒருவரோடொருவர் கலந்துவிடுகின்றார்கள். அது கணவனுக்குத் தெரிந்துவிட்டால், அவனைக் கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதன் பின்னர், அவ்விருவரும் எந்தத் தொல்லையுமின்றித் தம் கள்ள உறவைத் தொடர்கின்றார்கள். இத்தகைய சமூக விரோதிகள் பெருகிவரும் காலமிது.

 

மணமுடித்த கணவன் சற்று வேட்கை குறைந்தவனாகவோ அயலூரில் அல்லது அயல்நாட்டில் வேலை செய்பவனாகவோ இருந்தால், அவனை மணமுடித்த பெண் வேலி தாண்டிச் செல்லும் அபாயநிலை இன்று பரவலாகக் காணப்படுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விதித்துள்ள வரையறைகளைத் தாண்டிச் செல்லும் பெண்களும் ஆண்களும் சற்று நிதானத்துடன் செயல்பட்டு, ஷைத்தான் தூண்டும் பாதையில் சென்றுவிடாமல் தம்மைத் தற்காத்துக் கொள்வது அவசியமாகும்.

 

ஒருபால் திருமணம்: ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வியாதி முஸ்லிம் இளைஞர்களையும் சிறிதளவு தொற்றிக்கொண்டுள்ளதாக, ஆங்காங்கே கேள்விப்படுகிற செய்திகள் மூலம் அறிகிறோம். இது இயற்கைக்கு விரோதமான, அருவருக்கத்தக்க செயல் மட்டுமல்ல, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடைசெய்துள்ள, அவர்களின் சாபத்திற்குரிய செயல் என்பதை  நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணர்த்த வேண்டியது நம் கடமையாகும்.

 

ஓரினப் புணர்ச்சி செய்த சமுதாய மக்களை அழித்த விதத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:  அச்சமயம் அவர்கள்மீது செங்கற்களைப் பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம். (15: 74) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: லூத் சமுதாய மக்களின் செயலைச் செய்தவரை நீங்கள் கண்டால், அச்செயலைச் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள். (இப்னுமாஜா: 2561/2551.) ஆக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனையை இஸ்லாம் வரையறுத்துள்ளது.  

 

இவ்வாறு பல்வேறு வரம்புகள் உடைக்கப்படுகின்றன. மீறப்படுகின்றன. இனிவரும் காலங்களிலாவது நம் இளைஞர்களும் இளைஞிகளும் வழிதவறிச் சென்றிடாமல் பாதுகாக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர்கள்-இளைஞிகளுக்குத் தனிப்பட்ட முறையில் தஸ்கிய்யா (ஒழுக்கப்பயிற்சி) வகுப்புகள்நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களைச் சீரிய பாதைக்கு அழைத்து வர முடியும். இது மஹல்லாவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

====================================


திங்கள், 6 ஜனவரி, 2025

ஞானப் பேராசான் மௌலானா மௌலவி அல்லாமா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

 

-----------------------------

 

அவர்களின் மறைவையொட்டி இனிய திசைகள் மாத இதழில் (பிப்ரவரி 2022) அன்று இடம்பெற்றிருந்த கட்டுரை:

 

வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் மேனாள் பேராசிரியர்-முதல்வர், ஷைகுத் தஃப்ஸீர், பல்லாயிரக்கணக்கான ஆலிம்களின் ஞானப் பேராசான் மௌலானா மௌலவி அல்லாமா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி 06.01.2022 அன்று சென்னையில் வஃபாத் ஆனார்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)

 

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் கிராமத்தில் பாட்சா இராவுத்தர்-ஆமினா அம்மாள் தம்பதியருக்கு 1938இல் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் மௌலவி பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத்; அங்குள்ள சிறு பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற பின்னர் ஈராண்டுகள்   தனியாக ஓர் ஆசிரியரிடம் கல்வியும் கற்றவர். 1948இல் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையில் உள்ள பெரிய பள்ளிவாசல் அரபு மத்ரஸாவில் முதல் ஜும்ராவும், திண்டுக்கல் முஹம்மதியா புரம் பள்ளிவாசல் மத்ரஸாவில் 2 மற்றும் 3ஆம் ஜும்ராவும் ஓதிய ஹள்ரத் அவர்கள் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் 4 மாதங்களே 4ஆம் ஜும்ராவை ஓதியவராவார். தந்தையின் மறைவால் ஊர் திரும்ப வேண்டிய சூழல் அப்போது அவருக்கு உருவானது.

 

அதன்பின்னர் நெல்லை பேட்டை ரியாளுல் ஜினான் அரபுக் கல்லூரியில் மீண்டும் 4ஆம் ஜும்ராவில் சேர்ந்து ஆறாம் ஜும்ரா வரை ஓதிய அவர், 1956இல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மீண்டும் ஆறாம் ஜும்ராவில் சேர்ந்து ஏழாம் ஜும்ராவும் முடித்து 1958இல் பாகவி ஸனது பெற்றார். பல்லாண்டுகள் அக்கல்லூரியிலேயே பேராசிரியராகவும், முதல்வராகவும் விளங்கிய ஹள்ரத்  அவர்கள் பின்னர் சென்னையில் மஜ்லிஸுல் அப்ரார் மத்ரஸாவில் எண்ணற்ற மாணவர்களுக்குக் கற்பித்தும் வந்தார்.

 

பி.எஸ்.பி. ஹள்ரத் அவர்கள் பேச்சுக்கலை, எழுத்துக் கலை, மொழிபெயர்ப்புக் கலை எனும் முக்கலையிலும் முத்தாய்ப்பாக இலங்கியவர்; தமிழ், அரபி, ஃபார்ஸி, உர்தூ நான்கு மொழிகளிலும் மிகப்பெரும் விற்பன்னராகத் திகழ்ந்தவர். ஃபார்ஸி மொழிக் கவிதைகளில் தணியாப் பேரார்வம் கொண்டிலங்கியவர்; வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வெளியிட்ட தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் - திருக்குர்ஆன் விளக்கவுரை நூல்களில் பல பாகங்களில் ஹள்ரத் அவர்கள் ஆற்றியுள்ள அரும்பணி மிகவும் சிறப்புக்குரியதாகும்.

 

உத்துலுபுல் இல்ம வ லவ் பிஸ்ஸீன் என்ற நம் பெருமானார் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்-அவர்களது அமுத மொழிக்கு, "சீனதேசம் சென்றாகிலும் சீர்கல்வியைக் கற்றுக்கொள்' என்றே புரிதல் இருக்கிறது. "நான் அறிவின் பட்டணம்; அலீ அறிவின்  தலைவாயில்' என்றுரைத்த அண்ணலார் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்-அவர்கள் உரைத்திருப்பதைப் பார்க்கும்போது அண்ணலார் அவர்களே அறிவின் பட்டணமாக இருக்கும்போது -அதிலும் அன்றைய சீனா அறிவின்மையின் மொத்த உருவமாக இருந்தபோது- அவர்கள் சீனதேசம் சென்று கற்றுக்கொள்ளச் சொல்லியிருக்க முடியுமா என்ற எண்ணம் எழுகிறதென ஓர் ஆலிம் பி.எஸ்.பி. ஹள்ரத் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன விளக்கம் புல்லரிக்க வைக்கக்கூடியது.

 

"உத்துலுபுல் இல்ம வ லவ் பிஸ்ஸீன்' என்ற வரி "உத்துலுபுல் இல்ம வ லவ் குன்த்த பிஸ்ஸீன் என அமைந்ததாகும். "குன்த்த' எனும் வார்த்தை ஃகாயிப்-மறைமுகமாக அங்கே இருக்கிறது. "குன்த்த' எனும் வார்த்தை மறைமுகமாக வருமிடங்களையும் எடுத்துக் காட்டி "உத்துலுபுல் இல்ம வ லவ் (குன்த்த) பிஸ்ஸீன்' - அதாவது "நீ சீனாவில் இருந்தாலும் இங்கே (மதீனா) வந்து கற்றுக்கொள்' என்றே அமைகிறதென ஹள்ரத் அவர்கள் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்று எண்ணற்ற கருத்துகளை விளக்கிய மிகப்பெரிய மேதையாக இலங்கியவர் பி.எஸ்.பி. அவர்கள்.

 

ஞானக்களஞ்சியமாகத் திகழ்ந்த பிஎஸ்பி ஹள்ரத் அவர்கள் "அண்ணல் அஃலா ஹள்ரத் அடக்கம் செய்யப்பட்டிருக்கிற இடத்திற்கு அருகில் நானும் அடக்கம் செய்யப்பட வேண்டுமென துஆ செய்து வருகிறேன்'' என்று சொன்னதை வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொண்டுவிட்டான். வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரிக்கருகில்  சின்ன பள்ளிவாசல் மையவாடியில் தம்முடன் ஒன்றாக ஃபாஜில் வகுப்பில் பயின்ற தம் தோழர் அல்லாமா ஞானப்பெருந்தகை ஷப்பீர் அலீ ஹள்ரத் அடக்கவிடத்திற்குப் பக்கத்திலேயே பிஎஸ்பி ஹள்ரத் அவர்களும் அடக்கம் பெற்றுள்ளார் என்பது எண்ணிப் பார்க்கப் பிரமிப்பைத் தந்து அவர்கள்தம் இறைநேசத் தன்மையையும் உணர வைக்கிறது. 

-ஆசிரியர் சேமுமு

============================================0

 

உயர்ந்தோன் அல்லாஹ் ஹள்ரத் அவர்களின் மண்ணறையைச் சுவனத்தென்றல் வீசுமிடமாக ஆக்குவானாக. இவர்களோடு ஏனைய ஆசிரியர்களின் மண்ணறைகளையும் ஒளிமயமாக ஆக்குவானாக.

என்றும் நீங்கா நினைவுகளுடன்...

நூ. அப்துல் ஹாதி பாகவி

06 01 2025

=====================

வெள்ளி, 3 ஜனவரி, 2025