சனி, 7 டிசம்பர், 2024

தொடர்: 3 விடாமுயற்சியின் வெற்றிக்கனி (குறுநாவல்)

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

குறிப்பிட்ட தேதியில் அலுவல் தொடங்கியது. மொழிபெயர்ப்புச் செய்வதோடு, அதைத் தட்டச்சு செய்தும் கொடுத்தார். பின்னர் பிழைதிருத்தத்தையும் அவரே மேற்கொண்டார். எல்லாவற்றையும் செவ்வனே செய்து, பிரிண்ட் எடுத்து, உஸ்தாதிடம் கொண்டுசென்று காட்டினார். அதைப் பார்வையிட்ட உஸ்தாத், அங்கு தம்மோடு பணியாற்றி வருகிற மொழிபெயர்ப்பாளர் மௌலவி சித்தீக் என்பவரிடம் அதைப் பார்வையிட வழங்கினார். அவர் தம்மால் இயன்ற அளவிற்குப் பிழைகளைச் செப்பனிட்டுத் தந்தார். அதன்பின் அந்நூல் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு, அதனை மேலாய்வு செய்துதருமாறு கோரப்பட்டது.

 

அவர் உரிய முறையில் இரண்டு நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, மேலாய்வுசெய்து அனுப்பிவைத்தார். அதன்பின் அறிஞர்களிடம் வாழ்த்துரை, அணிந்துரையெல்லாம் வாங்கி, எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, நூல் அச்சுக்குச் சென்றுவிட்டது. அதன்பின் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

சென்னை மாநகரின் முக்கியமான நூலகத்தோடு (லைப்ரரி) இணைந்துள்ள ஓர் அரங்கில் அந்த நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டது. அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து வாழ்த்திப் பேசினார்கள். எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்திக் கண்ணியப்படுத்தப்பட்டார்கள். மொழிபெயர்ப்பாளர் அப்துல் அஹத் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அந்நேரத்தில் அதை என் மாமுவின் கைகளிலிருந்து நான் வாங்கிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்என்று கூறித் தம் மாமுவை மேடைக்கு வரச் செய்து, அவர்மூலம் அந்த நினைவுப்பரிசைப் பெற்றுக்கொண்டார் அஹத்.  

 

தம் தந்தையை மேடை ஏற்றவே அஹத் ஆசைப்பட்டார். ஆனால் அவருடைய தந்தை தம் வயது மூப்பின் காரணமாக அந்த நிகழ்வுக்கு வருகைதரவில்லை. தாயின்றித் தந்தையின் அரவணைப்பில்தான் அஹத் வளர்ந்துவந்தார். மற்றொரு திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் பிள்ளைகளின் நலனுக்காகவே வாழ்ந்த தம் தந்தையைக் கண்ணியப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது கைகூடவில்லை.

 

முதலாம் பாகம் வெளியீட்டிற்கு முன்னரே இரண்டாம் பாகத்தின் பணியைத் தொடங்கி, கால்வாசிப் பகுதியை மொழிபெயர்த்து முடித்திருந்தார். அன்று வழமைபோல் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டிருந்தபோது, மூமினா பதிப்பக உரிமையாளர் அஹதைத் தம் அலுவலக அறைக்கு வரச்சொன்னார். இந்தக் கோப்பினைப் பாருங்கள். இதோ இந்த சார் உங்கள் அருகில் அமர்ந்து, பிழைகள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல அதை நீங்கள் சரிசெய்து கொடுங்கள்என்றார்.

 

அவர் பெயர் அலீ அஹ்மது. அவர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்து வருகிறார்.  அவரோடு மற்றொரு பேராசிரியரும் வந்திருந்தார். இலக்கியக் கழகத்தின் சார்பாக ஓர் ஆய்வு நூல் வெளியிட உள்ளார்கள். அதற்காகப் பேராசிரியர்கள் பலரிடமிருந்து கட்டுரைகளை வாங்கித் தொகுத்து வந்திருந்தார்கள்.  அந்த நூலை மூமினா அச்சகத்தின் மூலம் வெளியிட விரும்பியே அங்கு வந்திருந்தார்கள்.

 

அந்தக் கோப்பினைத் திறந்து, அலீ சார் சொல்லச் சொல்லத் திருத்தம் செய்தார் அஹத். சிலவற்றை அவர் சொல்லாமலே அஹத் தாமே திருத்தம் செய்தார். அதைப் பார்த்து வியப்புற்று, “உங்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரிகிறதேஎன்று பாராட்டினார். அதன்பின் அவர், “நாம் நடத்திவருகிற மாதப் பத்திரிகைக்கு ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.

 

சரி, என் பெயரை ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கொள்வீர்களா?” என்று முன்னெச்சரிக்கையோடு கேட்டார். ஏனென்றால் பலர் பணிகளை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். அதற்குரியவரின் பெயரை இடம்பெறச் செய்யமாட்டார்கள்.  அதுபோல் பல தடவை அவர் அனுபவப்பட்டிருக்கிறார். பல நூல்களைப் பிழைதிருத்தம் செய்துகொடுத்துள்ளார்.  அதற்கான சிறுதொகையைக் கொடுத்துவிட்டு, அப்படியே விட்டுவிடுவார்கள். இன்னவர் இதைப் பிழைதிருத்தம் செய்துகொடுத்தார் என்று பெயரைப் பதிவுசெய்வதில்லை. அதனால்தான் அவரிடம் இப்படி ஒரு கேள்வியை அஹத் கேட்டார்.

 

நான் இதுவரை யார் பெயரையும் இடம்பெறச்செய்யவில்லை. இனி அதை ஒழுங்குபடுத்தி, உங்கள் பெயரைத் துணையாசிரியர் பொறுப்பில் சேர்த்துக் கொள்கிறேன்என்றார். அதைக் கேட்ட அஹத் மகிழ்ச்சியடைந்தார்.  ஆக ஒருபுறம் மொழிபெயர்ப்புப் பணி; மற்றொரு புறம் ஒரு பத்திரிகையில் துணையாசிரியர் பணி எனப் பொறுப்புகள் கூடின. பதிப்பகத்தில் அமர்ந்து மொழிபெயர்ப்புப் பணியை முடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் அமர்ந்து பத்திரிகைப் பணியை மேற்கொண்டார். அத்தோடு பிற மாதப் பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிவந்தார்.

***

 

காலப்போக்கில் அந்த வரலாற்று நூலின் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.  மூன்றாம் பாகம் பணி முடிந்து, நான்காம் பாகத்திற்கான பணியைத் தொடங்கிவிட்டார். அது நல்லவிதமாகச் சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பதிப்பக உரிமையாளர், அஹதுடைய கம்ப்யூட்டரில் தம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க்கிங் செய்துகொண்டு, “வேலை செய்கிறாராஇன்டர்நெட் பார்த்துக்கொண்டிருக்கிறாராஎன்று அவ்வப்போது அவரை வேவு பார்க்கத் தொடங்கினார். இது அஹதுக்கு அறவே பிடிக்கவில்லை.


இது குறித்துத் தம் உஸ்தாதிடம் பேசினார். உஸ்தாத், என்மீது நம்பிக்கையில்லாதவரிடம் இனி என்னால் பணியை மேற்கொள்ள முடியாதுஎன்று கூறி அங்கிருந்து விடைபெறும் முடிவெடுத்தார்.

 

சற்றுப் பொறு தம்பி! நான் பேசுறேன்என்றார் உஸ்தாத்.     

சில நாள்கள் கடந்தன. அங்கிருந்து செல்லும் முடிவில் இருந்ததால், வேறு பணி குறித்து யோசனை செய்துகொண்டே இருந்தார். அப்போதுதான் சென்னையில் நன்றாக இயங்கிவருகிற ஒரு பதிப்பகத்திற்கு ஆள் தேவை என்ற செய்தியை நண்பர் அபூசஹ்லான் என்பவர்மூலம் கேள்விப்பட்டார். மனச் சங்கடத்தோடு பணி செய்கிற இடத்திலிருந்து விடைபெறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான் என்று கருதிய அஹத், அங்கே செல்ல முடிவெடுத்தார்.

 

சம்பளம் எவ்வளவு?” என்று அந்த நண்பரிடம் கேட்டபோது, “பதினைந்தாயிரம்என்றார்.

ஏற்கெனவே வாங்குவதோ ஒன்பதாயிரம் மட்டுமே. அதற்கே இவ்வளவு கெடுபிடி. இப்போதோ மாதம் பதினைந்தாயிரம், அத்தோடு எந்தக் கெடுபிடியும் கிடையாது. ஹதீஸ்கள் மொழிபெயர்ப்புப் பணி. ஒரு மாதத்திற்கு 250 ஹதீஸ்கள் என்ற குறிப்பிட்ட வரையறையும் உண்டு. அதனால் அதை முடித்துவிட்டு, வேறு பணிகளையும்  கவனித்துக் கொள்ள வாய்ப்புண்டு. இவை அனைத்தையும் மனதில்கொண்டு மூமினா பதிப்பகத்திலிருந்து விடைபெற முடிவெடுத்தார்.

 

ஒவ்வொருவரும் தம்முடைய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டுதான் செயல்படுவார்கள். அந்த வகையில்தான் அஹத் முடிவெடுத்துள்ளார். இதை யாரும் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் அஹதின் முடிவு அவருடைய உஸ்தாதுக்குப் பிடிக்கவில்லை. அதன் பிறகு அஹதோடு அவர் நீண்ட காலம் பேசாமலேயே இருந்தார்.


பரக்கத் பதிப்பகத்தின் உரிமையாளருக்குச் சென்னையில் மற்றோர் இடத்தில் ஒரு சொந்தக் கட்டடம் இருந்தது. அங்கிருந்து கொண்டு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

 

சரியென ஒப்புக்கொண்டு அங்கிருந்தபடி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஹதீஸ்களை மொழிபெயர்த்து அனுப்பிவைத்தார். அபூஸஹ்லான் என்பவர் அதை மேலாய்வு செய்து, செப்பனிட்டுக் கொடுத்தபின், பரக்கத் பதிப்பகம் அதை வெளியிட்டது. அத்தோடு எண்திக்குகள்என்ற பத்திரிகைப் பணியையும் கவனித்துக்கொண்டார். இவ்வாறே நான்காண்டுகள் நன்றாகச் சென்றன.

 

ஐந்தாம் ஆண்டில் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் பரக்கத் பதிப்பக உரிமையாளர், அஹதை நேரடியாகச் சந்தித்துப் பேசினார். நீங்க இங்கு வந்துதான் பணி செய்யணும் என்ற கட்டாயம் கிடையாது. வீட்டில் இருந்துகொண்டும் செய்யலாம்; எனக்குத் தேவை பணி நல்லவிதமாக நடைபெற வேண்டும். அவ்வளவுதான்என்றார்.

 

இதைக் கேட்ட அஹத் நன்கு யோசித்து ஒரு முடிவெடுத்தார். வீட்டில் இருந்துகொண்டு செய்வதைவிட, ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்துகொண்டு, அங்கிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தால் நமக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணினார்.

 

அதன்படி தாம் குடியிருந்து வருகிற மஹல்லா இமாமான நூர்முஹம்மதுவிடம் சொல்லிவைத்திருந்தார். அவரும் தகவல் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தார். ஒரு நாள் அஸர் தொழுகைக்குப்பின் அஹதைச் சந்தித்த அவர்வடசென்னையில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு இமாம் தேவைப்படுகிறார் என்ற செய்தியைச் சொன்னார். அவரிடம் முகவரி வாங்கிக் கொண்டு அப்பள்ளியை நோக்கிச் சென்றார். அங்கு சென்றதும் மஃக்ரிப் தொழுகை நடத்தச் சொன்னார் அப்பள்ளியின் தலைவர் கபீர் ஹாஜியார்.


தொழுகை நடத்திய விதமும் ஓதிய தொனியும் தலைவர் உள்பட மக்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.  எனவே அவரை அப்பள்ளிக்கு இமாமாகச் சேர்த்துக்கொண்டனர். பின்னர் அஹத் தம் குடும்பத்தோடு அந்த மஹல்லாவிற்குக் குடிபெயர்ந்தார்.

 

அந்தப் பள்ளியில் இமாமுக்கென ஒரு தனியறை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தமது கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துவந்தார். அஹதுக்கு இப்போது மூன்று பணிகள் சேர்ந்துகொண்டன. இமாமாக இருந்துகொண்டு அங்குள்ள பணிகளையும் கவனிக்க வேண்டும். அத்தோடு மொழிபெயர்ப்புப் பணியையும் பத்திரிகைப் பணியையும் கவனிக்க வேண்டும். எண்திக்குகள்பத்திரிகையின் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதும், அவற்றைக் கூட்டல் கழித்தல் பிழைதிருத்தம் உள்ளிட்ட எடிட்டிங் செய்வதும் அவர்தாம்.

 

இவ்வளவுக்கும் இடையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி. செய்ய விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கான ஆய்வேட்டைத் (தீஸிஸ்) தயார் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் ஹதீஸ்களை மொழிபெயர்ப்புச் செய்து முடித்தபின், எஞ்சியுள்ள நேரத்தில் அதற்காகப் படிப்பதிலும் ஆய்வு செய்து குறிப்புகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டார். ஈராண்டுகள் கடுமையான உழைப்பிற்குப்பின் ஆய்வேட்டைத் தயார் செய்துமுடித்தார்.

 

அதற்குள் தம்முடைய ஆய்வு வழிகாட்டி (கைடு) நிஸார் அஹ்மத் ஸாப் தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே அவரை செல்பேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, “அந்த தீஸிஸை எடுத்துக்கொண்டு, நாளைக்கு என்னை என் வீட்டில் வந்து சந்திங்க மவ்லவி ஸாப்என்று கண்ணியமாகக் கூறினார். அவரின் கட்டளைக்கேற்ப அவருடைய சொந்த ஊருக்குப் புறப்பட்டார். அங்கு சென்று தம்முடைய தீஸிஸை அவரிடம் காண்பித்தார். ஆய்வேட்டைப் பார்வையிட்ட வழிகாட்டி, ஆங்காங்கே சிற்சில தவறுகளைச் சுட்டிக்காட்டி, அதையெல்லாம் சரிசெய்துகொடுத்தார். இதையெல்லாம் சரிசெய்து டைப் செய்துவிட்டு, இறுதியாக ஐந்து நகல்கள் பைண்டிங் செய்துகொண்டுவாங்க மவ்லவி ஸாப்என்று கூறி அனுப்பிவைத்தார். அவர் தம் வீட்டிலேயே பகலுணவைச் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுமாறு அன்போடு கூறி, நல்லவிதமாக உபசரித்து வழியனுப்பி வைத்தார்.

***


ஊருக்கு வந்துசேர்ந்தபின் மறுநாள் அவர்தம் வழிகாட்டி கூறியபடி ஒரு பிரிண்ட் அவ்ட் எடுத்து, அதை நான்கு நகல்கள் ஜெராக்ஸ் எடுத்தார். மொத்தம் ஐந்து நகல்கள் ஆயிற்று. எல்லாவற்றையும் அந்த ஜெராக்ஸ் கடையிலேயே பைண்டிங் செய்து கொடுத்தார்கள். அதற்கான தொகையைச் செலுத்திவிட்டு, மீண்டும் தம் வழிகாட்டியைச் சந்திக்கச் சென்றார். குறிப்பிட்ட தேதியில் அவர் சென்னை வருவதாகவும், அரபுத்துறையில் வந்து சந்திக்குமாறும் கூறியிருந்தார். அவர் சொன்னபடி அஹத் தம் ஆய்வேட்டை எடுத்துக்கொண்டு, வழிகாட்டியைச் சந்திக்கச் சென்றார்.

 

அவர் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு, ஒரு கடிதம் கொடுத்து, இதையெல்லாம் பிஎச்.டி. துறையில் சமர்ப்பிக்குமாறு கூறினார். எல்லாவற்றையும் கொண்டு சென்று பிஎச்.டி. துறையில் சமர்ப்பித்துவிட்டார். இதோ சமர்ப்பித்து ஈராண்டுகள் சென்றுவிட்டன. மீண்டும் மீண்டும் அங்கு சென்று, “என்னுடைய பிஎச்.டி. ரிசல்ட் என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உள்நாட்டு ரிசல்ட் வந்துருச்சு; வெளிநாட்டு ரிசல்ட் மட்டும் இன்னும் வரலஎன்று சொன்னார்கள். அதிலேயே மூன்றாண்டுகள் சென்றுவிட்டன.

 

பிறகு அஹத் மீண்டும் மீண்டும் கேட்டபின், பிஎச்.டி. துறையிலிருந்து ஆய்வு வழிகாட்டி (கைடு)க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் குறிப்பிட்ட அயல்நாட்டுத் தேர்வாள (ஃபாரீன் எக்ஸாமின)ரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “நான் இடம் மாறியதில் அந்தப் பிரதி எங்கோ தொலைந்துபோய்விட்டது. ஆகவே நான் சென்னை வரும்போது என்னிடம் ஒரு பிரதி கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுங்கள். நான் உடனடியாக ரிசல்ட்டை அனுப்பி வைக்கிறேன். மஆஃப் செய்ங்கஎன்று தாழ்குரலில் கூறினார். வயது மூப்பின் காரணமாக ஆய்வு வழிகாட்டி எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். அதன்பின் அஹதிடமிருந்து ஒரு பிரதி பெற்று அந்த அயல்நாட்டுத் தேர்வாளருக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு ஒரே வாரத்தில் ரிசல்ட் வந்துவிட்டது.

***

 

வடசென்னையிலுள்ள பள்ளிவாசலில் சேர்ந்த பிறகுதான் அதற்கான நேர்முக வாய்மொழித் தேர்வு (வைவா) ஆணை வந்தது. அந்த நிகழ்வில் பங்குகொள்ள அந்தப் பள்ளிவாசலின் தலைவர் கபீர் தலைமையில் நிர்வாகிகளும்  பொதுமக்கள் சிலரும் வருகைபுரிந்திருந்தனர். வைவா நல்லபடியாக நடைபெற்று முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வுக்கான வழிகாட்டியாக இருந்த டாக்டர் நிஸார் அஹ்மத் ஸாப் தம் மாணவரான அஹதைப் பாராட்டி உரையாற்றினார். பார்வையாளர்களாக வருகை தந்திருந்த முஹம்மது அலீ ஐபிஎஸ் இதுபோன்ற ஆய்வுகள்  தமிழில் நூலாக வெளிவந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்என்ற கருத்தை முன்வைத்தார்.

 

அந்தக் கருத்தை உள்வாங்கிய அஹத், பொருளாதார உதவி செய்தால் இந்த ஆய்வேட்டைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாக உறுதியளித்தார். எல்லோரின் கேள்விகளுக்கும் உரிய முறையில் ஆய்வாளர் அஹத் பதிலளித்தார். அதன்பிறகு புறத்தேர்வாளராக வருகை புரிந்திருந்த முனைவர் இப்ராஹீம், “இந்த ஆய்வு மாணவர்  தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து, வாய்மொழி நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். எனவே இவருக்கு முனைவர்பட்டம் வழங்குவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நான் பரிந்துரை செய்கிறேன்என்று அறிவித்தார்.

 

அதைக் கேட்ட அனைவரும் பாரக்கல்லாஹ்என்று கூறி வாழ்த்தினர். ஒருவர்பின் ஒருவராக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறகு அவர் பணியாற்றுகிற பள்ளிவாசல் தலைவர் மேடைக்கு வந்து, ஆரத் தழுவினார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து, தம் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  பத்திரிகையாளர் ரசூல், அவரைத் தனியாக அழைத்துச் சென்று, நிழற்படம் எடுத்துக்கொண்டு அதைத் தம் பத்திரிகையில் பிரசுரிக்கவும் செய்தார். அத்துடன் அஹத் தாம் பணியாற்றுகிற எண்திக்குகள்பத்திரிகையில் வாய்மொழித் தேர்வில் வெற்றிபெற்றது குறித்த செய்தியை வெளியிட்டார். அந்தச் செய்தியைப் பார்த்த பலர்  செல்பேசி வாயிலாகத் தம் வாழ்த்துகளைச் சொன்னார்கள்.

 

இதன்பின் அந்த மஹல்லாவில் அஹத் இமாம்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. நம் பள்ளிவாசல் இமாம் ஒரு பிஎச்.டி. பட்டதாரி என்று நினைத்துப் பெருமிதம் அடைந்தனர். பிற மஹல்லாவாசிகளுடன் பேசும்போதும் அது குறித்துப் பெருமையாகப் பேசிவந்தனர்.

 

அது மட்டுமின்றி அவர் அந்த மஹல்லாவின் சிறுவர்-சிறுமியருக்கான குர்ஆன் வகுப்பைச் சிறப்பாக நடத்தி வந்தார். ஆண்டுதோறும் பிள்ளைகளுக்கான ஆண்டுவிழா நடத்தி, அப்பிள்ளைகள்மூலம் சமுதாய மக்கள் சீர்திருத்தம் அடைவதற்கான கருத்துகளைப் பரப்பினார். அந்த மஹல்லாவில் பரவியிருந்த மூடப்பழக்கங்களை ஒழித்தார். குறிப்பாக எதற்கெடுத்தாலும் கயிறு முடிந்து போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழிக்க அயராது பாடுபட்டார். கருப்புக் கயிறுக்கு ஒரு விலை, சிவப்புக் கயிறுக்கு ஒரு விலை என்று முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைவரிடமும் சகட்டுமேனிக்கு வாங்கிக்கொண்டிருந்தார் அங்கிருந்த முஅத்தின். அதையெல்லாம் ஒழித்து, வெறுமனே திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஊதினால் நிவாரணம் கிடைக்கும் என்று கூறி மக்கள் மனங்களில் நம்பிக்கையை வளர்த்தார்.

 

ஓதி ஊதிய பின் மக்கள், பத்து, இருபது என்று தரும் அன்பளிப்புகளை வாங்க மறுத்து, “முழுமையாக நிவாரணம் அடைந்தபின் நீங்கள் மகிழ்ச்சியோடு தரும் அன்பளிப்பைத்தான் நான் ஏற்றுக்கொள்வேன்; நீங்கள் சோகத்தோடும் நோயோடும் இருந்து, துக்கத்தோடு தரும் பணம் எனக்கு வேண்டாம்என்று கூறிவிடுவார். இது மக்கள் மத்தியில் அவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 

நோய் குணமானதும் பலரும் வந்து, இன்முகத்தோடு, “இந்தாங்க சாமி! இதை வாங்கிக்கங்கஎன்று பத்து, இருபதை நீட்டும்போது, “என்னை சாமிஎன்று சொல்லக்கூடாது; நானும் ஒரு மனிதன்தான்; என்னை இமாம் என்றே சொல்லுங்கஎன்று இந்துச் சகோதர, சகோதரிகளுக்கு அறிவுரை கூறுவார். இதையெல்லாம் பார்க்கும் மஹல்லா மக்களுக்கு அஹத் இமாம்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

 

அந்த மஹல்லாவில் ஏழைகள் மிகுதியாக வசித்துவந்தனர். அவர்களுள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களையும் கைம்பெண்களையும் மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்துவந்தார். பிறர் மூலம் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொடுத்தார். ரமளான் மாதத்தில் பலர் ஸகாத் வழங்குவது எல்லா ஊர்களிலும் உள்ள பழக்கம்தான். அச்சமயத்தில் செல்வர்கள் வழங்குகின்ற பணத்தையெல்லாம் தாமே பெற்றுக்கொண்டு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அதை வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை அப்பள்ளியின் தலைவர் கபீரிடம் கூறினார்.

 

உங்கள் விருப்பம்போல் செய்யுங்க இமாம் ஸாப்என்று அவர் கூறிவிட்டார். அதன்பின் ஸகாத் பெட்டிஒன்றை அப்பள்ளியில் வைத்து, “நீங்கள் உங்கள் ஸகாத் பணத்தை இந்தப் பெட்டியில் போடுங்கள்; அது இங்குள்ள ஏழைகளுக்குப் பள்ளியின் சார்பாக வழங்கப்படும்என்று ஜும்ஆவில் அறிவிப்புச் செய்துவிட்டார். மக்களும் தத்தம் ஸகாத் பணத்தை அப்பெட்டியில் போட்டனர். அதன்பின் மக்கள் தம் ஃபித்ராவை வழங்குவதற்காக, அதற்கெனத் தனியாக ஒரு பெட்டி வைத்து, அந்தப் பணமும் அரிசியும் வசூல் செய்யப்பட்டன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, எண்ணிப் பார்த்ததில் கணிசமான தொகை சேர்ந்தது. அத்தோடு அரிசியும் குவிந்திருந்தது.

 

எல்லாவற்றையும் பங்கிட்டு, ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டியலில் உள்ளோரை மட்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பள்ளிக்கு வரச்சொல்லி பணமும் அரிசியும் வழங்கப்பட்டன. இதைப் பார்த்த நிர்வாகிகள், “இதற்குமுன் நம் பள்ளியில் இதுபோன்ற நடைமுறை இருந்ததில்லை. அஹத் இமாம்தான் இதுமாதிரியான செயல்களையெல்லாம் செய்கிறார்என்று பேசிக்கொண்டார்கள். ஆமா பாய், இவருக்குப் பணத்தின்மீதான ஆசை இல்லை; பொதுத்தொண்டு செய்யும் எண்ணம்தான் இருக்குஎன்று மற்றொருவர் கூறினார்.

***

 

சில நேரங்களில் அந்த மஹல்லாவில் உள்ள செல்வர்கள் தம் வீட்டில் ஏதேனும் நிகழ்வில் பிரியாணி எஞ்சிவிட்டால், அல்லது அகீகா கொடுத்தால் அஹத் இமாமிடம் வந்து, ‘ஏழைகள் பட்டியலில்உள்ள பெயர்களையும் தொடர்பு எண்களையும் பெற்றுச் சென்று, அவர்களைத் தொடர்புகொண்டு அவற்றைக் கொடுப்பார்கள். சிலவேளைகளில் பொருளாதார உதவிகளையும் செய்வார்கள். அஹத் இமாம் தயாரித்து வைத்திருந்த அந்தப் பட்டியல் செல்வர்கள் பலர் தகுதியானவர்களுக்குத் தர்மம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.

 

அதன்பிறகு அந்த மஹல்லாவில் நிர்வாகத்தின் சார்பாகவே ஜாமிஆ பைத்துல் மால்உருவாக்கப்பட்டு, அதன்மூலம் ஸகாத் வசூலிக்கப்பட்டு, அது ஏழைகளுக்கும் விதவைப் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும்  ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கு பள்ளிவாசலின் பின்புறம் இமாமுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு, பரக்கத் பதிப்பகத்திற்கான பணிகளையெல்லாம் முடித்துவிட்டார். பிறகு, “வேறு ஏதாவது மொழிபெயர்க்க வேண்டியுள்ளதா?” என்று கேட்டபோது, “இப்போதைக்கு எதுவும் இல்லைஎன்று அதன் உரிமையாளர் கூறிவிட்டார்.

 

பின்னர் ஒரு நாள் அப்துல் மாலிக் என்பவர் அஹத் இமாமைத் தொடர்புகொண்டு, “அரபியில் ஒரு மருத்துவ நூல் உள்ளது. அதைத் தமிழாக்கம் செய்து தருகிறீர்களா?” என்று கேட்டார். இன் ஷாஅல்லாஹ் செய்யலாம்என்று ஒத்துக்கொண்டார். ஒரு நாள் அவர் நேரடியாக வந்து, அவரைச் சந்தித்து அந்த நூலைக் கொடுத்துவிட்டு, முன்பணமாகச் சில ஆயிரங்களையும் வழங்கிவிட்டுச் சென்றார். மருத்துவ வார்த்தைகளைத் தமிழுக்குக் கொண்டுவர மிகுந்த சிரமப்பட்டார். முதலில் அரபி வார்த்தைக்கு நிகரான ஆங்கில வார்த்தை என்னவென்று பார்த்து, பின்னர் அதற்கு நிகரான தமிழ் வார்த்தையைக் கண்டறிந்து, அதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதினார்.  இவ்வாறு செய்ததால் அந்நூலை முடிக்க ஈராண்டுகள் ஆயிற்று.

 

பிறகு ஒரு தடவை கோவையிலிருந்து அமீர் என்பவர் தொடர்புகொண்டு, தாம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்த நூலை மேலாய்வு செய்து, செம்மைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அஹத் இமாம், அந்நூலை நல்லவிதமாகச் செம்மைப்படுத்திக் கொடுத்தார். திருக்குர்ஆன் கலைக் களஞ்சியம்  என்ற பெயரில் அது வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது.

***

 

ஒரு நாள் ஃபஜ்ர் தொழுகையில் கஹ்ஃபு சூரா ஓதினார். சில வசனங்களில் அவருக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தொழுகையாளிகளுள் ஒருவரான ரஹீம் என்பவர், தொழுகைக்குப் பின் அதைச் சுட்டிக்காட்டினார். அதை ஆமோதித்த அஹத் இமாம், “ஆமா ரஹீம் பாய், தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதும்போது சில நேரங்களில் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்தக் கூடாது. ஓர் இமாம் தொழுகைக்காக நிற்கும் இடம் இருக்கிறதே அது மிஹ்ராப்என்று அழைக்கப்படுகிறது. மிஹ்ராப்என்றால் சண்டையிடுமிடம் என்று பொருள். அதாவது ஷைத்தானோடு சண்டையிடுமிடம். அவன் அந்த இமாமைக் குழப்புவான்; தடுமாற்றத்தில் ஆழ்த்துவான். அதையெல்லாம் தாண்டித்தான் ஓர் இமாம் தொழுகை நடத்துகிறார் என்று தெளிவுபடச் சொன்னார்.

 

அதைக் கேட்ட ரஹீம் உள்படப் பலர், “அப்படியா இமாம் ஸாப், இப்படி விளக்கமா யாரும் இதுவரை எங்களுக்குச் சொன்னதில்லையே?” என்றனர். அதன்பின் ரஹீம் பாய், “இனி இது மாதிரி தடுமாற்றம் ஏற்பட்டால், கேள்வியெல்லாம் கேட்கமாட்டேன் இமாம் ஸாப்என்று பணிவுடன் பதில் சொன்னார். ரஹீம் பாய் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ நாளன்று வழமையாக சூரா கஹ்ஃபு ஓதுபவர். அவ்வாறு ஓதி ஓதியே அந்த சூரா அவருக்கு மனனம் ஆகிவிட்டது. இவ்வாறு பலர் பற்பல சூராக்களை வழமையாக ஓதவும் மனனம் செய்யவும் அஹத் இமாம் மிகப் பெரும் காரணமாக அமைந்தார். ஏனெனில் அவருடைய சொற்பொழிவில் அதுபோன்ற செய்திகளை மிகுதியாகச் சொல்லிவந்தார்.

 

அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த மஸ்ஜிதில் உள்ள கரும்பலகையில் எழுதிப்போடுகிற குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்க்கின்ற ஒவ்வொருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். படித்தவுடன் எளிதாகப் புரிகின்ற ஹதீஸ்களை மட்டுமே தேர்வு செய்து எழுதிப்போடுவார். அன்றைய சொற்பொழிவின் மிக முக்கியமான வசனங்களையும் ஹதீஸ்களையும் எழுதிப்போடுவதால் அதைப் படிக்கின்ற பலர், இன்றைய சொற்பொழிவின் தலைப்பு என்னவென்பதை ஊகித்துக்கொள்வார்கள். அன்று ஜும்ஆவுக்கு அங்கு வராதவர்களும் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள செய்திகளைப் படிக்கிறபோது, அந்த வாரம் என்ன பயான் என்பதை அறிந்துகொள்வார்கள்.

 

அவர் எழுதுகிறபோது சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர் எழுதும் முறையைப் பார்த்து இரசிப்பார்கள். நீங்க எப்படி இவ்வளவு அழகா எழுதுறீங்க இமாம் ஸாப்என்று யாரேனும் கேட்டால், சிறு வயதிலிருந்தே புத்தகத்தில் உள்ள மாதிரி எழுதி எழுதிப் பழகுவேன். அந்தப் பழக்கம்தான் இப்படி எழுதுவதற்கான காரணம்என்பார். அது மட்டுமில்லாமல் நாங்க ஓதுற காலத்துல அதீக் என்று ஓர் ஓவியர் இருந்தார். அவர் எங்களுக்கு எளிதாக எழுதும் முறையைக் கற்றுக்கொடுத்தார். அதை அப்படியே பார்த்துப் பழகிக்கொண்டேன்என்று கற்பித்தவரின் பெயரை மறக்காமல் நன்றியுணர்வோடு கூறுவார்.

                                                     -தொடரும்

=====================

வெள்ளி, 22 நவம்பர், 2024

எதிர்க்கருத்துடையோரையும் இணைத்துக்கொள்வோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நாம் வாழும் இவ்வுலகில் நம்மோடு பலர் தொடர்பில் இருக்கின்றார்கள்; சிலர் நாள்தோறும் நம்மைத் தொடர்புகொள்பவர்கள்; சிலர் அவ்வப்போது தொடர்புகொள்பவர்கள்; வேறு சிலர் எப்போதாவது தொடர்புகொள்பவர்கள். சிலர் எப்போதும் நம்மோடு தொடர்பில் இருப்பவர்கள். நமது வீடு, அலுவலகம், பொதுவிடம் என ஆங்காங்கே பலருடன் தொடர்புடையவர்களாக, அவர்களோடு உறவாடுபவர்களாக, கருத்துப் பரிமாற்றம் செய்பவர்களாக இருக்கின்றோம்.

 

நம்முடைய பொது வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை நாள்தோறும் எதிர்கொள்கிறோம். சிலரோடு இணைந்து பணியாற்றுகிறோம்; சிலரோடு கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். சபைகளில்  கலந்துகொள்ளும்போது ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். நம்முடைய கருத்தைக் கேட்கும்போது நாம் நம் கருத்தைத் தெரிவிக்கிறோம். சிலர் நம்முடைய கருத்துக்குச் சாதகமாகப் பேசுவார்கள்; வேறு சிலர் நம்முடைய கருத்துக்கு முரணான கருத்தை முன்வைப்பார்கள்.  நாம் அச்சபைக்குத் தலைவராக இருந்தால் இரண்டு சாராரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதுதான் சாலச் சிறந்தது.  அப்போதுதான் அந்த அமைப்போ இயக்கமோ சிதறாமல் தொடர்ந்து நீடிக்கும்.

 

நம்முடைய கருத்துக்கு எதிர்க்கருத்து கூறுபவர்கள் அல்லது நம் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இருந்தால்தான் அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு அச்செயலை அல்லது அத்திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த இயலும். சிலர் தம்முடைய கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்களை மட்டும் தம்முடன் வைத்துக்கொள்வார்கள். தம்முடைய கருத்துக்கு எதிர்க்கருத்துடையவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவ்வாறு ஒதுக்குவதால் தலைமைக் கழகம் பலவீனமடையுமே தவிர வலுவாக இருக்க வாய்ப்பில்லை. நாளடைவில் எதிர்க்கருத்துடையவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனிக் குழுவை ஏற்படுத்திக்கொள்வார்கள். ஒன்றாக இருந்த குழு இரண்டாகப் பிரியும்; இரண்டு நான்காகும்; நான்கு எட்டாகும்; அது தொடரும். 

 

எதிர்க்கருத்துடையவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு பயணிக்கும்போது நம்முடைய செயல்பாடுகள் தாமதமாகலாம்; ஆனால் தடைபட்டு நிற்கப்போவதில்லை. எதிர்க்கருத்துடையவர்களின் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு அவற்றையும் பரிசீலித்து, அதற்கேற்பத் திட்டங்களை அமைத்தால் அந்தத் திட்டத்தைச் சீராகச் செயல்படுத்த முடியும். எதிர்க்கருத்துடையவர்கள் நம் குழுவில் இருந்தால்தான் தலைவர் தவறு செய்கிறபோது அதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். அவரும் தம்மை எதிர்த்துக் கேட்க ஆள்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு தம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வார்.  இல்லையேல் தாம் எதைச் செய்தாலும் தம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற துணிச்சல் ஏற்பட்டுவிடும். அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தவறுகள் தொடரும்.

 

ஒத்த கருத்துடையவர்களோடு மட்டுமே நான் பயணிப்பேன் என்று முடிவெடுப்பது தவறு என்பேன்.  மக்களுக்குப் பயன்படும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அவற்றையெல்லாம் கேட்டு, அதன் சாதக, பாதகங்களை ஆய்ந்து, எதிர்க்கருத்துடையவர்களின்  கருத்துகளையும் உள்வாங்கிச் செயல்படும்போதுதான் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். அப்படிச் செய்வதால் அத்திட்டத்திற்கு எதிர்க்கருத்துடையவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் ஒத்த கருத்துடையோரும் எதிர்க்கருத்துடையோரும் இருந்தார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் ஆலோசனை கேட்கும்போது நபியவர்களின் உள்ளத்தில் இருந்த கருத்துக்கு எதிரான கருத்தைத் தோழர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதை நபியவர்கள் செயல்படுத்தியும் உள்ளார்கள். இதுதான் ஈருலகத் தலைவர் நமக்குக் கற்றுத்தந்த பாடம்.

 

ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் மத்தியில் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தம்முடைய கருத்தைத் தெரிவித்தார்கள். அதன்பின் அபூபக்ரின் கருத்துக்கு நேர்மாறானதொரு கருத்தை உமர் ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள். அதைச் செவியுற்ற அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, “தாங்கள் எப்போதும் எனக்கு எதிரான கருத்தையே சொல்கிறீர்களேஎன்று உமர்                                                                            மீது சினம்கொண்டார்கள். அந்த நேரத்தில் உமர்மீது அபூபக்ர் அவர்கள் சினம் கொண்டாலும் அடுத்தடுத்த நாள்களில் அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். அத்தகைய ஒழுங்கைத்தான் நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டும். நமக்கெதிரான கருத்தை ஒருவன் சொல்லியிருந்தாலும் அவனோடும் நாம் ஒன்றுபட்டு அன்போடு வாழ வேண்டும்.

 

ஒரு சபையில் நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது மற்றொருவர் நம்முடைய கருத்துக்குச் சாதகமாகவோ எதிராகவோ ஒரு கருத்தைக் கூறலாம். நமக்குச் சாதகமாகவே எல்லோரும் கருத்தைக் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் அறியாமை. ஒவ்வோர் உள்ளத்திலிருந்தும் ஒவ்வொரு கருத்தை ஏக இறைவன் தோற்றுவிக்கின்றான். அதை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்; அவ்வளவுதான். எனவே மக்களுக்கு எது நன்மையோ அக்கருத்து செயல்பாட்டுக்கு வரட்டும் என்று நினைப்பதுதான் நம்முடைய அறிவு முதிர்ச்சிக்கு அழகாகும்.

 

இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் இருக்கக்கூடிய தவறான போக்கு என்னவெனில், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணாக யார் எதைப் பேசினாலும் அவருக்கு வஹ்ஹாபிஎன்ற முத்திரையைக் குத்தி ஒதுக்கி வைத்துவிடுவதுதான். உண்மையில் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக எதையும் பேசவில்லை; மாறாக மக்கள் பின்பற்றி வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் சடங்குகளையுமே சாடுகிறார்கள். அதற்காக முத்திரை குத்தி அவர்களைத் தனியே ஒதுக்கிவைப்பது சமுதாயத்தில் பிளவை உண்டாக்கி, நம்முடைய  வலிமையைக் குறைக்குமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.

 

அதுபோலவே ஓர் இயக்கத்தின் தலைவர் தவறு செய்யும்போது அல்லது செயலாளர் தவறு செய்யும்போது, அதைக் கடைநிலைத் தொண்டர் ஒருவர் சுட்டிக்காட்டினால் அவரை அந்த இயக்கத்திலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்போர் யாரும் இருக்கக்கூடாது என்றெண்ணும் போக்கு எல்லா இயக்கங்களிலும் எல்லாத் துறைகளிலும் காணப்படுகிறது. கேள்வி கேட்டவரை நீக்கியபின், அவர் தம்முடைய ஆதரவாளர்களோடு சேர்ந்து புதியதோர் இயக்கத்தைத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இன்றைய நிலைமை. இதனால் அரசியல்ரீதியாக நாம் நம்முடைய வலிமையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை நம் தலைவர்கள் ஏன் இன்னும் உணராதிருக்கின்றார்கள்

 

முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு தனிக்குழுவாக-ஜமாஅத்தாக உருவாகி, தனித்தனி வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொண்டு, தனி நிர்வாகம் நடத்தி வருகின்றார்கள். அதனால் முஸ்லிம்கள் மத்தியில் பிளவு பெரிதாகிக்கொண்டு செல்கிறதே தவிர ஒன்றிணைய வழியே இல்லை. அதனால் அவர்கள் தனி ஜமாஅத்தாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள். இவ்வாறு கொள்கைரீதியாக ஏற்பட்ட பிளவு எல்லாவற்றிலும் பிளவாகவே தொடர்கிறது. முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியாக ஒரு பிரச்சனை ஏற்படுகிறபோதுகூடப் பிரிந்து நின்றே குரல் கொடுக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாள், அவர்கள் ஒரு நாள், மற்றோர் இயக்கம் வேறொரு நாள், வேறோர் இயக்கம் இன்னொரு நாள் எனக் கோரிக்கை வைத்து முழக்கமிடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் முன்வைப்பதோ ஒற்றைக் கோரிக்கைதான். எல்லோரும் ஒரே குடையின்கீழ் ஒன்றிணைந்து மிக வீரியத்தோடு அந்த ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அரசு அதைப் பரிசீலனை செய்திருக்கும். அதற்குத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் நடப்பது என்ன?

 

பிரிந்து செல்வதற்கும் தனித்தனியே நிற்பதற்கும் ஆயிரமாயிரம் கருத்து வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் நமக்கு மத்தியில் இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘அவனும் முஸ்லிம் நானும் முஸ்லிம்என்ற ஒற்றைக் காரணத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரே குடையின்கீழ் ஒன்றுபட்டு நிற்கக் கூடாதா? அவ்வாறு ஒன்றுபட்டு நின்றால்தான் எதிர்காலத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்என்ற ஒற்றைக் காரணத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரே குடையின்கீழ் ஒன்றுபட்டு நிற்க முற்படாத ஜமாஅத் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் சமய நல்லிணக்கம்என்ற பெயரில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி, சாமியார்களோடும், சந்நியாசிகளோடும், பாதிரியார்களோடும் தோளோடு தோள் சேர்த்து, கையோடு கை சேர்த்து ஒளிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஈன்ற தாயைத் தவிக்க விட்டுவிட்டு, பொது மக்களுக்குத் தொண்டு செய்ய ஓடோடி உழைத்த தனயனின் செயலுக்கு ஒப்பாக உள்ளது.

 

ஒரு பள்ளிவாசலில் நாம் தொழுகின்றபோது எத்தனையோ வகையான மனிதர்கள் அங்கு வருகின்றார்கள். ஒருவர் காலை அகற்றி வைத்திருப்பார்; ஒருவர் தம் தலையில் தொப்பியின்றித் தொழுவார்; ஒருவர் விரலை ஆட்டுக்கொண்டே இருப்பார்; ஒருவர் நெஞ்சின்மீதும் மற்றொருவர் நெஞ்சுக்குக் கீழாகவும் மற்றொருவர் வயிற்றின்மீதும் கைவைத்து நிற்பார். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத நாம்  அவர்களை ஒதுக்கிவைக்கத் தொடங்கினோம். தன் சொந்த மார்க்கச் சகோதரனின் செயல்களையே பொறுத்துக்கொள்ள முடியாத நம்மால் எவ்வாறு பிற சமய மக்களின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது? சொந்த மார்க்கத்திற்குள் ஏற்படுகிற முரண்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாத நம்மால் பிற சமயச் சசோதரர்களின் செயல்பாடுகளை எவ்வாறு சகித்துக்கொண்டு, ‘சமய நல்லிணக்கம் பேண வேண்டும்என்று பேச முடிகிறது?

 

இயக்கத் தலைவர்களே, மார்க்க அறிஞர்களே, படித்த மேதாவிகளே, இஸ்லாமியப் பிரிவுச் சட்டங்களில் கொண்டுள்ள கொள்கை முரண்பாடுகளுக்காக முஸ்லிம்களுள் எவரையும் முத்திரைகுத்தி ஒதுக்காதீர்கள். ஒத்த கருத்துடையோரை மட்டும் சேர்த்துக்கொண்டு வாழாமல், எதிர்க்கருத்துடையோருடனும் இணங்கி வாழ முற்படுங்கள்; அவர்களின் முரண்பாடான செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ளுங்கள். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்என்ற ஒற்றைக் குடையின்கீழ் ஒன்றுபடுங்கள். எதிர்காலத்தில் எந்த மனித உயிரும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க ஒன்றிணையுங்கள். இந்திய மக்கள் அனைவரையும் காக்க முஸ்லிம்களாகிய நம்முடைய வலிமையான ஒற்றுமைதான் காரணமாக இருக்கப்போகிறது என்பதை உணருங்கள்.

=======================



புதன், 13 நவம்பர், 2024

ஒருவர் ஒரு தொகுதியில்தான் போட்டியிட வேண்டும்

 



இன்று (13.11.2024) கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏன் இந்த இடைத்தேர்தல்? அந்தத் தொகுதி எம்.பி. இறந்துவிட்டாரா? அல்லது தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டாரா? இல்லை.  மாறாக ஒரே ஆள் இரண்டு தொகுதிகளில் வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றிபெற்றபின் ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, மற்றொன்றை ராஜினாமா செய்துவிட்டார்.

 

இவ்வாறு செய்தவர் யார்? தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இராகுல் காந்திதான்.  அவர் உ.பி. மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியிலும் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றபின், வயநாடு தொகுதியின் வெற்றியை ராஜினாமா செய்துவிட்டார். அந்தத் தொகுதிக்குத்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தொகுதியில் தற்போது அவருடைய சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார்.

 

இதனால் நாட்டுக்கு என்ன நட்டம்? ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால், அதற்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு வாக்காளருக்கு மத்திய அரசின் தேர்தல் ஆணையம் 72 ரூபாய் செலவு செய்கிறது. (2019ஆம் ஆண்டுக் கணக்கின்படி) வயநாடு தொகுதியில் வாக்காளர்கள் மட்டும் ஏறத்தாழ 14 இலட்சம் பேர் உள்ளனர். அதன் அடிப்படையில் (14.00.000 x 72) பத்துக் கோடிக்கு மேல் செலவாகிறது.

 

ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் ஒரு தொகுதியில்தான் போட்டியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் சட்டமியற்ற வேண்டும். அத்தகைய துணிவு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா?

 

 1951-இல் அமலுக்கு வந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் மூன்று தொகுதிகளில் போட்டியிடலாம்.  பின்னர், 1996-இல் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டமே இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் காரணமாக உள்ளது.

 

1957இல் மக்களவைக்கு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர், மதுரா, லக்னௌ ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு, பல்ராம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ, மத்தியப் பிரதேசத்தின் விதிஷா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

 

1999ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி என இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றார்.

 

நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றார்.

 

இவ்வாறு கட்சி வேறுபாடின்றிப் பலரும் இரட்டைத் தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றபின் ஒன்றை ராஜினாமா செய்வது வாடிக்கையாகவே உள்ளது. இதனால் அரசுக்குப் பல மடங்கு செலவாகிறது. ஆகவே இதற்கு முடிவு கட்டும் வகையில், ‘ஒருவருக்கு ஒரு தொகுதிஎன்று தேர்தல் ஆணையம் புதிய சட்டம் கொண்டுவருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

    

-நூ. அப்துல் ஹாதி பாகவி,

பட்டினம்பாக்கம், சென்னை-28

13 11 2024

=======================

வெள்ளி, 8 நவம்பர், 2024

அண்டைவீட்டாரோடு அணுகி வாழ்வோம்

  

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

நம்முள் பலரின் வீட்டோடு இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ள அண்டை வீடுகள் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அண்டைவீடு வலப்பக்கம் இருக்கலாம்; சிலருக்கு இடப்பக்கம் இருக்கலாம். சிலருக்கு எதிர்வீடாக இருக்கலாம். சிலருக்கு மேல்வீடாகவோ கீழ்வீடாகவோ இருக்கலாம். ஆக எப்படியேனும் நமக்கு அண்டைவீட்டார் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் நம் உறவினராகவோ உறவினர் அல்லாதவராகவோ இருக்கலாம். அவர்கள்  முஸ்லிம்களாகவோ முஸ்லிம் அல்லாதோராகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களோடு இணங்கி வாழ்வதுதான் நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

 

நம் அண்டை வீட்டார் நம்மைவிட ஏழையாக இருக்கலாம்; அல்லது நம்மைவிடப் பணக்காரராக இருக்கலாம்; அல்லது நமக்குச் சமமான பொருளாதாரப் பின்புலம் கொண்டவராக இருக்கலாம். எத்தகைய நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு நம் வீட்டு உணவைப் பகிர்ந்துகொள்வதும் அன்பைப் பகிர்ந்துகொள்வதும் நம் கடமையாகும்.

 

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக'' என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 5120) ‘குழம்புஎன்று குறிப்பிட்டுச் சொன்ன காரணம், ரொட்டியை எப்படியாவது சமைத்துவிடலாம். ஆனால் அதற்கான குழம்பு தயாரிப்பதுதான் பலருக்குச் சிரமமாக இருக்கும். அதனால்தான் அதைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். இன்றும் பல வீடுகளில் அந்நிலை தொடர்வதைக் காணலாம்.

 

நம்முடைய அண்டைவீட்டார் நம்மைவிட ஏழையாக இருந்தால் அந்தக் குழம்பு (சால்னா) அவர்களுக்கு உதவியாக இருக்கும். நம்மைவிடப் பணக்காரராக இருந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்காதே? பிறகு நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாம். அது அவர்களுக்கு உதவியாக இருக்காவிட்டாலும் நமக்கும் அவர்களுக்கும் இடையே அன்பை வளர்ப்பதற்கான ஊடகமாக இருக்கும்.

 

நாள்தோறும் அண்டைவீட்டாருக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை; வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் அல்லது கறி, மீன் வாங்கிச் சமைக்கிறபோது, பிரியாணி சமைக்கிறபோது, சிறப்பான உணவு வகைகளைச் சமைக்கிறபோது, இனிப்புப் பண்டங்கள் செய்கிறபோது அதில் ஒரு பங்கு அண்டை வீட்டாருக்குக் கொடுக்கலாம்.  அது நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். அதை அவர்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வார்கள். அதன்பின் அவர்கள் நமக்குக் கொடுக்க, அது நம் இருவருக்கிடையே அன்பையும் நல்லுறவையும் வளர்க்க உதவும். 

 

முஸ்லிம் பெண்களே!  ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாக)க் கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும், பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 2566) இதில் பெண்களை முன்னிலைப்படுத்தி நபியவர்கள் கூறியுள்ளதற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உள்ளது. ஆம்! பெண்கள் அண்டைவீட்டார் கொடுக்கிற சின்னச் சின்னப் பொருள்களை அர்ப்பமாகக் கருதுவார்கள்; இழிவாகக் கருதுவார்கள். ஆட்டுக்கால்களைக் கொண்டுபோய்க் கொடுத்தால், “எல்லாத்தையும் மத்தவங்களுக்குப் பங்குபோட்டுவிட்டு, கடைசியாக மிஞ்சிய கால்களை எங்களுக்குக் கொண்டுவந்தியாக்கும்; அதை நீயே வச்சுக்கஎன்று முகத்தில் அறைந்தாற்போல் பேசும் இயல்புடையவர்கள். எனவேதான் நபியவர்கள், எந்தப் பொருளாக இருந்தாலும் அதை அர்ப்பமாகவோ இழிவாகவோ கருத வேண்டாம் என்று பெண்களை முன்னிலைப்படுத்திச் சொன்னார்கள். ஆகவே அண்டை வீட்டார் நமக்கு எவ்வளவு சிறிய பொருளைக் கொடுத்தாலும் நாம் அதை இன்முகத்தோடு வாங்கிக்கொள்ள வேண்டுமே தவிர, அதைத் திருப்பி அனுப்பி, அவர்களை வருத்தமடையச் செய்யக்கூடாது.

 

பிறர் தருகின்ற சின்னச் சின்ன அன்பளிப்புகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதும் நம்மிடம் உள்ள சின்னச் சின்னப் பொருளாயினும் அதை அர்ப்பமாகக் கருதாமல், அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதும் நம் அண்டை வீட்டாரின் அன்பை அதிகப்படுத்தும். அந்த வகையில் நபியவர்கள் தமக்கு வழங்கப்படுகிற சின்ன அன்பளிப்பாயினும் அதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்கள்: ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.” (புகாரீ: 2568) 

 

பெண்கள் மத்தியில் பிணக்குகள் ஏற்பட்டு, அதன்மூலம் அண்டை வீட்டார் உறவு முறிவதுதான் மிகுதியாக நாம் காணும் அன்றாட நிகழ்வுகளாகும். துணி காயப்போடும்போது சிக்கல் ஏற்படும்; குப்பை போடும்போது சிக்கல் ஏற்படும், வீடு கழுவிவிட்டுத் தண்ணீரைத் தள்ளும்போது பிரச்சனை ஏற்படும். இரண்டு வீட்டாரின் பிள்ளைகள் விளையாடும்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு, அதன்மூலம் இருவீட்டாரின் பெண்களுக்கும் பிரச்சனை ஏற்படும். இவ்வாறு அவ்வப்போது சின்னச் சின்னச் சிக்கல்களும் பிணக்குகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் சமாளித்து அண்டை வீட்டார் உறவு சிதைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது குடும்பத்தலைவரின் பொறுப்பாகும்.

 

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம் (முஸ்லிம்: 75) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை நினைவில்கொள்வோம். இச்செய்தியை நம் வீட்டுப் பெண்களுக்கு எடுத்துச் சொல்வோம். அவர்கள்மூலமே இணக்கமோ பிணக்கமோ ஏற்படுகிறது. 

 

அண்டைவீட்டாரோடு இணங்கி வாழ்வதற்கான வழிமுறைகளுள் ஒன்று நாமும் அவர்களும் ஒருவருக்கொருவர் கொடுத்து, வாங்கிக் கொள்வதாகும். நாம் மட்டும் அவர்களுக்குக் கொடுக்க, அவர்கள் நமக்கு எதுவும் தருவதில்லை என்றாலும் பரவாயில்லை. நாம் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. நாம் மட்டும் அவர்களுக்குக் கொடுக்கிறோம், அவர்கள் நமக்கு எதுவும் தருவதில்லையேஎன்று நம்முள் சிலர் நினைக்கலாம். நாம் அவ்வாறு நினைக்கத் தேவையில்லை. நாம் அவர்களுக்குக் கொடுத்ததற்கான நன்மை நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

 

அண்டை வீட்டாரின் அன்பைப் பெற, அவர்களோடு இணங்கி வாழ, நாம் அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பது ஒரு வழி என்றால், நாம் அவர்களுக்கு எந்தச் சிரமமும் கொடுக்காதிருப்பது மற்றொரு வழி. நம்மால் அவர்களுக்கு எந்தத் தொல்லையுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நாமே அவர்களிடம், “எங்களால் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதாஎன்று கேட்டு, ‘இல்லைஎன்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆம்என்றால் அது என்னவென்று கேட்டு, அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி நம்மை எச்சரிக்கிறது: யாருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.” (முஸ்லிம்: 73)

 

அண்டைவீட்டாரின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பதும் அவர்களுக்குரிய உரிமைகளை முழுமையாகக் கொடுப்பதும் நாம் நம் அண்டைவீட்டாருக்குச் செய்யும் கடமையாகும். குறிப்பாக மேல்வீடு, கீழ்வீடுகளில் குடியிருக்கக்கூடியோர் இவ்விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துவைத்த துணிகளைக் காயப்போடுதல், வாகனங்களை நிறுத்துதல், தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்புவதற்காக மோட்டார் சுவிட்சை இயக்குதல் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் எழும். அப்போது நாம் அவர்களுக்காக விட்டுக்கொடுத்தல், உதவிசெய்தல் ஆகியவை மூலம் அவர்களின் மனத்தில் இடம்பிடிக்க முயல வேண்டுமே தவிர வம்புக்கு நிற்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் தீர்ந்துபோனால் யார் மோட்டார் சுவிட்சை இயக்குவது என்பதில்கூடச் சண்டைபோட்டுக் கொள்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையென்றால் அவர்களே வந்து சுவிட்சைப் போடட்டுமே என்று கீழ்வீட்டுக்காரர்கள் வீம்புசெய்வது சரியில்லை. நானே முதலில் செய்வேன்என்ற கொள்கைதான் இப்பிரச்சனைக்குத் தீர்வாகும். 

 

மேலும் கீழும் அடுக்கடுக்காக மூன்று வீடுகள். மூன்று வீட்டுக்காரர்களும் வாகனங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றால் நம் வாகனத்தை நிறுத்தும்போது பிறரின் வாகனங்களை நிறுத்துவதற்குத் தோதுவாக இடம் ஒதுக்கிவிட்டு நிறுத்த வேண்டும். நம்முடைய வண்டி, பிறரது வண்டியில் கீறல் ஏற்படுத்திவிடாதவாறு கவனமாக நிறுத்த வேண்டும். அதேவேளையில் பிறரின் வண்டி நமது வண்டியில் கீறல் ஏதாவது ஏற்படுத்திவிட்டால், அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; சகித்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் ஏற்பட்ட கீறல்களை எளிதில் சரிசெய்துவிடலாம். ஆனால் மனித மனங்களில் கீறல் ஏற்படுத்திவிட்டால் அதை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது; அது நீக்க முடியாத வடுவாகப் பதிந்துவிடும். அதுவே அடுத்தடுத்த சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே சின்னச் சின்ன விஷயங்களுக்காகச் சண்டைபோடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 

அண்டை வீட்டார் எப்படியோ போகட்டும்; அவர்களுக்குக் காற்று வரும்வழி இருக்கிறதா, தடைபடுகிறதா என்று பார்ப்பதெல்லாம் என் வேலை கிடையாது. என்னுடைய வசதியும் நிம்மதியும்தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தம் வீட்டை உயர்த்திக் கட்டுகிற, தம் வீட்டுச் சுவரை உயர்த்திக் கட்டுகிற எத்தனையோ பேரை நாம் காண்கிறோம். அந்தோ பரிதாபம்! அவர்களுக்கு நபியவர்களின் செய்திகள் தெரியாது. அண்டைவீட்டாருக்கு உபகாரம் செய்வது மிகப்பெரும் நன்மைக்குரிய செயல் என்பதை நம்முள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 

அண்டைவீட்டாருக்குச் செய்ய வேண்டிய நன்மைகள் என்னவென்று கேட்டால், அவரவர் தத்தம் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். ஒருவர் கொடுத்து உதவுதல்என்பார்; ‘தொல்லைகளைச் சகித்துக்கொள்ளுதல்என்பார் மற்றொருவர். அவர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல்என்பார் மற்றொருவர். அன்பைப் பரிமாறிக் கொள்ளுதல்என்பார் இன்னொருவர். ஆனால் எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால், அண்டைவீட்டார் நம்மைவிடப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவர்கள் முன்னிலையில் நம்முடைய மேன்மையை, பணப்புழக்கத்தை வெளிக்காட்டாமல் இருப்பதுதான்.

 

நாம் மிகுதியாக வாங்கி உண்கின்ற பழத்தோல்களை அவர்களுடைய பிள்ளைகளின் கண்களுக்குப் படுமாறு வீதியில் போடுவதும் உயர்தரமான ஆடைகளை நம் பிள்ளைகளுக்கு உடுத்திவிட்டு, அதை அவர்களின் பிள்ளைகள் பார்த்து ஏங்குமாறு செய்வதும் மிகப்பெரும் தவறாகும். நம் மனைவிக்கு உயர்தரமான ஆடைகளை வாங்கி, உடுத்திக்கொள்ளச் செய்து, அதைப் பார்க்கின்ற அண்டைவீட்டாரின் மனைவியை ஏங்க வைப்பதும்  உயர்பண்பாகாது. இத்தகைய வசதிகள் நமக்கு இல்லையே என்ற ஏக்கத்தை உண்டுபண்ணாமல் இருப்பதே நாம் அண்டைவீட்டாருக்குச் செய்யும் உபகாரங்களுள் மிக முக்கியமானதாகும். அதைத்தான் உடையது விளம்பேல்என்று ஆத்திசூடி பாடல் விளம்புகிறது.

 

அண்டைவீட்டாருக்குச் செய்யும் உபகாரங்களுள் மற்றொன்று, அவர்களுடைய வீட்டிற்குத் திடீரென விருந்தாளிகள் வந்துவிடும்போது அவர்களை எங்கே தங்கவைப்பது என்ற பதற்றம் அவர்களுக்கு ஏற்படும். அந்த நிர்ப்பந்தமான நேரத்தில், நாம் அவர்களிடம் சென்று, “உங்கள் உறவினர்களை எங்கள் வீட்டில் தங்க வைத்துக்கொள்ளுங்கள்என்று கூறி, நம் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு இடம்கொடுத்து உதவுவதே மிகச் சிறந்த உதவியாகும். கடுமையாக மழைபொழிந்து கீழ்வீட்டில் மழைநீர் புகுந்து, அவர்கள் தங்குவதற்கும் தூங்குவதற்கும் இடமின்றித் தவிக்கும்போது, “எங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள்என்று அவர்களிடம் சொல்லி, அவர்களுக்கு இடமளிப்பது காலத்தால் செய்கிற மாபெரும் உதவியாகும். இவை போன்ற உதவிகள் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில், நாம் நம் அண்டைவீட்டாரோடு அண்டி வாழ வேண்டும்; இணங்கி வாழ வேண்டும்.

 

என் வீட்டில் இல்லாததா என்று இறுமாப்போடு இருக்காமல், அண்டைவீட்டார் அன்போடு தருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதும் அவர்களோடு இணங்கி வாழ்வதும் நம் வீட்டிலிருந்து அவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் நாம் அண்டைவீட்டாரோடு அண்டி வாழ்வதற்கான அடையாளங்களாகும். எனவே அவற்றைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியில் வாழ முற்படுவோம்.

========================