திங்கள், 4 நவம்பர், 2019

தமிழில் மவ்லிது ஓதக்கூடாதா?



(மஹல்லாவில் உள்ள ஒருவருக்கும் இமாமுக்குமிடையே ஓர் உரையாடல்)

அவர்: ஹலோ, இமாம் ஸாப் அஸ்ஸலாமு அலைக்கும்.

இமாம்: வ அலைக்கும் ஸலாம். யாரு?

அவர்: நான்தான் முஹம்மது பாய் பேசுறேன். புதுவீடு கட்டி முடிச்சாச்சு இமாம்ஸாப். வீட்ல மவ்லிது ஓதி, அந்த பரக்கத்தோட புதுவீட்ல குடியேறணும். அதனால நீங்கதான் வந்து மஜ்லிச சிறப்பா நடத்திக் கொடுக்கணும்.

இமாம்: அப்படியா பாய்? சரி. சிறப்பா செய்துடலாம். மஜ்லிசுல எத்தனை பேர் உக்காருவாங்க பாய்?

அவர்: நம்ம சொந்தக்காரங்க நாற்பது அம்பது பேர் உக்காருவாங்க.

இமாம்: சரி, முஹம்மது பாய். என்னிடம், கவிஞர் மு. மேத்தா எழுதிய நாயகம் எங்கள் காவியம், கவிஞர் வலம்புரி ஜான் எழுதிய நாயகம் எங்கள் தாயகம், உமறுப் புலவர் எழுதிய சீறாப் புராணம், கவிஞர் சிராஜ் பாகவி எழுதிய நெஞ்சில் நிறைந்த நபிமணி, பன்னூலாசிரியர் கவிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய நபிகள் நாயகக் காவியம் முதலான புத்தகங்கள் இருக்கு. இதுல எதை ஓதலாம்?

அவர்: இதெல்லாம் என்ன இமாம்ஸாப்?

இமாம்: இதெல்லாம் தமிழ் மவ்லிது புத்தகங்கள்.

அவர்: இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லையே? இதெல்லாம் வேண்டாம். இமாம்ஸாப் உங்களிடம் சுப்ஹான மவ்லிது இருக்கா? அதக் கொண்டுவாங்க. அதைத்தானே நாம் ஓதணும்? அதுதானே ரசூலுல்லாஹ் மவ்லிது?

இமாம்: இருக்கு. அது அரபியில் அல்லவா இருக்கு? உங்களுக்கு அரபி தெரியுமா? அரபி உங்க தாய்மொழியா? அல்லது அங்கே சபையில் அமர்வோருக்கு அரபி தெரியுமா?

அவர்: இல்லை. எனக்கும் அரபி தெரியாது. என் உறவினர்களுக்கும் அரபி தெரியாது. என்னோட தாய்மொழி தமிழ்தான். எங்க உறவினர்களுக்கும் தமிழ்தான் தெரியும்.

இமாம்: பிறகேன் நாம் அரபியில் ஓதணும்? தமிழ்ல ஓதலாமே?

அவர்: என்ன இமாம்ஸாப் புதுசா பேசுறீங்க? மவ்லிதுன்னா அது அரபியில் உள்ள சுப்ஹான மவ்லிதுதானே? அதைத்தானே நாம் ரசூலுல்லாஹ்வுக்கு ஓதணும்? நீங்க என்னமோ புதுசு புதுசா பேசுறீங்களே? அரபியில் ஓதினால்தானே நன்மை கிடைக்கும்? பரக்கத் கிடைக்கும்?

இமாம்: அப்படின்னு யார் சொன்னது முஹம்மது பாய்? நமக்குத் தெரிந்த மொழியில்தானே நாம் ரசூலுல்லாஹ்வைப் புகழணும்? அர்த்தமே புரியாத மொழியில புகழ்ந்தால் அது வெற்றுச் சடங்காகத்தான் இருக்குமே தவிர உணர்வுப்பூர்வமான புகழா இருக்குமா? தாய்மொழியில் ஓதினால்தான் சபையில உக்காந்து கேக்குறவங்களுக்கும் விளங்கும்? ரசூலுல்லாஹ்வின் தியாகம் விளங்கும்? அவங்க மேல அன்பு ஏற்படும்?

அவர்: இமாம்ஸாப், நீங்க எப்பப் பாத்தாலும் இப்படித்தான் எடக்கு மடக்காவே பேசுறீங்க. ஆண்டாண்டு காலமா நம் முன்னோர்கள் இந்த சுப்ஹான மவ்லிதைத்தான் ஓதிவர்றாங்க. நீங்க மட்டும் இப்ப புதுசா பேசுனா எப்டி?

இமாம்: அந்தக் காலத்துல தமிழ் மவ்லிது இல்லை. அதனால யாரோ எழுதி வச்ச அரபி நூலைப் படிக்க ஆரம்பிச்சாங்க. அதை ஒரு புகழ்ப்பாவாகத்தான் ஓதுனாங்க. நாளடைவில் மக்கள் அதில் பரக்கத்எனும் வார்த்தையையும் ஒட்டிக்கிட்டாங்க. அவ்வளவுதான். நீங்க நெனச்சு வச்சிருக்கிற மாதிரி, அரபியில் ஓதினால் பரக்கத் கிடைக்குமென்பது உண்மைன்னா, அதே பரக்கத் தமிழ்ல ஓதினாலும் கிடைக்கத்தானே செய்யும்? எல்லா மொழிகளும் சமம்தானே முஹம்மது பாய்? ஒரு தமிழாசிரியரா இருக்குற நீங்களே, தமிழைப் புறக்கணித்தால் பிறகு யார்தான் தமிழ்ல மவ்லிது ஓதுவாங்க?

அவர்: அதெல்லாம் வேண்டாம். நீங்க ஒத்து வரமாட்டீங்க. நான் வேற ஆளப் பாத்துக்கிறேன். வச்சுடுங்க.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை.

================================================================



செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

என்ன பிடுங்கினாய்?



நீ அஞ்சு வருஷமா எம்.எல்.ஏ.வா இருந்து என்ன புடுங்கின?” என்று கொச்சையாக மக்கள் கேட்பதுண்டு. பிடுங்கினாய் என்பதைத்தான் புடுங்கினாய் என்று பேச்சுத் தமிழில் கேட்கிறார்கள். சிலர் அதைக் கெட்ட வார்த்தையாக எண்ணிக்கொண்டு அதைப் பயன்படுத்துவதையே தவிர்த்துவிடுகின்றனர்.

சரி! எம்.எல்.ஏ.வாக உள்ள ஒருவர் என்ன பிடுங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஊரில் ஆங்காங்கே தேவையில்லாமல் மண்டிக்கிடக்கின்ற புதர்களையும் களைகளையும் பிடுங்கிச் சுத்தம் செய்து ஊரின் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குளத்தில் படர்ந்து கிடக்கின்ற செடிகொடிகளையும் தாமரைக் கொடிகளையும் பிடுங்கி எறிந்துவிட்டு, குளநீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆங்காங்கே தவறு செய்யக்கூடிய அதிகாரிகளின் பதவியைப் பிடுங்கிக்கொண்டு, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் வறுமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, செழுமையை விதைக்க வேண்டும். அவர்களின் அறியாமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, கல்வியைப் புகட்டப் பாடுபட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சீரான சாலைகளை அமைக்க வேண்டும். இவை போன்ற செயல்களைத்தான் மக்கள் அவரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவற்றுள் எதையாவது அவர்கள் பிடுங்கி இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

நீ பத்து வருஷமா ஆசிரியரா இருந்து என்ன புடுங்கின?” என்று கேட்கப்பட்டால் அவர் அதற்கான பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். நான் இத்தனை வருடங்களாக, இங்கே அறியாமையில் உழன்றுகொண்டிருந்த பிள்ளைகளின் அறியாமையைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, கல்வி எனும் அறிவொளியை ஏற்றிவைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் வேரூன்றியிருந்த கெட்ட பழக்கங்களை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, நற்பழக்கங்களையும் நற்குணங்களையும் விதைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் பதிந்திருந்த தாழ்வு மனப்பான்மையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, துணிவை விதைத்துள்ளேன். இதோ என்னிடம் பயின்றவர்கள் என்னைவிட மேம்பட்ட நிலையில் உள்ளதைக் காணீர்என்று சுட்டிக்காட்ட வேண்டும்.

இப்படியே பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் இருந்துகொண்டு எதையெதைப் பிடுங்கினோம் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்து, செயலாற்றத் தொடங்கினால் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற தீயவற்றைப் பிடுங்கிவிட்டு, நல்லவற்றை விதைக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் யாராவது மேற்கண்ட வினாவை நம்மிடம் தொடுக்கின்றபோது, நாம் அதற்குரிய பதிலைச் சொல்ல முடியும்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

27 10 2019     27 02 1441




வெள்ளி, 25 அக்டோபர், 2019

சிந்திப்போருக்கே சீரான பாதை!


மதிப்பிற்குரிய முஹம்மது அல்தாஃப் அவர்கள் தொகுத்த அத்தாட்சிகள்’ 
எனும் திருக்குர்ஆன் கலைக்களஞ்சியத்திற்கு நான் எழுதிய மேலாய்வுரை உங்கள் பார்வைக்கு...

சிந்திப்போருக்கே சீரான பாதை!
-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.
(இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்-மணலி, சென்னை-68)
-----------------------------------------------------------------------------------------

ஆகுக எனும் சொல்லால் அகிலத்தைப் படைத்த ஆற்றலும் வல்லமையும் கொண்ட அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன். அகில மக்கள் யாவருக்கும் நல்வழிகாட்ட வந்த கருணையுள்ளம் கொண்ட கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், ஆருயிர்த் தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் பொழிவதாக!

மதிப்பிற்குரிய முஹம்மது அல்தாஃப் அவர்கள் அத்தாட்சிகள்எனும் திருக்குர்ஆன் கலைக்களஞ்சியத்தை என்னிடம் கொடுத்து, மேற்பார்வையிடச் சொன்னார். அதனால் நூல் முழுவதையும் புரட்டிப் பார்த்து வாசிக்கத் தொடங்கியபோது, திருக்குர்ஆன் ஓர் அறிவியல் நூலோ என்ற எண்ணம் தோன்றியது. அவ்வளவு அறிவியல் கருத்துகளை உயர்ந்தோன் அல்லாஹ் அதனுள் நிறைத்து வைத்துள்ளான்.

திருக்குர்ஆனில் பொதிந்து கிடக்கின்ற கருத்துகள்மூலம் ஈருலகப் பயன்களைப் பெறவேண்டுமென்றால் அவர் நல்வழி பெற்று, இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். அந்த நல்வழி அனைவருக்கும் கிடைத்து விடாது. இறைவனைப் பற்றிச் சிந்தித்து, அவனை உணர்ந்து, நல்வழியை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொஞ்சமாவது அவர்தம் மனத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அல்லாஹ் அத்தகைய நல்வழியை மனத்தில் போட்டு, சீரான பாதைக்கு அழைத்துச் செல்வான். மனிதனுக்கு ஆறாம் அறிவு வழங்கப்பட்ட காரணமே, அவன் சுயமாகச் சிந்தித்து, தன்னைப் படைத்தவனைக் கண்டறிய வேண்டுமென்பதற்காகத்தான். தவறான மார்க்கத்தில் பயணிப்பவன்கூட, தன் பகுத்தறிவால், தன்னைப் படைத்தவனைக் கண்டறிந்துவிடலாம். அத்தகைய அறிவுத் திறனோடுதான் அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். அதற்கு இக்கலைக் களஞ்சியம் வழிகாட்டுகிறது.

நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். அவர்கள் உள்ளங்கள் இருந்தும் சிந்திக்காதவர்கள்; கண்கள் இருந்தும் (இவ்வுலகிலுள்ள இறைவனின் சான்றுகளைப்) பார்க்காதவர்கள்; செவிகள் இருந்தும் (நல்லுபதேசங்களுக்குச்) செவிசாய்க்காதவர்கள். அத்தகையோர் விலங்குகளைப்போல் ஏன், அவற்றைவிட மிகக் கேடுகெட்டோர்” (7: 179) என்று அல்லாஹ் கூறுகின்ற இவ்வசனத்தில், சிந்திக்காத மனிதனை, வனவிலங்குகளைவிட மிக மோசமாக அவன் சித்திரிக்கிறான்.

மனிதன் தன் அறிவால் எவ்வளவு தொலைநோக்கோடும் ஆழமாகவும் சிந்திக்கின்றானோ அதற்கேற்ப விரிவான, ஆழமான கருத்துகளை அடைந்துகொள்ளும் விதத்தில்தான் மனித அறிவை அல்லாஹ் படைத்துள்ளான். திருக்குர்ஆன் வசனங்களைப் பரந்த மனத்தோடும் திறந்த உள்ளத்தோடும் சிந்திக்கும்போது அதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றிப் பேசுபவையாக இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஓர் உதாரணம் கூறி, மக்களுக்கு விளக்குவதாக இருந்தாலும் அதனுள்ளும் ஓர் அறிவியல் உண்மையைப் பொதிந்து பேசுவது அல்லாஹ்வின் வழக்கம்.

பின்வரும் வசனங்கள் அதற்குச் சான்றாக அமையும்.
விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை: அல்லாஹ் யாருக்கு நல்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவருடைய உள்ளத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். யாரை அவருடைய வழிகேட்டிலேயே விட்டுவிட நாடுகின்றானோ அவருடைய உள்ளத்தை வானத்தில் ஏறுபவரைப்போல் சிரமப்பட்டு (உள்ளம்) சுருங்கும்படியாக்கி விடுகிறான். (6: 125)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்து வெளிப்படையாகத் தெரியாது. ஆழமாகச் சிந்திப்போருக்கே விளங்கும். இந்தப் பூமியை மனிதன் வாழ்வதற்கேற்ப வகையில் அல்லாஹ் படைத்துள்ளான். அதாவது அவன் எப்போதும் சுவாசிக்க சுத்தமான காற்றை நிரப்பி, வளி மண்டலமாக அமைத்துள்ளான். அதனால்தான் மனிதன் எவ்விதச் சிரமுமின்றி வாழ முடிகிறது. அதேநேரத்தில் மனிதன் வானத்தை நோக்கி ஏறும்போது, ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து சென்றுவிட்டால் வளிமண்டலப் பகுதி முடிந்துவிடும். அதற்கு அப்பால் அவன் சுவாசிப்பதற்கான காற்று கிடையாது. அதனால் அவன் தன் இதயம் சுருங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவான்; இறுதியில் இறந்தும்விடுவான். அதனால்தான் விண்வெளிப் பயணம் மேற்கொள்வோர் தம் முதுகில் ஆக்ஸிஜனோடு செல்கிறார்கள். இந்த அறிவியல் உண்மை இவ்வசனத்தினுள் உள்ளதை அறிகிறோம்.

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோஅவன் வானத்திலிருந்து கீழே விழுபவனைப் போலாவான். அவனைப் பறவை கொத்திச் செல்லும்; அல்லது காற்று தூரமான இடத்திற்கு அடித்துச் செல்லும்” (22: 31) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் மேலிருந்து ஒரு பொருளைப் போட்டால் அது மேல்நோக்கிச் செல்லாமல் பூமியை நோக்கியே மிக வேகமாக வந்து கீழே விழும். இது எதனால்? இப்பூமி புவியீர்ப்பு விசையைக் கொண்டிருப்பதால்தான். இணைவைப்பவன் குறித்துப் பேசும்போது அதனூடாக ஓர் உதாரணத்தைக் கூறி, அதில் ஓர் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளான் இறைவன். இதுதான் அவன் நுண்ணறிவாளன் என்பதற்கான அடையாளம். மேலும் மேலிருந்து கீழே விழும் மனிதன் எவ்வாறு உயிர்பிழைக்க மாட்டானோ அவ்வாறே இணைவைப்பவன் அச்செயலிலிருந்து மீளவில்லையென்றால் அவன் வானிலிருந்து கீழே விழுந்து, தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்குத் தயாராகின்றான் எனப் பொருளாகும்.

பேரிரைச்சலால் மரணம்: ஒரே ஒரு பேரிரைச்சல்தான். அப்போது அவர்கள் அணைந்து (பொசுங்கிப்போய்) விட்டார்கள்” (36: 29) என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த அறிவியல் அறிஞர்கள் இதன் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆம்! மனிதன் சராசரியாகக் கேட்பதற்கென ஓர் ஒலி அளவு உண்டு. அது டெசிபல் அளவால் அறியப்படுகிறது. மனிதன் இயல்பாகக் கேட்பதற்கான டெசிபல் அளவு 60 முதல் 80 வரை இருக்கலாம். எண்பதைத் தாண்டினால் அது ஒலிமாசுஆகும். அதையும் தாண்டினால் பேரிரைச்சல் ஆகும். தொழிற்சாலையின் இராட்சத மெஷின்களுக்கு அருகில் தொடர்ந்து வேலைசெய்யும் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் தமது கேட்கும் திறனை இழந்துவிடுவார். அந்த அடிப்படையில் ஓர் இடியின் டெசிபல் அளவு எவ்வளவு இருக்கும்

அப்படியானால் மக்களை அழிப்பதற்கான பேரிடியின் சத்தம் எப்படி இருந்திருக்கும்? பேரிடியின் பேரிரைச்சல் மூலம் காதுச் சவ்வு கிழிந்து, மனிதன் அழிந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆக, அந்த அடிப்படையில்தான் இறைவனை மறுத்த சில ஊர் மக்களை ஒரே ஒரு பேரிடியின்மூலம் ஒரேயடியாக அல்லாஹ் அழித்தான்.

புவி ஈர்ப்பாற்றல்: உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்கும் இப்பூமியை ஒன்றுதிரட்டி வைக்கும் இடமாக நாம் ஆக்கவில்லையா?” (77: 25-26) என்று அல்லாஹ் கேட்கின்றான். மற்றொரு வசனத்தையும் பாருங்கள்: ஒவ்வொன்றும் (அதனதன்) கோள்வீதியில் நீந்தி(யவாறு சுற்றி)க் கொண்டிருக்கின்றன.” (36: 40)

நிலத்தின் முதுகில் மனிதன் வாழ்கிறான். இறந்தபின் அதன் வயிற்றினுள் அடக்கம் செய்யப்படுகிறான். பூமியின் ஈர்ப்பாற்றலால்தான் மனிதன் அதன்மீது நிலையாக நடக்கவும் ஓடவும் முடிகின்றது. அதன் ஈர்ப்பாற்றல் மூலமே எத்தனையோ உடல்களையும் பொருள்களையும் அது தன்னுள் வைத்துக்கொள்கிறது. அதேநேரத்தில் ஈர்ப்பாற்றல் இல்லாத வானத்திலோ பொருள்கள் ஒவ்வொன்றும் நீந்திக்கொண்டிருக்கின்றன. ஒருவேளை புவிக்கு ஈர்ப்பாற்றல் இல்லாதிருந்திருந்தால் நாம் அனைவரும் நீந்திக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அதை மாற்றி, மனிதன் வாழ்வதற்கேற்ற இடமாக இப்புவிப் பரப்பை அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதனை ஒரு சான்றாகக் கருதி, தன்மீது நம்பிக்கைகொண்டு, தன்னையே வணங்குமாறு அவன் கட்டளையிடுகின்றான்.

மற்றோர் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: அ(ந்த இறை)வன்தான் (நடந்து செல்லவும் விவசாயம் செய்யவும்) பூமியைக் கட்டுப்பட்டதாக ஆக்கித் தந்தான். எனவே பூமியின் (பல்வேறு) பாகங்களில் நடந்து செல்லுங்கள்.” (67: 15) நடப்பதற்கேற்ற முறையில் இப்பூமிப் பந்தை அல்லாஹ் ஆக்கியிருப்பதன்மூலம், அவன் தன்னை ஒரு நுட்பமான படைப்பாளன் என நிரூபிக்கிறான்.

கைரேகை: நாமோ அவனுடைய விரல்நுனிகளைக்கூடத் துல்லியமாக அமைத்திட ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்” (75: 4) என்று அல்லாஹ் கூறுகின்றான். தம் பெயரை எழுதி, கையொப்பம் போடத் தெரியாத படிக்காத பாமரர்கள், தம் கையின் பெருவிரலை மையில் தோய்த்து, கைரேகையைப் பதியச் செய்வார்கள். ஆனால் விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் படித்தோர், படிக்காதோர் என அனைவரும் தம் கைரேகையைப் பதிவு செய்கின்றனர். இந்த அளவிற்குக் கைரேகை முக்கியத்துவம் பெறக் காரணமென்ன? ஒருவரின் கைரேகையைப் போல் மற்றொருவரின் கைரேகை இருப்பதில்லை. அவ்வளவு நுட்பமாக நுண்ணறிவாளன் அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். அதனால்தான் அவனை மறுத்த இறைமறுப்பாளர்கள், நாங்கள் இறந்தபின் எங்களை அவன் எவ்வாறு உயிர்ப்பிப்பான் என்று ஏளனமாகக் கேட்டபோது, அதற்குப் பதிலளித்து, தன் வல்லமை குறித்துச் சொல்லும்போது, “அவனுடைய விரல்நுனிகளைக்கூடத் துல்லியமாக மீண்டும் அமைப்போம்என்று அல்லாஹ் தெரிவிக்கிறான்.

ஒவ்வொன்றிலும் இணை: பூமி விளைவிப்பவையிலும் (மனிதர்களாகிய) அவர்களிலும் இன்னும் அவர்கள் அறியாவற்றிலும்-அவை ஒவ்வொன்றிலும் இணைகளைப் படைத்த அவன் தூயவன்” (36: 36) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நிலத்தில் விளைகின்ற காய்கறிகள், வளர்ந்தோங்கி நிற்கின்ற மரங்கள், பரவலாகப் படர்ந்துள்ள தாவரங்கள் உள்ளிட்ட அனைத்திலும், மனித உடலமைப்பிலுள்ள ஒவ்வோர் அணுவிலும், மனிதர்கள் அறியாத எத்தனை பொருள்கள் உள்ளனவோ அவை அனைத்திலும் இணை உண்டு என அல்லாஹ் கூறுகின்றான்.
இன்றைய விஞ்ஞானம் இதை மெய்ப்பிக்கின்றது. நாம் காணும் ஒவ்வொன்றும் ஒன்றல்ல, இரண்டு. தாவர இனங்களிலும் ஆண்-பெண் என்ற இணை உண்டு. மகரந்தச் சேர்க்கை (Pollination) மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மலரின் மகரந்தம்-மஞ்சள்நிறத் தூள்-சூல் முடியில் சேரும் இனப்பெருக்க நிகழ்வே மகரந்தச் சேர்க்கை எனப்படுகிறது. இச்செயல் நடைபெறுவதாலேயே செடி, கொடி, மரம் ஆகியவற்றில் பூ பூத்து, காயாகி, பழம் வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மின்சாரத்திலும் இணை இருப்பதாக இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

மின்சாரத்தில் பாசிடிவ்-நெகடிவ் ஆகிய இணை இருப்பதால்தான் விளக்கு எரிகிறது; மின்விசிறி சுழல்கிறது. அணு சக்தியிலும் புரோட்டான்-எலக்ட்ரான் ஆகிய இணை உண்டு. மனிதன் அறியாதவற்றிலும்என்ற ஒற்றை வாக்கியத்தில், மனிதன் அறியாத பல்வேறு பொருள்களிலும் இணை இருப்பதை அல்லாஹ் உணர்த்திவிட்டான்.

எல்லைமீறாத கடல்நீர்: அவன் இரண்டு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்கும் வகையில் அமைத்தான். ஆயினும் அவ்விரண்டிற்கும் இடையே ஒரு தடுப்பு உள்ளது. (அதை) அவை மீறுவதில்லை.” (55: 19-20) பல்வேறு கிளை நதிகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் பலதரப்பட்ட நீர்கள் கடலினுள் கலக்கின்றன. இருப்பினும் அடர்த்தி குறைந்த நீரும் அடர்த்தி மிகுதியான நீரும் ஒன்றையொன்று கலந்துவிடாமல் ஒரு கோடு போட்டதைப்போல் ஒன்றையொன்று தொட்டு நிற்குமாறு இறைவன் அமைத்துள்ள விந்தையை என்னவென்பது! அத்தகைய ஒரு பகுதி எங்கே உள்ளது என ஆய்வு செய்த அறிஞர்கள், “மத்தியத் தரைக்கடலும் கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின்போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடல்நீர் கீழேயும் அடர்த்தி குறைந்த கடல்நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின்மேல் ஒன்றாக நிற்கிறதுஎனக் கண்டறிந்தார்கள்.

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும் தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டிற்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்” (25: 53) எனும் இறைவசனம் இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. இரண்டு கடல்கள் சந்திக்கும்போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய இறைவன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும்போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றான். தண்ணீரின் அடர்த்தி மிகுதிக்கும் குறைவுக்கும் இடையே ஒரு திரை என்றால், இங்கு உப்புநீரும் நன்னீரும் சிறிதளவு கலந்த கலவை ஒன்று உருவாகி, அது மற்றொரு தடையாக நிற்கின்றது. ஆக இதில் இரண்டு தடைகள் உள்ளன என்பதை அறியலாம்.

பூமி உருண்டை: இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்; இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்” (55: 17) என்று அல்லாஹ் கூறுவதைக் கூர்ந்து பாருங்கள். மேலும், “கிழக்குத் திசைகளின் மற்றும் மேற்குத் திசைகளின் இறைவ(னாகிய எ)ன்மீது நான் சத்தியம் செய்கிறேன்” (70: 40) என்று அல்லாஹ் கூறுவதைக் கூர்ந்து நோக்குங்கள். பூமி உருண்டையாக இருந்தால் உதிக்குமிடம் ஒவ்வொரு நாளும் மாறுபடும். அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு புள்ளியிலிருந்து உதிக்கும். அதனால் பல கிழக்குகளும் பல மேற்குகளும் இயல்பாகவே ஏற்படுகின்றன. ஆக, பூமி உருண்டையானது என்பதை இதன்மூலம் அறியலாம்.
இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்...என்ற தொடர் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், புவியின் ஒரு பகுதியில் பகலாக இருந்தால் மற்றொரு பகுதி இரவாக இருக்கும். இரவாக இருந்த பகுதி பகலாக ஆனதும் பகலாக இருந்த பகுதி இரவாக மாறிவிடும். இந்த அடிப்படையில் ஒரே நாளில் இரு வேறு நாடுகளில் இரண்டு பகலும் இரண்டு இரவுகளும் ஏற்படுகின்றன. ஆக, உதிக்குமிடங்கள் இரண்டும் இரண்டு கிழக்குத் திசைகளாகவும் மறையுமிடங்கள் இரண்டும் இரண்டு மேற்குத் திசைகளாகவும் உள்ளன. ஆகவே இருபத்து நான்கு மணிநேரத்தில் இரண்டு பகல்கள் இரண்டு இரவுகள் இரு வேறு நாடுகளில் ஏற்படுகின்றன என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.
சூரியன் மறையாத நாடுகள்: (நபியே!) நீங்கள் கேளுங்கள். இரவை மறுமை நாள் வரை அல்லாஹ் நீட்டித்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?” (இதனை) நீங்கள் செவியுற மாட்டீர்களா? (மேலும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு அல்லாஹ் நீட்டித்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக்கூடிய இரவை உங்களுக்குக் கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?” (இதனை) நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? (28: 71-72)

சரி, உலகில் எங்கேனும் சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது என்னே ஆச்சரியம்! அப்படியும் சில நாடுகளை அல்லாஹ் இப்புவிப் பரப்பில் அமைத்துள்ளான். குறிப்பிட்ட மாதங்களில் சூரியன் மறையாமல் எப்போதும் பகலாகவே நீடிக்கிறது. இங்குதான் அல்லாஹ்வின் அறைகூவல் நிதர்சனமாகிறது. அத்தகைய காலங்களில் யாரும் அந்தப் பகலை இரவாக மாற்ற முனைவதில்லை. அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் துல்கர்னைன் குறித்துக் கூறுகின்றான். அதன் விரிவுரையில் அவர் உலகைச் சுற்றி வந்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. "முதலில் அவர் ஓரிடத்திற்குச் சென்றார். அங்கு கருஞ்சேற்று நீரில் சூரியன் மறைவதைக் கண்டார். அங்கு மக்கள் சிலர் வசித்து வந்தனர். பிறகு அவர் நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டு வேறோர் இடத்தை அடைந்தார். அங்கு சூரியன் உதித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அதனையன்றி எந்தத் திரையும் இல்லாத நிலையைக் கண்டார்'' என்று அல்கஹ்ஃப் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

முதலில் அவர் சென்றதும் இரண்டாவது சென்றதும் நீண்ட நிலப்பரப்பின் இருமுனைகள் சந்திக்கின்ற ஒரே இடம்தான் என்பதைச் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள "ஃபீ அய்னின் ஹமிஅத்தின்' என்ற சொற்கோவையிலுள்ள "ஹமிஅத்தின்' என்பது "ஹாமியத்தின்' என்றும் படிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ""அது வெந்நீர் ஊற்று நீரில் மறைவதைக் கண்டார்'' என்று பொருள்படுகிறது. ஐஸ்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் உள்ளன என்பது உண்மைத் தகவல். அதனுள் சூரியன் மறைவதையே இங்கு அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தோடு "சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அதற்கு அதனையன்றி எந்தத் திரையும் இல்லை'' என்பதன்மூலம் அங்கு சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருந்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறான் என்பதையும் உணர முடிகிறது. ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. இந்த நிகழ்வையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அத்தோடு, ஃபின்லாந்தில் கோடைக்காலத்தில் உதிக்கின்ற சூரியன் 73 நாள்கள் மறையாமல் நீடிக்கிறது; அலஸ்காவில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை; ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை கடைசி வரை சூரியன் மறைவதில்லை; கனடாவில் கோடைக்காலத்தில் 50 நாள்கள் சூரியன் மறையாது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குப் பகலாகவே நீடிக்கக்கூடிய சில நாடுகளையும் இப்புவிப்பரப்பில் அல்லாஹ் அமைத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

மற்றவை...: தாயின் கருவறையில் மூன்று இருள்களுக்கு இடையே படைத்தல், கருவுற்ற மேகங்களிலிருந்து மழையைப் பொழிவித்தல், ஆழமான கடல்களுக்குள் ஏற்படும் அலைகள், இரும்பு வானத்திலிருந்து இறக்கப்பட்டது; அது நிலத்திற்குச் சொந்தமானதல்ல, உடலின் மேல் தோலில் மட்டுமே தொடுஉணர்ச்சி உண்டு, அதைத் தாண்டினால் உணர்ச்சி இருக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவியல் உண்மைகள் கொட்டிக் கிடக்கின்றன திருக்குர்ஆனில். அவற்றையெல்லாம் ஆய்வுக் கண்கொண்டு ஆய்ந்துணர்ந்து, அதன்பின் இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்துள்ளான். எனவே இறைவன் வழங்கிய பகுத்தறிவால் சிந்தித்து, தன்னைப் படைத்த இறைவனைக் கண்டறிந்து, நேரிய பாதையை அடைவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.

அண்ணன் முஹம்மது அல்தாஃப் அவர்கள் தொகுத்துள்ள திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்ஓர் அறிவியல் கருவூலமாகத் திகழ்கிறது. ஏறத்தாழ 2800 பக்கங்களுக்கு மேல் உள்ள இக்கலைக்களஞ்சியத்தைத் தொகுத்துள்ள இவர் மிகவும் பாராட்டுக்குரியவர். இஸ்லாமியச் சமுதாயம் அவரைப் பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். ஏனெனில் பரபரப்பான இக்காலத்தில் ஒரு கட்டுரை எழுத நேரம் ஒதுக்குவதே மிகவும் சிரமமாக உள்ளது.

அப்படியிருக்கும்போது இத்தகைய ஒரு பெருநூலைத் தொகுப்பது மிக மிகச் சிரமம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இந்தச் சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பேராவலும், தாம் வாழ்ந்ததற்கான ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற உந்துதலும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் உவப்பை எப்படியாவது பெற்றுவிட மாட்டோமா என்ற பேராசையும்தான் இவர் இப்பெரு நூலைத் தொகுக்கக் காரணம் என்பதை நான் உணர்கிறேன். சமுதாயப் பிரக்ஞையும் தொண்டுள்ளமும் கொண்ட இவர் இன்னும் பயன்மிகு பன்னூல்களை இச்சமுதாயத்திற்கு வழங்கவும், ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் நெடுநாள் வாழவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

இவர் என்னிடம் இக்கலைக்களஞ்சியத்தைக் கொடுத்து மேலாய்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருக்குர்ஆன் வசனங்களையும் அதற்கான மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வாக்கிய அமைப்புகளைச் சீரமைத்து, தட்டெழுத்துப் பிழைகளையும் ஒற்றுப் பிழைகளையும் களைந்து கொடுத்தேன். இருப்பினும் இன்னும் ஆங்காங்கே சில பிழைகள் திருத்தப்படாமல் கவனக்குறைவாக விடுபட்டுள்ளதைக் காண்கிறேன். அடுத்த பதிப்பில் அந்தப் பிழைகளையும் சரிசெய்து வெளியிட்டால் வாசகர்கள் எந்தவித நெருடலும் இல்லாமல் தெளிந்த நீரோடை போன்று படிக்க வசதியாக இருக்கும் என்பதை மெத்தப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய சமுதாயம் அறக்கட்டளைமூலம் பயனுள்ள ஒரு கருத்துப் பெட்டகம் இதோ இச்சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதைச் சமுதாய மக்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுவதோடு தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சகோதரச் சமுதாய நண்பர்களுக்கும் வாங்கிப் பரிசளித்தால் ஈருலகப் பயனை அடையலாம் என்பது திண்ணம். அதுவே என் ஆழ்மன எண்ணம். உங்கள் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நூல்நிலையங்களுக்கும் வாங்கி அன்பளிப்புச் செய்யுங்கள். இதுவே நாம் இந்நூலாசிரியருக்குச் செய்யும் பேருதவியாகும்.

இந்நூலின் உருவாக்கத்தில் பங்குகொண்ட மேலாய்வாளர்கள், மொழியாக்க மேற்பார்வையாளர், மொழிநடையைச் சரிபார்த்தவர், கணினித் தட்டெழுத்தர், ஒளிஅச்சு செய்தோர், நூலை அச்சிட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் எல்லா நலன்களையும் தந்தருள்வானாக. நம் அனைவரின் நற்செயல்களையும் மாசற்ற மனத்தோடு அவனுக்காகவே செய்ததாக அங்கீகரிப்பானாக.
======================================











செவ்வாய், 22 அக்டோபர், 2019

பிறரின் குறைகளைப் பேசாதீர்

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் அவர்களிடமிருந்து நினைவுப்பரிசு பெற்றபோது ... இடம் :கோவை நாள் : 20/10/2019



பிறர் குறைகளை மறைப்போம்