“நீ அஞ்சு வருஷமா எம்.எல்.ஏ.வா இருந்து என்ன புடுங்கின?” என்று கொச்சையாக மக்கள் கேட்பதுண்டு. பிடுங்கினாய் என்பதைத்தான் புடுங்கினாய் என்று பேச்சுத் தமிழில் கேட்கிறார்கள். சிலர் அதைக் கெட்ட வார்த்தையாக எண்ணிக்கொண்டு அதைப் பயன்படுத்துவதையே தவிர்த்துவிடுகின்றனர்.
சரி! எம்.எல்.ஏ.வாக உள்ள ஒருவர் என்ன பிடுங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஊரில் ஆங்காங்கே தேவையில்லாமல் மண்டிக்கிடக்கின்ற புதர்களையும் களைகளையும் பிடுங்கிச் சுத்தம் செய்து ஊரின் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குளத்தில் படர்ந்து கிடக்கின்ற செடிகொடிகளையும் தாமரைக் கொடிகளையும் பிடுங்கி எறிந்துவிட்டு, குளநீரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆங்காங்கே தவறு செய்யக்கூடிய அதிகாரிகளின் பதவியைப் பிடுங்கிக்கொண்டு, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் வறுமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, செழுமையை விதைக்க வேண்டும். அவர்களின் அறியாமையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, கல்வியைப் புகட்டப் பாடுபட வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சீரான சாலைகளை அமைக்க வேண்டும். இவை போன்ற செயல்களைத்தான் மக்கள் அவரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவற்றுள் எதையாவது அவர்கள் பிடுங்கி இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.
“நீ பத்து வருஷமா ஆசிரியரா இருந்து என்ன புடுங்கின?” என்று கேட்கப்பட்டால் அவர் அதற்கான பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். “நான் இத்தனை வருடங்களாக, இங்கே அறியாமையில் உழன்றுகொண்டிருந்த பிள்ளைகளின் அறியாமையைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, கல்வி எனும் அறிவொளியை ஏற்றிவைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் வேரூன்றியிருந்த கெட்ட பழக்கங்களை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, நற்பழக்கங்களையும் நற்குணங்களையும் விதைத்துள்ளேன். அவர்களின் மனங்களில் பதிந்திருந்த தாழ்வு மனப்பான்மையைப் பிடுங்கி எறிந்துவிட்டு, துணிவை விதைத்துள்ளேன். இதோ என்னிடம் பயின்றவர்கள் என்னைவிட மேம்பட்ட நிலையில் உள்ளதைக் காணீர்” என்று சுட்டிக்காட்ட வேண்டும்.
இப்படியே பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் இருந்துகொண்டு எதையெதைப் பிடுங்கினோம் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்து, செயலாற்றத் தொடங்கினால் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற தீயவற்றைப் பிடுங்கிவிட்டு, நல்லவற்றை விதைக்கத் தொடங்கிவிடுவோம். பின்னர் யாராவது மேற்கண்ட வினாவை நம்மிடம் தொடுக்கின்றபோது, நாம் அதற்குரிய பதிலைச் சொல்ல முடியும்.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
27 10 2019 27 02 1441
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக