ஞாயிறு, 13 மார்ச், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-4)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் உள்ளவையாகும்.  1. நாணம் கொள்ளுதல், 2. நறுமணம் பூசுதல், 3. பல் துலக்குதல், 4. மணமுடித்தல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1000)

இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள நாணம் கொள்ளுதல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், மணமுடித்தல் ஆகிய நான்கு வழிமுறைகளும் ஒவ்வோர் இறைத்தூதரையும் அலங்கரித்துள்ளன. இந்நான்கு செயல்பாடுகளுக்குள் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உணர்வு சார்ந்த அனைத்தும் உள்ளன. நாணுதல் பெண்ணுக்கே உரிய உயர்பண்பாக நாம் கருதியுள்ளோம். ஆனால் அது இருபாலருக்கும் உரிய நற்பண்பு என்பதை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு செயலையும் நிதானத்துடனும் கவனத்தோடும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்பண்பு இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றவர்களைவிட அவர்கள் தனித்துவம் பெற்றுத் திகழ வேண்டும் என்பது இறைவனின் எண்ணம். எனவேதான் அவர்களுக்கு உயர் பண்பான நாணத்தை வழங்கியிருந்தான். அது மட்டுமின்றி, “அது எப்போதும் நன்மையையே கொண்டுவரும்என்பது நபி (ஸல்) அவர்களின் பொன்னான வாக்காகும்.

நாணம் கொள்ளுதல் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதைப் பின்வரும் நபிமொழி மூலம் அறிகிறோம்.  இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 9) மேலும் வெட்கப்பட்டுச் சிலவற்றைச் செய்யாமல் விட்டுவிடுதல், சிலவற்றைக் கேட்காமல் விட்டுவிடுதல், சிலவற்றைப் பேசாமல் விட்டுவிடுதல் உள்ளிட்டவை சிலரிடம் இருக்கலாம். இது ஒரு குறையில்லை. மாறாக, இது ஒரு நிறையே ஆகும்.

மிகுந்த வெட்க சுபாவம் கொண்ட தம் சகோதரரைக் கண்டித்து, அறிவுரை கூறிய ஒரு தோழரை நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுமாறு பணிக்கின்றார்கள். அது குறித்த நபிமொழியைக் காண்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளுள் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து)த் தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 24) ஆக வெட்கப்படுவது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம். வெட்கம் உள்ள நாம் நம்முடைய இறைநம்பிக்கையை அறிந்துகொள்ளலாம் அல்லவா?

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிட அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்”  (நூல்: புகாரீ: 3562) என அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் கூறுகின்ற நபிமொழி கவனிக்கத்தக்கதாகும். கன்னிப் பெண்ணோடு சேர்ந்தே இருப்பது வெட்கம் ஆகும். ஆனால் அதைவிட அதிக வெட்கமுடையவர்களாக நபியவர்கள் இருந்துள்ளார்கள். அதேநேரத்தில் அதை இக்காலக் கன்னிப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாகாது. முகநூலில் தம் முகம் வர வேண்டும். அதற்கு நூற்றுக்கணக்கான விருப்பம் (லைக்) பதிவிடப்பட வேண்டும் என்று எண்ணுகிற கன்னியர் வாழும் காலமிது; வெட்கம் கிலோ என்ன விலை? எனக் கேட்கின்ற பருவ மங்கையர் வாழும் கணினிக் காலமிது. எனவே நபி (ஸல்) அவர்களின் வெட்கமும் நாணமும் முற்காலக் கன்னியரின் நாணத்தைவிட அதிகமானது எனப் பகுத்தறிதல் வேண்டும்.
முற்கால நபிமார்களின் ஏட்டில் இருந்த ஒரு வாசகம், “நீ வெட்கப்படவில்லையானால் விரும்பியதைச் செய்துகொள்என்பதாகும். (அபூதாவூத்: 4164) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே வெட்கம் தொன்றுதொட்டு வருகின்ற ஓர் உன்னதமான பண்பாகும். அது அனைவரும் அவசியம் பேண வேண்டிய பண்பாகும்.

வெட்கம் இல்லையேல் எதையும் செய்யலாம். இன்றைய ஆடவர்-பெண்டிர்  இருபாலரிடமும் வெட்கம் தொலைந்து போய்விட்டது. அதனால்தான் அவர்கள் எதைச் செய்தாலும் வெட்கப்படுவதில்லை; எதைச் செய்யவும்  வெட்கப்படுவதில்லை. வெட்கங்கெட்ட செயலையும் செய்துவிட்டு, அதைத் துணிவோடு பிறர் முன்னிலையில் சொல்லவும் முற்படுகின்றார்கள். மறைமுகமாகச் செய்ய வேண்டியவற்றைப் பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் செய்கின்றார்கள். தன் மனைவிக்கு உணவூட்டுவதைக்கூடப் படமெடுத்து முகநூலில் பதிவிட்டு மகிழ்கின்றார்கள்.  திருமணத்தில் படமெடுத்து, பதிவு செய்து, எல்லோருக்கும் காணொலியாகக் காட்டி இன்புறுகின்றார்கள்; ‘இதுதான் என் திருமண ஆல்பம்எனக் காட்டுவதில் பெருமிதம் அடைகின்றார்கள். இதுதான் இன்றைய நிலை. இதனால் நாம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியை இழந்து வருகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆக, இறைத்தூதர்களின் நற்பண்புகளுக்கு ஒளியூட்டும் விதமாகவும் அழகு சேர்க்கும் விதமாகவும் இருந்த நாணம்  நமக்கும் அழகு சேர்க்கும் அணிகலனாகும் என்பதில் ஐயமில்லை. எனவே நாணம் கொள்ளுதல் எனும் பண்பை நாமும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம்.
இரண்டாவது, நறுமணம் பூசுதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். “(என்னுடைய மனைவியரான) பெண்களும் நறுமணமும் எனக்கு விருப்பத்திற்குரியவையாக ஆக்கப்பட்டுள்ளன” (நூல்: நசாயீ: 3879) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் பூசிக்கொள்வதை விரும்பினார்கள். நறுமணத்தைப் பூசிக்கொள்ளும்போது சோர்ந்து போயுள்ள உணர்வுகள் புத்தெழுச்சி பெற்று விரைவாகச் செயல்படத் தொடங்குகின்றன; மூளை நரம்புகள் சுறுசுறுப்படைகின்றன; மனம் மகிழ்ச்சியடைகிறது.

நறுமணம் பூசிக்கொண்டு பணியாற்றுபவர்கள், எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடிய பணியை ஆறு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதற்குக் காரணம், நறுமணம் பூசியதால் ஏற்பட்ட அவர்களின் சுறுசுறுப்பான  செயல்பாடுகள்தாம். எனவே இறைத்தூதர்களின் வழிமுறையான இப்பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம். பெண்களைப் பொறுத்த வரை, திருமணமான பெண்கள் தம் கணவனைக் கவர்வதற்காக வீட்டில் இருக்கும்போது மட்டும் பூசிக்கொள்ளலாம். வெளியில் செல்லும்வேளையில் முற்றிலும் அதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனைய பெண்கள் நறுமணம் பூசக் கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும்.  ஆனால் மார்க்கச் சட்டத்தை மீறிபெண்கள் பலர்  வெளியே புறப்படும்போது மல்லிகைப் பூச்சூடி, ஒப்பனை செய்து கொண்டு, செல்வதைக் காண முடிகிறது. இதை அவர்கள் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது, பல் துலக்குதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். இதை ஒவ்வொருவரும் பின்பற்றி வருவதால் இதன் முக்கியத்துவம் நமக்கு நன்றாகவே தெரியும். பல் துலக்குதல் வாய்க்குத் தூய்மையானது; இறைவனுக்கு விருப்பமானது” (நூல்: நசாயீ: 5) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள்” (முஸ்லிம்: 372) என்பதும், “என் சமுதாயத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்றில்லையானால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல்துலக்குமாறு நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” (புகாரீ: 887) என்ற நபிகளாரின் கூற்றும் பல்துலக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

ஆலும் வேலும் பல்லுக்குறுதிஎனும் முதுமொழி பல்துலக்கப் பயன்படுத்த வேண்டிய குச்சியைப் பற்றிப் பேசுகிறது. எத்தனையோ பற்பசைகள் வந்தாலும் நபிகளார் பயன்படுத்திய அராக்மரக்குச்சி,, ஆலமரக்குச்சி,, வேப்ப மரக்குச்சி ஆகியவை மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன; அவை பற்களை உறுதிப்படுத்த உதவுகின்றன; பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என உறுதியாகக் கூறலாம். ஆகவே இந்த மூன்றாவது வழிமுறையையும் நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

நான்காவது, மணமுடித்தல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். ஈசா நபியைத் தவிர எல்லா இறைத்தூதர்களும் திருமணம் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் பலதார மணம் புரிந்ததோடு, “திருமணம் எனது வழிமுறைஎனவும் கூறியுள்ளார்கள். விருப்பமும் வசதியும் உள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளவும் திருக்குர்ஆன் அனுமதியளிக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணத்தைத் தத்தம் உணர்வுகளுக்கான வடிகாலாக ஆக்கிக்கொள்வதோடு சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்கின்றார்கள். அதுவே திருமணத்தின் தலையாய நோக்கமாகும். தாமும் இன்புற்று, அந்த இன்பத்தில் விளைந்த சந்ததிகளைப் பேணிக் காத்து, வளர்த்து ஆளாக்குவதில்தான் குடும்ப வாழ்க்கை பின்னிக்கிடக்கிறது. ஆகவே இந்த நான்காவது வழிமுறையைப் பின்பற்றுவது முற்றிலும் அவசியமாகும். ஆக இறைத்தூதர்களின் மேற்கண்ட நான்கு வழிமுறைகளையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி, ஈருலகிலும் ஈடேற்றம் பெற உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

=====================




திங்கள், 29 பிப்ரவரி, 2016

சர்வதேச அரபிக் கருத்தரங்கம்

சர்வதேச அரபிக் கருத்தரங்கம் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தில் 23 02 2016 அன்று நடைபெற்றது. அப்போது கருத்துரை வழங்கியபோதும்........சான்றிதழ் பெற்றபோதும்.....





சனி, 27 பிப்ரவரி, 2016

நேஷனல் ஓபன் ஸ்கூலிங்




நேஷனல் ஸ்கூலிங் எனும் விளம்பரத்தை, ஒரு பள்ளியில் இமாமாக உள்ள ஓர் ஆலிமிடம் காட்டி, நீங்க பத்தாம் வகுப்பு படிச்சிருக்கீங்க. இப்போது 12ஆம் வகுப்பு நேரடியாகப் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. நீங்க பயன்படுத்திக்கொள்ளலாமே? என்று கேட்டேன். அதன்பிறகு அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை.

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? என்று கேட்டார். பிஎச்.டி. முடிச்சிருக்கேன். அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னேன்.

நீங்கள் இமாமாக உள்ள பள்ளியில் உங்களுக்கு என்ன சம்பளம்? என்று கேட்க, நான் என் சம்பளத்தைச் சொல்ல, “எனக்கு அதைவிட ஈராயிரம் அதிகம்” என்றார்.

சரி, நீங்க, பிஎச்.டி. முடிச்சதாலே உங்கள் மஹல்லா சார்பாக என்னென்ன வசதிகள் செய்து கொடுத்திருக்காங்க? என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படின்னா, பத்தாம் வகுப்பு படிச்ச, எனக்கும் பிஎச்.டி. படிச்ச உங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் இந்தச் சமுதாயம் காட்டாதபோது, எதற்காக நான் மேற்கொண்டு படிக்கணும்? என்று கேட்க, என்னால் பதில் சொல்ல முடியல.

நீங்களே பதில் சொல்லுங்க...

எந்த முத்தவல்லியாவது, நம் பள்ளி இமாம் என்னென்ன படித்திருக்கிறார், அவருக்கு என்னென்ன தகுதிகள் உள்ளன என்று பார்த்ததுண்டா? அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப சம்பளம் உண்டா? வீடு உள்ளிட்ட இன்னபிற வசதிகளைச் செய்து தந்ததுண்டா? எந்த முத்தவல்லியும் தம் பள்ளிக்கு இமாமாகச் சேர்க்கின்றவரின் டிகிரியை வாங்கிப் பார்த்ததில்லை. எனவேதான் நாற்பது நாள் தப்லீக் ஜமாஅத் சென்றவரெல்லாம் இமாமாகப் பணியாற்ற முடிகிறது. முத்தவல்லிகள் இமாமின் டிகிரிகளுக்கேற்பச் சம்பளம் வழங்கத் தயாராகிவிட்டால் ஒவ்வோர் இமாமும் தம் கல்வித்தகுதியை வளர்த்துக்கொள்ள முற்படுவார். அதனால் அவர்களின் கல்வித்தரமும் உயரும். அவர்களின் சம்பளமும் உயரும். சமுதாயத்திலும் அவர்களால் பெரும் மாற்றம் ஏற்படும்.

இது குறித்து, உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். உங்கள் கருத்துகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.



திங்கள், 22 பிப்ரவரி, 2016

விரைவில் வெளிவருகிறது *பூபாள இராகங்கள்*


விரைவில் வெளிவருகிறதுஎன்னுடைய கவிதைத் தொகுப்பு பூபாள இராகங்கள்.இன்ஷா அல்லாஹ்




ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

இடைத்தரகர்களும் இடைஞ்சல்களும்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நுகர்வோருக்கும் வணிகருக்கும் இடையே நேரடியான தொடர்பின்றி, இடைத்தரகர்களின் தலையீட்டின் மூலமே பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. வாடகைக்கு வீடு பார்த்தல்,    வேலைக்கு ஆள் அனுப்புதல், திருமணத்திற்கு வரன்கள் பார்த்தல், வியாபாரப் பொருள்களை கைமாற்றிவிடுதல் எனத் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைத்தல்,   கட்சிகளில் பதவியைப் பெற்றுத் தருதல் வரை பல்வேறு பணிகள் தரகர்களின் தலையீட்டால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அரசியலுக்குள் நுழையாமல், சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகள் எத்தனையெத்தனை என்பதைப் பார்ப்போம்!

தரகர்களின் தலையீட்டால் சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் முதலிய வார்த்தைகள் பொருளிழந்துவிட்டன. ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற அடிப்படையில் நடைபெற்று வந்தவை இன்றைய அவசர உலகில் தரகு வேலையாக மாறிப் போய்விட்டன. 

வாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் குடியேறுவதற்குக்கூட நான்கு தெரு சுற்றி அலைந்து தேடிப் பார்க்க நேரமில்லை. நாம் யாரிடமாவது, "வீடு இருந்தால் சொல்லுங்களேன்'' என்று சொன்னால் போதும், "புரோக்கரிடம் சொல்லி வையுங்களேன்'' என்று உடனடியாக ஒரு பதிலை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். "என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை இருந்தால் பார்த்துச் சொல்லுக்கா'' என்று சொன்னால், "புரோக்கரிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிடுகின்றார்கள். மனிதர்களின் இந்த அவசரச்சூழல்தான் சமூக சேவையாக இருந்தவை தரகுச் சேவைகளாக மாறிப்போய்விட்டன.

இதனால் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேற எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தம் வீடுகளை வாடகைக்கு விட, To let (வாடகைக்கு) என்ற பலகையை வைக்கவிடாமல் தடுத்துவிடுகின்றார்கள் இடைத்தரகர்கள். அவ்வாறு அவர்கள் வைத்துவிட்டால் இவர்களுடைய தொழில் பாதிக்கப்படுமாம். வீட்டு உரிமையாளரிடம், "நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நான் உங்களுக்கு ஆள் கொண்டு வாறேன்! எனக்கு ஒரு மாத வாடகை மட்டும் கொடுத்துடுங்க'' என்று பேசிக்கொண்டு "வீடு வாடகைக்கு'' என்ற பலகையை எடுக்கச் செய்துவிடுகின்றார்கள். வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாத வாடகையும் புதிதாகக் குடியேறுபவரிடம் ஒரு மாத வாடகையும் இடையில் நுழைகின்ற இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதனால் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சாதாரண நபர்களுக்கு அவ்வளவு எளிதாக வீடு கிடைத்துவிடுவதில்லை. சுயமாகத் தேடுவோருக்கும் வீடு கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்குத் தரகு கொடுக்க முடியாததால், சாதாரண மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  

"என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்கள்'' என்று யாரேனும் தரகரிடம் தகவல் கொடுத்தால் போதும். உடனடியாக அவர்களிடமிருந்து செலவுக்குப் பணம் வாங்கிக்கொள்கின்றார்கள். அதன்பின் பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்கு, ஒவ்வொரு பவுனுக்கும் இவ்வளவு தொகை என  நிர்ணயம் செய்து, எத்தனை பவுன் போடுகின்றார்களோ அத்தனை பவுனுக்குரிய தரகுத் தொகையை இருவீட்டாரிடமிருந்தும் வசூல் செய்துவிடுகின்றார்கள். இவர்களின் சுய இலாபத்திற்காக வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது. 
 
பவுனுக்கேற்பத் தரகுத் தொகை என்பதால், தொகையைக் கூடுதலாகப் பெற விரும்பி, "இத்தனை பவுன் போட்டால்தான் உங்க பொண்ணு நிகாஹ் நடக்கும்'' என்று சொல்லி பவுன் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று, "இத்தனை பவுன் வாங்கித்தாறேன். எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள்'' என்று ஆசைகாட்டி, தம் நிபந்தனைக்குப் பணிய வைக்கின்றார்கள். எனவே எங்கிருந்து அதிகமாக வருகிறதோ அங்குதான் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தம் பேசுகின்றார்கள். இதனால் நடுத்தர மற்றும் ஏழைப்பெண்களின் திருமணம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது; பவுன்களின் கணக்கீட்டின்படி தரகுத்தொகை  கிடைப்பதால் குறைந்த அளவு பவுன் போடுகின்ற வீடுகளில் திருமணம் மிகவும் தள்ளிப்போகின்றது; ஏழை வீட்டுக் கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகும் சூழ்நிலை பரவலாக உள்ளது; தன் திருமணத்திற்குத் தானே சென்று சம்பாதிக்கும் துர்பாக்கிய நிலைக்குப் பெண்சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. 

"நீங்கள் (திருமணம் செய்துகொள்கின்ற) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை' (திருமணக் கொடையை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்'' (4: 4) என்ற திருக்குர்ஆன் கட்டளையை ஏற்றுள்ள இஸ்லாமியச் சமுதாயத்தின் நிலையைப் பாரீர்!

"பெண்பார்த்தல்' என்பது பெண்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால் "பெண் தரகர்கள்' இக்களத்தில் மிகுதியாக ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் எல்லா வீடுகளிலும் எளிதாக  நுழைந்து கொள்கின்றார்கள். பெண் தரகர்கள் சிலர் ஊர்விட்டு ஊர் சென்று, அங்கு பெண் பார்க்கச் சொன்ன வீடுகளில் இலவசமாகத் தங்கிக்கொண்டு, உணவுண்டு இளைப்பாறுகின்றார்கள். பெண்களுக்குள் இது நடைபெறுவதால், ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன உடனேயே, "இந்தப் பெண்ணுக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் சிரமம்'' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றார்கள் பெண் இடைத்தரகர்கள். திருமணம் என்பது பொருளாதாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலும் நடைபெறுவதால் "தீன்' எனும் நற்பண்பு ஒதுக்கப்படுகின்றது. உலகுசார் பண்புகளும் நிறைகளுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இத்தனை இடைஞ்சல்களுக்கும் இன்னல்களுக்கும் இடைத்தரகர்களே காரணம். 
   
"(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரீ: 2158) இதை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்.

"கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம்! என்பதன் பொருள் என்ன?'' என்று இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் "இடைத்தரகராக ஆகக் கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)'' என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் (ரஹ்) கூறுகிறார்கள்.

புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியின் அடிப்படையில், இடைத்தரகராக இருந்து செயல்படக் கூடாது என்று தடைசெய்யப்படுகின்றது. திருமணம், வியாபாரம், வாடகை வீடு, நிலம் விற்பனை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ இதனுள் அடக்கம்.  நுகர்வோரும் வியாபாரியும் நேரடியாகத் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் விலைபேசி வாங்கிக்கொள்கிறார்கள்; விற்றுக்கொள்கிறார்கள். அவ்விருவருக்கும் இடையே இடைத்தரகர் எதற்கு? இடைத்தரகர்களின் தலையீட்டால் விலைவாசி உயர்வதைப்போல் வரதட்சணையாக வழங்கும் பவுன்களின் அளவும் உயர்ந்துவிட்டது.

கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டு வருகின்ற வியாபாரி, ஊரின் பொதுச் சந்தையில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்வார்; அவர் தமக்குக் கட்டுபடியான விலையில் சரக்குகளை விற்பார். நுகர்வோர் அவற்றை விலைபேசி வாங்கிக்கொள்வர். இதில் நுகர்வோருக்கும் வணிகருக்கும் எந்த இழப்பும் இல்லை. இதேபோல் திருமணத்தில் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் நேரடியாகப் பேசிக்கொண்டால் எளிய முறையில் திருமணம் நடைபெறும். அவரவர் தகுதிக்கேற்பப் பெண்ணையோ, மாப்பிள்ளையையோ பார்த்து அவரவர் வீட்டார் திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள். இதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? அவர்கள் ஏன் இதில் தேவையின்றி நுழைய வேண்டும்? அவர்கள் வேறு வேலையைப் பார்க்கட்டும்!

 "...ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்!...'' என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள் என அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 2140)

மாப்பிள்ளைவீட்டார் ஏதேனும் ஒரு பெண்ணை மணம் பேசி வைத்திருக்கும் நேரத்தில் இடைத்தரகர்கள் இடையில் புகுந்து, "இதைவிடச் சிறந்த வரனை நான் கொண்டுவந்துள்ளேன்'' என்று கூறி, அதிகமான தட்சணை கிடைக்கின்ற பெண்ணை அடையாளம் காட்டுவதால், ஏற்கெனவே பேசி வைத்த இடத்தின் சம்பந்தத்தை இடையிலேயே முறித்துவிட்டு, அதிகமான தட்சணை தரக் காத்திருக்கின்ற வேறு பெண்ணைப் பார்க்க ஆசையோடு செல்கின்றார்கள். முந்தைய திருமணச் சம்பந்தம் இடையிலேயே முறிந்துபோவதில் இடைத்தரகர்களின் பங்கு முக்கியமானது.  இவை போன்ற எண்ணற்ற இடைஞ்சல்கள் இடைத்தரகர்களால் ஏற்படுகின்றன.

வாடகைக்கு வீடு பார்த்தல், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தல், மாப்பிள்ளைக்குப் பெண் பார்த்தல், நிலம் வாங்குதல், நிலம் விற்பனை செய்தல் ஆகியவை ஒருவருக்கொருவர் செய்துகொள்ள வேண்டிய உதவியும் சமூக சேவையும் ஆகும். அதில் இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? இடைத்தரகர்கள் தம் சுய இலாபத்திற்காக ஏழைகள், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தோடு விளையாடுவதும், அப்பெண்களின் மணவாழ்க்கை தள்ளிப்போவதற்குக் காரணமாக இருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே பொதுமக்கள் இத்தகைய பணிகளில் இடைத்தரகர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நம் சமுதாயமும் நாமும் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

மேலும் தற்காலத்தில் தகவல் தொடர்பு மிக எளிதாக இருப்பதால், உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமென்றாலும் மாப்பிள்ளைக்குப் பெண் வேண்டுமென்றாலும் நிலம் வாங்க, விற்க வேண்டுமென்றாலும், வாடகைக்கு வீடு வேண்டுமென்றாலும் அனைத்திற்கும் சமூக வலைதளங்கள் உள்ளன. சுட்டுரை, முகநூல், கட்செவி முதலிய சமூக வலைதளங்களில் உங்களின் செய்தியைப் பதிவு செய்தால் தேவைப்படுவோர் உங்களை எளிதாக, நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் மிக எளிதாகவே உங்கள் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆக, இடைத்தரகர்களுக்கு இவற்றில் வாய்ப்பளிக்காமல் தவிர்த்தால் அவர்கள் தாமாகவே இக்களத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது திண்ணம். 

===========





செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-3)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்களை நம்பிக்கைகொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கைகொண்டவராக மாட்டார். 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன். என்னை  அவன் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான் என உறுதிமொழிதல். 2. மரணம் உண்டு என நம்புதல். 3. (அனைவரும்) இறந்தபின் (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் என்பதை நம்புதல், 4. விதியை நம்புதல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 2071)

மேற்கூறப்பட்ட நான்கும் இறைநம்பிக்கையின் அடிப்படைவிதிகளுள் அடங்கும். இந்த நம்பிக்கைகளுள் ஒன்று இல்லாவிட்டாலும் முஸ்லிமாக இருக்க முடியாது. இவற்றுள் முதலாவது ஏகத்துவக் கலிமா ஆகும். அதைச் சொன்னால்தான் எவரும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வர முடியும். இதை ஏற்றுக்கொண்டோருக்கு இதில் ஏதும் ஐயமில்லை. அல்லாஹ்தான் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்; அவர்களுக்கு அவன் சத்திய மார்க்கத்தைக் கொடுத்து அனுப்பினான்; அத்தோடு இருபத்து மூன்றாண்டுகளில் சிறிது சிறிதாக வேதவசனங்களை வழங்கினான் என்றெல்லாம் நம்பிக்கைகொண்டுள்ள நம்முள் பலர் அந்தச் சத்திய மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றாததே அவர்கள் அதில் சந்தேகம் கொண்டுள்ளார்களோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இல்லையென்றால் இதுதான் சத்திய மார்க்கம் எனத் தெரிந்தும் ஏன் பிற மதக் கலாச்சாரங்களை விடமுடியாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்? இஸ்லாமிய மார்க்கத்தைச் சத்தியம் என்று ஏற்றுக்கொண்ட பின்னர் எந்த மதத்தில் ஏற்கெனவே இருந்தார்களோ அதையெல்லாம் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் முன்னோர்கள் செய்தவற்றை விட முடியவில்லை? அப்படியென்றால் அவர்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லை. அவர்களால் இன்னும் முழுமையாக இஸ்லாத்திற்குள் நுழைய முடியவில்லை என்றுதான் பொருள். இதனால்தான் அல்லாஹ் ஒரு வசனத்தில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (தயங்காமல்) இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். (2: 208) நம்பிக்கை கொண்டவர் எவ்வாறு மீண்டும் நம்பிக்கை கொள்வது என்றால், அவர் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும். அந்த அடிப்படையில் மேற்கண்ட நபிமொழி நமக்குக் கூறுவது என்னவென்றால், இறைநம்பிக்கை கொண்டவருக்கு, தாம் கொண்ட நம்பிக்கை உண்மைதான் என்ற உறுதியிருந்தால் அந்த நபி என்ன கூறினாரோ அதை முற்றிலுமாகப் பின்பற்ற வேண்டும். அவர் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பின்பற்றுவதில் தயக்கமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. அதுதான் அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்க முடியும். எவர் நபிவழியைப் பின்பற்ற வெட்கப்படுகின்றாரோ அவர் இன்னும் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளட்டும்.

இரண்டாவது மரணம் உண்டு என நம்புதல். இதுதான் எல்லோருக்கும் தெரியுமே! இதை எல்லோரும் அறிந்திருக்கின்றார்கள். முஸ்லிம் அல்லாதோரும் மரணம் உண்டென நம்புகின்றார்கள். இங்கு நபி (ஸல்) அவர்களின் நோக்கம் என்னவென்றால், மரணம் உண்டென நம்பியுள்ளவர்களின் செயல்பாடுகளில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதேயாகும். மரணத்தை நம்பியுள்ளவன் எல்லா மரணத்தையும் அல்லாஹ்வே ஏற்படுத்துகிறான்; அவனுடைய ஆற்றலால்தான் அது ஏற்படுகிறது; அவனைத் தவிர வேறு யாரும் அதை இயக்குவதில்லை என்று  நம்ப வேண்டும். அது மட்டுமின்றி, மரணிக்கப் போகின்ற ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நியதியும் உண்டு.  நிரந்தரமாக இந்த உலகத்திலேயே தங்கிவிடுவதைப் போன்ற உணர்வோடு மனிதனுடைய செயல்பாடுகள் உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டுதல், ஆடம்பரமாக வாழ்தல், எளியோரை அவமதித்தல், பிறரை ஏளனமாகக் கருதுதல், பெருமையாக நடத்தல், இறைக் கட்டளைகளை நிராகரித்தல் அல்லது மீறுதல், அல்லாஹ்வை முறைப்படி வணங்காதிருத்தல் இப்படி எத்தனையெத்தனையோ மனிதன் செய்துகொண்டிருக்கிறான். மரணத்தை நம்பியவனின்  செயல்பாடுகளா இவை? அப்படியென்றால் அவன் மரணத்தை இன்னும் முழுமையாக நம்பவில்லை என்றுதான் பொருள். எவனுடைய செயல்பாடுகள் மரணத்தை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனவோ அவன்தான் மரணத்தை நம்பியவன். எவனுடைய செயல்பாடுகள் உலக ஆசையைத் தூண்டுபவையாக உள்ளனவோ அவன் இன்னும் முழுமையாக மரணத்தை நம்பவில்லை என்றே பொருள்.

மூன்றாவது, அனைவரும் இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்கள் மட்டுமே நம்பிக்கைகொண்டுள்ளனர். இறந்த பின் சொர்க்கம் நரகம் உண்டென முஸ்லிம்கள் அல்லாத வேறு மக்களும் நம்பியுள்ளனர்.  இறந்தோர் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அதன் பின் விசாரணை நடைபெறும் என்பதையும் நம்பியோரின்  செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். ஏனெனில் அத்தகைய மனிதனுடைய செயல்பாடுகளில் மிகுந்த கவனம் இருக்கும். நாம் யாருக்கும் அநியாயம் செய்துவிடக்கூடாது; அப்படிச் செய்துவிட்டால் அது நாளை மறுமையில் விசாரணைக்கு வரும் என்பதை நம்பியுள்ளவன் பிறருக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருப்பான். அந்த அச்சம் இல்லாதவன்தான் தன் விருப்பத்திற்கேற்பச் செயல்பட்டுக் கொண்டிருப்பான். இவ்வுலகில் எவன் என்ன செய்தாலும் நாளை அல்லாஹ்விடம் நடைபெறவிருக்கின்ற விசாரணையில் மாட்டிக்கொள்வான். இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என நம்பிக்கை கொண்டவன் நிச்சயமாகப் பிறருக்குத் தொல்லைகொடுப்பவனாகவோ அநியாயம் செய்பவனாகவோ தீங்குகள் செய்பவனாகவோ இருக்க மாட்டான். அத்தகைய நற்பண்பை எவன் கொண்டிருக்கின்றானோ அவனே, இறந்தபின் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை முற்றிலுமாக நம்பியவன்.

நான்காவது விதியை நம்புதல் ஆகும். இதை முஸ்லிம்களும் மற்றவர்களும் நம்பியே உள்ளனர். முஸ்லிம்கள் நம்புவதற்கும் மற்றவர்கள் நம்பியுள்ளதற்கும் இடையே வித்தியாசம் இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்ற கூற்றின்படி நன்மையும் தீமையும் இறைவனின் ஏற்பட்டால் நடைபெறுகின்றன. அவன் விதித்தபடி நமக்கு அது கிடைக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். நன்மைகள் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கின்ற நாம், சோதனைகள் ஏற்பட்டால் மட்டும் இறைவனைத் திட்டுகின்றோம். அல்லது அவனை நினைத்து நொந்துகொள்கிறோம். இந்த இறைவன் ஏன்தான் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறானோஎன்றெல்லாம் நாம் பிதற்றுகிறோம். விதியை முற்றிலுமாக நம்பியவன் இவ்வாறு கூற மாட்டான். இன்பம் வரும்போது இனிதாக ஏற்றுக்கொள்கின்ற நாம்  துன்பம் வரும்போதும் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் பெற வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும். இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் வந்துவிட்டால் அவனே இறைவிதியையும் நியதியையும் முழுமையாக நம்பியவன் ஆவான்.

மனிதன் ஏழையாக இருப்பதும், செல்வனாக இருப்பதும், சோதிக்கப்படுவதும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதும்பிள்ளைப்பேறு கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும், வியாபாரத்தில் வளம் ஏற்படுவதும் ஏற்படாதிருப்பதும் எல்லாம் அவனது விதியே. அவனது விதிப்படி எல்லாம் செவ்வனே நடைபெறும். விதியை நம்பிவிட்டு நாம் ஒன்றுமே செய்யாதிருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு, அதனால் கிடைக்கின்ற பலன்களை அனுபவித்துக்கொண்டு இதுவே இறைவனின் நியதி என்று எண்ணிக்கொள்ள வேண்டும். நோயைத் தருவதும் அதற்காக நாம் மருந்து உண்பதும் அதன்பின் அது நீங்குவதும் இறைவனின் நியதிதான். நான் மருந்து உண்டதால்தான் நோய் நீங்கியது என்று கூறக்கூடாது. நோயைக் கொடுத்தவன் அதை நீக்குவதற்கான வழியைக் காண்பித்தான். நாம் செய்தோம். அவ்வளவே. மருந்து சாப்பிட்டும் எத்தனையோ பேருக்கு நோய் தீரவில்லையே? இங்கு மருந்து முக்கியமில்லை. இறைவனின் மீதுள்ள நம்பிக்கையும் இறைநியதியின் மீதுள்ள நம்பிக்கையும் மட்டுமே முக்கியம். இறைநம்பிக்கை இருந்தால் நடப்பவை யாவும் சீராக நடப்பதாகவே உணர்வோம். நோயைக் கொடுத்தவனே அந்நோயை எடுத்தான் என்று நம்ப வேண்டும். அதுதான் விதியை நம்புவதாக அமையும்.

நான் இப்படிச் செய்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருப்பேன்என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யக்கூடாது என்பதும் அவன் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதே இறைநியதி. அதற்கேற்பவே செயல்பட்டான். இறைவன் நினைத்ததை அடைந்தான். ஆகவே இப்படிச் செய்திருந்தால் என்று கூறுவதே விதியை நம்புவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். சற்றுத் தாமதித்திருந்தால்  இந்த விபத்திலிருந்து தப்பித்திருக்கலாம். சற்றுப் பொறுத்திருந்தால் இதைவிட அழகான பெண்ணை மணந்திருக்கலாம் என்றெல்லாம் பலர் பேசுவதைக் கேட்க முடிகிறது. அந்தந்தக் கட்டங்களில் அதையதை நடத்தி முடிப்பவன் இறைவன். அவனுடைய நியதியைத் தாண்டிச் சென்று நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. எல்லாம் அவனால் ஏற்கெனவே திட்டமிட்ட விதிப்படியே நடைபெறுகிறது.

ஆகவே மேற்கண்ட நான்கையும் நம்பிக்கைகொண்டோரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிய வேண்டும். பிறரின் செயல்பாடுகளுக்கும் நபிகளாரின் கூற்றை நம்பிக்கைகொண்டோருக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும். நம் செயல்பாடுகள் நபிகளாரைப் பின்பற்றுமாறு பிறரைத் தூண்ட வேண்டும். அத்தகைய மாற்றங்களை நம் செயல்பாடுகள் ஏற்படுத்தும்வண்ணம் நம் நம்பிக்கை வளரவும் வலுப்பெறவும் முயல்வோம்.

=========================





ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஓரணியில் இணைவோம்!


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.,

ஒரு கொடி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு மரத்தைத் தேடுவதைப்போல் முஸ்லிம் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியைச் சார்ந்து நின்றே பழகிவிட்டன. எப்போது சுயமாக வளர்வது? இன்னும் நடைவண்டியைப் பிடித்துக்கொண்டே நடந்தால் சுயமாகத் தம் கால்களால் நடப்பது எப்போது?

முஸ்லிம் சமுதாயக் கட்சிகளே! நீங்கள் ஓரணியில் திரள மாட்டீர்களா? உங்களைப் பற்றிய பலம் உங்களுக்கே எப்போது தெரிய வரும்? யானை தன் பலமறியாமல் பிணைக்கப்பட்ட சங்கிலியில் சிக்குண்டு கிடப்பதைப்போல், திராவிட கட்சிகளைப் பற்றிக்கொண்டே எத்தனைக் காலம்தான்  கடத்தப்போகின்றீர்கள்?

சமுதாய மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் சாதி, சமயம் பாராமல் நேரத்தையும் காலத்தையும் பாராமல் ஓடி ஓடி உழைத்தீர்களே? ஏன்? கட்சி பேதம்கூடப் பார்க்காமல் எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றினீர்களே, தேர்தல் என்றால் மட்டும் ஓரணியில் ஒருங்கிணையாமல் காத தூரம் வெருண்டோடுவதேன்? தயங்கித் தயங்கிப் பதுங்குவதேன்?

ஒரே இறைவனான அல்லாஹ்வையும் ஒரே தூதரையும் பின்பற்றுகின்ற நீங்கள் ஓரணியில் இணையாமல் திராவிடக் கட்சிகளையே சார்ந்து நிற்க போட்டிபோடுவதேன்? உங்களின் இருப்பைக் காட்ட முனையக்கூடாதா? அதற்காக ஓர் ஒத்திகைகூடப் பார்க்கக்கூடாதா?

இதோ இப்போது நல்லதொரு வாய்ப்பு கனிந்து இருக்கிறது. உயர்ந்தோன் அல்லாஹ் அத்தகைய வாய்ப்பை முஸ்லிம்களுக்கு முன்வந்து தந்திருக்கிறான். ஆம். கடந்த ஆண்டின் ஆழிப்பேரலை போன்ற வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு, நிர்க்கதியாய் நின்ற மக்களுக்கு நாம் ஓடியோடி உழைத்துள்ளோம். உண்ண உணவும், அருந்த நீரும், படுக்கப் பாயும்  இன்னபிற பொருள்களையும் வழங்கியுள்ளோம். இது முஸ்லிம்கள்மீது ஓர் உயர்ந்த எண்ணத்தையும் நல்ல அடையாளத்தையும் பிறமதச் சகோதரர்கள் உள்ளங்களில் பதித்துள்ளது. எனவே இதைப் பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தனித்துக் களம் நின்று பார்க்க நீங்கள் எத்தனிக்கக்கூடாதா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்து ஓரணியில் இணையக்கூடாதா? முஸ்லிம் சமுதாயமும் பிற மதச் சகோதரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.

உள்ளங்களைப் புரட்டிப்போடக்கூடியவன் ஏகன் அல்லாஹ். எனவே கருத்துக் கணிப்புகளையோ பிறர்கூறும் கற்பனை வார்த்தைகளையோ நம்பவேண்டாம். வெற்றி கிடைப்பதற்கான பொன்னான வாய்ப்பு நம் கண்முன் இருக்கிறது. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்துத் துணிந்து களம் காணுங்கள். 

முஸ்லிம் லீக், ம.ம.க., எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு  களம் கண்டால் -அல்லாஹ்வின் உதவியால்- வெற்றி நிச்சயம். நீங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிட்டால் ஓடோடி உழைப்பதற்காக நம் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) போதுமே! ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வாக்குச் சேகரித்து விடலாமே? அதைத் தவிர்த்து, பிற மதச் சகோதரர்களிடம் சென்று அன்போடு கேட்டால் நிச்சயம் அவர்களின் உள்ளங்கள் மாற்றமடையும் என்பது திண்ணம்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நாம் ஓடோடி உதவி செய்த தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி. முஸ்லிம் கட்சிகள் ஓரணியாக ஒன்றிணைந்து  உலமாக்களிடம் சென்று ஆதரவு கேட்டால், அதன்பின் ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து ஓர் அறிவிப்பு மட்டும் அவர்களுக்கு வந்துவிட்டால், அதைக் கட்டளையாக ஏற்று ஒவ்வோர் ஆலிமும் தத்தம் பள்ளிகளில் ஜும்ஆ உரை நிகழ்த்தத் தயாராக இருக்கின்றார்கள். எந்தெந்தத் தொகுதிகள் என நீங்கள் முடிவெடுங்கள். ஆலிம்களும் தேர்தல் பணியாற்றத் தயார்நிலையில் இருக்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுத் தம் இன்னுயிரையும் நாட்டிற்காக ஈந்தவர்கள் உலமாக்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள். முஸ்லிம்கள், பிற மதச் சகோதரர்கள் மட்டுமன்றி, உலமாக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குக் கிடைத்துள்ள குதிரை பலம்.  

காலம் கனிந்து வந்துள்ள இப்போது நீங்கள் ஒன்றிணைந்து ஒத்திகை பார்க்காமல் பிறகு எப்போதுதான் ஒத்திகை பார்க்கப்போகின்றீர்கள்? பிறருக்கு உதவிசெய்ய மட்டும்தான் ஒன்றிணைவீர்களா? இந்தத் தமிழக மக்களின் அரசியல் புனரமைப்பிற்காகவும் அரசியல் மறுவாழ்விற்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றிணைய மாட்டீர்களா? அரசியல் புரட்சிக்கு வித்திட வேண்டிய தக்க தருணம் கனிந்து வந்திருக்கிறது. முஸ்லிம் சமுதாயக் கட்சிகளே இன்னுமா உறக்கம்? இன்னுமா தயக்கம்? வெவ்வேறு கூட்டணிகளில் பிரிந்து நின்று வாக்குகள் சிதறிப்போகக் காரணமாக இருக்காதீர்கள். ஒருங்கிணைந்து ஒன்றிணைந்து அதிக இடங்கள் பெற்று வெற்றிகாணும் வழிகாணுங்கள். 

========== 




சனி, 16 ஜனவரி, 2016

விரைவில் எதிர்பார்க்கலாம்!

விரைவில் எதிர்பார்க்கலாம்!  

2011  ஜூலை முதல் 2015 டிசம்பர் வரை இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகத்திற்காகத் தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அல்லாஹ்வின் அருளால் அவ்விரண்டு நூல்களின் தமிழாக்கப்பணி முடிவடைந்ததையடுத்து என் சொந்த நூல்களை வெளியிடுவதில் கவனம் செலுத்த உள்ளேன். அதன்படி இன்ஷா அல்லாஹ் 1. பூபாள இராகங்கள் (கவிதை), 2. இறைநம்பிக்கை கொண்டோரே! 3. நபிகளார் நவின்ற மூன்றுகள் ஆகிய நூல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளையும் ஆறு பாகங்களாகத் தமிழாக்கம் செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் ரஹ்மத் பதிப்பகம் அவற்றை விரைவில் வெளியிடும் என உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் 2018ஆம் ஆண்டில் ஸிஹாஹ் சித்தா எனப்படும் ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்பு நூல்களும் தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாட்டை ரஹ்மத் பதிப்பகம் செய்து வருகின்றது. அப்பதிப்பகத்தாரின் எண்ணம் குறித்த காலத்தில் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக!