ஞாயிறு, 13 மார்ச், 2016

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-4)


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் உள்ளவையாகும்.  1. நாணம் கொள்ளுதல், 2. நறுமணம் பூசுதல், 3. பல் துலக்குதல், 4. மணமுடித்தல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1000)

இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள நாணம் கொள்ளுதல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், மணமுடித்தல் ஆகிய நான்கு வழிமுறைகளும் ஒவ்வோர் இறைத்தூதரையும் அலங்கரித்துள்ளன. இந்நான்கு செயல்பாடுகளுக்குள் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உணர்வு சார்ந்த அனைத்தும் உள்ளன. நாணுதல் பெண்ணுக்கே உரிய உயர்பண்பாக நாம் கருதியுள்ளோம். ஆனால் அது இருபாலருக்கும் உரிய நற்பண்பு என்பதை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு செயலையும் நிதானத்துடனும் கவனத்தோடும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்பண்பு இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றவர்களைவிட அவர்கள் தனித்துவம் பெற்றுத் திகழ வேண்டும் என்பது இறைவனின் எண்ணம். எனவேதான் அவர்களுக்கு உயர் பண்பான நாணத்தை வழங்கியிருந்தான். அது மட்டுமின்றி, “அது எப்போதும் நன்மையையே கொண்டுவரும்என்பது நபி (ஸல்) அவர்களின் பொன்னான வாக்காகும்.

நாணம் கொள்ளுதல் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதைப் பின்வரும் நபிமொழி மூலம் அறிகிறோம்.  இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரீ: 9) மேலும் வெட்கப்பட்டுச் சிலவற்றைச் செய்யாமல் விட்டுவிடுதல், சிலவற்றைக் கேட்காமல் விட்டுவிடுதல், சிலவற்றைப் பேசாமல் விட்டுவிடுதல் உள்ளிட்டவை சிலரிடம் இருக்கலாம். இது ஒரு குறையில்லை. மாறாக, இது ஒரு நிறையே ஆகும்.

மிகுந்த வெட்க சுபாவம் கொண்ட தம் சகோதரரைக் கண்டித்து, அறிவுரை கூறிய ஒரு தோழரை நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுமாறு பணிக்கின்றார்கள். அது குறித்த நபிமொழியைக் காண்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளுள் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து)த் தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 24) ஆக வெட்கப்படுவது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம். வெட்கம் உள்ள நாம் நம்முடைய இறைநம்பிக்கையை அறிந்துகொள்ளலாம் அல்லவா?

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிட அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்”  (நூல்: புகாரீ: 3562) என அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் கூறுகின்ற நபிமொழி கவனிக்கத்தக்கதாகும். கன்னிப் பெண்ணோடு சேர்ந்தே இருப்பது வெட்கம் ஆகும். ஆனால் அதைவிட அதிக வெட்கமுடையவர்களாக நபியவர்கள் இருந்துள்ளார்கள். அதேநேரத்தில் அதை இக்காலக் கன்னிப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாகாது. முகநூலில் தம் முகம் வர வேண்டும். அதற்கு நூற்றுக்கணக்கான விருப்பம் (லைக்) பதிவிடப்பட வேண்டும் என்று எண்ணுகிற கன்னியர் வாழும் காலமிது; வெட்கம் கிலோ என்ன விலை? எனக் கேட்கின்ற பருவ மங்கையர் வாழும் கணினிக் காலமிது. எனவே நபி (ஸல்) அவர்களின் வெட்கமும் நாணமும் முற்காலக் கன்னியரின் நாணத்தைவிட அதிகமானது எனப் பகுத்தறிதல் வேண்டும்.
முற்கால நபிமார்களின் ஏட்டில் இருந்த ஒரு வாசகம், “நீ வெட்கப்படவில்லையானால் விரும்பியதைச் செய்துகொள்என்பதாகும். (அபூதாவூத்: 4164) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே வெட்கம் தொன்றுதொட்டு வருகின்ற ஓர் உன்னதமான பண்பாகும். அது அனைவரும் அவசியம் பேண வேண்டிய பண்பாகும்.

வெட்கம் இல்லையேல் எதையும் செய்யலாம். இன்றைய ஆடவர்-பெண்டிர்  இருபாலரிடமும் வெட்கம் தொலைந்து போய்விட்டது. அதனால்தான் அவர்கள் எதைச் செய்தாலும் வெட்கப்படுவதில்லை; எதைச் செய்யவும்  வெட்கப்படுவதில்லை. வெட்கங்கெட்ட செயலையும் செய்துவிட்டு, அதைத் துணிவோடு பிறர் முன்னிலையில் சொல்லவும் முற்படுகின்றார்கள். மறைமுகமாகச் செய்ய வேண்டியவற்றைப் பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் செய்கின்றார்கள். தன் மனைவிக்கு உணவூட்டுவதைக்கூடப் படமெடுத்து முகநூலில் பதிவிட்டு மகிழ்கின்றார்கள்.  திருமணத்தில் படமெடுத்து, பதிவு செய்து, எல்லோருக்கும் காணொலியாகக் காட்டி இன்புறுகின்றார்கள்; ‘இதுதான் என் திருமண ஆல்பம்எனக் காட்டுவதில் பெருமிதம் அடைகின்றார்கள். இதுதான் இன்றைய நிலை. இதனால் நாம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியை இழந்து வருகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆக, இறைத்தூதர்களின் நற்பண்புகளுக்கு ஒளியூட்டும் விதமாகவும் அழகு சேர்க்கும் விதமாகவும் இருந்த நாணம்  நமக்கும் அழகு சேர்க்கும் அணிகலனாகும் என்பதில் ஐயமில்லை. எனவே நாணம் கொள்ளுதல் எனும் பண்பை நாமும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம்.
இரண்டாவது, நறுமணம் பூசுதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். “(என்னுடைய மனைவியரான) பெண்களும் நறுமணமும் எனக்கு விருப்பத்திற்குரியவையாக ஆக்கப்பட்டுள்ளன” (நூல்: நசாயீ: 3879) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் பூசிக்கொள்வதை விரும்பினார்கள். நறுமணத்தைப் பூசிக்கொள்ளும்போது சோர்ந்து போயுள்ள உணர்வுகள் புத்தெழுச்சி பெற்று விரைவாகச் செயல்படத் தொடங்குகின்றன; மூளை நரம்புகள் சுறுசுறுப்படைகின்றன; மனம் மகிழ்ச்சியடைகிறது.

நறுமணம் பூசிக்கொண்டு பணியாற்றுபவர்கள், எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடிய பணியை ஆறு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதற்குக் காரணம், நறுமணம் பூசியதால் ஏற்பட்ட அவர்களின் சுறுசுறுப்பான  செயல்பாடுகள்தாம். எனவே இறைத்தூதர்களின் வழிமுறையான இப்பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்போம். பெண்களைப் பொறுத்த வரை, திருமணமான பெண்கள் தம் கணவனைக் கவர்வதற்காக வீட்டில் இருக்கும்போது மட்டும் பூசிக்கொள்ளலாம். வெளியில் செல்லும்வேளையில் முற்றிலும் அதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனைய பெண்கள் நறுமணம் பூசக் கூடாது என்பது மார்க்கச் சட்டமாகும்.  ஆனால் மார்க்கச் சட்டத்தை மீறிபெண்கள் பலர்  வெளியே புறப்படும்போது மல்லிகைப் பூச்சூடி, ஒப்பனை செய்து கொண்டு, செல்வதைக் காண முடிகிறது. இதை அவர்கள் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது, பல் துலக்குதல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். இதை ஒவ்வொருவரும் பின்பற்றி வருவதால் இதன் முக்கியத்துவம் நமக்கு நன்றாகவே தெரியும். பல் துலக்குதல் வாய்க்குத் தூய்மையானது; இறைவனுக்கு விருப்பமானது” (நூல்: நசாயீ: 5) என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள்” (முஸ்லிம்: 372) என்பதும், “என் சமுதாயத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்றில்லையானால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல்துலக்குமாறு நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” (புகாரீ: 887) என்ற நபிகளாரின் கூற்றும் பல்துலக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. 

ஆலும் வேலும் பல்லுக்குறுதிஎனும் முதுமொழி பல்துலக்கப் பயன்படுத்த வேண்டிய குச்சியைப் பற்றிப் பேசுகிறது. எத்தனையோ பற்பசைகள் வந்தாலும் நபிகளார் பயன்படுத்திய அராக்மரக்குச்சி,, ஆலமரக்குச்சி,, வேப்ப மரக்குச்சி ஆகியவை மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன; அவை பற்களை உறுதிப்படுத்த உதவுகின்றன; பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என உறுதியாகக் கூறலாம். ஆகவே இந்த மூன்றாவது வழிமுறையையும் நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

நான்காவது, மணமுடித்தல் இறைத்தூதர்களின் வழிமுறைகளுள் ஒன்றாகும். ஈசா நபியைத் தவிர எல்லா இறைத்தூதர்களும் திருமணம் செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் பலதார மணம் புரிந்ததோடு, “திருமணம் எனது வழிமுறைஎனவும் கூறியுள்ளார்கள். விருப்பமும் வசதியும் உள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளவும் திருக்குர்ஆன் அனுமதியளிக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணத்தைத் தத்தம் உணர்வுகளுக்கான வடிகாலாக ஆக்கிக்கொள்வதோடு சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்கின்றார்கள். அதுவே திருமணத்தின் தலையாய நோக்கமாகும். தாமும் இன்புற்று, அந்த இன்பத்தில் விளைந்த சந்ததிகளைப் பேணிக் காத்து, வளர்த்து ஆளாக்குவதில்தான் குடும்ப வாழ்க்கை பின்னிக்கிடக்கிறது. ஆகவே இந்த நான்காவது வழிமுறையைப் பின்பற்றுவது முற்றிலும் அவசியமாகும். ஆக இறைத்தூதர்களின் மேற்கண்ட நான்கு வழிமுறைகளையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி, ஈருலகிலும் ஈடேற்றம் பெற உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

=====================




கருத்துகள் இல்லை: