திங்கள், 22 ஜூலை, 2013

மறதி நல்லது (சிறுகதை)


அன்றொரு நாள் அன்வர் தன்னுடைய தம்பி ராஸிக்கிற்குப் பெண் பார்க்கச் சென்றிருந்தான். தம்பியும் கூடவே சென்றிருந்தான். பெண் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்றுள்ளதோடு, ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியையாகவும் பணியாற்றி வருகிறாள். இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்கவள். பணிவும்  அன்பும் நிறைந்தவள். இஸ்லாமிய முறைப்படி நடந்த பேச்சு வார்த்தையில் இருவீட்டாருக்கும் திருப்தி ஏற்படவே மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த கல்லூரிப் பேராசிரியரிடம் தன் படிப்பைப் பற்றியும் அதற்கு உதவி செய்தவர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான் ராஸிக்.

அவனுக்கு மூன்று அண்ணன்கள். அவர்களுள் கடைசி அண்ணன்தான் அன்வர். அவனுடைய படிப்புக்கும் அன்வருடைய படிப்புக்கும் மூத்த இரண்டு அண்ணன்கள்தாம் உதவிசெய்தனர். நாளடைவில் அன்வர் படித்து முடித்து ஒரு பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். அப்போது ராஸிக், “பி.எஸ்ஸி. வரைக்கும் ரெண்டு அண்ணன்களும் நெறைய உதவி செய்துட்டாங்க. இப்ப நீங்க எம்.எஸ்ஸிக்கு உதவி செய்யுங்க” என்று உதவி கேட்டான். அன்வர் சரியென ஒத்துக்கொண்டான்.

ராஸிக் தன் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தான். மாதந்தோறும் அன்வர் முகவரிக்குத்தான் கல்லூரி பில் வரும். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கான வரைவோலை எடுத்து கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிடுவான். இவ்வாறு சில மாதங்கள் தொடர்ந்தது. பின்னர் அன்வர் தன் மூத்த அண்ணனுக்கே பணத்தை அனுப்பி, நீங்களே கல்லூரிக்குப் பணத்தைக் கட்டிவிடுங்கள் என்று கூறினான். அதன்படி அவரே கட்டிவந்தாலும் எம்எஸ்ஸி முடியும் வரை உதவி செய்தவன்  அன்வர்தான். ஆனால், அன்று ராஸிக் பேசிக்கொண்டிருந்தபோது, “என் இரண்டு அண்ணன்கள்தாம் என்னைப் படிக்க வைத்தனர்” என்று கூறினான்.

உண்மைதான். அவர்கள் இரண்டு பேரும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு  அன்வர் செய்யாவிட்டாலும், அவனால் முடிந்த அளவுக்கு அவன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஏன், இன்றைக்குத் திருமணம் வரைக்கும் முயற்சி செய்தது யார்? அன்வர்தானே? இதை அவன் மறுக்க முடியுமா?

அவன் எம்.எஸ்ஸி. முடித்துவிட்டுச் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு இருப்பிடம் கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தவன் அன்வர்தான். தான் பணிசெய்த இடத்திலேயே தன் தம்பி ராஸிக்கைத் தங்க வைத்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மேற்படிப்பு படிக்க விரும்பினான். தன் மூத்த அண்ணனிடம்  பண உதவி பெற்று பி.எட் படித்தான். பிறகு எம்.எட். படித்தான். பிறகும் படிக்க வேண்டும் என்று  கூறி அன்வரிடம் பண உதவி கேட்டான். அவன் ஒருவரிடம் கடன் பெற்று எட்டாயிரம் ரூபாய் கொடுத்து, மேற்படிப்புக்கு ஆர்வமூட்டினான்.

இத்தனையும் செய்து, இன்றைக்கு ஒரு நல்ல இடத்தில் பெண்பார்த்துக் கொடுத்து, தன் தம்பி நல்லா வாழ வேண்டும் என்று நினைக்கின்ற தன்னை அவன் மறந்துவிட்டானே என்றெண்ணி  அவன் மனம் குமுறியது. இருப்பினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அன்வர் இயல்பாகப் பேசிவிட்டு, குறிப்பிட்ட நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே விடைபெற்றான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அன்வருடைய சின்னம்மா மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் வேறொரு பக்கம்  பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இறுதியில் சென்னையில் பார்த்த பெண்ணையே முடிவுசெய்வதாகக் கூறி, நிச்சயதார்த்தம் செய்வதற்கான தேதி குறித்தாயிற்று. நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அன்வர் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்குதான் அந்நிகழ்வு நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஊருக்குப் புறப்பட்டு, பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது ராஸிக் போன் செய்தான். அண்ணே, நிச்சயதார்த்தத்தை கேன்சல் செஞ்சாச்சு. நீங்க நேரா வாங்க, முழுமையான விவரத்தை அங்கு சொல்றேன் என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

சரி, நேரடியாகச் சென்று விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று அன்வர் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். மறுநாள் அவன் தன் அண்ணன்கள், தந்தை மற்றுமுள்ள உறவினர்கள் முன்னிலையில் பேசும்போதுதான் தெரிந்தது அவனுடைய மனமாற்றம்.

அதாவது, சென்னையில் பார்த்த பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவளாக இல்லை என்பதால் அவனுடைய சின்னம்மா, தான் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்த வேறொரு பெண்வீட்டாரிடம், ராஸிக் உடைய செல்பேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லியுள்ளார். அங்கிருந்து ஒருவர் அவனிடம் பேசி எல்லா விவரங்களையும் சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்கள் காரில் வந்து அவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்குமுன் என்ன நடந்தது தெரியுமா? அவனுடைய சின்னம்மா ராஸிக்கிற்கு போன் செய்து, “இன்ன எடத்துல ஒரு  பொண்ணு இருக்கு. பிளஸ் டூ தான் படிச்சிருக்கு. அதப் பாக்காதே. நூறு பவுன் போடுவாங்க. செலவுக்கு 5 இலட்சம், கார் எல்லாம் தர்றாங்களாம். நீ என்ன சொல்றே?” என்றதும் அவன் சற்றுத் தடுமாறித்தான் போனான். அவனுடைய மனம் ஒரு குரங்கைப் போல கிளைவிட்டுக் கிளை தாவிக் கொண்டிருந்தது.  “பொண்ணு வீட்லயிருந்து போன் செய்வாங்க. நீ எதுவும் பேச வேண்டாம். ஓ.கே. மட்டும் சொல்லு” என்று சொல்லி போன் அழைப்பைத் துண்டித்தார்.

மறுநாளே, அவன் வேலை செய்யுற கல்லூரிக்கு மணப்பெண் வீட்டிலிருந்து காரில் இரண்டு பேர் வந்து அவனைப் பார்த்தாங்க. அது மட்டுமில்லாம அவனைக் காரிலேயே அழைத்துக்கொண்டு நேரடியாகப் பெண்ணிடம் பேசச் செஞ்சாங்க. அவனுக்குப் பிடித்துப்போய்விட்டது. படிப்பா, பணமா என்று மனம் தடுமாறிய வேளையில் பணத்தின் பக்கமே அவன் மனம் சாய்ந்தது.

இறுதியில் அந்தப் பணக்காரப் பெண்ணோடுதான் திருமண நிச்சயதார்த்தம் என்று அவனுடைய சின்னம்மா தலைமையில் அவனே முடிவுசெய்தான். இதனால் மனமுடைந்த அன்வர், முன்னர் நிச்சயதார்த்த தேதி குறித்த வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது என்று விழிபிதுங்கி நின்றான். அவனுடைய தம்பி ராஸிக் ஒரு வார்த்தையில் கேன்சல் என்று சொல்லி விட்டான். ஆனால் பெண்வீட்டில் சொல்லி, அதற்கான ஏற்பாடு செய்யச் சொன்னது அன்வர்தானே. ஆகவே அவன்தான் போன் செய்து  சொல்லியாகணும். அவர்கள் திட்டுவதையும் வாங்கிக்கொள்ளணும். திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு, அன்வர் போன் செய்து, தன் வருத்தத்தைத் தெரிவித்தான். பதிலுக்கு அவர்கள் அன்வரைக் கடிந்துகொண்டார்கள்.

நிச்சயதார்த்தம் முடிவுற்று, திருமணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவன் அனுப்பிய திருமணப் பத்திரிகையும் வீடு வந்து சேர்ந்தது.

ராஸிக்கின் நன்றியறியாமையையும் அவசரப்போக்கையும் துடுக்கான பேச்சுகளையும் இன்னபிற செயல்பாடுகளையும் மறந்துவிட்டுத்தான், இதோ நாளை நடக்கவுள்ள அவனுடைய திருமணத்திற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறான் அன்வர்.



====================


சனி, 22 ஜூன், 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...

தொடர்-2

                நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மும்மூன்று விசயங்களாகக் கூறி, மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவ்விசயங்களைக் கேட்போர் தம் அன்றாட வாழ்வில் அவற்றைச்  செயல்படுத்த ஆவல்கொள்ளுமாறு செய்தவர். நபிகளாருடைய அறிவுரைகளைக் கேட்போர் உடனடியாக அவற்றைத் தம் வாழ்வில் செயல்படுத்த முனைந்தார்கள். அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள மூன்றுகளைப் பார்ப்போம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவுமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு நோவினை தரக்கூடிய வேதனை உண்டு. அல்லாஹ்வின் தூதரே! -அவர்கள் நட்டமடைந்துவிட்டார்கள்-அவர்கள் யாவர்? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், 1. தன் கீழாடையைத் (தரையில்) தொங்கவிடுபவன். 2. தான் வழங்கிய(தர்மத்)தைச் சொல்லிக்காட்டுபவன். 3. பொய்யான சத்தியம் செய்து தன் வியாபாரப்பொருளை விற்பவன் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2199)

ஒருவன் தன் அந்தரங்க உறுப்பை மறைக்கவும் தன்னை அழகுபடுத்திக்கொள்ளவுமே ஆடை அணிகின்றான். அந்த ஆடை சிறந்ததாகவும் அழகாகவும் இருக்கலாம். பிறருக்குப் பிடித்தவாறு இருக்கலாம். விலையுயர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிறரை இழிவாகக் கருதிச்  செருக்காக நடைபோடுவதும், நடக்கும்போது அந்த ஆடை தரையில் இழுபடுமாறு  செல்வதும் ஏக இறைவனுக்குப் பிடிக்காத செயலாகும். ஏனெனில் எல்லாப் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்தான். அதில் மனிதன் போட்டிக்கு நிற்கக் கூடாது. ஆகவே ஒருவன் தன் ஆடையைத் தரையில் படுமாறு இழுத்துச் செல்வது மிகப்பெரிய குற்றமாகும் என்பதையும் அத்தகைய மனிதனுக்கு  கடுமையான தண்டனை உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு உதவி செய்வதையோ தானமாக வழங்குவதையோ பிறரிடம் சொல்லிக்காட்டித் திரியக்கூடாது. இது ஒருவனின் சுயமரியாதையைக் குலைக்கிறது. சமூகத்தில் அவனுடைய மதிப்புக் குறையக் காரணமாக அமைகிறது. ஒரு முஸ்லிமுடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில்  நடந்துகொள்வது மிகப்பெரும் குற்றமாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் இது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவன் தான் வழங்கிய தானத்தைச் சொல்லிக்காட்டுவதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கண்டித்துக் கூறுகின்றான்:  இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காகத் தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லிக் காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனைப்) பாழாக்கிவிடாதீர்கள். (2: 264) ஆகவே, ஒருவனுக்குச் செய்த உதவியையோ தர்மத்தையோ ஒருக்காலும் பிறரிடம் சொல்லித்திரியக்கூடாது; அதை விளம்பரப்படுத்தக் கூடாது.

மனிதன் நாளுக்கு நாள் பொய் சொல்வதில் வளர்ச்சியடைந்து வருகின்றான். அவனுடைய வாயிலிருந்து வருபவையெல்லாம் பொய்களாகவே இருக்கின்றன. பேசினால், வாக்குறுதி  கொடுத்தால், ஒப்பந்தம் செய்தால்-இப்படி எந்தச் செயலானாலும் பொய் பேசுவதை  ஒரு தொழிலாகவே கொண்டுள்ளான். அந்த வகையில், வியாபாரம் செய்பவன் எப்படியேனும் இந்தப் பொருளை விற்றுவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் இருப்பதால் ஏதேனும் பொய்யைச் சொல்லியாவது விற்றுவிட முனைகின்றான். வாங்குபவனின் நிலையைப் பற்றியோ அவன் பாதிக்கப்படுவதைப் பற்றியோ அவன் கவலைப்படுவதில்லை. இத்தகைய வியாபாரி பொய் சொல்வதோடு, அல்லாஹ்வின்மீது பொய்ச்சத்தியம் வேறு செய்கிறான். எனவே இது போன்ற வியாபாரியை அல்லாஹ் திருப்திகொள்வதில்லை. மாறாக, மறுமையில் அவனுக்குச் சரியான தண்டனையை வழங்கத் தயாராக இருக்கின்றான்.


ஆக, இத்தகைய மூவரை உயர்ந்தோன் அல்லாஹ் மறுமை நாளில் பார்க்கப் போவதில்லை. அத்தோடு  மறுமை நாளில்  அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இத்தகைய தீமைகளிலிருந்து நம்மைத் தவிர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். 1. ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன். 2. இன்னொருவன், சுதந்திரமான ஒருவனை விற்று அந்தப் பணத்தை உண்டவன். 3. மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக் கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.   (நூல்: புகாரீ-2227)

இன்றைக்குச் சத்தியம் செய்வது மிகச் சாதாரண நடைமுறையாகிவிட்டது. அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து, இன்னதைச் செய்வேன் என்று கூறுகின்ற பலர் அதைச் சரியாக நிறைவேற்றுவதில்லை. சத்தியத்தைச் சாதாரணமாகக் கருதுவோர் நபிகளார் கூறியுள்ள அல்லாஹ்வின் கூற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுமையில் அல்லாஹ்வே அவனுக்கு எதிராக வழக்குரைப்பான் என்றால் அதிலிருந்து அவன் எங்ஙனம் தப்பிக்க முடியும்?

சுதந்திரமான ஒருவனை விற்று, அந்தப் பணத்தைச் சாப்பிடுதல் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பரவலாகப் பொதுமக்கள் செய்வதில்லை என்றாலும் சமூக விரோதிகள் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் ஆகியோரைக் கடத்திச் சென்று விற்றுவிடுவது நடக்கத்தான் செய்கிறது. சிறுவர்களைப் பிச்சையெடுப்பதற்காகவும் இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோரை விபச்சாரத்திற்காகவும் விற்றுவிடுகின்றனர். இது இன்றைய காலத்தில் நடைபெறுகின்ற சமூக விரோதச் செயலாகும். குழந்தைகளைக் கடத்தி, பிள்ளைப் பேறற்ற அயல்நாட்டுப் பெற்றோருக்கு விற்றுவிடுகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒருவனைப் பணிக்கு நியமித்து, அவனிடமிருந்து பெறவேண்டிய பணிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு அவனுக்குத் தான் விரும்பிய குறைந்தளவுத் தொகையைக் கொடுத்து அனுப்பிவிடுவதும், பேசிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்துவிட்டு இறுதியில், அவன் மனம் நோகும்படி ஏதாவது கூலியைக் கொடுத்தனுப்புவதும், சிலர் பணியைப் பெற்றுக்கொண்டு கூலியை அறவே கொடுக்காமல் ஏமாற்றுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  எனவே பணிக்கு நியமிக்கும்போதே அவனுடைய கூலியைத் தெளிவாகப் பேசிக்கொண்டு, பணி முடிந்ததும் பேசிய தொகையை முறைப்படி ஒப்படைப்பதுதான் ஓர் இறைநம்பிக்கையாளரின் நல்ல பண்பாகும்.

ஆக, மேற்கண்ட மூன்று விசயங்களில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, அல்லாஹ் நமக்கெதிராக வழக்குரைக்கும் வகையில் சிக்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும். 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: மூன்று பொருள்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை: தண்ணீர், புல் (மேய்ச்சல் நிலம்), நெருப்பு ஆகியவையாகும். இவற்றை விற்பது விலக்கப்பட்டதாகும் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2463)

அதாவது, தண்ணீர், மேய்ச்சல் நிலம், நெருப்பு ஆகிய மூன்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இவற்றை முஸ்லிம்களுள் யாரும் பயன்படுத்தலாம். எவரும் தமக்கு மட்டுந்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது. தண்ணீர் என்பது ஒருவருடைய கிணற்று நீரைக் குறிக்காது. ஒருவருடைய வீட்டிலுள்ள கிணற்று நீர், ஆழ்துளைக் கிணற்று நீர் ஆகியவை அவருக்கே சொந்தமாகும். ஆனால் நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் என்பது ஆறு, ஏரி, குளம், கடல் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையே குறிக்கிறது. அவற்றிலுள்ள தண்ணீர் சமுதாய மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். தனிநபர் அவை தமக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி உரிமை கொண்டாட முடியாது. அதேநேரத்தில் ஒருவன் ஊருக்கு வெளியே உள்ள ஆற்றிலிருந்து ஒரு லாரி நிறையத் தண்ணீரை எடுத்து வந்து ஊருக்குள் விற்பது-தண்ணீரை விற்பதாக ஆகாது. மாறாக, அவன் அங்கிருந்து எடுத்து வந்து தருவதற்கான போக்குவரத்துச் செலவாகவே கருதப்படும். இன்றைக்குத் தண்ணீரைச் சுத்தப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களும்  அதே வகையின்கீழ்தான் அடங்கும். அவை விற்பனை செய்யும் தண்ணீர் பாக்கெட்டை வாங்கும்போது நாம் பணம் கொடுப்பது தண்ணீருக்காக அன்று. மாறாக, அத்தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் செலவுக்காகத்தான். ஆக, தண்ணீர் என்பது பொதுவானது. அது இறைவனின் அருட்கொடை. அது அனைவருக்கும் சொந்தமாகும். மக்களின் அவசியத் தேவையைப் புரிந்துகொண்டு அதை விற்பனை செய்யக்கூடாது. இதைப் புரிந்துகொண்டால் இன்று நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஊருக்கு வெளியே உள்ள மேய்ச்சல் நிலம் பொதுவானது. அதில் யார் வேண்டுமானாலும் தம்முடைய ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை மேய்க்கலாம். அதில் தனிநபர் யாரும், தமக்கு மட்டுமே இது சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது.

நெருப்பு என்பது பொதுவானது. இது கற்காலத்தைப் பொறுத்த வரை கிடைத்தற்கரிய பொருளாக இருந்தது. தீ மூட்டுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கற்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்து, அதன்மூலம் தீயை மூட்டினார்கள். தற்காலத்தில் ஒரு தீக்குச்சியால் மிக எளிதாக அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் இதன் தேவையை நாம் பயண நேரத்தில் உணரலாம். தீப்பெட்டி கிடைக்காத நேரத்தில் ஒருவர் ஒரு தீக்குச்சியும் அதனை உராய்வதற்கான பெட்டியையும் கொடுத்தால் அது பேருதவியாக இருக்கும்.  நெருப்பு என்பது தீக்குச்சியை மட்டுமின்றி, தீயைப் பற்ற வைக்க எதுவெல்லாம் உதவியாக இருக்குமோ அவற்றையெல்லாம் குறிக்கும். மண்ணெண்ணெய், விறகு, எரிவாயு உருளை (சிலிண்டர்) போன்றவற்றையும் குறிக்கும். அது பற்றிய ஒரு நபிமொழியைப் பாருங்கள்!

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! தடுத்து வைத்துக்கொள்ளக்கூடாத பொருட்கள் எவை? என்று வினவினேன். தண்ணீர், உப்பு, நெருப்பு என்று விடையளித்தார்கள். இந்தத் தண்ணீரோ நாங்கள் அது பற்றி அறிவோம். உப்பு, நெருப்பு ஆகியவை (முக்கியமானவை) ஏன்? என்று வினவினேன். அதற்கவர்கள், ஹுமைரா! யார் நெருப்பைக் கொடுத்தாரோ, அவர் அந்நெருப்பின் மூலம் சமைத்த யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். யார் உப்பைக் கொடுத்தாரோ, அவர் அவ்வுப்பு சுவையாக்கிய யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்கின்றபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்காதபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2465)
ஆக, இந்நபிமொழிப்படி உப்பும், நெருப்பும் மனிதனுக்கு இன்றியமையாத் தேவையாகும். அவற்றை நாம் பிறருக்குக் கொடுத்துதவுதல் பெரும் நன்மையாகும் என்பதை அறிந்துகொள்கிறோம். எனவே நாம் தண்ணீர், உப்பு, நெருப்பு ஆகிய பொருள்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக்கொள்வோம். அதன்மூலம் இறைவன் புறத்திலிருந்து அளவிலா நன்மையைப் பெறுவோம்!

================




செவ்வாய், 21 மே, 2013

தந்தையின் சிறப்பு



தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடுஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளைஎன்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)









இனிய திசைகள் மே 2013 இதழ்

சனி, 11 மே, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...


மூன்றுக்கும் இஸ்லாமியச் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உளூச் செய்யும்போது நாம் ஒவ்வோர் உறுப்பையும் மூன்று மூன்று தடவை கழுவுகிறோம். கட்டாயக் குளிப்பின் கடமைகள் மூன்று (வாய் கொப்பளித்தல், மூக்கில் தண்ணீர் இட்டுச் சுத்தம் செய்தல், உடல் முழுவதும் தண்ணீரால் நனைத்தல்). தொழுகையில், ருகூஉவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அழீம் என்றும், சஜ்தாவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அஃலா என்றும் கூறுகிறோம். வித்ரு மூன்று ரக்அத் தொழுகின்றோம். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணின் காத்திருப்புக் காலம் (இத்தா) மூன்று (மாதங்கள்)  மாதவிடாய்க் காலம். ஏன், இஸ்லாத்தின் கடமைகள்கூட மூன்றுதான். ஆம், ஏழைகளுக்கு (ஈமான், தொழுகை, நோன்பு ஆகிய) மூன்றுதான். செல்வர்களுக்குத்தான் ஸகாத், ஹஜ் உள்பட ஐந்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களைப் புரிந்தவர்கள். அவர்களின் சூழ்நிலையைக் கருதி அறிவுரை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அறிவுரை என்ற பெயரில் வார்த்தைகளை சரமாறியாக அள்ளிக்கொட்டிக் கேட்போரைச் சலிப்படையச் செய்யாத நற்பண்பாளர். ஆகவே மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெறும் வகையிலும், அவற்றை அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தும் வகையிலும் பொருட்செறிவும் ஆழமான அர்த்தங்களும் கொண்ட மூன்று மூன்று விசயங்களை அவ்வப்போது தம் தோழர்களுக்குக் கூறிவந்தார்கள். அவற்றை நாம் தெரிந்துகொண்டு, நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மால் இயன்ற அளவுக்கு அவற்றைச் செயல்படுத்தும் உயர்ந்த எண்ணத்தோடு தொடர்ந்து படிப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்கு எவ்விதச் சந்தேகமுமின்றி பதிலளிக்கப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, 2. பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. (நூல்: இப்னுமாஜா-3852)  

பலம் வாய்ந்தவர் பலவீனமானவரை அடக்குவதும் ஒடுக்குவதும் அநியாயம் செய்வதும் உலக நியதியாக உள்ளது. அந்த வகையில் ஒருவனால் அநியாயம் செய்யப்பட்டவன் தன் சோகத்தையும் துன்பத்தையும் யாரிடம் சொல்லி அழுவான்? யார்தாம் அவனுக்கு ஆறுதல் கூற முடியும்? யார் அவனுக்கு உதவி செய்வார்? வறியவனை வாட்டினால் வழக்குத் தொடுப்பவர் யார்? என்ற துணிவுதானே ஒருவனை அநியாயம் செய்யத் தூண்டுகிறது. எனவேதான் அதற்கு விடையாகப் படைத்த இறைவனே அநியாயம் செய்யப்பட்டோர் பக்கம் இருக்கும்போது அநியாயம் செய்ய யாருக்குத் துணிவு வரும்? அதையும் மீறி ஒருவன் அநியாயம் செய்யத் துணிகின்றான் என்றால், அவன் அல்லாஹ்வை அஞ்சாதவனாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பயணி தன் ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு, தன் நாட்டைவிட்டு மற்றொரு நாட்டுக்கு, வியாபாரத்திற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ வேறு தேவைகளுக்காகவோ பயணம் மேற்கொள்கிறான். அவனுக்கு அப்பயணத்தில் உதவி செய்ய யாருமில்லை. எனவே அவன் நிர்க்கதியாக நிற்கிறான். அந்தத் தனிமையில் அவனுக்குத் துணைவனாக தனித்தோன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய பிரார்த்தனையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறான்.

ஒரு தந்தை தன் மகனுக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முனைகிறான்; அவனுக்காக உழைக்கிறான்; கல்வியையும் நல்லொழுக்கத்தையும் புகட்டுகின்றான்; இறுதியில் தனக்கு மேலாக அவன் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகின்றான். அத்தகைய தருணத்தில் தன்னால், ஓர் எல்லைக்கு மேல் முடியாது என்கிறபோது, அவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து தனக்கு வழங்காததையும் தன் மகனுக்கு வழங்கு என்று பிரார்த்தனை செய்கிறான். அந்த நேரத்தில் அல்லாஹ், தன் அடியான் தன் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்று அவனுக்கு ஆதரவளிக்கின்றான்.

ஆக, மேற்கண்ட மூன்று பேருடைய பிரார்த்தனையை அல்லாஹ் உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தக்க காரணம்  தெளிவாகவே தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருடைய தொழுகை அவர்களுடைய தலைக்கு மேலாக ஒரு சாண் (அளவு)கூட உயராது. 1. ஒருவர்-அவரை மக்கள் வெறுக்கின்ற நிலையில் அவர்களுக்கு (இமாமாக)த் தொழுகை நடத்துபவர், 2. தன் கணவன் தன்மீது கோபமாக உள்ள நிலையில் இரவைக் கழித்த பெண், 3. வாள்களை உருவியபடி சண்டையிட்ட இரண்டு சகோதரர்கள். (நூல்: இப்னுமாஜா-961)

மக்கள் தம்மை வெறுப்பதை உணர்ந்த ஒருவர் அவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கலாகாது. தொழுகை அல்லாஹ்வுக்குச் செய்கின்ற வழிபாடு. மக்கள் அதை அதிருப்தியோடும் மனச் சங்கடத்தோடும் செய்யாமல் அல்லாஹ்வை மனதில் ஏற்று, நிம்மதியாகத் தொழ வேண்டும். அதற்கு அவர்கள் விரும்பும் தலைமை இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் வெறுக்கும் ஒருவர் அவர்களுக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தினால் அதில் அவர்களுக்கு ஈடுபாடோ மனஓர்மையோ ஏற்படாது.  எனவே மக்கள் விரும்பும் வகையில் ஓர் இமாம் நடந்துகொள்வது  மிக முக்கியமாகும். அவர்கள் விரும்பும் வகையில், அதேநேரத்தில் மிகவும் சுருக்கிவிடாமலும், மிகவும் நீட்டிவிடாமலும் நடுநிலையோடு தொழுகை நடத்த வேண்டும். மக்கள் வெறுக்கும் வகையில் ஓர் இமாம் நடந்துகொண்டு, தொழுகை நடத்தினால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை எச்சரிக்கும் வகையில்தான் நபிகளார் கூற்று அமைந்துள்ளது. அதேவேளையில், ஓர் இமாம் ஷரீஅத்தில் உள்ளதை உள்ளபடி கூறியமைக்காக அவர்மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்றால் அது நபிகளார் விடுத்த எச்சரிக்கைக்குள் அடங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஓர் ஆடவன் பகல் முழுக்க உழைத்துக் களைத்துப்போய் இரவில் அமைதியாக ஒதுங்கலாம் என்ற எண்ணத்தில் இல்லத்தையும் இல்லாளையும் நோக்கி வருகின்றான். அவனை அன்புடன் வரவேற்று, புன்னகை புரிந்து, உபசரித்து, அவனுக்குப் பணிவிடைகள் செய்து மனங்குளிரச் செய்வது ஒரு மனைவியின் கடமை. அத்துடன் அவனோடு மகிழ்ச்சியுடன் உரையாடுவதும், குடும்ப விசயங்களைப் பகிர்ந்து கொள்வதும், அவனது உடற்தேவைகளை நிறைவேற்றுவதும் மனைவியின் கடமை. அவற்றை விடுத்து, தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் உழைக்கின்றவனை உதாசீனப்படுத்துவதோ, சினத்துடன் நடந்துகொள்வதோ, கடுகடுவெனப் பேசுவதோ, சண்டைபோட்டுக் கொண்டு தள்ளிப் படுத்துக்கொள்வதோ ஒரு மனைவிக்கு அழகில்லை. அத்தகைய பெண்ணை அல்லாஹ் விரும்புவதில்லை. அவள் தன்னைத் தொழுதாலும் அவன் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு குடும்பத்தைப் போன்று ஒழுங்கமைத்து வைத்துள்ளான் இறைவன். அப்படியிருக்கும்போது அதைச் சிதைக்கும் வண்ணம் ஒருவன் மற்றொருவனைக் கொல்லும் வகையில் வாளெடுத்துச் சண்டையிடுவதும் உயிரை மாய்க்க நினைப்பதும் பெருங்குற்றமாகும். அத்தகையோர் தொழுதாலும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆக, மும்மூன்று விசயங்களானாலும் அவற்றுள் ஆழமான பொருட்செறிவும், கருத்துகளும், அர்த்தங்களும் உள்ளன என்பதை நாம் உணர்ந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்று-விலகி நடப்பதற்குத் தூயோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
                                                                                                                                                                                (தொடரும்)




திங்கள், 22 ஏப்ரல், 2013

தமிழுக்காக...



                                               
என்னப்பா ஸமத், எப்டி இருக்கே? உன்னோட வேலையெல்லாம் எப்டி போய்க்கொண்டிருக்கு?

அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கேன் ஹைதர். வேலையெல்லாம் வேகமா போய்க்கொண்டிருக்கு. நான் இப்போ சுதந்திரமா வேலை செய்றேன். எந்தச் சிக்கலும் இல்லை. 

அப்படியா? சரி, நீ ஏற்கெனவே எங்கே வேலை செய்தாய்? அங்கிருந்து ஏன் வெளியேறினாய்?-ஹைதர் வினவினார்.

நான் ஏற்கெனவே ஒரு புத்தக நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு, பிழை திருத்தம், தட்டச்சு ஆகிய பணிகளை நான் கவனித்து வந்தேன். அந்தப் புத்தகாலயத்தின் மேற்பார்வையாளரும் ஆலோசகருமான புகழேந்தி மற்றொரு நிறுவனத்தில் தமிழாக்கப் பணியாற்றுகின்றார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எங்கள் புத்தகாலயத்தில் எந்த நூல் வெளிவந்தாலும் அவரின் ஆலோசனையின்றி வெளியிடப்படாது. ஒரு நூல் வெளியாவதற்கான ஆலோசனை, பிழை திருத்தம், மொழிபெயர்ப்பைச் சீரமைத்தல் போன்றவற்றை அவரே செய்துகொடுப்பார். அது மட்டுமின்றி, அந்த நூலை எங்கே, எப்படி வெளியிடலாம்; அதற்கு யார் யாரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம்; அந்நூலுக்கு யார் யாரிடம் அணிந்துரை, வாழ்த்துரை வாங்கலாம் என்ற தீர்மானமும் அவரைச் சார்ந்ததே.

ஒரு நாள் புகழேந்தி ஐயாவின் மொழிபெயர்ப்பு நூல் எங்கள் நிறுவனத்திற்கு வந்தது. அந்நூல் ஏற்கெனவே அவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழாக்கம் செய்து  வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அவரின் நூலை மறுபதிப்புச் செய்வதென்றும் அதை எங்கள் ஆஷா பதிப்பகம்  வெளியிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. எனவே அதைத் தட்டச்சு செய்யும் பணி என்னிடம் வழங்கப்பட்டது. அதை நானே முழுமையாகத் தட்டச்சு செய்து கொடுத்தேன். நான் தட்டச்சு செய்யும்போதே பிழைகளைக் களைந்துவிடுவது வழக்கம். பிழைதிருத்தம் செய்வதற்கென தனியாக ஒரு நேரம் ஒதுக்குவதில்லை.

அதன்பின் அந்நூலின் தட்டச்சுப் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. அதில் அவர் நீக்க வேண்டிய, மாற்ற வேண்டிய வார்த்தைகளை நீக்கியும் மாற்றியும் சீரமைத்துக் கொடுத்தார். அவற்றுள் ஓரிடத்தில் கைமாறுஎன்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. நான் அதைக் கைம்மாறு என்று மாற்றிச் சரியாகத்  தட்டச்சு செய்திருந்தேன். ஆனால் அவர் ம்எனும் மெய்யெழுத்தை நீக்கியிருந்தார். நான் அவ்விரண்டு வார்த்தைகளுக்கு உரிய பொருளையும் விளக்கத்தையும் தனியொரு தாளில் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அவ்வார்த்தையின் பொருளை உணர்ந்த நான், ‘பிரதி உபகாரம்எனும் பொருள் கொண்ட கைம்மாறுஎன்பதையே இறுதி செய்தேன். அது அவருக்குத் தெரியாது.

சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்- அலைபேசி ஒலித்தது. ஒரு நிமிடம் பொறுங்க ஹைதர் என்று சொல்லிவிட்டு, ஸமத் போனை எடுத்தார். சொல்லுங்க, யார் பேசுறீங்க?

நான் தஞ்சாவூரிலிருந்து யூசுஃப் பேசுறேங்க. ஐயா, பிரச்னை, பிரச்சனை, பிரச்சினை-என்று மூன்றுவிதமா எழுதுறாங்க. எது ஐயா சரி? என்று கேட்டார்.

சிக்கல்என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். உங்க பிரச்னை தீர்ந்துடும் என்று கூறி அலைபேசியை கீழே வைத்துவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் ஸமத்.

ஒரு தடவை, நான் தமிழாக்கம் செய்திருந்த நூலுக்கு அவர் அணிந்துரை எழுதிக் கொடுத்திருந்தார். பொதுவாக எங்கள் பதிப்பகத்தில் வெளியிடப்படுகின்ற நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை கொடுப்போர் முதுபெரும் தமிழறிஞர்களாக இருந்தபோதிலும் அவர்கள் அவற்றைக் கொடுக்கும்போது, ஐயா, தாங்கள் ஒரு தடவை பார்வையிட்டுத் திருத்திக்கொள்ளுங்கள். எனக்கு நேரம் இல்லை. சரியாகப் பார்க்கவில்லை- என்று கூறிவிடுவார்கள். இது அவர்களின் அக்கறையின்மையையும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதையுமே காட்டுகிறது.

அதனால் நான் தட்டச்சு செய்யும்போது சந்திப்பிழை, ஒற்றுப் பிழை, இலக்கணப்பிழை போன்றவற்றைச் சீர்செய்துகொள்வேன். அதேபோன்று புகழேந்தி ஐயா வழங்கிய அணிந்துரையையும் சீர்செய்து தட்டச்சு செய்திருந்தேன். அதில் ஆதாரப்பூர்வமாகஎன்ற வார்த்தையும் ஒன்று.

நான் தட்டச்சு செய்ததை அவரிடம் படிக்கக் கொடுத்தபோது, ‘ஆதாரப்பூர்வமாகஎன்ற வார்த்தையைக் கண்ணுற்ற மறுகணம் அவருக்குச் சினம் தலைக்கேறியது. நான் எப்படிக் கொடுத்திருக்கிறேனோ அதை அப்படியே நீ தட்டச்சு செய்ய வேண்டியதுதானே? நீ ஏன் அதைத் திருத்தினாய்? நாங்க அறிஞர்களிடம் கேட்டுத்தான் செய்யிறோம் என்று கோபக்கணைகளை எறிந்தார்.

ஆதாரப்பூர்வமாகஎனும் சொல்லில் ப்வரவே கூடாது என்பது அவருடைய வாதம். அவ்வாறுதான் அவர் விளங்கிக்கொண்டுள்ளார். ஏன் என்பதற்கான காரணம் அவருக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கூடாதுஎனக் கூறும் அறிஞர்கள் உரைக்கும் காரணம், ‘ஆதாரம்என்பது வடசொல்லாம். எனவே அது மற்றொன்றோடு புணரும்போது ப்வராதாம். இருப்பினும் நான் கேட்ட தமிழறிஞர், அங்கு ப்தேவையில்லை. எனினும் இலக்கண விதிகளின்படி ப்இட்டாலும் தவறில்லை என்றே கூறினார். ஆனால் அவரோ அறவே கூடாது என்று விளங்கிக்கொண்டு என்மீது சினம் கொள்கிறார்.
தேவையில்லைஎன்று கூறிய அதே அறிஞரிடம், ஆதாரம்+பூர்வமாக எனும் சொற்கள் புணரும் போது தமிழ் இலக்கண விதிப்படி ஆதாரம்எனும் சொல்லின் ஈற்றிலுள்ள ம்மறையத்தானே செய்கிறது? அங்கு மட்டும் ஏன் விதி மாறவில்லை? ‘ஆதாரம்பூர்வமாகஎன்று சொல்ல வேண்டியதுதானே? என்று கேட்டேன். அதற்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

ஆக, அந்த நிகழ்வு என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிருந்தால் மற்றவர்களுக்காக நான் அறிந்த தமிழை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். எனவே இங்கிருந்து விலகிவிடுவதுதான் நல்லது என்று யோசித்தபோதுதான், என்னுடைய நண்பர் ஒருவர், இன்ன நிறுவனத்தில் நீ தமிழாக்கப்பணி செய்யலாம் என்று கூறினார். அதன்பிறகுதான் இப்போது இங்கே வந்து, என் விருப்பப்படி சுதந்திரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி முடித்தபோது, சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்-அலைபேசி ஒலித்தது.

ம்... சொல்லுங்க. யார் பேசுறீங்க?

நான் காரைக்குடியிலிருந்து அதீக் பேசுறேங்க. ஐயா, இந்த நூலில், உப்பு கரிக்கிறது என்று எழுதப்பட்டிருக்கு. அது நரகத்துல உள்ள உப்பா? என்று வினவினார்.

இல்லையில்லை. உப்பு கைக்கிறது என்றுதான் வர வேண்டும். கரித்தல் என்றால் எரித்தல் என்ற பொருளை உணராத சிலர் அப்படி எழுதிவிடுகின்றார்கள். அதை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அலைபேசியை கீழே வைத்தார் ஸமத்.

தமிழுக்காகத் தம் பணியையே துறந்துவிட்டுச் சுதந்திரமாகப் பணியாற்றும் அவருக்கு வழிவிட்டு, ஹைதர் அவரிடமிருந்து விடைபெற்றார்.




இனிய திசைகள் ஏப்ரல் மாத இதழ்

வியாழன், 18 ஏப்ரல், 2013

வியாழன், 4 ஏப்ரல், 2013

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்


இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்

நான் ரஹ்மத் பதிப்பகத்தில் இருந்து, சுனன் இப்னுமாஜா-ஹதீஸ் நூலை முற்றிலுமாகத் தமிழாக்கம் செய்துவிட்டு என்னுடைய பணியை முடித்துக்கொண்டு விட்டேன். இனி நான் ரஹ்மத் பதிப்பக ஊழியன் இல்லை. நான் இனி சொந்தமாக, தமிழாக்கம், பிழை திருத்தம், தட்டச்சு போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன் என்பதைச் சுதந்திரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி நான் ரஹ்மத் பதிப்பகம், ரஹ்மத் பப்ளிஷர்ஸ், ஆயிஷா பதிப்பகம், சாஜிதா பதிப்பகம், பஷாரத் பதிப்பகம் இனிய திசைகள் (மாத இதழ்) போன்ற எந்த நிறுவனத்திற்கும் சுதந்திரமாகப் பணிசெய்ய உயர்ந்தோன் அல்லாஹ் உயரிய வாய்ப்பை நல்கியுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.