திங்கள், 22 ஜூலை, 2013

மறதி நல்லது (சிறுகதை)


அன்றொரு நாள் அன்வர் தன்னுடைய தம்பி ராஸிக்கிற்குப் பெண் பார்க்கச் சென்றிருந்தான். தம்பியும் கூடவே சென்றிருந்தான். பெண் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்றுள்ளதோடு, ஓர் இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியையாகவும் பணியாற்றி வருகிறாள். இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்கவள். பணிவும்  அன்பும் நிறைந்தவள். இஸ்லாமிய முறைப்படி நடந்த பேச்சு வார்த்தையில் இருவீட்டாருக்கும் திருப்தி ஏற்படவே மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த கல்லூரிப் பேராசிரியரிடம் தன் படிப்பைப் பற்றியும் அதற்கு உதவி செய்தவர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான் ராஸிக்.

அவனுக்கு மூன்று அண்ணன்கள். அவர்களுள் கடைசி அண்ணன்தான் அன்வர். அவனுடைய படிப்புக்கும் அன்வருடைய படிப்புக்கும் மூத்த இரண்டு அண்ணன்கள்தாம் உதவிசெய்தனர். நாளடைவில் அன்வர் படித்து முடித்து ஒரு பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். அப்போது ராஸிக், “பி.எஸ்ஸி. வரைக்கும் ரெண்டு அண்ணன்களும் நெறைய உதவி செய்துட்டாங்க. இப்ப நீங்க எம்.எஸ்ஸிக்கு உதவி செய்யுங்க” என்று உதவி கேட்டான். அன்வர் சரியென ஒத்துக்கொண்டான்.

ராஸிக் தன் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தான். மாதந்தோறும் அன்வர் முகவரிக்குத்தான் கல்லூரி பில் வரும். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கான வரைவோலை எடுத்து கல்லூரி முகவரிக்கு அனுப்பிவிடுவான். இவ்வாறு சில மாதங்கள் தொடர்ந்தது. பின்னர் அன்வர் தன் மூத்த அண்ணனுக்கே பணத்தை அனுப்பி, நீங்களே கல்லூரிக்குப் பணத்தைக் கட்டிவிடுங்கள் என்று கூறினான். அதன்படி அவரே கட்டிவந்தாலும் எம்எஸ்ஸி முடியும் வரை உதவி செய்தவன்  அன்வர்தான். ஆனால், அன்று ராஸிக் பேசிக்கொண்டிருந்தபோது, “என் இரண்டு அண்ணன்கள்தாம் என்னைப் படிக்க வைத்தனர்” என்று கூறினான்.

உண்மைதான். அவர்கள் இரண்டு பேரும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு  அன்வர் செய்யாவிட்டாலும், அவனால் முடிந்த அளவுக்கு அவன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஏன், இன்றைக்குத் திருமணம் வரைக்கும் முயற்சி செய்தது யார்? அன்வர்தானே? இதை அவன் மறுக்க முடியுமா?

அவன் எம்.எஸ்ஸி. முடித்துவிட்டுச் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு இருப்பிடம் கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தவன் அன்வர்தான். தான் பணிசெய்த இடத்திலேயே தன் தம்பி ராஸிக்கைத் தங்க வைத்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மேற்படிப்பு படிக்க விரும்பினான். தன் மூத்த அண்ணனிடம்  பண உதவி பெற்று பி.எட் படித்தான். பிறகு எம்.எட். படித்தான். பிறகும் படிக்க வேண்டும் என்று  கூறி அன்வரிடம் பண உதவி கேட்டான். அவன் ஒருவரிடம் கடன் பெற்று எட்டாயிரம் ரூபாய் கொடுத்து, மேற்படிப்புக்கு ஆர்வமூட்டினான்.

இத்தனையும் செய்து, இன்றைக்கு ஒரு நல்ல இடத்தில் பெண்பார்த்துக் கொடுத்து, தன் தம்பி நல்லா வாழ வேண்டும் என்று நினைக்கின்ற தன்னை அவன் மறந்துவிட்டானே என்றெண்ணி  அவன் மனம் குமுறியது. இருப்பினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அன்வர் இயல்பாகப் பேசிவிட்டு, குறிப்பிட்ட நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே விடைபெற்றான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அன்வருடைய சின்னம்மா மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் வேறொரு பக்கம்  பெண் பார்த்துக்கொண்டிருந்தார். இறுதியில் சென்னையில் பார்த்த பெண்ணையே முடிவுசெய்வதாகக் கூறி, நிச்சயதார்த்தம் செய்வதற்கான தேதி குறித்தாயிற்று. நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அன்வர் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்குதான் அந்நிகழ்வு நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஊருக்குப் புறப்பட்டு, பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது ராஸிக் போன் செய்தான். அண்ணே, நிச்சயதார்த்தத்தை கேன்சல் செஞ்சாச்சு. நீங்க நேரா வாங்க, முழுமையான விவரத்தை அங்கு சொல்றேன் என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

சரி, நேரடியாகச் சென்று விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று அன்வர் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். மறுநாள் அவன் தன் அண்ணன்கள், தந்தை மற்றுமுள்ள உறவினர்கள் முன்னிலையில் பேசும்போதுதான் தெரிந்தது அவனுடைய மனமாற்றம்.

அதாவது, சென்னையில் பார்த்த பெண் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவளாக இல்லை என்பதால் அவனுடைய சின்னம்மா, தான் ஏற்கெனவே சொல்லிவைத்திருந்த வேறொரு பெண்வீட்டாரிடம், ராஸிக் உடைய செல்பேசி எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லியுள்ளார். அங்கிருந்து ஒருவர் அவனிடம் பேசி எல்லா விவரங்களையும் சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்கள் காரில் வந்து அவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்குமுன் என்ன நடந்தது தெரியுமா? அவனுடைய சின்னம்மா ராஸிக்கிற்கு போன் செய்து, “இன்ன எடத்துல ஒரு  பொண்ணு இருக்கு. பிளஸ் டூ தான் படிச்சிருக்கு. அதப் பாக்காதே. நூறு பவுன் போடுவாங்க. செலவுக்கு 5 இலட்சம், கார் எல்லாம் தர்றாங்களாம். நீ என்ன சொல்றே?” என்றதும் அவன் சற்றுத் தடுமாறித்தான் போனான். அவனுடைய மனம் ஒரு குரங்கைப் போல கிளைவிட்டுக் கிளை தாவிக் கொண்டிருந்தது.  “பொண்ணு வீட்லயிருந்து போன் செய்வாங்க. நீ எதுவும் பேச வேண்டாம். ஓ.கே. மட்டும் சொல்லு” என்று சொல்லி போன் அழைப்பைத் துண்டித்தார்.

மறுநாளே, அவன் வேலை செய்யுற கல்லூரிக்கு மணப்பெண் வீட்டிலிருந்து காரில் இரண்டு பேர் வந்து அவனைப் பார்த்தாங்க. அது மட்டுமில்லாம அவனைக் காரிலேயே அழைத்துக்கொண்டு நேரடியாகப் பெண்ணிடம் பேசச் செஞ்சாங்க. அவனுக்குப் பிடித்துப்போய்விட்டது. படிப்பா, பணமா என்று மனம் தடுமாறிய வேளையில் பணத்தின் பக்கமே அவன் மனம் சாய்ந்தது.

இறுதியில் அந்தப் பணக்காரப் பெண்ணோடுதான் திருமண நிச்சயதார்த்தம் என்று அவனுடைய சின்னம்மா தலைமையில் அவனே முடிவுசெய்தான். இதனால் மனமுடைந்த அன்வர், முன்னர் நிச்சயதார்த்த தேதி குறித்த வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது என்று விழிபிதுங்கி நின்றான். அவனுடைய தம்பி ராஸிக் ஒரு வார்த்தையில் கேன்சல் என்று சொல்லி விட்டான். ஆனால் பெண்வீட்டில் சொல்லி, அதற்கான ஏற்பாடு செய்யச் சொன்னது அன்வர்தானே. ஆகவே அவன்தான் போன் செய்து  சொல்லியாகணும். அவர்கள் திட்டுவதையும் வாங்கிக்கொள்ளணும். திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு, அன்வர் போன் செய்து, தன் வருத்தத்தைத் தெரிவித்தான். பதிலுக்கு அவர்கள் அன்வரைக் கடிந்துகொண்டார்கள்.

நிச்சயதார்த்தம் முடிவுற்று, திருமணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவன் அனுப்பிய திருமணப் பத்திரிகையும் வீடு வந்து சேர்ந்தது.

ராஸிக்கின் நன்றியறியாமையையும் அவசரப்போக்கையும் துடுக்கான பேச்சுகளையும் இன்னபிற செயல்பாடுகளையும் மறந்துவிட்டுத்தான், இதோ நாளை நடக்கவுள்ள அவனுடைய திருமணத்திற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறான் அன்வர்.



====================