சனி, 11 மே, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...


மூன்றுக்கும் இஸ்லாமியச் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உளூச் செய்யும்போது நாம் ஒவ்வோர் உறுப்பையும் மூன்று மூன்று தடவை கழுவுகிறோம். கட்டாயக் குளிப்பின் கடமைகள் மூன்று (வாய் கொப்பளித்தல், மூக்கில் தண்ணீர் இட்டுச் சுத்தம் செய்தல், உடல் முழுவதும் தண்ணீரால் நனைத்தல்). தொழுகையில், ருகூஉவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அழீம் என்றும், சஜ்தாவில் குறைந்தபட்சம் மூன்று தடவை சுப்ஹான ரப்பியல் அஃலா என்றும் கூறுகிறோம். வித்ரு மூன்று ரக்அத் தொழுகின்றோம். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணின் காத்திருப்புக் காலம் (இத்தா) மூன்று (மாதங்கள்)  மாதவிடாய்க் காலம். ஏன், இஸ்லாத்தின் கடமைகள்கூட மூன்றுதான். ஆம், ஏழைகளுக்கு (ஈமான், தொழுகை, நோன்பு ஆகிய) மூன்றுதான். செல்வர்களுக்குத்தான் ஸகாத், ஹஜ் உள்பட ஐந்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களைப் புரிந்தவர்கள். அவர்களின் சூழ்நிலையைக் கருதி அறிவுரை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அறிவுரை என்ற பெயரில் வார்த்தைகளை சரமாறியாக அள்ளிக்கொட்டிக் கேட்போரைச் சலிப்படையச் செய்யாத நற்பண்பாளர். ஆகவே மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெறும் வகையிலும், அவற்றை அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தும் வகையிலும் பொருட்செறிவும் ஆழமான அர்த்தங்களும் கொண்ட மூன்று மூன்று விசயங்களை அவ்வப்போது தம் தோழர்களுக்குக் கூறிவந்தார்கள். அவற்றை நாம் தெரிந்துகொண்டு, நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மால் இயன்ற அளவுக்கு அவற்றைச் செயல்படுத்தும் உயர்ந்த எண்ணத்தோடு தொடர்ந்து படிப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகளுக்கு எவ்விதச் சந்தேகமுமின்றி பதிலளிக்கப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை, 2. பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. (நூல்: இப்னுமாஜா-3852)  

பலம் வாய்ந்தவர் பலவீனமானவரை அடக்குவதும் ஒடுக்குவதும் அநியாயம் செய்வதும் உலக நியதியாக உள்ளது. அந்த வகையில் ஒருவனால் அநியாயம் செய்யப்பட்டவன் தன் சோகத்தையும் துன்பத்தையும் யாரிடம் சொல்லி அழுவான்? யார்தாம் அவனுக்கு ஆறுதல் கூற முடியும்? யார் அவனுக்கு உதவி செய்வார்? வறியவனை வாட்டினால் வழக்குத் தொடுப்பவர் யார்? என்ற துணிவுதானே ஒருவனை அநியாயம் செய்யத் தூண்டுகிறது. எனவேதான் அதற்கு விடையாகப் படைத்த இறைவனே அநியாயம் செய்யப்பட்டோர் பக்கம் இருக்கும்போது அநியாயம் செய்ய யாருக்குத் துணிவு வரும்? அதையும் மீறி ஒருவன் அநியாயம் செய்யத் துணிகின்றான் என்றால், அவன் அல்லாஹ்வை அஞ்சாதவனாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பயணி தன் ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு, தன் நாட்டைவிட்டு மற்றொரு நாட்டுக்கு, வியாபாரத்திற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ வேறு தேவைகளுக்காகவோ பயணம் மேற்கொள்கிறான். அவனுக்கு அப்பயணத்தில் உதவி செய்ய யாருமில்லை. எனவே அவன் நிர்க்கதியாக நிற்கிறான். அந்தத் தனிமையில் அவனுக்குத் துணைவனாக தனித்தோன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய பிரார்த்தனையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறான்.

ஒரு தந்தை தன் மகனுக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முனைகிறான்; அவனுக்காக உழைக்கிறான்; கல்வியையும் நல்லொழுக்கத்தையும் புகட்டுகின்றான்; இறுதியில் தனக்கு மேலாக அவன் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகின்றான். அத்தகைய தருணத்தில் தன்னால், ஓர் எல்லைக்கு மேல் முடியாது என்கிறபோது, அவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து தனக்கு வழங்காததையும் தன் மகனுக்கு வழங்கு என்று பிரார்த்தனை செய்கிறான். அந்த நேரத்தில் அல்லாஹ், தன் அடியான் தன் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்று அவனுக்கு ஆதரவளிக்கின்றான்.

ஆக, மேற்கண்ட மூன்று பேருடைய பிரார்த்தனையை அல்லாஹ் உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தக்க காரணம்  தெளிவாகவே தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருடைய தொழுகை அவர்களுடைய தலைக்கு மேலாக ஒரு சாண் (அளவு)கூட உயராது. 1. ஒருவர்-அவரை மக்கள் வெறுக்கின்ற நிலையில் அவர்களுக்கு (இமாமாக)த் தொழுகை நடத்துபவர், 2. தன் கணவன் தன்மீது கோபமாக உள்ள நிலையில் இரவைக் கழித்த பெண், 3. வாள்களை உருவியபடி சண்டையிட்ட இரண்டு சகோதரர்கள். (நூல்: இப்னுமாஜா-961)

மக்கள் தம்மை வெறுப்பதை உணர்ந்த ஒருவர் அவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கலாகாது. தொழுகை அல்லாஹ்வுக்குச் செய்கின்ற வழிபாடு. மக்கள் அதை அதிருப்தியோடும் மனச் சங்கடத்தோடும் செய்யாமல் அல்லாஹ்வை மனதில் ஏற்று, நிம்மதியாகத் தொழ வேண்டும். அதற்கு அவர்கள் விரும்பும் தலைமை இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் வெறுக்கும் ஒருவர் அவர்களுக்குத் தலைமையேற்றுத் தொழுகை நடத்தினால் அதில் அவர்களுக்கு ஈடுபாடோ மனஓர்மையோ ஏற்படாது.  எனவே மக்கள் விரும்பும் வகையில் ஓர் இமாம் நடந்துகொள்வது  மிக முக்கியமாகும். அவர்கள் விரும்பும் வகையில், அதேநேரத்தில் மிகவும் சுருக்கிவிடாமலும், மிகவும் நீட்டிவிடாமலும் நடுநிலையோடு தொழுகை நடத்த வேண்டும். மக்கள் வெறுக்கும் வகையில் ஓர் இமாம் நடந்துகொண்டு, தொழுகை நடத்தினால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை எச்சரிக்கும் வகையில்தான் நபிகளார் கூற்று அமைந்துள்ளது. அதேவேளையில், ஓர் இமாம் ஷரீஅத்தில் உள்ளதை உள்ளபடி கூறியமைக்காக அவர்மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்றால் அது நபிகளார் விடுத்த எச்சரிக்கைக்குள் அடங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஓர் ஆடவன் பகல் முழுக்க உழைத்துக் களைத்துப்போய் இரவில் அமைதியாக ஒதுங்கலாம் என்ற எண்ணத்தில் இல்லத்தையும் இல்லாளையும் நோக்கி வருகின்றான். அவனை அன்புடன் வரவேற்று, புன்னகை புரிந்து, உபசரித்து, அவனுக்குப் பணிவிடைகள் செய்து மனங்குளிரச் செய்வது ஒரு மனைவியின் கடமை. அத்துடன் அவனோடு மகிழ்ச்சியுடன் உரையாடுவதும், குடும்ப விசயங்களைப் பகிர்ந்து கொள்வதும், அவனது உடற்தேவைகளை நிறைவேற்றுவதும் மனைவியின் கடமை. அவற்றை விடுத்து, தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் உழைக்கின்றவனை உதாசீனப்படுத்துவதோ, சினத்துடன் நடந்துகொள்வதோ, கடுகடுவெனப் பேசுவதோ, சண்டைபோட்டுக் கொண்டு தள்ளிப் படுத்துக்கொள்வதோ ஒரு மனைவிக்கு அழகில்லை. அத்தகைய பெண்ணை அல்லாஹ் விரும்புவதில்லை. அவள் தன்னைத் தொழுதாலும் அவன் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு குடும்பத்தைப் போன்று ஒழுங்கமைத்து வைத்துள்ளான் இறைவன். அப்படியிருக்கும்போது அதைச் சிதைக்கும் வண்ணம் ஒருவன் மற்றொருவனைக் கொல்லும் வகையில் வாளெடுத்துச் சண்டையிடுவதும் உயிரை மாய்க்க நினைப்பதும் பெருங்குற்றமாகும். அத்தகையோர் தொழுதாலும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆக, மும்மூன்று விசயங்களானாலும் அவற்றுள் ஆழமான பொருட்செறிவும், கருத்துகளும், அர்த்தங்களும் உள்ளன என்பதை நாம் உணர்ந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்று-விலகி நடப்பதற்குத் தூயோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
                                                                                                                                                                                (தொடரும்)