சனி, 18 ஆகஸ்ட், 2012

வலியை உணர்ந்தேன்! (சிறுகதை)




நான் ஒரு நிறுவனத்திலிருந்து இப்போதுதான் மற்றொரு நிறுவனத்திற்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். முந்தைய நிறுவனத்தைவிடப் பன்மடங்கு சிறந்தது. அளவான பணி. நிறைவான ஊதியம். மனதுக்குத் திருப்தி. தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தபோது அன்றொரு நாள் என் ஆசிரியரைச் செல்பேசியில் அழைத்தேன். அவர், ஹலோ...ஹலோ... என்பதுபோல் பேசிவிட்டு, நன்றாகக் கேட்கவில்லை என்று கூறி, பேச மறுத்துவிட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

அவருடன் பணியாற்றுகின்ற ஒருவரிடம் விவரம் கேட்டேன். அதற்கவர், உங்களைப் பணியில் சேர்த்துவிட்ட அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்ததுதான் அவரின் வருத்தம். நீங்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று கூறினார்.

அப்படியானால், குறைவான ஊதியம் கொடுத்தாலும் ஒரே நிறுவனத்தில்தான் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமா? நம் திறமைக்குரிய பணியையும் ஊதியத்தையும் வழங்குகின்ற நிறுவனம் நாடிச் செல்லவே கூடாதா?

அப்படியல்ல. எல்லா ஏற்பாடுகளும், ஊதிய உயர்வும் செய்து கொடுக்கும்படிதானே அந்நிறுவனத்தாரிடம் சொல்லியிருந்தார். அதற்குள் நீங்கள் தம் விருப்பப்படி சுயமுடிவு எடுத்ததுதான் அவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

அந்த நிறுவனத்தில் ஏற்கெனவே நான் கேட்ட ஊதியத்தை அவர்கள் கொடுக்கவில்லை. ஆசிரியரை வைத்துக்கொண்டுதான் ஊதியம் பற்றிப் பேசினேன். அதில் சிறிதளவுதானே உயர்த்தினார்கள்? நான் கேட்டதை முழுமையாகத் தரவில்லையே? பிறகு எப்படி அவர்கள் இன்னும் உயர்த்தித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

அப்பணிக்குத் தங்களை நியமித்ததே அவர்தாமே? பிறகேன் அவரிடம் சொல்லாமல் சென்றீர்? என்று அவர் கேட்டார்.

அது உண்மைதான். என் ஆசிரியர்தாம் என்னை அப்பணிக்கு நியமித்தார். நான் மறுக்கவில்லை. ஆனால் சொல்லாமல் சென்றுவிட்டேன் என்பது முற்றிலும் தவறு. அந்நிறுவனத்தார் பேச்சு வார்த்தைக்கு அமரும் முன்னரே, நான் என்னுடைய நிலைப்பாட்டை ஆசிரியரிடம் கூறிவிட்டேன்.  பின்னரும் என் நிலையை விளங்கிக்கொள்ளவில்லையானால் நான் என்ன செய்வேன்?

அப்படிப் பார்த்தால் அவரும்தான் அவ்வாறு செய்துள்ளார். இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஒரு தலைசிறந்த கல்லூரியில் பணியாற்றினார். தம் திறமைக்கும் பணிக்கும் உரிய ஊதியத்தையும் உயர்வையும் வழங்காததால் அதைவிட்டு வெளியேறினார். அதைவிடச் சிறந்த ஊதியத்தில் இப்போது எழுத்துப் பணியாற்றுகிறார். இதில் தவறேதும் இல்லையே. இதுதானே இயல்பு. ஒவ்வொருவரும் தம்முடைய உயர்வைத்தான் பார்க்க வேண்டுமே தவிர ஒரே இடத்தைப் பிடித்துக்கொண்டு சிரமப்பட்டேனும் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே என்று உறுதிபடக் கூறினேன்.

அது மட்டுமில்லை. ஊதியம் குறைவு என்பதற்காக மட்டும் நான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளிவரவில்லை. அங்குள்ளவருக்கு என்மீது நம்பிக்கையே இல்லை. அங்கிருந்த முதலாளி அவருடைய கணிப்பொறியில் ஒரு சிறப்பு மென்பொருளைப் பதிவுசெய்துகொண்டு என் கணிப்பொறியோடு இணைத்துவிட்டு, நான் பணி செய்கிறேனா, இல்லையா என்று உளவு பார்க்கும் வேலையைத்தானே செய்துகொண்டிருந்தார். என்மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிறுவனத்தில் என்னால் எப்படிப் பணியாற்ற முடியும்? நான் அங்கு செய்தது மூன்று பேருடைய வேலை. இன்றைக்கு அந்த மூன்று பேருக்கும்  தனித்தனியே கொடுக்கும் சம்பளம் நான் கேட்டதைவிட அதிகம். நான் வெளியே வந்து ஓராண்டாகியும் ஒரு புதிய நூலையும் அவர்கள் வெளியிடவில்லை. நான் முடித்துக் கொடுத்ததைக்கூட அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அப்படியிருக்கும்போது, புதிதாக ஒரு நூல் வெளியிட இரண்டு, மூன்று ஆண்டுகள்கூட ஆகலாம். என்னுடைய பணிச்சுமையையும் அதை நான் எவ்வாறு செயலாற்றினேன் என்பதையும் இப்போது அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.

சரி, உங்களுடைய ஆதங்கத்தையும் வலியையும் நான் அவரிடம் எடுத்துச் சொல்கிறேன் என்று அவர் புறப்பட்டுவிட்டார்.

என்னுடைய ஆசிரியர் என்மீது கோபப்பட்டு என்னிடம் பேசாமலிருந்தபோது நான் உணர்ந்த வலிதான் எனக்கு அதை ஞாபகப்படுத்தியது. அதாவது என்னுடைய மாணவி ஒருவர், அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அவர் ஒரு தடவை என்னிடம் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டார் என்பதற்காக நான் அவரிடம் ஓராண்டுக்காலம் பேசாமல் இருந்துவிட்டேன். இப்போதுதான் அவருடைய அந்த வலியை உணர்ந்தேன். உடனே அவரைச் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசலானேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருக்கு மட்டுமில்லை. எனக்கும்தான் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக் கூறுவோம்!




ஒருவருக்கொருவர் முரண்பட்ட குணங்களையும் எண்ணங்களையும் கொண்ட மனிதர்கள் மத்தியில்தான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவரின் குணத்தையும் எண்ணத்தையும் புரிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்வது அறிவுடைமையாகும். மாறாக, நமக்குத் தோதுவாக அவர் நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமையாகாது. ஒவ்வொருவரும் தத்தம் கருத்துகளையே முன்னிறுத்த விரும்புகின்றார். அவற்றையே மக்கள் மனதில் பதிய வைக்க முனைகின்றார். அதில் தவறில்லை. அதே நேரத்தில் பிறரின் கருத்து தம்முடைய கருத்துக்குத் தோதுவாகவோ தம்முடைய கருத்தைப் பாதிக்காத வகையிலோ இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

ஒருவரைப் பற்றிய ஏதோ ஒருவிதப் பகைமைப் பண்பு நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவதால், அவர் என்னதான் நல்ல கருத்துகளையே கூறினாலும் அவற்றை ஏற்க நம் மனம் மறுக்கிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் எந்த நல்ல கருத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஒரு சிக்கலான பொழுதில்கூட நாம் எந்தத் தீர்வுக்கும் வரமுடியாமல் தவிக்க நேரிடும்.  எனவே இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயல்வோம். ஒருவர் கூறுகின்றவற்றுள் நன்மையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுவதே ஓர் இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.

இவ்வளவையும் கூறிவிட்டு ஒரு முக்கியமான கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவே முனைகிறேன். இறைநம்பிக்கை கொண்ட யாவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர் என்பதை  நாம் அறிவோம். நாம் அனைவரும் மனதால் ஏற்று, நாவால் மொழிந்துள்ள, இருபத்து நான்கு எழுத்துகளைக் கொண்ட லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்-எனும் திருவாசகமே நம்மை ஒரு குடையின்கீழ் இணைக்கிறது. அதன் காரணமாகவே நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொள்கிறோம். அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம். ஒரே பள்ளிவாசலில் ஒன்றாக இணைந்து ஒரே குழுவாகத் தொழுகின்றோம்.

ஆனால் நமக்கு மத்தியில் பல்வேறு இயக்கங்கள் உருவாகிவிட்டதால், ஓர் இயக்கத்தில் உள்ளவன் மற்றோர் இயக்கத்தில் உள்ளவனை எதிரியாகப் பார்க்கும் அவலநிலை தற்காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ளது. அந்த இயக்கத்திலுள்ளவனும் இந்த இயக்கத்திலுள்ளவனும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள். ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள். அப்படியிருக்கும்போது இந்தத் தற்காலிகப் பகைமை ஏன்? இது ஓர் ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பொதுச் சேவை இயக்கங்கள், இன்னபிற இயக்கங்களில் உள்ள அனைவரும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள்தாம். அனைவரும் ஒரே நபியைப் பின்பற்றுபவர்கள்தாம். அனைவரும் ஒரே வேதத்தை உடையவர்கள்தாம். அப்படியிருக்கும்போது பல்வேறு பிரிவுகளும், அதனால் பிணக்குகளும் ஏன்? ஒருவர் மற்றவரை வசைமாறி பொழிவதும் திட்டிக்கொள்வதும் ஏன்? உயிரையே துறக்கும் அளவுக்கு மோதல்கள் ஏன்? இவையெல்லாம் களையப்பட வேண்டியவை. எனவே நாம் அனைவரும் ஒரே குடையின்கீழ் உள்ள ஒரே குடும்பத்துச் சகோதரர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இயக்கங்கள் நம்மைப் பிளவுபடுத்திவிட வேண்டாம்.

நாம், இந்த ஈகைப் பெருநாளில் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சகோதரர்களுக்கும் முகமன் கூறுவதோடு, பெருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வோம். ஒருவருக்கொருவர் சகோதரர் என்ற உண்மையை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு இச்சமுதாய மக்களுக்காகப் போராடுவோம். அவர்கள் அனைவரும் முன்னேறப் பாடுபடுவோம். அல்லாஹ் நம் முயற்சிக்குரிய நற்கூலியைத் தருவான் என்ற நம்பிக்கை கொள்வோம்!



இனிய திசைகள் ஆகஸ்ட் இதழ் (2012)

இனிய திசைகள் ஆகஸ்ட் இதழைப் படிக்க:

வெள்ளி, 20 ஜூலை, 2012

டாக்டர் சே மு முகமதலி அவர்களுக்கு நன்றி

இனிய திசைகள் இதழை என்னுடைய வலைப்பூவில் வெளியிட அனுமதி கொடுத்து, என்னுடைய வலைப்பூ முகவரியை இம்மாத இதழில் வெளியிட்ட டாக்டர் சே மு முகமதலி அவர்களுக்கு நன்றி. 



ஆன்மாவும் உண்ணா நோன்பும்



ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்வாழும் ஆன்மா எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கடிகார முள்ளைப்போல் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் பணி செய்து கொண்டிருந்தாலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் நம் ஆன்மா உறங்குவதேயில்லை. இதனால்தான் நாம் உறங்கினாலும் தொடர்ந்து மூச்சு விடுவதும், கனவுகள் காண்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. 

பொதுவாக, ஆன்மா இறப்பதில்லை என்று அனைவரும் கூறுவர். இன்றைய விஞ்ஞானிகளும் அதைத்தான் சொல்கின்றனர். ஒரு மனிதன் நல்வினையையும் தீவினையையும் செய்யக் காரணமாக அமைவது இந்த ஆன்மாதான். அதை எப்படி நாம் பழக்குகின்றோமோ அப்படியே அது மாறிவிடுகின்றது. நல்வினைகள் பக்கம் அதைத் திருப்பினால் நற்கருமங்கள் புரியத் தூண்டும். தீவினைகளின் பக்கம் திருப்பிவிட்டால் தீச்செயல்கள் புரியத் தூண்டும். ஆக, இரண்டினுள் இரண்டாவதற்கு எந்தவிதப் பயிற்சியும் தேவையில்லை. ஏனெனில் மனிதன் தவறு செய்யக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே முதலாவதற்குத்தான் பயிற்சி தேவை.

அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்த மேற்கொள்கின்ற பற்பல பயிற்சிகளுள் முதலிடம் வகிப்பது உணவுக்கட்டுப்பாடுதான். ஒருவன் தன் உணவு முறையில் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடிப்பிடித்தால் அவன் தன் ஆன்மாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மாறாக உணவு உட்கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வரம்பு மீறி உணவுகளை உண்ணத் தொடங்குபவன் தன் உள்ளுணர்வுகளால் உந்தப்படுகின்றான்.

அதன் விளைவாக அவனது ஆன்மா தூண்டக்கூடிய எல்லாத் தீவினைகளையும் தன் சுய விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுகின்றான். இறுதியில் அவனுடைய ஆன்மா தன் அகஒளியை இழந்து அழுக்குகளால் நிரம்பிவிடுகின்றது.

ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முன்போது உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி

-எனும் தமிழ்ப்பாடல் மிகமிகக் குறைவாக உண்பவனை யோகி-துறவி என்றும் எப்போதும் உண்பவனை துரோகி என்றும் குறிப்பிடக் காரணம், அந்த உணவுதான் ஒருவனை நல்வழிப்படுத்தவும் தீச்செயல்களைச் செய்யுமாறு தூண்டவும் துணைபுரிகிறது என்பதேயாம். ஏனெனில் அதிகமாக உண்ணும்போது மனிதனின் சிந்தனைத்திறன் மங்கி, அவனது ஆன்மா தன் அகஒளியை இழந்துவிடுகின்றது. சோம்பேறித்தனமும் மந்தநிலையும் ஆட்கொண்டு விடுகின்றன.

உணவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்துமுகமாக இறைவன் தன் திருமறையில், “உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்” (7: 31) என்று கூறுகின்றான். அளவோடு, சுத்தமானதை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும். மேலும், “மனிதன் நிரப்புகின்ற பைகளுள் மிகக் கெட்ட பை அவனது இரைப்பைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே உணவுதான் மனிதனின் முதல் எதிரி என்றால் மிகையில்லை.

நோன்பைப் பற்றிக் கூறுகின்ற இறைவசனத்தின் தொடக்கத்தில், இறைநம்பிக்கை கொண்டோரே! என்று தொடங்குகின்ற அல்லாஹ் அதன் முடிவில், நீங்கள் இறையச்சம் உடையோராகலாம் என்று முடிக்கின்றான். ஒருவன் நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றுக்கொண்டே தகாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டால், அவனுடைய நோன்பு அவனுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள். அதாவது நோன்பின் மூலம் ஏற்படவேண்டிய இறையச்சம் அவனுக்கு ஏற்படவில்லை என்று பொருளாகும்.

முஸ்லிம்களாகிய நாம் மேற்கொள்கின்ற உண்ணா நோன்புக் காலங்களில் அதிகாலையில் சிறிதளவு உணவுண்டபின் அந்தி மாலை வரை அல்லாஹ் ஒருவனுக்காகப் பசித்திருந்து, தாகித்திருந்து, நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி ஆன்மிகப் பயிற்சிபெறுகின்றோம். மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பைத் துறந்து களைப்பை நீக்கிக்கொள்கிறோம். இவ்வாறே நாம் முப்பது நாள்கள் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஆன்மிகப் பயிற்சியால் நம் ஆன்மா அகஒளி பெற்றுவிடுகின்றது. பின்பு அஃது இறைவனை அஞ்சத் தொடங்கிவிடுகின்றது. தீச்செயல்களைச் செய்யத் தயங்குகிறது. இதுதான் ஆன்மிகப் பயிற்சியின் பலன்.

குறிப்பிட்ட காலத்தில் நாம் மேற்கொள்கின்ற இப்பயிற்சியால் நாம் செய்யும் நல்லறங்கள் அதிகம். மற்ற மாதங்களில் செய்யாத நல்லறங்களை இம்மாதத்தில் செய்கிறோம். காரணம், உண்டி சுருங்கினால் உள்ளம் பக்குவப்படும் என்பதேயாம். இதன் பிரதிபலிப்பை மற்ற மாதங்களில் நாம் பெற வேண்டுமெனில் நம் உணவில் ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உணவுத் தேவை குறைந்துவிட்டால் மற்றெல்லா நற்பண்புகளும் தாமாக நம்மை வந்து சேரும்.

ஆக, நாம் மேற்கொள்கின்ற இந்த உண்ணா நோன்பு கடமைக்காக மட்டும் இல்லாமல் நம் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதாகவும் அதன் போக்கை மாற்றக்கூடியதாகவும் நாம் எண்ணியதை அடையக்கூடியதாகவும் மாற்ற வேண்டும். அத்தகைய முறையில் நம்முடைய நோன்பை ஆக்கிக்கொள்வோம். நம் நோன்பின் மூலம் இறைவனிடம் நன்மைகளை அடைவதோடு, நம் ஆன்மாவுக்கு அகஒளியை ஏற்படுத்திக்கொள்ள முனைவோம்!










இனிய திசைகள் ஜூலை 2012



இனிய திசைகள் ஜூலை மாத இதழ்

புதன், 27 ஜூன், 2012

இனிய திசைகள் ஜூன் 2012

இல்லறம் இனிக்க...



ஆண்-பெண் பருவ வயதை அடைந்தவுடன் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு துணையைத் தேடுவது இயல்பு. இது மனித இனத்துக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது நியதி. அதற்கு இஸ்லாம் அங்கீகாரம் கொடுப்பதோடு வரவேற்கவும் செய்கிறது. அதற்கு மாறாக, உரிய பருவத்தில் திருமணம் செய்யாமல் காலம் கடத்துதல், பிரம்மச்சாரியாக இருத்தல், தனிமையை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு குடும்ப வாழ்க்கை மூலமே குலம் விருத்தியடைகிறது. அக்குலம் விருத்தியடைந்தால்தான் மனித சமுதாயம் தழைக்கும். ஆகவே இஸ்லாம் இல்லற வாழ்வை வரவேற்கிறது. கட்டாயப்படுத்துகிறது. மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தூதராய் வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உட்பட அவர்களுக்குமுன் வந்த ஏனைய இறைத்தூதர்கள் அனைவரும் மணவாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். அது பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில், உமக்கு முன்னால் நாம் இறைத்தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களுக்கு மனைவியரையும் சந்ததிகளையும் ஆக்கியிருக்கிறோம் (13: 38) என்று கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணம் எனது வழிமுறை. யார் என் வழிமுறையைச் செயல்படுத்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை. திருமணம் செய்துகொள்ளுங்கள். திண்ணமாக நான் உங்கள் மூலம் சமுதாயத்தை அதிகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்வேன். யாருக்குச் செல்வம் இருக்கிறதோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். யாரிடம் அது இல்லையோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். திண்ணமாக நோன்பு அவருடைய இச்சையைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா)

மேலும் திருமணத்தை வலியுறுத்திக் கூறுகின்ற பற்பல நபிமொழிகள் நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: இளைஞர்களே! உங்களுள் யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். (நூல்: இப்னுமாஜா)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் பிரம்மச்சாரியாக இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள். நபியவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்திருந்தால் நாங்களும் (திருமணம் செய்யாமல் இருப்பதற்காகக்) காயடித்துக்கொண்டிருப்போம். (நூல்: இப்னுமாஜா)

திருமணம் செய்யாமலிருக்க அனுமதி கேட்டும் நபியவர்கள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். இன்றைய கணினி யுகத்தில் வாழுகின்ற இளைஞர்களும் இளைஞிகளும் கணினியைப் போன்ற வேகத்தில் பரபரப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் முற்காலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகின்ற வாழ்க்கைக் கட்டமைப்பு சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.

திருமணம் செய்யாமலேயே ஆண்-பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதும், அவர்களுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படாவிட்டால் இருவரும் பிரிந்து விடுவதும், பின்னர் அவன் வேறொரு பெண்ணையும், அவள் மற்றோர் ஆணைத் தேடுவதும் பெருகி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பாரம்பரியத் திருமண வாழ்க்கை முறை எனும் கட்டமைப்புச் சிதைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

அது மட்டுமின்றி, கணினி யுகத்தில் அவசரப்படுகின்ற யுவதிகள் தனக்குப் பிடித்த யாரேனும் ஓர் ஆண் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். இவன்தான் என் காதலன் என்று அவனைத் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்துகிறாள். அவர்கள் எதிர்த்தால், தன் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் அவனை மணந்துகொள்கிறாள். இதனால் ஒரு பெண் தன் பெற்றோரை மதிக்காத நிலை உருவாகின்றது. மட்டுமின்றி, அவளுடைய திருமணமும் செல்லாது. இதுவே இஸ்லாம் கூறும் முறையாகும்.

எப்பெண்ணுக்கு அவளுடைய வலீ-பொறுப்பாளி திருமணம் செய்துவைக்கவில்லையோ, அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, இப்னுமாஜா)

கணவனின் கடமை

ஓர் ஆண்மகன் தன்னை நம்பி வருகின்ற பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுப்பதோடு, அவளுக்கு என்னென்ன அவசியத் தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றிக்கொடுப்பது அவனுடைய கடமையாகும். உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், கணவர்மீது அவனுடைய மனைவிக்கு உள்ள உரிமைகள் என்ன? என்று வினவினார். அவன் உணவுண்டால், அவளுக்கு உணவளிப்பதும், அவன் ஆடையணிந்தால் அவளுக்கு ஆடை அணிவிப்பதும் ஆகும். (அவளுடைய) முகத்தில் அடிக்கக் கூடாது. திட்டக்கூடாது. வீட்டில் தவிர அவளைக் கண்டிக்கக் கூடாது என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா)

மனைவியின் கடமை

களைத்துப்போய், இல்லாளை நோக்கி இல்லம் திரும்பிவருகின்ற கணவனை தன் அன்பாலும் புன்னகையாலும் அரவணைப்பதும் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதும் ஒரு மனைவியின் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது வைத்துள்ள இறைநம்பிக்கைக்குப் பிறகு, ஒரு முஃமினுக்கு அவருடைய நல்ல மனைவியைத் தவிர வேறெதுவும் மிகச் சிறந்த பயன்கொடுப்பதில்லை. அவர் அவளை ஏவினால் அவள் (அவருக்குப்) பணிவாள். அவர் அவளைப் பார்த்தால் அவரை அவள் மகிழ்விப்பாள். அவர் அவளிடம் சத்தியம் செய்தால் அவருக்கு அதை நிறைவேற்றிக்கொடுப்பாள். அவர் அவளைவிட்டுச் சென்றுவிட்டால், அவள் தன் கற்பிலும், கணவருடைய பொருளிலும் அவருக்கு நன்மையே செய்வாள். (நூல்: இப்னுமாஜா)

மேலும், ஒரு பெண் தன் எந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள் என்பதற்கு ஓர் உதாரணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் மற்றொருவருக்குச் சிரவணக்கம் செய்யலாம் என்றிருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிர வணக்கம் செய்ய நான் அவளை ஏவியிருப்பேன். ஒருவன் தன் மனைவியிடம், செம்மலையிலிருந்து கருமலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும், கருமலையிலிருந்து செம்மலைக்கு இடம்பெயர்ந்து செல்ல ஏவினாலும் அதை அவள் செய்வது அவள்மீது கடமைதான். (நூல்: இப்னுமாஜா)

கணவன் தன் மனைவியைப் பார்க்கும்போது அவனை மகிழ்விக்கும் விதத்தில் சாந்தமான முகத்தோடும், புன்னகை கொஞ்சும் எழிலோடும் காட்சி தருகின்றபோது அவனுடைய உள்ளமெலாம் இளகும். இதுவரை அவன் நெஞ்சில் இருந்த கவலைகளெல்லாம் பஞ்சாகிக் காற்றில் பறந்துவிடும். அத்தகைய பெண்ணே கணவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவள். அத்தகைய மனைவியைப் பெற்ற இறைநம்பிக்கையாளர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்றால் அது மிகையன்று.

ஆக, இனிமையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமெனில் கணவன் தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும், மனைவி தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதும் முற்றிலும் அவசியமாகும்.






இனிய திசைகள் ஜூலை (2012) மாத இதழில் வெளிவந்த பாராட்டுக் கடிதம்.


செவ்வாய், 8 மே, 2012

இனிய திசைகள் மே -2012

படியுங்கள் இனிய திசைகள் 
மே மாதம்இனிய திசைகள் 2012

தாயகம் திரும்புங்க!


-பாகவியார்

அன்வர் வெளிநாடு சென்று ஏறக்குறைய பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஈராண்டுகளுக்கு ஒரு தடவை நாற்பது நாள் விடுமுறையில் தாயகம் வருவது வழக்கம். இதன்படி அவன் தன் மனைவியோடு வாழ்ந்த காலம் 200 நாள்கள் மட்டுமே. திருமணம் முடித்த பத்தே நாள்களில் வெளிநாடு சென்றவன் இன்றைக்கு அவன்தன் இளமையில் பாதியை சவூதியிலேயே கழித்துவிட்டான் என்பதைவிடத் தொலைத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்த அவன் படித்துக்கொண்டிருந்தபோதே சவூதி செல்ல வேண்டும் என்ற ஆசை எப்படியோ தொற்றிக்கொண்டதால் அதற்குமேல் படிப்பில் அவனுக்கு ஆர்வம் இல்லை.

அதன்பிறகு பாஸ்போர்ட் எடுப்பதிலும் உறவினர்களிடம் விசாவை அனுப்பச் சொல்வதிலுமே சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு வழியாக தன் அக்காவின் கணவர் மூலம் ஒரு விசா வந்தடைந்ததும் அவனுக்கோ அளவிலா மகிழ்ச்சி. முதல் தடவை சென்று ஈராண்டுகள் கழித்துத் தாயகம் வந்ததும் அவனுடைய மதிப்பே உயர்ந்துவிட்டது.

அவன் சவூதி செல்வதற்குமுன் ஊர்சுத்தி அன்வர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டவன் இன்று சவூதி மாப்பிள்ளை என்று மற்றவர்களெல்லாம் அழைத்ததும் அவனுக்கு இதயமே குளிர்ந்துவிட்டது. உறவுக்காரப் பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்து தன் மனைவியோடு மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருந்தபோதே விடுமுறை நாள்கள் முடிவுக்கு வந்தன. புதுமனைவியோடு முழுமையாக வாழ முடியாமல் ஏக்கத்தோடே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.

அன்று தொடங்கிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு தடவையும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவதும் மீண்டும் சவூதி செல்வதும் அவன் வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருந்தன. வெண்பாலைவன வெயிலில் நாள்தோறும் படும் சிரமமும் தொல்லைகளும் அவனை நிம்மதியிழக்கச் செய்தன.

அன்றொரு நாள், வேலை பார்த்துக் களைத்துப் போயிருந்த அன்வருக்குக் கண்கள் சொக்கின. படுக்கத் தயாரானபோது அவனுடைய அன்பு மனைவி மொபைலில் அழைத்தாள். அன்போடு எடுத்துப் பேசியதும் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவளுக்கும்தான்.

அவள் பேச்சைத் தொடர்ந்தாள். என்னங்க, நான் இன்னைக்கி வெள்ளிக்கிழமை பயான் கேட்க பள்ளிவாசலுக்குப் போயிருந்தேன். ஹஜ்ரத் உடைய பயானைக் கேட்டதும் எனக்கே இனம்புரியாத ஒரு மாற்றம் வந்துருச்சுங்க. ஏழையாகவோ, நடுத்தரமாகவோ, பணக்காரியாகவோ எப்டி வாழ்ந்தாலும் ஒரே வாழ்க்கைதானேங்க. ஒரு சாண் வயித்துக்கு எதைச் சாப்பிட்டா என்னங்க. நம்மைவிட ஏழையாக இருந்தும் எத்தனையோ பேர் சந்தோஷமாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் வெளிநாட்டுல சிரமப்படணும்?

சாப்புடுவது இருபது ரூபா அரிசியா இருந்தாலும் நாம் இருவரும் ஒன்னா இருந்து சாப்பிட்டாத்தான் சந்தோஷமா இருக்கும். நமக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க இருந்தாலும் இப்ப அதப் பத்தி கவலையே இல்லீங்க. ஏன்னா, நம்ம ஊர்ல யாரும் வரதட்சணை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. போன வாரம்கூட எங்க அக்கா மகளுக்குக் கல்யாணம் நடந்துச்சு. மாப்பிள்ளை நல்லா படிச்சவரு. வரதட்சணை எதுவுமே வாங்கலை. எங்க அக்காவா பாத்து தன்னால முடிஞ்சதப் போட்டாங்க. அவ்வளவுதான். இனி பொம்பளைப் புள்ளையப் பெத்தாக்க நம்ம ஊர்ல எந்தக் கவலையும் இல்லீங்க.  அதனால நீங்க இவ்வளவு காலம் சிரமப்பட்டது போதுமுங்க. கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க. இங்கேயே ஏதாவது நீங்க வேலையப் பாத்துக்குட்டு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி முடித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்க அன்வரின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. தாயகம் திரும்பப்போற மகிழ்ச்சியில் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். ---