செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக் கூறுவோம்!




ஒருவருக்கொருவர் முரண்பட்ட குணங்களையும் எண்ணங்களையும் கொண்ட மனிதர்கள் மத்தியில்தான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவரின் குணத்தையும் எண்ணத்தையும் புரிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்வது அறிவுடைமையாகும். மாறாக, நமக்குத் தோதுவாக அவர் நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமையாகாது. ஒவ்வொருவரும் தத்தம் கருத்துகளையே முன்னிறுத்த விரும்புகின்றார். அவற்றையே மக்கள் மனதில் பதிய வைக்க முனைகின்றார். அதில் தவறில்லை. அதே நேரத்தில் பிறரின் கருத்து தம்முடைய கருத்துக்குத் தோதுவாகவோ தம்முடைய கருத்தைப் பாதிக்காத வகையிலோ இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

ஒருவரைப் பற்றிய ஏதோ ஒருவிதப் பகைமைப் பண்பு நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவதால், அவர் என்னதான் நல்ல கருத்துகளையே கூறினாலும் அவற்றை ஏற்க நம் மனம் மறுக்கிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் எந்த நல்ல கருத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஒரு சிக்கலான பொழுதில்கூட நாம் எந்தத் தீர்வுக்கும் வரமுடியாமல் தவிக்க நேரிடும்.  எனவே இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயல்வோம். ஒருவர் கூறுகின்றவற்றுள் நன்மையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுவதே ஓர் இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.

இவ்வளவையும் கூறிவிட்டு ஒரு முக்கியமான கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவே முனைகிறேன். இறைநம்பிக்கை கொண்ட யாவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர் என்பதை  நாம் அறிவோம். நாம் அனைவரும் மனதால் ஏற்று, நாவால் மொழிந்துள்ள, இருபத்து நான்கு எழுத்துகளைக் கொண்ட லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்-எனும் திருவாசகமே நம்மை ஒரு குடையின்கீழ் இணைக்கிறது. அதன் காரணமாகவே நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொள்கிறோம். அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம். ஒரே பள்ளிவாசலில் ஒன்றாக இணைந்து ஒரே குழுவாகத் தொழுகின்றோம்.

ஆனால் நமக்கு மத்தியில் பல்வேறு இயக்கங்கள் உருவாகிவிட்டதால், ஓர் இயக்கத்தில் உள்ளவன் மற்றோர் இயக்கத்தில் உள்ளவனை எதிரியாகப் பார்க்கும் அவலநிலை தற்காலத்தில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ளது. அந்த இயக்கத்திலுள்ளவனும் இந்த இயக்கத்திலுள்ளவனும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள். ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள். அப்படியிருக்கும்போது இந்தத் தற்காலிகப் பகைமை ஏன்? இது ஓர் ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பொதுச் சேவை இயக்கங்கள், இன்னபிற இயக்கங்களில் உள்ள அனைவரும் ஒரே திருவாசகத்தைக் கூறியவர்கள்தாம். அனைவரும் ஒரே நபியைப் பின்பற்றுபவர்கள்தாம். அனைவரும் ஒரே வேதத்தை உடையவர்கள்தாம். அப்படியிருக்கும்போது பல்வேறு பிரிவுகளும், அதனால் பிணக்குகளும் ஏன்? ஒருவர் மற்றவரை வசைமாறி பொழிவதும் திட்டிக்கொள்வதும் ஏன்? உயிரையே துறக்கும் அளவுக்கு மோதல்கள் ஏன்? இவையெல்லாம் களையப்பட வேண்டியவை. எனவே நாம் அனைவரும் ஒரே குடையின்கீழ் உள்ள ஒரே குடும்பத்துச் சகோதரர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இயக்கங்கள் நம்மைப் பிளவுபடுத்திவிட வேண்டாம்.

நாம், இந்த ஈகைப் பெருநாளில் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சகோதரர்களுக்கும் முகமன் கூறுவதோடு, பெருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வோம். ஒருவருக்கொருவர் சகோதரர் என்ற உண்மையை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு இச்சமுதாய மக்களுக்காகப் போராடுவோம். அவர்கள் அனைவரும் முன்னேறப் பாடுபடுவோம். அல்லாஹ் நம் முயற்சிக்குரிய நற்கூலியைத் தருவான் என்ற நம்பிக்கை கொள்வோம்!