-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
நீண்ட நெடுங்காலமாக வறுமை என்பது மனிதரோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிற ஓர் இயல்பு நிலைதான். அதை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அரசு எத்தனையெத்தனையோ திட்டங்களைத் தீட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த வறுமை ஒழிந்தபாடில்லை. வறுமையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோராண்டும் ‘சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்’ அக்டோபர் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் உலகெங்கும் வாழும் ஏழையரின் வறுமையை ஒழிப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இருப்பினும் உலகெங்கும் மக்கள் பலர் தம் வறுமை நிலையில் வாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இஸ்லாம் வறுமையை வெறுமனே தானம் கொடுத்துச் சமாளிக்க வேண்டிய பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை; செல்வப் பகிர்வு, ஸகாத், ஸதகா, உழைப்பு, குடும்பப் பொறுப்பு, வாரிசுரிமை, வட்டி தடுப்பு, விரயம் தடுப்பு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை இணைத்த ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. மேற்கண்ட திட்டங்களை ஒவ்வோர் அரசும் பின்பற்றினால் வறுமையை ஒழித்துவிடலாம். அதற்கான சான்றாக இஸ்லாமிய நாடுகள் திகழ்கின்றன. மற்ற நாடுகளைவிட ஸகாத் (கட்டாயக்கொடை), ஸதகா (அறம் செய்தல்) ஆகிய இரண்டையும் பின்பற்றும் இஸ்லாமிய நாடுகளில் வறுமை கட்டுக்குள் இருக்கிறது என்றே சொல்லலாம்.
வறுமை ஒழிப்புக்கு இஸ்லாம் கூறும் 8 முக்கியத் தீர்வுகள் உள்ளன.
ஸகாத்: செல்வத்தை ஏழைகளிடம் கொண்டு சேர்க்கும் கட்டாய அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: “ஸதகாக்கள் (ஸகாத்-கட்டாயக்கொடை) ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும்... உரியவை.” (அல்குர்ஆன் 9:60) இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஸகாத் என்பது பணக்காரர் விரும்பினால் கொடுக்கும் ஒரு சாதாரண உதவி அன்று; மாறாகக் கடமையான பொருளாதாரக் கொடையாகும். ஒவ்வொரு செல்வரும் தம் செல்வத்தில் இரண்டரை சதவிகிதம் ஆண்டுதோறும் கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு அனுப்பியபோது ஸகாத் குறித்து, “அவர்களுடைய செல்வர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அவர்களுடைய ஏழையருக்குக் கொடுக்கப்படுவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்” (புகாரீ: 1395) என்று கூறினார்கள். அதாவது, இஸ்லாமியப் பொருளாதாரத்தில் செல்வம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திடம் மட்டும் குவிந்து கிடக்காமல் ஏழைகளுக்கும் சென்றடைய வேண்டும். இக்கொள்கையைச் செல்வர்கள் அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டால், ஏழையர் எனும் ஒரு வர்க்கமே இல்லாதுபோய்விடும்.
செல்வம் பணக்காரர்களிடையே மட்டும் சுழலக் கூடாது: இன்று செல்வர்களாக வாழும் பலர் தாம் சேர்த்துவைத்த செல்வங்கள் தம்மைவிட்டுச் சென்றுவிடக்கூடாது எனும் நோக்கில், அதை எப்படியெல்லாம் பாதுகாக்க முடியுமோ அந்த வகையிலெல்லாம் பாதுகாக்கின்றனர். ஆனால் அவர்கள் தம் செல்வத்தை ஏழைகளுக்கு வழங்கினால் அவர்களின் செல்வம் பரவலாக எல்லா ஏழையருக்கும் சென்றடையும் என்பதோடு அவர்களின் செல்வமும் விருத்தியடையும். “உங்களில் செல்வர்களிடையே மட்டுமே செல்வம் சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக...” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 59:7) இது வறுமை ஒழிப்பின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையாகும். ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் செல்வம் சிலரிடம் மட்டும் குவிந்து, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்வது இஸ்லாமியச் சமூக நோக்கத்திற்கு முரணானது.
ஏழைகளுக்கு உதவுவது சமூகப் பொறுப்பு: நாம் ஏழைகளுக்குக் கொடுக்கின்றோம் என்றால் அது அவர்கள்மீது நாம் கொண்டுள்ள கருணையாக மட்டும் கருதக்கூடாது. அது நம் சமூகப் பொறுப்பாக உணர வேண்டும். இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்: “உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு; ஏழைக்கும் வழிப்போக்கனுக்கும் (அவர்களுக்குரியதை) கொடு.” (அல்குர்ஆன் 17:26) இங்கே ‘அவருடைய உரிமை’ என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் நாம் கொடுப்பது, அது அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உரிமையாகும். அதாவது நமக்கு வழங்கப்பட்ட செல்வம் நமக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது. அதில் ஏழையருக்கும் உரிமை உள்ளது என்பதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
வறுமைக்கு உடனடிப் பாதுகாப்பு: கட்டாயக் கொடையை வழங்கியதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அதன் பின்னரும் ஏழையருக்கு நாம் அவ்வப்போது ‘அறம்’ வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். நம் சார்பாக ஒவ்வொரு நாளும் அறம் செய்ய மறந்துவிடக் கூடாது. அவ்வாறு அறம் வழங்குவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “ஒரு பேரீச்சம்பழத்தின் பாதியைக் கொடுத்தாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” (புகாரீ: 1413) இதன் மூலம் ஏழையருக்கு உதவுவதற்கு “என்னிடம் அதிகம் இல்லை; எனவே நான் ஒன்றும் செய்ய முடியாது” என்ற எண்ணத்தை நபியவர்கள் அகற்றுகிறார்கள்.
விதவைகள், ஏழைகள் ஆகியோருக்காக உழைத்தல்: எத்தனையோ விதவைகள், கைம்பெண்கள் ஏழ்மை நிலையில் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை நாம் நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. எத்தனையோ பெண்டிர் தமக்காகச் சம்பாதித்துக் கொடுப்பதற்கு யாரும் இல்லாமல் தம் வாழ்நாள்களை வறுமை நிலையில் கழித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே இத்தகையோருக்கு யாரேனும் உழைத்துக் கொடுத்தால் அது எவ்வளவு மகத்தான நன்மை என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குப் பாடம் புகட்டுகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “விதவைக்காகவும் ஏழைக்காகவும் உழைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரைப் போன்றவர் ஆவார்.” (புகாரீ: 6006)
வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பை ஊக்குவித்தல்: ஏழைக்கு ஒருமுறை உணவு கொடுப்பதைவிட, அவனுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவது உயர்ந்த சமூகச் சேவையாகும். இஸ்லாம் ஏழையை எப்போதும் பிறரிடம் கையேந்திக் கொண்டிருக்கச் சொல்லவில்லை. மாறாக அந்த ஏழ்மையை அகற்ற என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றை நோக்கிச் செல்லவே வழிகாட்டுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏழையரின் உண்மையான நிலையைப் பற்றிக் கூறும்போது, “மக்களிடம் சுற்றிச் சுற்றி ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவு கேட்பவன் ஏழை அல்லன்; தனது தேவையை நிறைவேற்றுவதற்குப் போதுமானது இல்லாமல், பிறரிடம் கேட்காமலிருப்பவன்தான் உண்மையான ஏழை” என்று கூறினார்கள். (புகாரீ: 1479) ஏனெனில் வாய்விட்டுக் கேட்பவன் பிறர் தரும் உணவுப்பொருள்களைக் கொண்டு வாழ்ந்துவிடுவான். ஆனால் மக்களிடம் கையேந்திக் கேட்க வெட்கப்படுபவனை யாரும் கண்டுகொள்ளமாட்டார். எனவே அத்தகையோரைத்தான் நாம் தேடிச் சென்று வழங்க வேண்டும்.
குடும்பப் பொறுப்பை வலுப்படுத்துதல்: இஸ்லாம் முதலில் குடும்பத்திலிருந்தே வறுமை ஒழிப்பைத் தொடங்குகிறது. அதாவது நம்முள் ஒவ்வொருவரும் தத்தம் ஏழை உறவினர்களை முதலில் கவனிக்க வேண்டும்; உதவி செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம் உறவைப் பேணிய நன்மையும் அறம் செய்த நன்மையும் என இருமடங்கு நன்மைகள் கிடைக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “நீ பராமரிக்க வேண்டியோரிடமிருந்து தொடங்கு.” (புகாரீ: 5355)
மேலும் ஒருவர் தம் குடும்பத்திற்காகச் செலவு செய்வதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறமாகக் கருதுகிறார்கள்: “ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்துத் தமது குடும்பத்திற்குச் செலவு செய்தால், அது அவருக்கு அறம் (ஸதகா) ஆகும்.” (புகாரீ: 5351) இதனால் குடும்ப உறுப்பினர்கள் பசியிலும் வறுமையிலும் தள்ளப்படுவதைத் தடுப்பது வறுமை ஒழிப்பின் முதல் படியாகிறது.
விரயத்தைத் தடுப்பது: செல்வர் ஒருவர் தம் மகளுக்குத் திருமணம் செய்விக்கிறபோது எவ்வளவோ பணத்தை வீணடிக்கிறார். தேவையற்ற எத்தனையோ செலவுகளைச் செய்கிறார். அதேநேரத்தில் அந்தத் திருமணத்தோடு ஏழைப் பெண்கள் சிலரின் திருமணத்தை நடத்தினால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள். அவர்களெல்லாம் அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள் அல்லவா? அதனால் அவரின் செல்வம் பெருகுவதோடு ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்த நன்மையும் மகிழ்ச்சியும் கிடைக்குமல்லவா?
இஸ்லாம் ஏழையருக்குக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை; செல்வத்தை வீணடிக்கவும் கூடாது என்று தடைபோடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: “வீணாகச் செலவிடாதே. நிச்சயமாக வீணாகச் செலவிடுவோர் ஷைத்தான்களின் சகோதரர்களாக உள்ளனர்.” (அல்குர்ஆன்: 17:26-27) ஆகவே ஒரு பக்கம் ஏழையர் உணவுக்காகக் காத்திருக்க, இன்னொரு பக்கம் செல்வர்கள் உணவை வீணாக்குவது இஸ்லாமியச் சமூகநீதிக்கு எதிரானதாகும்.
வறுமையை ஒழிக்க இதுவே வழி: பெரும் தொழிலதிபர் ஒருவர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டு மார்க்க அறிஞர்களுக்குக் கட்டாயக்கொடையைப் பகிர்ந்தளிக்கிறார். அவரின் அச்செயல் பாராட்டுக்குரியது. ஆனால் அதேநேரத்தில் ஒவ்வோராண்டும் அவர்களுள் குறிப்பிட்ட நூறு பேரை மட்டும் தேர்வுசெய்து அவ்வாண்டு கடமையான தொகையை மொத்தமாக அந்த நூறு பேருக்கு மட்டும் வழங்கினால் அவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஸகாத் வழங்கும் நிலைக்கு உயர்ந்துவிடுவர். அதனால் ஸகாத் கொடுப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயரும்; ஸகாத் பெறுவோரின் எண்ணிக்கை குறையும். இதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது. எல்லோருக்கும் சிறு சிறு தொகையைப் பகிர்ந்தளிப்பதால், அவர்கள் அனைவரும் இறுதி வரை வாங்குவோராக இருப்பார்களே தவிர கொடுப்போராக ஒருபோதும் மாற முடியாது. ஸகாத் வழங்குகிற ஒவ்வொரு செல்வரும் இதை நினைவில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முடிவுரை: இஸ்லாம் வறுமையை ஒழிப்பதற்கு “ஏழைக்கு ஒரு நாள் உணவு கொடு” என்று மட்டும் கூறவில்லை. மாறாக, “பணக்காரரின் செல்வத்தில் ஏழையின் உரிமையை நிலைநிறுத்து; ஸகாத்தை வசூலித்து ஏழைகளிடம் கொண்டு செல்; ஸதகாவை-அறம் செய்வதை ஊக்குவி; குடும்பப் பொறுப்பை நிறைவேற்று; உழைப்பையும் தொழிலையும் ஊக்குவி; செல்வம் சிலரிடம் மட்டுமே குவிவதைத் தடு; விரயத்தைத் தவிர்த்து சமூகப் பொறுப்பை வளர்” என்று கட்டளையிடுகிறது. இதுதான் இஸ்லாம் வழிகாட்டியுள்ள வறுமை ஒழிப்பின் அடிப்படை அணுகுமுறையாகும். ‘வறுமை ஒழிப்பு’ என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சனை அன்று; அது இஸ்லாமியச் சமூகநீதியின் ஒரு முக்கிய அங்கமாகும். எனவே கட்டாயக்கொடையைச் செல்வர்கள் அனைவரும் ஆண்டுதோறும் முறையாகக் கணக்கிட்டு உரியோருக்கு வழங்குவதே ‘வறுமை ஒழிய’ முதன்மைக் காரணமாகும். இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும் இதனைச் செயல்படுத்துகிற நல்வாய்ப்பை உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக.
=============================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக