திங்கள், 29 ஜனவரி, 2024

பிள்ளைகளோடு ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்!

 

---------------------------------------------

முதல் திருமணம் சரியாக அமையப்பெறாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவன் இறந்துவிட்டதால் கைம்பெண்களாக உள்ளோர் மறுமணம் செய்துகொள்ள விரும்பினால், பிள்ளையில்லாப் பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் மறுமணம் நடைபெற்றுவிடுகின்றது. ஆனால் ஒன்றோ, இரண்டோ பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களை மறுமணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் மிக அரிதாகவே உள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் பிள்ளைகளோடு உள்ள பெண்களை  ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகையோர் பின்வரும் வரலாற்று நிகழ்வைத் தெரிந்துகொண்டால் அது அவர்களின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

 

உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்துபோனபின், காத்திருப்புக் காலம் முடிவடைந்தபிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்து, தூது அனுப்பினார்கள். அதற்கு அவர், தாம் வயதானவர் என்றும், தமக்கு நிறையப் பிள்ளைகள் (ஸலமா, உமர், ஸைனப், ருகையா) இருப்பதாகவும், தாம் கோபக்காரி என்பதாகவும் பதிலளித்தார். அதைக் கேட்ட நபியவர்கள், “நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன்தான்; பிள்ளைகளைப் பொருத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்; உங்களுடைய கோபத்தைத் தணிக்க நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி, அவருக்கு வாக்குறுதியளித்தார்கள்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த மறுமொழியால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நபியவர்களை மணந்துகொள்ளச் சம்மதித்தார். அதன்பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உம்மு ஸலமாவுக்கும் இடையே ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆக நபியவர்கள் உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்துகொண்டபோது அவருடைய நான்கு பிள்ளைகளையும் சேர்த்துத்தான் மணம் செய்துகொண்டார்கள். தாயிடமிருந்து பிள்ளைகளைப் பிரிக்கவில்லை. அவர்களுக்கு எவ்வாறு உணவு கொடுப்பது என்று யோசிக்கவில்லை; உணவு கொடுப்பவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையோடு மணமுடித்தார்கள்.

 

முந்தைய கணவருக்குப் பிறந்த பிள்ளைகளை ஒருவர் பொறுப்பேற்று வளர்க்கும்போது அப்பிள்ளைகளுக்காகச் செலவழிக்கின்ற அனைத்தும் நன்மைகளாக அவருக்கு வழங்கப்படும் என்பதை இன்றைய இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது. நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குகிறோம் (17: 31) என்ற திருக்குர்ஆன் வசனத்தைப் படித்த பிறகு இளைஞர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை ஏற்படும் என்று நம்புவோம்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

29 01 2024

===============

கருத்துகள் இல்லை: