-------------------------------------------
இளம்விதவைகள் அல்லது இளம்வயதிலேயே கணவனைப் பிரிந்தோர் மறுமணம்
செய்துகொள்ள விரும்பும்போது,
குழந்தை இல்லாப் பெண்களுக்கு எளிதில் மறுமணம் சாத்தியப்படுகின்றது.
ஆனால் ஓரிரு பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களுக்கு மறுமணம் என்பது மிகவும்
சிக்கலாக உள்ளது. ஏனெனில் சமுதாயத்தில் ஷரீஅத்தைப் புரிந்து, இறைநம்பிக்கையோடு
வாழ்க்கையை எதிர்கொள்கின்ற இளைஞர்கள் அரிதாகவே உள்ளனர்.
எனவே பிள்ளைகளைத் தம் பராமரிப்பில் வைத்துள்ள பெண்களை மறுமணம்
செய்துகொள்ளும் இளைஞர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. அப்படியே யாரேனும்
இளைஞன் முன்வந்தால், அப்பிள்ளைகளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டு வருவதாக இருந்தால் மணமுடித்துக்கொள்கிறேன்
என்று கூறுகின்றான். பிள்ளைகளோடு அப்பெண்ணை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அவள்
தன் பிள்ளைகளைப் பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அல்லது மறுமணம் முடிக்காமல்
வெறுமனே காலத்தைக் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.
இவ்விடத்தில்தான் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையையும்
சட்டத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சட்டத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் செயல்பட்டால், பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்
எந்தச் சிக்கலும் ஏற்படாது.
கணவன் தன் மனைவியை விவாக விலக்குச் செய்துவிட்டால், கணவன் வீட்டிலேயே மூன்று
மாதங்கள் வரை அப்பெண் இத்தா-காத்திருப்புக் காலத்தைக் கழிக்க வேண்டும். அந்த மூன்று
மாதங்கள் வரை அனைத்துச் செலவுகளும் கணவனைச் சார்ந்ததே. இத்தா முடிவதற்குள், அவன் நாடினால் அந்த
மனைவியோடு மீண்டும் வாழ்க்கையைத் தொடரலாம். இல்லையேல் இத்தா முடிவுற்றபின் அவள் தன்
தாய் வீட்டுக்குச் சென்றுவிடலாம்.
அப்போது அவ்விருவருக்கும் குழந்தை பிறந்திருந்தால் அக்குழந்தையை
அதனுடைய தந்தையிடமே அப்பெண் விட்டுவிட வேண்டும். அதனை வளர்க்கும் பொறுப்பு தந்தையையே
சாரும்; அவள்மீது எப்பொறுப்பையும் இஸ்லாம் சுமத்தவில்லை. இதைப் பெண்கள் புரிந்துகொள்ளாமல்
பிள்ளைகளையும் தம்மோடு தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவதால்தான் மறுமணத்தில்
அவர்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(தாய்) யாருடைய (திருமணப்) பொறுப்பில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே
குழந்தை உரியது” (புகாரீ: 2052)
என்று கூறியுள்ளார்கள்.
அதனால் அப்பெண் இத்தா முடிவடைந்தபின் தன் தாய் வீட்டிற்குச்
சென்று மறுமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடரலாம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
28 01 2024
#இளம்விதவைகள், #மறுமணம், #விவாக விலக்கு
=======================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக