சனி, 3 பிப்ரவரி, 2024

தியாகம் (சிறுகதை- Short Story)



தியாகம்

 

-நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அந்த ஊரின் பெரிய பள்ளிவாசலில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான தொழுகைக்கூடத்திற்கு வெள்ளிக்கிழமை பயான் கேட்பதற்காக புஷ்ரா புறப்பட்டுச் சென்றாள். வழியில், எதேச்சையாக ருஷ்தாவைச் சந்தித்தாள். புஷ்ரா வீட்டில்தான் ருஷ்தா நீண்டகாலமாகக் குடி இருந்தாள். பிறகு அங்கிருந்து மாறி, பக்கத்து ஊருக்குக் குடிபோய்விட்டாள். காலம் உருண்டோடி பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நீண்ட காலத்திற்குப்பின் இப்போதுதான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. புஷ்ராவின் வீட்டில் ருஷ்தா குடியிருந்தபோது இருவரும் தோழிகளைப் போலப் பழகி வந்தனர். பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.  அந்தரங்க விஷயங்களைக்கூட அலசுவார்கள். ஆனால் வரம்பு மீறமாட்டார்கள். புஷ்ராவைவிட ருஷ்தா வயதில் மூத்தவள். எனவே அவள் ருஷ்தாவை "அக்கா' என்றுதான் அழைப்பாள்.

 

"என்னக்கா சுகமா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிக்கா இருக்கீங்க?'' - விசாரித்தாள் புஷ்ரா.  "அல்ஹம்து லில்லாஹ். நல்லவிதமா இருக்கேன். ஒரு கவலையும் இல்லை'' - ருஷ்தா பதிலளித்தாள். 

 

"என்னக்கா இந்தப் பக்கம்? எங்கெ வந்திருக்கீங்க?''

 

"பக்கத்துத் தெருவுல உள்ள எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கேன். நீ எப்டி இருக்கே?''

 

"ம். நான் அல்லாஹ்வின் கிருபையாலே நல்லா இருக்கேன்.''

 

"புஷ்ரா உனக்கு எத்தனை பிள்ளைங்க?''

 

"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுதான் ருஷ்தாக்கா''

 

"என்னம்மா சொல்றே. கல்யாணமாயி எத்தனையோ வருஷமாச்சு. ஒரே ஒரு குழந்தைதானா? அதுக்குப் பிறகு ஒன்னுமே இல்லையா?'' - ருஷ்தா ஆச்சரியமாகக் கேட்டாள்.

 

"அந்த ஒன்னுக்கே நான் என் கணவனோட படாதபாடு பட்டுட்டேன். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் கொடுத்து, பாதாம், பிஸ்தா, அக்ரோட் என வகை வகையாய்க் கொடுத்தேன்.  அதுக்குப் பிறகுதானே அல்லாஹ்வுடைய கிருபையாலெ ஒரு குழந்தை என்னோட வயித்துல உருவாச்சு.'' - புஷ்ரா கூறினாள்.

 

"ஏம்மா இப்டிச் சொல்றே? அவருக்கு என்ன கொற?'' - ஆர்வமாகக் கேட்டாள்.

 

"அவருக்கு ஆரம்பத்திலிருந்து உடலில் தெம்பு இல்லை, மனசுல தைரியம் இல்லை, மனைவியப் பார்த்தா காதல் இல்லை. மொத்தத்தில், ‘மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன்' என்பது அவருக்குத்தான் சரியாப் பொருந்தும்'' என்று வருத்தத்தோடு சொல்லி முடித்தாள் புஷ்ரா....

கருத்துகள் இல்லை: