அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின்முன்னாள் முதல்வர் மர்ஹூம் பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அடையாறு குராசானி பீர் பள்ளிவாசலில் கடந்த 26 02 2022 அன்று நடைபெற்றது. அதில் அவர்களின் நினைவுக்குறிப்புகள் அடங்கிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் இடம்பெற்றுள்ள என்னுடைய ஆக்கம்.
இதோ உங்கள் பார்வைக்கு...
விருட்சம் தூவிய விதைகள்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் முதன்முதலாகக் காலடி வைத்த ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் ‘அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது ‘பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
“யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படி மத்ரஸாவில் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!” என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் ரஹிமஹுல்லாஹ், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத். பிற்காலத்தில் நல்லா வருவான்” என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெ” என்று கூறினார்கள்.
1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் அங்கேயே பயின்று பட்டம் பெற்று வெளியே வந்தேன். பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், “அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் கடைசியாக ‘நபிவழி மருத்துவம்’ எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, வாழ்த்துரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள். தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் ‘மனங்குளிரும் விதமாக நான் உருவானதே’ அவர்களுக்கு நான் செய்த கைம்மாறாகக் கருதுகிறேன்.
அன்பான கண்டிப்பு: ஒரு தடவை பாக்கியாத் மஸ்ஜிதில் ஃபஜ்ர் தொழுகையின்போது முன்சுன்னத் தொழுதுவிட்டு, இகாமத் வரை எஞ்சிய நேரத்தில் குர்ஆன் ஓதுவதற்காக, அதை என் இடக்கையால் எடுத்தபோது, (நான் இடக்கைப் பழக்கமுடையவன்) அதைப் பின்னால் இருந்து பார்த்த ஹள்ரத் அவர்கள், ஒரு மாணவர் மூலம் என்னை அழைத்து, “குர்ஆனை எடுக்கும்போது வலக்கையால்தான் எடுக்க வேண்டும். அதுக்கு இஸ்ஸத் (மரியாதை) கொடுக்குறதில்லையா?” என்று கண்டிப்புடன் கூறி அனுப்பினார்கள். அன்று முதல் அப்பழக்கத்தை மாற்றிக்கொண்டேன். நான் இடக்கைப் பழக்கமுடையவன் என்பதால் என்னையறியாமல் இடக்கை முந்தும்போதெல்லாம் ஹள்ரத் அவர்களின் கண்டிப்பான முகம் என்முன் வந்து என்னை எச்சரித்துச் செல்லும்.
பிறருக்கு நன்றி செலுத்துதல்: நம் ஹள்ரத் அவர்கள் தமக்கு யாரேனும் ஏதாவது அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாலும் உதவி செய்திருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பார்கள். “இதை எனக்கு இன்னார் கொடுத்தார்” என்று சந்திக்கின்ற மாணவர்களிடமும் கூறுவார்கள். அத்தோடு அவர்களுக்காக துஆவும் செய்வார்கள்.
சிக்கலில் சிக்காமை: நம் ஹள்ரத் அவர்கள் யாரேனும் தம்மிடம் கேள்வி கேட்டால் அதற்கு மிகச் சரியான பதிலை அவர் மனம் விரும்புமாறு சொல்லிவிடுவார்கள். சிக்கலில் சிக்கும் விதமாக அவர்களின் பதில் அமையாது. சிக்கலான கேள்வியைக் கேட்டால் சமயமறிந்து சமயோஜிதமாகப் பதில் சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்குப் போதித்துள்ளார்கள்.
அதற்கு ஒரு கதையையும் சொல்வார்கள். ஒரு இராஜா, தம்முடைய அனைத்துப் பற்களும் உதிர்ந்து விழுந்துவிடுவதாகக் கனவு கண்டார். சபையோரிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். “உங்களுடைய மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள். நீங்கள் மட்டும் தனியாக இருப்பீர்கள்” என்று அதனுடைய நேரடியான விளக்கத்தை அறிஞர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட அந்த இராஜா மிகுந்த சினம் கொண்டார். எத்தனையோ பேரிடம் விளக்கம் கேட்டும் எல்லோரும் அவ்வாறுதான் விளக்கம் கூறினார்கள்.
ஆனால் அவ்வூருக்குப் புதிதாக வந்திருந்த ஒருவர் அந்த இராஜா மனம் மகிழுமாறு விளக்கம் கூறினார். அதாவது “இராஜா அவர்களே உங்கள் உறவினர்களைவிட உங்களுக்குத்தான் நீண்ட ஆயுள்; நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்; நீண்ட காலம் ஆட்சிசெய்வீர்கள்” என்று கூறினார். அந்த விளக்கத்தைக் கேட்ட அந்த இராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தார். மற்றவர்கள் சொன்ன விளக்கத்தைத்தான் அவரும் சொன்னார். ஆனால் அதை அவர் வித்தியாசமாகச் சொன்னார். இவ்வாறுதான் சூழ்நிலை அறிந்து பேச வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லியுள்ளார்கள்.
பைஅத் வாங்க வேண்டியது அவசியமா என்று யாரேனும் ஆலிம் கேட்கும்போது, கேட்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டு, அவருக்குத் தோதுவாகப் பதிலளிப்பார்கள். அதில் நாட்டம் இல்லாதவர் என்றால், “நாங்க உங்களைச் சும்மாவா விட்டுவிட்டோம். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் படித்துக் கொடுத்திருக்கிறோம்தானே? அது உங்களுக்குப் போதாதா?” என்று பதில் சொல்வார்கள். அதில் நாட்டம் உடையவர் என்றால், தரீக்கா குறித்த எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறி, என்னென்ன தரீக்காக்கள் எப்படியெல்லாம் வந்துள்ளன. அதற்குரிய ஷைகுகள் யார் யார் என்ற விவரங்களையெல்லாம் கூறுவார்கள். இதனால்தான் அவர்கள் எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் அனைவராலும் விரும்பப்பட்டவராக இருந்தார்கள்.
பொதுவாக எக்கருத்தையும் யார்மீதும் திணிக்கக்கூடிய பழக்கம் நம் ஹள்ரத் அவர்களிடம் இருந்ததில்லை. அதனால்தான் பைஅத் குறித்து, யாரிடமும் திணிக்க மாட்டார்கள். அதில் ஆர்வமுள்ளோருக்கு மட்டும் வழிகாட்டுவார்கள்.
தீனுக்கு முன்னுரிமை: நான் அவர்களுடைய நஜாரத்தில் (முதல்வராக இருந்தபோது) இரண்டாம் ஜும்ரா ஓதிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பத்தாம் வகுப்பு தனித்தேர்வராக கலந்துகொண்டு தேர்வு எழுத அனுமதி கேட்டு அவர்களின் அறைக்குச் சென்றேன். அப்போது, “மத்ரஸாவில் ஓதிக்கொண்டிருக்கும்போது வெளியுலகப் படிப்புக்கு அனுமதி தரமுடியாது” என்று கூறினார்கள். சற்று நேரம் யோசித்துவிட்டு, “மத்ரஸா படிப்பில் சரியாக இருக்கிறாயா? எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளாயா?” என்று கேட்டார்கள். “ஆம்! ஹஜ்ரத்! எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்” என்று கூறினேன். பிறகு என்னுடைய உஸ்தாதுகள் சிலரிடம் கலந்து பேசிய பிறகுதான், அனுமதி தந்தார்கள். அதாவது அந்த அளவிற்கு தீனுக்கும் தீன் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடிதம் எழுதும் பழக்கம்: நம் ஹள்ரத் அவர்கள் கடிதம் எழுதும் பழக்கமுள்ளவர்கள். மாணவர்களுள் யாரேனும் நலம் விசாரித்து கடிதம் எழுதினால், அல்லது வேறு ஏதேனும் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினால் அதற்குப் பதில் கடிதம் எழுதுவது நம் ஹள்ரத் அவர்களின் வழக்கமாகும். அப்படி எனக்கும் ஒரு தடவை கடிதம் எழுதியுள்ளார்கள்.
பாக்கியாத்திலிருந்து சென்றபின், கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் மன்பவுல் ஹஸனாத் அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்கள். அவர்களை நேரில் சந்தித்து என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்து, அவர்களை என் திருமணத்திற்கு வருமாறு அழைத்தேன். ஹள்ரத் அவர்களால் என் திருமண நிகழ்வுக்கு வர இயலவில்லை. எனவே அவர்கள் எனக்காகவும் என் மனைவிக்காகவும் துஆ செய்து, வாழ்த்தி, கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தை நான் இன்றுவரை பாதுகாப்பாக வைத்துள்ளேன். ஆக, தம்மால் இயலாதபோது அதற்குரிய காரணத்தைக் கூறி, கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்கள்.
புன்னகை தவழும் முகம்: ஹள்ரத் அவர்களின் புன்னகை தவழும் முகமே அனைவரையும் வசீகரிக்கும். அனைவரின் மனங்களையும் ஈர்க்கும். அவர்கள் பாடம் நடத்தும்போதும் பயான் செய்யும்போதும் அவர்களின் அழகிய விளக்கங்களுடன் அவர்களின் உடல்மொழியும் பேசும். அதனால் அவர்களின் வகுப்பிலுள்ள தமிழ் மாணவர்களுடன் உர்தூ மாணவர்களுக்கும் மலையாள மாணவர்களுக்கும் அவர்களின் பேச்சு புரிந்துவிடும்; மந்தமான மாணவர்களுக்கும் அவர்களின் பாடம் விளங்கிவிடும். இத்தகைய புன்னகையும் உடல்மொழியும் ஒருங்கே பெற்றவர்கள்தாம் நம் ஹள்ரத் அவர்கள்.
புன்னகையும் உடல்மொழியும் ஒருங்கே பெற்ற ஹள்ரத் அவர்களின் பேச்சு அனைவராலும் விரும்பப்பட்டதால்தான் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஹள்ரத் அவர்களைச் சொற்பொழிவுக்காக அழைப்பார்கள். அத்தோடு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பயான் செய்துள்ளார்கள். ஓர் அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றால், அது அவர்களின் நகைச்சுவை கலந்த இனிய மார்க்கச் சொற்பொழிவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
சம்பிரதாயங்களை உடைத்தல்: நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்கின்றோம் என்றால் பழங்களோ தின்பண்டங்களோ வாங்கிச் செல்வது வழக்கம். அந்த அடிப்படையில் நான் என் உஸ்தாதைச் சந்திக்கச் செல்கிறபோது பழங்கள் வாங்கிச் செல்வேன். ஓரிரு தடவை அதனை ஏற்றுக்கொண்ட ஹள்ரத் அவர்கள், பிறகு “அப்துல் ஹாதி, சந்திக்க வருகிற நேரமெல்லாம் ஏதாவது வாங்கிவர வேண்டிய அவசியமில்லை. சில தடவை வாங்கி வரணும்; சில தடவை ஏதும் வாங்காமல் சும்மா வந்து சந்திக்கணும். அப்படியில்லையென்றால் சந்திப்பதே ஒருவித சிரமத்தை ஏற்படுத்திவிடும்” என்பார்கள்.
இன்று பலருக்கும் இந்தச் சங்கடம் உள்ளது. “ஏன் உன் உறவினரை அடிக்கடி சென்று சந்திப்பதில்லை” என்று கேட்டால், “ம்... சந்திக்கப் போனால் சும்மாவா போக முடியும்? ஏதாவது கையில வாங்கிட்டுப் போக வேண்டாமா? அதுக்கு பணத்துக்கு எங்கெ போறது? அவளைச் சந்திக்கப் போனா, இவ கோபித்துக்கொள்வாள். இவளை மட்டும் சந்தித்துவிட்டு வந்தா, அவ கோபித்துக்கொள்வாள். என்ன செய்யிறது?” என்றெல்லாம் காரணங்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆக சந்திப்புக்குத் தடையாக இருப்பது, ‘செலவுதான்’ என்பது தெளிவாகிறது. இதனால்தான் பலரும் தம் உறவினரை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்க்கின்றனர் என்பதை உணர முடிகிறது. இதை முறியடிப்பதற்கான வழியைத்தான் நம் ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
இப்படி ஏராளமான வாழ்க்கைப் பாடங்களை நம் ஹள்ரத் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் கற்றுக்கொடுத்த கல்வியின் பிரதிபலன் அவர்களுடைய மண்ணறைக்கு மறுமை நாள் வரை சென்றுகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக ஆக்குவானாக. அவர்களுக்கு நாளை மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக.
=================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக