-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------------------------------
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அவர்களின் சிறுபிராயத்தில் எதைப் பழக்கப்படுத்துகிறார்களோ அதுவே அப்பிள்ளைகளின் பழக்கமாக, பின்னர் வழக்கமாக உருவாகும். பெற்றோர் தம் பிள்ளைகளை அமர வைத்து, பயனுள்ள நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் காலப்போக்கில் படிக்கிற பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுவிடும். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கும் அழியாச் சொத்தாகும். பிற்காலத்தில் அவர்கள் சிறந்த சிந்தனைவாதிகளாக, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக உருவாக அப்பழக்கம் அடிப்படையாக அமையும்.
கடந்த மூன்றாண்டுகளாக (2019-2022) நம் பிள்ளைகளின் கல்வி மிகவும் நலிந்துபோய்விட்டது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த பிள்ளை தற்போது நான்காம் வகுப்பு படிக்கும். நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளையிடம் எல்கேஜி பிள்ளையின் அறிவுகூடத் தற்போது இருக்காது. ஏனென்றால் அப்பிள்ளை அடிப்படைக் கல்வியையே முறையாகக் கற்றுக்கொள்ள இயலவில்லை. பிறகு எப்படி அப்பிள்ளையிடம் நான்காம் வகுப்பிற்கான அறிவு இருக்கும்?
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' எனும் முதுமொழி, எண் எனும் கணிதத்தையும் எழுத்துப் பயிற்சியையும் மேற்கொள்ள வலியுறுத்துகிறது. கணிதத்தின் அடிப்படையாக வாய்பாடு அமைந்துள்ளது. அதனை மனப்பாடமாக ஒப்பிக்க வைக்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள். மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாகப் பள்ளிக்கூடங்கள் மூடியே கிடப்பதால் அந்த அடிப்படை அறிவு போதிக்கப்படுவது நின்றுபோய்விட்டது. கையெழுத்து அழகாக ஆவதற்காக எழுத்துப் பயிற்சி கொடுத்து வந்தார்கள். அதுவும் இன்று நின்றுபோய்விட்டது. காலப்போக்கில் எழுதுகிற பழக்கத்தையும் கணக்கையும் மறந்துபோய்விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. மாணவர்கள் சிலர் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளைப் படம் வரைவதைப் போன்று பார்த்து எழுதிவிடுகின்றார்கள். ஆனால் அதனை வாசிக்கத் தெரியவில்லை. ஆக எண் கல்வியையும் எழுத்துக் கல்வியையும் இன்றைய இளஞ்சிறார்கள் இழந்துவருகிறார்கள் என்ற கசப்பான உண்மையைப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
அறிதிறன்பேசியை வைத்துக்கொண்டு பிள்ளைகள் கேம்-விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றார்கள். அது அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றுத் திசை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இன்றைய பெற்றோர் உணரவே இல்லை. தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். சற்று நேரம் தம் பிள்ளைகள் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனத் திரும்பிப் பார்க்க நேரமில்லை. யாருக்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று சிந்திக்கவும் நேரமில்லை.
செல்போன் விளையாட்டுக்குள் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க, பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நூல்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பாட நூல்களைத் தவிர, பயனுள்ள பிற நூல்களை வாசிக்கத் தூண்ட வேண்டும். பொதுவாக சிறுவர்-சிறுமியர் எல்லோருக்கும் பிடித்த கதைப் புத்தகங்கள், விளையாட்டுப் புத்தகங்கள், நகைச்சுவைப் புத்தகங்கள் முதலானவற்றைப் படிக்கத் தூண்ட வேண்டும். இவை போன்ற நல்ல நூல்களை நம் வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும். அல்லது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்போது எடுத்துப் படிக்க ஏதுவாக அமையும்.
நூல்களைப் படிப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுத்தால் போதுமானது. அதனை அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பே இல்லாதபோதுதான் அவர்கள் செல்போனில் மூழ்கிப் போய்விடுகின்றார்கள். படிப்பதற்கான வாய்ப்பையே நாம் உருவாக்கிக்கொடுக்காமல், "பிள்ளைகள் கெட்டுப்போய்விட்டார்கள்' என்று கூறுவதில் எந்தப் பயனுமில்லை. அறிதிறன்பேசியில் திரைப்படக் காட்சிகளைப் பார்த்தல் அல்லது விளையாடுதல் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஈடுபடுதல் இவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, "இது நூல் வாசிக்கும் நேரம்'' என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்துகொண்டு, அந்நேரத்தில் மட்டும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வுகொடுத்துவிடலாம்; செல்போனை அவர்களிடமிருந்து வாங்கி ஓரமாக வைத்துவிடலாம். அப்போது அவர்கள் தம் பெற்றோருக்குக் கட்டுப்படவே செய்வார்கள்.
அவர்கள் தாமாக நூல்களை எடுத்து வாசிக்காவிட்டால், நாமே பயனுள்ள ஒரு நூலை எடுத்து வாசித்துக் காட்டலாம். வாசித்து முடித்தபின், இதுவரை நீ என்ன விளங்கினாய் என்று கேட்கலாம். இதிலிருந்து உனக்கு என்ன தோன்றுகிறது என்று வினவலாம். ஒரு வாரம் கடந்தபின், “கடந்த ஒரு வாரமாக நீ என்ன படித்தாய், எத்தனை பக்கங்கள் படித்தாய், என்ன விளங்கினாய்” என்று கேட்கலாம். இந்த வினாக்கள் அவனைப் படிக்கத் தூண்டும். அடுத்தடுத்த வாரங்களில் கூர்ந்து படிக்கத் தொடங்கிவிடுவான். வினாக்கள் கேட்டு, அவற்றிற்குச் சரியான விடைகளைச் சொன்னால் பரிசுகள் வழங்கிப் பாராட்டி ஊக்கப்படுத்தலாம்.
அண்டை வீட்டிலுள்ள பிள்ளைகளையும் அழைத்து, நம் வீட்டிலுள்ள நூல்களை நம் பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கச் சொல்லலாம். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தம் பிள்ளை தானே வளரும்'' என்பதற்கேற்ப, அண்டை வீட்டாரின் பிள்ளைகளைப் படிக்கத் தூண்டினால் நம் பிள்ளைகள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவார்கள். மேலும் பிள்ளைகள் மத்தியில் படிப்பதில் போட்டிமனப்பான்மை ஏற்படும். அவனைவிட நான் மிகுதியாகப் படிக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். இது ஓர் ஆரோக்கியமான போட்டியாகும்.
வாரத்தில் ஒரு நாள் வெளியில் செல்லும்போது நம் பிள்ளைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் நாம் வாழும் நகரத்தில் எங்கேனும் புத்தகக் காட்சி நடைபெற்றால் அங்கு அவர்களை அழைத்துச் சென்று, உனக்குப் பிடித்த நூலைத் தேர்ந்தெடு என்று கூறி, நூலின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அங்கு அவர்கள் விரும்பி எடுக்கின்ற நூல்களை வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கெனச் சிறுநூலகத்தை வீட்டில் அமைத்துக்கொடுக்கலாம். பின்னர் நீ வாங்கிய நூலில் இதுவரை எத்தனை பக்கங்கள் படித்துள்ளாய் என்று கேட்கலாம். அவர்கள் தாமாகவே நூல்களைப் படிப்பதற்கு இதுவும் ஒரு வகைத் தூண்டல் முறையாகும்.
நம் பிள்ளைகளுக்கு உயர்ந்த சிந்தனைகளையும் எண்ணங்களையும் ஊட்டக்கூடியவை நல்ல நூல்கள் என்றால் மிகையில்லை. உலகின் மிகப்பெரிய நூலகம் இலண்டனில் உள்ளது. அதில் அதிகமான நூல்களைப் படித்தவர் கார்ல் மார்க்ஸ் ஆவார். அவர் பிற்காலத்தில் மிகப்பெரும் பொருளாதார மேதையாகவும் சிந்தனைவாதியாகவும் உருவானார் என்பதை எல்லோரும் அறிவர்.
சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகமே தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய நூலகம் ஆகும். நூலகம் திறக்கப்பட்டதும் முதல் ஆளாக உள்ளே நுழைகிற எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் அவர்கள், அதன் காவலர் நூலகத்தைப் பூட்டப் போகிறோம், வெளியேறுங்கள் என்று கூறும் வரை அங்கேயே இருந்து பல்வேறு நூல்களைப் படித்து, குறிப்புகள் எடுத்துக்கொள்வார். இவர் தம் வாழ்நாளில் 125 நூல்களை எழுதியுள்ளார். ஒரு பல்கலைக் கழகக் குழுவினர் செய்ய வேண்டிய கலைக்களஞ்சியத்தை ஒற்றை மனிதராக இருந்து உருவாக்கி, இச்சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு நூல்களைப் படிக்கப் படிக்க, நூல்களை உருவாக்கும் ஆற்றல் பிறக்கிறது; புதிய சிந்தனை உருவாகிறது; புதிய புதிய திட்டங்களை மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது; கடினமான தருணங்களில் நிதானமாக முடிவெடுக்கும் பக்குவத்தை வழங்குகிறது; நல்லதே செய்ய வேண்டும் என்ற உயர் எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. இத்தகைய நற்குணங்களை ஊட்டக்கூடிய வாசித்தல் பழக்கத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது நம் தலையாய கடமையாகும்.
இந்தச் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி நபிக்கு இறைவன் வழங்கிய தூதுச் செய்தியின் தொடக்கமே, ஓதுவீராக-படிப்பீராக என்பதுதான். படிக்கத் தெரியாதவரையும் படிக்கச் சொல்லி, அதன்மூலம் இச்சமுதாய மக்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என இறைவன் நாடினான். ஆனால் நம் சமுதாயம் படிக்கத் தெரியாத சமூகமாக, படிப்பில் ஆர்வம் காட்டாத சமூகமாகவே மாறி வருகிறது. இதனைப் போக்கும் விதத்தில் எதிர்கால இளைஞர்கள் படிப்பில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகப் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பாடுபட வேண்டும். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்கு வழங்கும் மிகப்பெரும் வெகுமதியாகும்.
-----------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக