சனி, 19 பிப்ரவரி, 2022

மறுமை வங்கியில் முதலீடு செய்வீர்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------

ஓர் அறிவாளி தன் பொருளாதாரத்தை இலாபம் தரும் தொழிலில்தான் முதலீடு செய்வான். அந்த வகையில் இன்று நம்முள் பலர் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை இலாபம் தரும் தொழிலில் முதலீடு செய்து தம் பொருளாதாரத்தைப் பெருக்க நினைக்கின்றனர். சிலர் வங்கியில் தம் பணத்தை நிரந்தர வைப்புத் தொகையாகப் (ஃபிக்ஸ்டு டெபாசிட்) போட்டு வைத்து, அதிலிருந்து வருகின்ற முதிர்வுத் தொகையை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசையில் ‘சீட்டு’ கட்டுகின்றனர். அவன் மொத்தமாக அள்ளிக்கொண்டு ஓடியபின், தம் பொருளாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி ஒவ்வொரு செல்வரும் ஒவ்வொரு விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் உண்மையில் யார் அறிவாளி? யார் தம் பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர்? அல்லாஹ்வின் உவப்பைப் பெறும் நோக்கில் அவனுடைய பாதையில்  செலவு செய்பவரே அறிவாளி; அவரே தம் பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட இஸ்லாமிய நிறுவனங்களெல்லாம் பல்வேறு செல்வர்களின் தயாளத்திற்கான சாட்சிகளாகும். அவர்களின் பங்களிப்பின்றி அவை நிலைபெற்றுவிடவில்லை. 

அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறும் உயர்நோக்கில் மார்க்கம் சார்ந்த சேவைகளுக்காகத் தம் பணத்தைச் செலவழிப்பவரே அறிவாளி; அவரே தம் பொருளாதாரத்தை வைத்துப் பயன்பெறுபவர்; அவரே தம்  பொருளாதாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்பவர் ஆவார். அவர் இம்மைப் பயனைப் பெறுவதற்காக வங்கியில் முதலீடு செய்யவில்லை. மாறாக மறுமைப் பயனைப் பெறுவதற்காக அல்லாஹ்வின் வங்கியில் முதலீடு செய்கிறார். அது வளர்ந்து மிகப் பெரும் அளவில் நாளை மறுமையில் அவருக்கு நன்மைகளாக வந்துசேரும். அவையே அவர் சொர்க்கம் செல்லக் காரணமாக அமையும். 

இங்கு நபிமொழி ஒன்றை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுபோய்விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் (அவனுடைய) நல்ல குழந்தை. (நூல்: முஸ்லிம்: 3084)   

மேற்கண்ட மூன்று வழிகளில் ஒரு மனிதன் இறந்த பின்னும் அதற்கான நன்மை அவனுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அவற்றுள் ஒன்று பயனுள்ள கல்வி என்பதை அறிகிறோம். பயனுள்ள கல்வியை இச்சமுதாயத்திற்கு வழங்க நீங்கள் ஓர் ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மாறாக பயனுள்ள நூல்களை வாங்கி, மக்கள் படித்துப் பயன்பெறும் ஏற்பாட்டைச் செய்வதன்மூலமும் இச்சமுதாயத்திற்குக் கல்விச் சேவையாற்றலாம். சமுதாய மக்கள் சீர்பெற உதவலாம். 

‘அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தல்’ என்ற சொற்றொடருக்கு, பள்ளிவாசல் கட்டுதல், மத்ரஸா கட்டுதல் ஆகிய இரண்டைத்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் தெரிந்துவைத்துள்ளார்கள். அவற்றைத் தாண்டியும் சில  வழிகள் உள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பயனுள்ள நூல்கள் கொண்ட ஒரு நூலகத்தை அமைப்பதும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதுதான். முஸ்லிம் ஒருவர் ஒரு பொது நூலகத்தை அமைத்து எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையில் பொது அனுமதி வழங்கியிருந்தால், அந்த நூலகத்திலிருந்து யாரெல்லாம் படித்துப் பயன்பெறுகிறார்களோ அந்த அத்தனை நன்மைகளும் அவருக்குக் கிடைக்கும். அவர் இறந்த பின்பும், அதிலிருந்து யாரெல்லாம் பயன்பெறுகின்றார்களோ அந்த நன்மைகள் யாவும் அவருக்குப் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு நூலகத்தை அரசாங்கம்தான் நிறுவ வேண்டும் என்பதில்லை. ஆர்வமுள்ள பொதுமக்களும் நிறுவலாம். அந்த நூலகத்திற்காக நீங்கள் வாங்குகிற ஒவ்வொரு நூலுக்கும் நன்மை உண்டு. நூலைப் படிக்கின்ற, படித்துப் பயன்பெறுகின்ற ஒவ்வொருவரின் நன்மையிலும் உங்களுக்குப் பங்குண்டு என்பது உறுதி. இதற்குப் பின்வரும் நபிமொழி சான்றாகத் திகழ்கிறது:  

 “முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ, ஒரு கால்நடையோ, ஒரு பறவையோ உண்டால் மறுமைநாள்வரை அது அவருக்கு ஓர் அறமாகவே அமையும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 3162) 

ஒருவர் நட்டுவைத்த செடி, மரமாகி, காயும் கனியும் தரும்போது அதிலிருந்து உண்போர் பலர். யாரெல்லாம் அதிலிருந்து உண்கின்றார்களோ அதுவெல்லாம் அச்செடியை நட்டவருக்கு நன்மையாகக் கிடைக்கும். ஒருவர் தம்மாலான நன்மையை இச்சமுதாயத்திற்கு வழங்கும்போது அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் அவருக்கு வழங்குகின்றான். ஆதலால் மரம் நடுதல் எவ்வாறு சமுதாயத் தொண்டோ அதுபோலவே நூலகம் அமைப்பதும் சமுதாயத் தொண்டுதான் என்பது தெளிவு. 

அயல்நாடுகளில் ‘மக்தபா’ எனும் பெயரில் இது செயல்பட்டு வருகிறது. மக்தபா எனும் அரபுச் சொல்லுக்கு நூலகம் என்று பொருள். அந்த மக்தபாவின் பணிகள் என்னென்ன என்று பார்த்தால், பொதுமக்கள் படிப்பதற்கான  நூல்களை வாங்கி வைத்தல், அரிய நூல்களை மீண்டும் வெளியிடுதல், புதிய நூல்களை வெளியிடுதல், மொழியாக்கம் செய்து நூல்களை வெளியிடுதல், அழைப்புப் பணி செய்தல், கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துதல் முதலானவை ஆகும். இவற்றை அப்படியே நம்முள் வாழும் செல்வர்கள் செயல்படுத்தலாம். குறிப்பாக எளிதில் கிடைக்கப்பெறாத அரிய நூல்களை மறுபதிப்பாக வெளியிடுதல், அரபுமொழி நூல்களைத் தமிழில் வெளியிடுதல் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவை. 

வெறுமனே நூல்களைப் படிக்க ஏற்பாடு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மொழிபெயர்ப்புக் குழுவை ஏற்படுத்தி, அவர்கள்மூலம் மார்க்கம் சார்ந்த பற்பல நூல்களை வெளியிட்டு மக்கள் பயனடையுமாறு செய்யலாம். இன்று பல்வேறு அரபுக் கல்லூரிகளிலிருந்து இரட்டைப் பட்டங்கள் பெற்று வெளிவருகின்ற இளம் ஆலிம்களுக்கு இது மிகவும் பயனுள்ள வாய்ப்பாக அமையும்.

 இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அரபுக் கல்லூரிகளின் வளர்ச்சி மிகவும் மேலோங்கிக் காணப்படுகிறது எனலாம். ஏனெனில் தற்காலத்தில் அரபுக் கல்லூரிகளிலிருந்து வெளிவருகின்ற இளம் ஆலிம்கள் இருவகைக் கல்விகளையும் கற்றுள்ளனர். அவர்களுக்கு ஆங்கிலம், அரபு, தமிழ் மும்மொழிகளும் தெரியும். ஆகவே நம் சமுதாயத்தின் செல்வர்கள், இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பயனுள்ள சேவைகளை அந்த இளம் ஆலிம்கள் செய்ய அவர்களுக்கு வடிகால் அமைத்துக்கொடுப்பது இன்றியமையாததாகும்.

ரஹ்மத் பதிப்பகம், ஆயிஷா பதிப்பகம், ஆலிம் பப்ளிகேஷன் எனச் சில நிறுவனங்களே மொழிபெயர்ப்புத் துறைக்காகச் செயல்பட்டுவருகின்றன; அரபு நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன. அவற்றுள் சில நிறுவனங்கள் தனிமனிதராலும் சில நிறுவனங்கள் புரவலர் குழுவாலும் இயங்கி வருகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மிகக் குறைவாக உள்ள இவை போதா. இன்னும் பலர் முன்வர வேண்டும்.  நூலகச் சேவையைத் தொடங்குவதன்மூலம் நம்முள் பலர் தம் பொருளாதாரத்தை மறுமைக்கான வங்கியில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் முன்வர வேண்டும். 

உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய காலத்தில்தான் அவர்கள்தம் கட்டளைப்படி முதன்முதலாக ஹதீஸ்கள் தொகுக்கப்பெற்று நூல்களாக வெளிவந்தன. அன்று முதல் இன்று வரை ஏதாவது ஒரு வகையில் ஹதீஸ் நூல்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அல்லாஹ் யாருக்கு வாய்ப்பளித்தானோ அவரெல்லாம் இத்துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் தம் பொருளாதாரத்தைச் செலவு செய்து மக்கள் பயன்பெறத்தக்கத் தொண்டுகளைச் செய்துவருகிறார்கள். 

ஒரு புறம் நூல்கள் படிக்கும் பழக்கம்  குறைந்து காணப்படுவதைப்போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், உண்மையில் படிப்போர் படித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்; நூல்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிற புத்தகக் காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்கள் விற்பனை செய்யப்படுவதே அதற்கான சான்றாகும்.  அதேநேரத்தில் நம் சமுதாய இளைஞர்கள் ஏதேதோ நூல்களைப் படிப்பதைத் தவிர்க்கும்பொருட்டு,  அவர்களை இஸ்லாமிய நூல்களையும் நபிமொழித் தொகுப்பு நூல்களையும் படிக்கத் தூண்டுவதும் அதற்கான வழிவகை செய்வதும் நம் சமுதாயச் செல்வர்கள்மீது தலையாய கடமையாகும். 

ஒரு முஸ்லிம் நடத்தக்கூடிய தனியார் நூலகம் மிக மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணும் அளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படலாம். ஒவ்வோர் ஊரிலும் மஸ்ஜித்களிலும் பொது இடங்களிலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்கள் படிப்பதற்கேற்ற நூல்களைத் தனிப் பிரிவாக வைத்து,  அவர்கள் மட்டும் வாசிக்கத் தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் தலைகுனிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால் இந்தச் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கிவிடும் என்பது முற்றிலும் உண்மை. 

எனவே முஸ்லிம் செல்வர்கள் தற்காலத்தில் முதலீடு  செய்ய வேண்டியது நூலகத் துறை, மொழிபெயர்ப்புத் துறை, பதிப்புத்துறை ஆகியவையாகும். செல்வர்களே, உங்கள்  செல்வம் உங்களுக்கு மட்டும் உரியதன்று. அதை எல்லோரும் பயன்பெறும் வகையில் செலவு செய்யுங்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற அள்ளி வழங்குங்கள். நாளை மறுமையில் அவையெல்லாம் பெருமளவு முதிர்வுத்தொகையாக-நன்மைகளாகக் கிடைக்கும் என்பதை மறவாதீர். 

================








கருத்துகள் இல்லை: