நிம்மதியாக வாழவிடுங்கள்!
-------------------------------------
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. வாழும் காலத்தில் பல்வேறு இன்னல்களையும் இடுக்கண்களையும் துன்பங்களையும் சிரமங்களையும் ஒவ்வொரு மனிதனும் சந்தித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்காது. துன்பமும் இன்பமும் இரவு-பகலைப் போல் மாறி மாறி வந்துகொண்டேதான் இருக்கும். அவ்வாறு நம் அனைவருக்கும் ஒரு சோதனையாக வந்ததுதான் கொரோனா தீநுண்மி ஆகும்.
இதைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. இது ஒரு சளி நோய்தான்; உயிர்க்கொல்லி நோய் இல்லை. இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதைப் பலரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. சிலர் மட்டுமே துணிவாகச் சொல்லி மக்களின் மனங்களில் தைரியமூட்டுகிறார்கள். அதற்கான சான்றாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் இன்றைய (21.05.2021) எண்ணிக்கை (2, 23, 55, 440) இரண்டு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து ஐம்பத்தைந்து ஆயிரத்து நானூற்று நாற்பது ஆகும். இச்செய்தி எந்த நாளிதழிலும் அதன் முதல் பக்கத்தில் இடம்பெறாது. இது இன்றைய தினமணி நாளிதழின் 8ஆம் பக்கத்தில் இடம்பெற்ற செய்தியாகும்.
இச்செய்தி நமக்குத் தெரிவிப்பது என்ன? இது ஓர் உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் குணமாகி வந்துவிடலாம் என்பதைத்தான். இதைத் தெளிவாகச் சொல்ல ஏன் மருத்துவர்களும் அரசியல்வாதிகளும் தயங்குகின்றார்கள்?
ஆகவே கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் பீதியடைய வேண்டாம். உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணமடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கையை இயல்பாகத் தொடருங்கள்.
எனக்குத் தெரிந்து பலர் குணமடைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனை, இரத்த அழுத்தம், கேன்சர், நீரிழிவு முதலான நோய்கள் உள்ளோர்தாம் கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் இறந்துபோகின்றார்கள். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து தத்தம் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சித்தா, யூனானி முதலான ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவோர் அனைவருமே குணமடைந்துவருகின்றார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா குறித்து நம்முடைய பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “கொரோனா என்பது குறிப்பிட்ட காலத்தில் முடிந்துவிடுவதன்று. இதன் அச்சுறுத்தல் நீண்ட காலம் இருக்கும்.” (21 05 2021 தினமணி) ஆம்! இது நீண்ட காலம் நீடிக்கக்கூடிய நோய்தான். அதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் சளியும் இருமலும் காய்ச்சலும் பன்னூற்றாண்டுகளாக மனிதர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருப்பவையே.
எனவே சாதாரண சளிநோயாக உள்ள தீநுண்மியை உயிர்க்கொல்லிநோயாகச் சித்திரிப்பதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வேலையை விட்டுவிட்டு, சிகிச்சை பெற்று, குணமடைந்தோரை நேரடியாகப் பேட்டி எடுத்து அதை ஒளிபரப்ப வேண்டும். சிகிச்சை எங்கெல்லாம் மேற்கொள்ளப்படுகிறதோ அந்த விவரங்களையும் வெளியிட வேண்டும். இதைச் செய்தால், அதுதான் இன்றையக் காலத்தில் உங்களின் பொன்னான சேவையாகும்.
யாரோ சிலர் பரிந்துரைத்த ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து எனக் கருதி மக்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள். அம்மருந்தை எளிய முறையில் மக்கள் வாங்குவதற்கான ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்துகொடுத்தது. திடீரென உலக சுகாதார நிறுவனம் (WHO) ரெம்டெசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கானது கிடையாது என்று நீக்கியுள்ளது. ஆக இந்த நோய்க்கான மருந்து எது என்பதிலேயே மருத்துவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது கண்கூடு.
மேலும் தற்போது மக்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி குறித்து, நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாட்டு வைராலஜிஸ்ட் டாக்டர் பேராசிரியர் லுக் மாண்டோக்னிர் கூறுவதாவது: “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா தடுப்பூசியைப் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு. கொரோனா தடுப்பூசியைப் பெருமளவு மக்களுக்குச் செலுத்துவது அறிவியல் தவறு மட்டுமல்ல, மருத்துவத் தவறுமாகும். மேலும் உலகெங்கும் கவனித்துவிட்டேன். கொரோனா தடுப்பூசி போடத் துவங்கியபின், உருமாறிய தீவிர கொரோனா வருவதும் பெருந்தொற்று அதிகமாவதும் மரணங்கள் கூடுவதும் நடக்கிறது...” (Source: airfoundation.com)
இவரின் கூற்றிற்கிணங்க அண்மைக் காலமாக கருப்புப் பூஞ்சைத் தொற்று பரவத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆக உண்மைகள் ஒரு பக்கம் கசிந்துகொண்டிருக்க, சிகிச்சை முறைகளோ பற்பல விதங்களில் வரம்புமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பதால் எது சரியான சிகிச்சை முறை என்பது தெரியாமல் மக்கள் பயந்துபோய்தான் இருக்கின்றார்கள்.
ஆகவே கொரோனா குறித்து அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, மக்களைச் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ விட்டுவிடுங்கள். தத்தம் பாதுகாப்பை அவரவர் பார்த்துக்கொள்வார்கள். மீண்டும் மீண்டும் பொதுமுடக்கம் போட்டு மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க வேண்டாம். பொதுமுடக்கம் ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்பதே பெரும்பாலோரின் கருத்தாகும். அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிகிச்சை முறைகளையும், எங்கெங்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் வேண்டுமானால் பொது மக்களுக்கு அறிவிப்புச் செய்துகொண்டே இருங்கள். அதுவே மக்களுக்குப் பயனளிக்கும்.
அன்புடன்
முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
21 05 2021
குறிப்பு: என்னுடைய இப் பதிவை வாட்ஸ்அப் குழுமத்திற்குப் பகிர்பவர்கள் ஆதாரங்களாக நான் இணைத்துள்ள நாளிதழ் நறுக்கல்களையும் சேர்த்து அல்லது இந்த பிளாக் இணைப்போடு பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக