நூல் வெளிவந்துவிட்டது
--------------------------------
நூல்: அல்குர்ஆன் ஓர் ஆழ்நிலைப் பார்வை
நூலாசிரியர்: கெக்கிராவ ஸஹானா
பக்கங்கள்: 168
விலை: Rs 90/-
வெளியீடு: புதிய சமுதாயம் பதிப்பகம், கோயம்புத்தூர்
நூல் கிடைக்குமிடங்கள்:
அமீர் அல்தாப் (கோவை)
தொடர்புக்கு: 97876 75791
சாஜிதா புக் சென்டர், மண்ணடி, சென்னை.
தொடர்புக்கு: 98409 77758
ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.
தொடர்புக்கு: 94440 25000
----------------------
இந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை
உங்கள் பார்வைக்கு...
திருக்குர்ஆன் ஓர் அறிவுப்பெட்டகம்; வரலாற்றுச் சுரங்கம். யார் எக்கோணத்தில் அணுகினாலும் அவரின் சிந்தனைக்கேற்ப விரிந்துகொடுக்கின்ற நெகிழ்வுத்தன்மை கொண்டது. யார் எது குறித்து ஆய்வு மேற்கொண்டாலும் அவருடைய ஆய்வுக்கான தீர்வும் ஆய்வுமுடிவும் அதில் கிடைக்கும்.
அந்த வகையில் சகோதரி ஸஹானா பெண்களைப் பற்றியும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் பெண்ணை அல்லாஹ் எவ்வளவு உயர்வாக மதிக்கச் சொல்லியிருக்கிறான் என்பது குறித்தும் ஓர் ஆய்வே நடத்தியிருக்கிறார். அந்த ஆய்வின் முடிவு அவருக்குச் சாதகமாக அதில் கிடைக்கப்பெற்றதை மகிழ்வோடு இந்நூல்மூலம் நம்முன் கொண்டுவந்து வைக்கிறார். சின்னச் சின்ன 47 தலைப்புகளில் சில பக்கங்களுக்குள், தான் சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துவைத்து, சீராக முடிக்கிறார். படிக்க எளிதாகவும் செம்மையாகவும் அமைத்துள்ளார்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பலவகை அணிகளைப் பயன்படுத்தியிருந்தாலும் மக்கள் தம் பேச்சுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிற உவமை அணியையே பல்வேறு இடங்களில் பயன்படுத்தியுள்ளான். அதனால் குர்ஆன் சொல்லவருகின்ற கருத்தை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் குறிப்பிடுகிறார்.
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற குர்ஆனின் கூற்றை (3: 195) மேற்கோள் காட்டுகிறார். திருமணம், மணமுறிவு, இத்தா-காத்திருப்புக்காலம், மாதவிடாய்க் காலம், பிள்ளைப்பேறு, பாலூட்டுதல் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த பல்வேறு தகவல்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பிற சமுதாய மக்களிடம் பிரச்சனைக்குரியவை; விதிகள் வகுக்கப்படாதவை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் மேற்கண்ட அனைத்திற்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனால் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. எல்லா உரிமைகளையும் எளிதாகப் பெற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் உரிமைகளை உரிய முறையில் கொடுக்கச் சொல்லி குர்ஆன் ஆண்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதனால் அவையெல்லாம் செம்மையாகவும் சீராகவும் நடைபெறுகின்றன.
சகோதரி ஸஹானா ஒரு பெண்ணாக இருந்து, தனக்குச் சாதகமாக குர்ஆன் என்ன கூறுகிறது என்று ஆய்வு செய்தபோது, அது பெண்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் சாதகமாக சமநீதி வழங்குவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். திருக்குர்ஆனின் கருத்துகளைத் தாய்மொழியில் படித்து உணர்கின்றபோது குர்ஆனை ஓரளவேனும் உணர முடியும். ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை என்பதற்காக, காலம் முழுவதும் பொருள்புரியாமல் வெறுமனே ஓதிக்கொண்டிருந்தால் எப்போதுதான் இறைவனின் அற்புதக் கருத்துகளைப் புரிந்துகொள்வது? எப்போதுதான் குர்ஆனை ஆய்வு செய்ய முற்படுவது? ஆம். குர்ஆன் தன்னைச் சிந்திக்குமாறு பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்கிறது. எனவே திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுமாறு பணிக்கிறார்.
ஐந்து பக்கங்கள் அரபியில் பொருள்புரியாமல் ஓதினாலும் அதில் ஒரு பக்கமாவது அதற்கான தமிழாக்கத்தைப் படித்தால், அல்லாஹ் கூறியுள்ள கருத்தை உணர்ந்துகொள்ளலாம்; புரிந்துகொள்ளலாம். குறிப்பாக நாம் அன்றாடம் தொழுகையில் ஓதிவருகின்ற அத்தியாயங்களுக்கான பொருளைப் படித்துத் தெரிந்துகொண்டால் தொழுகையில் ஓர் உயிரோட்டத்தைக் காணலாம் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை வலியுறுத்தியே இந்நூலாசிரியை சகோதரி ஸஹானா எழுதியுள்ளார்.
‘பெண்கள்’ என்ற பொருளில் ‘அந்நிஸா’ என்ற அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. அதில் பெண்கள் குறித்த பல்வேறு சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. சொத்துரிமை, திருமணம், விவாகவிலக்கு, இத்தா-காத்திருப்புக்காலம் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மர்யம்’ என்ற அத்தியாயம் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக பெண்களுக்கெனத் தனிச்சிறப்பையும் உயர்வையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கூற்று ஒரு புறம் இருந்தாலும் இது உலக வாழ்க்கையில்தான். ஆனால் ஒரு பெண் தன் கணவரைவிட உயர்வையும் மேன்மையையும் அடைய முடியும். எப்படி? ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்வதோடு, படைத்த இறைவனுக்கான கடமைகளையும் செய்கிறாள்; மேலும் கணவனைவிட அதிகமான நேரம் குர்ஆன் ஓதுதல், இறைத்தியானம் (திக்ர்) செய்தல், ஏழைக்கு உணவளித்தல் உள்ளிட்ட எல்லாவித நல்லறங்களையும் செய்கிறாள்; உபரியான வணக்கங்கள் பலவற்றைச் செய்கிறாள்; அல்லாஹ் திருப்தியுறும்படி வாழ்க்கை நடத்துகிறாள் என்றால், அப்போது அவள் தன் கணவனைவிட அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்துவிடுகிறாள்.
ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் இந்தச் சமுதாயத்திற்குப் பங்களிப்புச் செய்கிறாள். தாயாக, தாரமாக, சகோதரியாக, அண்ணியாக, மாமியாக, மகளாக முதலான பல்வேறு பரிமாணங்களில் பங்களிப்புச் செய்தாலும் தாய் என்ற உறவே ஒவ்வோர் ஆணுக்கும் தவிர்க்க முடியாத உறவு. அந்த உறவில் ஓர் ஆண் தன் தாய்க்கு ஆற்றுகின்ற பணி மகத்தானது. எனவே ஒவ்வோர் ஆணும் தாயைப் போற்ற வேண்டிய முறைப்படி போற்றி, ஆற்ற வேண்டிய பணிவிடைகளை ஆற்றி, அந்தத் தாயின் பிரார்த்தனையைப் பெற்றுவிட்டால் அவனுக்கு அதுவே ஈருலக நற்பாக்கியத்தையும் பெற்றுத் தந்துவிடும். அல்லாஹ்வின் அருளால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தில் இடம்பிடித்து நிரந்தரமான வாழ்க்கை வாழலாம்.
இவ்வாறு பெண்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு கோணங்களில் சின்னச் சின்னத் தலைப்புகளில் சிறுசிறு கட்டுரைகளாக எடுத்துரைக்கிறார். எளிமையான வாக்கிய அமைப்போடு நேர்த்தியாகவும் திறமையாகவும் இந்நூலை எழுதியுள்ளார். ஒரு நாவலைப் போன்ற ஓட்டம் இந்நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. இவ்வளவு திறமையாக இந்நூலை எழுதிய ஆசிரியை சகோதரி ஸஹானா இன்று நம்மோடு இல்லை. நல்ல நூலை எழுதிய ஸஹானாவை நான்கு வார்த்தைகள் புகழ்ந்து பேசி, அவரது முயற்சியைப் பாராட்டலாம் என்றால் அத்தகைய வாய்ப்பை அவர் நமக்கு வழங்கவில்லை. இந்நூலை எழுதிய ஸஹானா திடீரென இறந்துவிட அவர்தம் சகோதரி ஸுலைஹா தன் மூத்த சகோதரியின் முயற்சியை மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து சமர்ப்பிக்கும் பணியைச் செவ்வனே செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
இந்நூலை எழுதிய ஸஹானாவுக்கு இதுவே கடைசி நூலாக அமைந்துவிட்டது. எனவே இந்நூல்மூலம் கிடைக்கின்ற நன்மைகளை அல்லாஹ் அவருடைய மண்ணறைக்குச் சேர்த்து வைத்து, அவருடைய பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அவருக்கு இடமளிப்பானாக.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
=================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக