வியாழன், 22 அக்டோபர், 2020

துன்பம் சகிப்போம்_

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

நாம் அன்றாடம் பல்வகை மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயச் சூழலில் சிக்குண்டுள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்புடையவர்; ஒவ்வோர் இயல்புடையவர். நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டு நமக்கெதிராகச் செயல்படுபவர்; நம்மிடம் கடன் பெற்றுக்கொண்டு நம்மை எதிர்த்துப் பேசுபவர்; நம்மைச் சார்ந்து வாழ்ந்துகொண்டு நமக்கே இடையூறும் இடைஞ்சலும் கொடுப்பவர்; அண்டைவீட்டில் வாழ்ந்துகொண்டு நமக்குத் தொல்லை கொடுப்பவர்; நம் உறவினராக இருந்துகொண்டு நமக்குத் துன்பமிழைப்பவர்#இப்படிப் பல்வேறு வகையினரைச் சகித்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

 

துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போதே அதனுள் பொறுமை என்ற பண்பு பொதிந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமெனில் பொறுமை வேண்டும். நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் துன்பமும் இடையூறும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நம் உறவினர்களும் நமக்கு எதிராகச் செயல்படலாம்; நம்மோடு சேர்ந்து வாழ்கின்ற மனைவியே நமக்குத் தொல்லையாக இருக்கலாம். இதையெல்லாம் சகித்துக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

சகித்துக்கொள்ளும் பண்பு இல்லையென்றால் நாள்தோறும் துன்பமே தொடரும். சான்றாக, நம் அண்டைவீட்டார் நமக்கு அவ்வப்போது தொல்லை கொடுக்கும்போது அதைச் சகித்துக்கொள்வதால் அது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக மாறிவிடுகிறது. மாறாக, சகித்துக்கொள்ள மனமில்லாமல், எதிர்த்துப் பேசவோ திட்டவோ செய்தால், அவர் தம் தவறை உணரப் போவதில்லை. நமக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவார். அவ்வளவுதான். அதன்பின் அக்குடும்பத்தாருள் யாரேனும் நம் வீட்டைக் கடந்து செல்லும்போது நாமும் அவரும் ஒருவருக்கொருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டுதான் செல்ல நேரிடும். அது அவ்வாறே தொடரும். அங்கு இருக்கும் வரை அது ஒரு தொல்லையாகவும் துன்பமாகவும் மாறிவிடும்.

 

நம் உறவினர் ஒருவர் நமக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறார். அதை நாம் சகித்துக்கொள்கிறோம். அவ்வாறு சகித்துக்கொள்வது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக அமைந்துவிடும். அதேவேளையில் நாம் அவரை எதிர்த்துப் பேசினாலோ எதிர் கேள்வி கேட்டுச் சண்டைபோட்டாலோ அவரும் நம்மை எதிர்த்துப் பேசுவார். அது சண்டையாக மாறும். பின்னர் அவர் நம்மோடு பேசுவதை நிறுத்திக்கொள்வார். திருமணம் உள்ளிட்ட நற்காரியங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைகின்றவேளையில் நம்மைப் பார்க்கும் அவர் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார். அது காலம் முழுக்க நமக்கொரு துன்பமேயாகும்.

 

அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு தம் உறவினரான மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அவ்வப்போது உதவித்தொகை வழங்கிவந்தார்கள். தம் மகள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறித்த அவதூறுச் செய்தி பரவியபோது அதில் அவருக்கும் பங்கிருந்தது. அதையறிந்த அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, இனி நான் அவருக்கு உதவித்தொகை வழங்கமாட்டேன் என்று கூறிச் சத்தியம் செய்துவிட்டார்கள்.  அவ்வாறு உதவித்தொகை வழங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தது தவறு; மாறாக அவரை மன்னித்து மறந்துவிட வேண்டுமென்று உணர்த்தும் வகையில் அல்லாஹ் கீழ்க்காணும் வசனத்தை அருளினான்:

 

உங்களுள் வசதியுடையவரும் (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையவரும், தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை அவர்கள் மன்னித்துப் புறக்கணித்துவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (24: 22)

 

ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்ற தம்பதியருள் மனைவியோ கணவனோ ஒருவர் மற்றொருவருக்குத் தொல்லையோ துன்பமோ கொடுக்கின்றபோது அதை அவர் சகித்துக்கொள்ள வேண்டும். கணவனின் கட்டளைக்குக் கட்டுப்படாத மனைவி அல்லது அடிக்கடி கோபப்படுகின்ற மனைவி அல்லது எப்போதும் எதிர்த்துப் பேசிக்கொண்டே இருக்கின்ற மனைவியைப் பெற்றுள்ள கணவன் அதைச் சகித்துக்கொண்டால் அது அவனுக்கு நன்மையாக மாறிவிடும். அதேநேரத்தில் அவளை எதிர்த்துப் பேசவோ அடிக்கவோ செய்தால் அது ஒரு தீராப் பிரச்சனையாக ஆகிவிடும்.

 

காலம் முழுக்க வாழப்போகின்ற வாழ்க்கையில் மனைவி-கணவன் பிரிக்க முடியாத அங்கம். ஆனால் அவள் நம்மிடம் பேசாமலோ நம்மைவிட்டுப் பிரிந்து தனியாக வாழ நேரிட்டாலோ அது அவளுக்கும் தொல்லை, நமக்கும் தொல்லை. அவளைக் கண்டித்துத் திருத்த முனைந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை. எதிர்த்தே பேசிக்கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் சகித்தல் என்ற நற்குணம்தான் அக்கணவனுக்குப் பயனளிக்கும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை (அப்படியே) நீ விட்டுவிட்டால், அவளிடம் கோணல் இருக்கவே அவளிடம் அனுபவிக்க வேண்டியதுதான். (நூல்: திர்மிதீ: 1109) 

 

எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிற கணவனைப் பெற்றுள்ள மனைவி அவனுடைய தொல்லையை அல்லாஹ்விற்காகப் பொறுத்துக்கொண்டு சகித்து வாழ்கிறாள் என்றால் அது அவளுக்கு நன்மையாக மாறிவிடும். அதேவேளையில் அவனது தொல்லைகளைப் பொறுமையோடு  சகிக்க முடியாமல் பொங்கி எழுந்தால், அவள் அவனுடனான வாழ்க்கையை இழக்க நேரிடும். பின்னர் தான் பெற்ற குழந்தைகளோடு தாய் வீட்டில் தஞ்சமடைந்து, நாளடைவில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும் நிலையும் ஏற்படும். குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுமணம் என்பது  இயலாத ஒன்று. காலம் முழுக்க அவதிப்படும் நிலை அந்த அபலைப் பெண்ணுக்கு ஏற்படலாம். 

 

சகித்தல்தான் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு. அந்தப் பண்பு இல்லையென்றால் நாம் எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றத் தொடங்கினால் நம் வாழ்க்கையே துன்பமானதாக மாறிவிடும்.

 

பிடிவாதக்காரியான மனைவியைவிட்டுப் பிரிந்துவிடலாம் என்றெண்ணி ஒரு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றால் மற்றொரு துன்பம் நம்மைத் துரத்தும். அதற்குப் பதிலாக அந்தத் துன்பத்திலேயே  இருந்துவிட்டுப் போய்விடலாம். சகிப்புத்தன்மையில்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றால், பிள்ளைகளை அவள் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவாள். அப்பிள்ளைகளைப் பார்க்க அவள் வீடு தேடி நாம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவர் சார்பாக யாரேனும் ஒருவர் அழைத்து வருவார். அவரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். இப்படியே அத்துன்பம் தொடரும்.

 





அலுவலகத்தில் பணியாற்றுகின்ற சக ஊழியர்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடுகின்றபோது  அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் நமக்கெதிராகச் செயல்படத் தொடங்கிவிடுவான். நமக்கெதிராக மேலாளரிடம் எதையாவது சொல்லி பிரச்சனையை ஏற்படுத்த முனைவான். சின்னச் சின்ன விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவான். அதனால் அந்த அலுவலகத்தில் நம்முடைய பணி பாதிக்கப்படும். இறுதியில் பணியிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க சகித்தல்தான் ஒரே வழி.

 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாழ்வில் எதிர்கொண்டு அனுபவித்த பல்வேறு தருணங்களில் சகிப்புத்தன்மை ஒன்றையே தமது பலமான ஆயுதமாகக் கொண்டிருந்தார்கள். சகித்துக்கொண்டே இடும்பைக்கு இடும்பை தரும் விதமாக வாழ்ந்தார்கள். துன்பமே அவர்களைக் கண்டு துன்பப்படும் அளவிற்குச் சகித்தார்கள். அதனால் அவையெல்லாம் அவர்களின் உயர்வுக்கும் கண்ணியத்திற்குமே காரணமாக அமைந்தன.

 

ஏனென்றால் சகித்தல் என்பது மனிதர்களின் பண்பு மட்டுமல்ல, அது அல்லாஹ்வின் அழகிய பண்புகளுள் ஒன்றாகும். அவனால் படைக்கப்பட்ட அடியார்கள் அவனுக்கு மாறு செய்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றாமல் அவனைப் புறக்கணிப்பதோடு பாவமும் செய்துகொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவன் சகித்துக்கொண்டு அவரவர்களின் தவணைக்காலம் வரை விட்டுவைத்திருக்கிறான். அத்தோடு நாள்தோறும் அவர்களுக்கு அருள்புரிந்துகொண்டிருக்கிறான். ""அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும் சகிப்பவனாகவும் இருக்கின்றான்.'' (2: 225)

 

ஆக துன்பங்களையும் தொல்லைகளையும் கண்டு சகித்துக்கொண்டு வாழ்கின்ற மனிதனைக் கோழை என்று எண்ண வேண்டாம். துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்வதால் நாம் உயர்வடைவோமே தவிர தாழ்ந்துவிட மாட்டோம். எனவே நம்மால் இயன்ற வரை பொறுமையோடு சகிப்போம். அதன் பிரதிபலன் இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகவே இருக்கும் என்பதை உறுதிகொள்வோம்.

=========================

 

கருத்துகள் இல்லை: