ஏ.எம்.முஹம்மது
ஷப்பீர் அலீ ஃபாஸில் பாகவி
நினைவேந்தல்
கடந்த 22.09.2020 (04.02.1442) அன்று வேலூர் கொணவட்டத்தில் அமைந்துள்ள ரஷீதிய்யா அரபுக் கல்லூரியில் மர்ஹூம் ஏ.எம். முஹம்மது ஷப்பீர் அலீ ஹள்ரத் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அவர்தம் மாணவர்களால் நடத்தப்பட்டது.
அதிகாலைத்
தொழுகைக்குப்பின் வேலூர் மக்கா மஸ்ஜிதில் திருக்குர்ஆன் ஓதி ஈஸால் ஸவாப் செய்யப்பட்டது.
கோவை அ. அப்துல் அஸீஸ் பாகவி, மர்ஹூம் ஹள்ரத் அவர்கள் குறித்த நினைவலைகளைப்
பகிர்ந்துகொண்டார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் டாக்டர்
மௌலவி அன்வர் பாதுஷா உலவி துஆ ஓதினார். அதன்பின் அவர்தம் பிரேதம் அடக்கம் செய்யப்பட்டுள்ள
மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்யப்பட்டது. அங்கு அத்திக்கடை வாஹித் பாத்திமா அரபுக்கல்லூரி
முதல்வர் மௌலவி ஃபவ்ஸ் அப்துர் ரஹீம் பாகவி துஆ ஓதினார். அங்கிருந்து நடைப்பயணமாகச்
சென்று, அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப்
பல்கலைக் கழக நிறுவனர் ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் -நவ்வரல்லாஹு மர்கதஹு- அவர்களை ஸியாரத்
செய்தனர். அங்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி காஜா முயீனுத்தீன்
பாகவி துஆ ஓதினார்.
பின்னர் இரண்டாம் அமர்வு ரஷீதிய்யா அரபுக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் துவங்கியது. இக்கல்லூரியின் முதல்வர் மௌலவி காரீ இம்தியாஸ் அஹ்மது கிராஅத் ஓதி அவையைத் தொடங்கி வைத்தார். ஏரல் பீர் முஹம்மது பாகவி கீதம் இசைத்தார். சையது அஹ்மது அலீ பாகவி வரவேற்புரையாற்றினார். அவர்தம் உரையில் கூறியதாவது: தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்து மறைந்தோர் எப்போதும் மக்களால் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் நம் ஹள்ரத் அவர்கள் தம் மாணவர்களால் என்றென்றும் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கு இந்த அரங்கே சாட்சி.
பின்னர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையுரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: ஒரு தடவை வேலூர் அண்ணா கலையரங்கில் தேசிய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் சமயத்தலைவர்கள் உரையாற்றினார்கள். அதில் இந்து, கிறிஸ்தவத் தலைவர்கள் உரையாற்றியபின், ஆரணி தொகுதி எம்எல்ஏ சின்னக்குழந்தை பேசினார். அதில் அவர், “இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று நாம் மதங்களால் பிளவுண்டு கிடக்கிறோம். தேசிய ஒருமைப்பாடு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்தார்.
பின்னர் முஸ்லிம்கள் சார்பாக யாரையாவது ஒருவரைப் பேச வைக்க வேண்டுமே என்பதற்காக, அங்கு பார்வையாளராக அமர்ந்திருந்த ஹள்ரத் அவர்களை, அவர்களின் தலைப்பாகை மூலம் அடையாளம் கண்டுகொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களைப் பேச அழைத்தார்கள். “எனக்கு முன்னர் பேசியவரின் பெயர்தான் சின்னக் குழந்தை என்று நினைத்தேன். அவருடைய பேச்சும் குழந்தைத்தனமாகவே இருந்தது” என்று கூறித் தமது பேச்சைத் தொடங்கினார்கள். “மதத்தலைவர்களைக் கண்ணியப்படுத்துவதற்காக அழைத்துவிட்டு, எங்களை இழிவுபடுத்தலாமா?” என்று கேட்டுவிட்டு தேசிய ஒருமைப்பாடு என்றால் என்னவென்று மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.
“இந்தியா-ஜப்பான் இரு நாடுகளுக்கிடையே
விளையாட்டுப்போட்டி நடக்கிறது. அதில் இந்தியா வெற்றிபெற்றவுடன் தேசப்பற்றோடு அனைவரும்
கைதட்டி மகிழ்கிறோமே அது தேசிய ஒருமைப்பாடு. சிங்கப்பூரில் நான் தமிழில் பேசியவாறு
நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை எதிரே சந்தித்தவர் ஓர் இந்து. நான்
பேசும் தமிழைக் கேட்டுவிட்டு, என்னைக் கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டார்.
இது தேசிய ஒருமைப்பாடு...” என்று பேசப்பேச கைதட்டல்கள் ஓயவில்லை.
இரண்டாம் அமர்வின் முதல் பேச்சாளராக தோப்புத்துறை ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி, பேசும் கலை வளர்ப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர்தம் பேச்சில் கூறியதாவது: ஒரு தடவை ஹள்ரத் அவர்கள் ஒரு பெயிண்ட் கடை திறப்பு விழாவிற்குச் சென்றார்கள். “அல்லாஹ் தீட்டும் வண்ணத்தையே (நாங்கள் ஏற்போம்). அல்லாஹ்வைவிட மிகச் சிறந்த முறையில் வண்ணம் தீட்டுபவர் யார்?” என்ற குர்ஆன் (2: 138) வசனத்தில் தொடங்கி, அந்நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியால் வெண்மையாகவும் சில முகங்கள் துக்கத்தால் கறுத்து (வாடியு)மிருக்கும்.... (3: 106)
“யாவற்றையும் இரட்டை இரட்டையாகப் படைத்தவன்
தூயவன்” என்று அல்லாஹ் (36: 36) கூறுகின்றான்.
அப்படி இருக்கும்போது வண்ணங்கள் மட்டும் எப்படி பலவாக இருக்க முடியும்? என்று
கேட்டுவிட்டு, கருப்பு, வெள்ளை
ஆகிய இரண்டுதான் மூல வண்ணங்கள். மற்றவை அவற்றிலிருந்து பிறந்த குழந்தைகள்.
பசுமாட்டை அறுக்குமாறு இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, அந்தப் பசுவின் நிறமென்ன என்று கேட்டார்கள். தூய மஞ்சள் நிறம் என்று அல்லாஹ் பதிலளித்தான்...” என்ற வசனங்கள் உள்பட வண்ணங்கள் குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள அத்துணை வசனங்களையும் மேற்கோள் காட்டி முக்கால் மணி நேரம் உரையாற்றினார்கள். இடத்திற்கேற்ற சொற்பொழிவை நிகழ்த்துவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.
ஹள்ரத் அவர்கள் எங்களுக்கு அரபிப் பாடத்தோடு தமிழையும் கற்பித்தார்கள். சிலர் மேடையில் பேசும்போது, “நடாத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறுவதுண்டு. தமிழில் ‘நடாத்தி’ என்று சொல்லக்கூடாது. “நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றுதான் கூறவேண்டும் என்பார்கள்.
சின்னச்
சின்னத் தகவல்கள் சொல்வதில் வல்லவர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு காயல்பட்டணத்தில்
நடைபெற்றபோது, முன்னிலை வகித்த கல்வியமைச்சர் க. அன்பழகன்
பேசியபோது, “மதத் தலைவர்கள் மொழிக்கு முக்கியத்துவம்
கொடுப்பதில்லை” என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர் எழுந்து, “எங்கள் மார்க்கப் பெருந்தகை மௌலானா முஹம்மது
ஷப்பீர் அலீ ஹள்ரத் அவர்கள் இப்போது உரையாற்ற இருக்கின்றார்கள். அவர்களின் பேச்சைக்
கேட்டபின் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள்” என்றார்.
அதன்பின் ஹள்ரத் அவர்கள் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினார்கள். பின்னர் அவர்கள், “நான் என்
ஒரு மணிநேரப் பேச்சில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசியுள்ளேனா என்பதைக் கல்வியமைச்சர்
கூறட்டும். ஆனால் நீங்கள் பேசியபோது, ‘அகதிகள் முகாம்’ என்று சொன்னீர்கள்.
அவ்விரண்டு வார்த்தைகளும் அரபி. இருப்பினும் நீங்கள் பேசிய பேச்சில் இருந்த அவ்வார்த்தைகளை, நாங்கள்
வெண்பொங்கலில் சுவைக்காகப் போடப்படுகின்ற மிளகைப்போன்றுதான் பார்க்கிறோம்” என்று கூறி
அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் தமது பேச்சை முடித்தார்கள்.
அதன்பின் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர் எச். அப்துர் ரஹ்மான் பாகவி பேச்சுக் கலையின் தொய்வு எனும் தலைப்பில் பேசியதாவது: ஹள்ரத் அவர்கள் பிற பேச்சாளர்களைப் பாராட்டியுள்ளார்கள். அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள். “நிறைகளைப் பிறரிடம் சொல்லுங்கள்; குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என்று பெரு நிறுவனங்களில் எழுதி வைத்திருப்பார்கள். அதுபோலவே ஹள்ரத் அவர்கள் தம் மாணவர்களின் உயர்வை நாடி குறைகளைச் சுட்டிக்காட்டுவார்கள்.
நம்மவர்களின்
பேச்சில் தொய்வு ஏன்? கருத்துப் பஞ்சம். தேவையான குறிப்புகள்
இன்றிப் பேச நிற்கக் கூடாது. ஹள்ரத் அவர்கள், ஒரு மணி நேரம் பேசினாலும் இன்னும்
பேசுவதற்குத் தேவையான குறிப்புகளை வைத்திருப்பார்கள்.
ஒரு தடவை ஹள்ரத் அவர்களிடம் பேட்டியெடுப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது அவர்கள், “நான்
பேசிக்கொண்டே இருக்கிறேன்; உனக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொள்
அப்துர் ரஹ்மான்” என்று கூறிவிட்டு, அதன்பின்
தொடர்ந்து பேசினார்கள். கருத்துச் செறிவான பேச்சு. இரண்டரை மணி நேரம் பல்வேறு கருத்துகளை, வரலாற்று
நிகழ்வுகளை தொடர்ந்து பேசிவிட்டு, “போதுமா? இன்னும்
வேணுமா? அப்துர் ரஹ்மான்” என்றார்கள். நான் அசந்துபோய்விட்டேன்.
படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ், ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார்கள். தம்மருகே இருந்த ஒரு கூடையில் பேரீச்சம்பழம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டே படித்துக்கொண்டிருந்ததால் எவ்வளவு சாப்பிட்டோம் என்பதையே மறந்துவிட்டார்கள். அவ்வாறு படித்துக்கொண்டே இருந்தபோதுதான் அவர்களின் மரணமும் நிகழ்ந்தது. ஆக மரணம் வரை படித்துக்கொண்டே இருந்துள்ளார்கள்.
அதற்கடுத்து, சென்னை
பாலவாக்கம் பள்ளியின் இமாம் மௌலவி அபூபக்ர் உஸ்மானி ‘கருத்துத்
திரட்சியும் கற்பனை வளமும்’ எனும் தலைப்பில் பேசினார். அவர் தமது
பேச்சில் கூறியதாவது: கொடுக்கப்பட்ட தலைப்பை மையப்படுத்தி ஒரே நேர்க்கோட்டில் பயணித்து, அதற்கொத்த
கருத்துகளை வரிசைப்படுத்தி, சுருக்கமானதை விரிவாகவும் விரிவானதைச்
சுருக்கமாகவும் பேசுவதே கருத்துத் திரட்சி. சொல்லுகின்ற வரலாற்று நிகழ்வுகளை மக்கள்முன்
காட்சிப்படுத்துவதே கற்பனை வளம். இவ்விரண்டும் ஒரு பேச்சாளருக்கு இன்றியமையாதவை. இந்தத் தன்மைகள் ஹள்ரத் அவர்களிடம் இருந்தன.
நன்றாகப் படித்துவிட்டுத்தான் ஒரு பேச்சாளர் மேடையில் நிற்க வேண்டும். ஒரு தஃப்சீரையாவது முழுமையாக அவர் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு ‘கருத்தாளராக’ மிளிர முடியும் என்று ஹள்ரத் அவர்கள் கூறுவார்கள். கருத்துக்கு ஆணிவேர் குர்ஆன்தான். நாம் கூறும் கருத்துகளுக்கு வலுசேர்க்குமுகமாக, குர்ஆன் வசனங்களை அதற்கேற்ற இடத்தில் சேர்க்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஒரு கருத்தைச் சொல்லி அதைப் பலப்படுத்த குர்ஆன் வசனத்தை ஓதுவார்கள். “அல்லாஹ் தூய்மையானதையே விரும்புகிறான்” என்றும், “திண்ணமாக அல்லாஹ் நபிமார்களுக்கு எதைக் கட்டளையிட்டானோ அதையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிடுகின்றான்” என்றும் கூறிவிட்டு அதற்கு வலுசேர்க்குமுகமாக, “நபியே! நல்லனவற்றை உண்ணுங்கள்; நல்லதைச் செய்யுங்கள்” என்ற வசனத்தையும் “நாம் உங்களுக்கு வழங்கிய நல்லனவற்றை உண்ணுங்கள்” என்ற வசனத்தையும் ஓதினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையே நம் ஹள்ரத் அவர்களும் நமக்குக் கற்பித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடைந்துவிட்ட நேரம், மக்களெல்லாம் குழப்பத்தில் இருக்கின்றார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு, கையில் வாளை வைத்துக்கொண்டு, “யாராவது முஹம்மது இறந்துவிட்டார் என்று கூறினால் அவரது தலையை வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு சொற்பொழிவு மேடையில் ஏறி, “யார் முஹம்மதை வணங்கிக்கொண்டிருந்தாரோ நிச்சயமாக முஹம்மது இறந்துவிட்டார். யார் முஹம்மதுடைய இறைவனை வணங்கிக்கொண்டிருந்தாரோ, திண்ணமாக அல்லாஹ் எப்போதும் உயிரோடிருக்கிறான்” என்று கூறிவிட்டு, தமது கருத்துக்கு வலுசேர்க்குமுகமாக, “முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் வந்து சென்றுவிட்டார்கள்” என்ற இறைவசனத்தை (3: 144) ஓதினார்கள். இதைக் கேட்டதும் மக்களெல்லாம் மன நிம்மதியடைந்தார்கள். இந்த இறைவசனத்தைக் கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு, “அந்த வசனம் அப்போதுதான் இறங்கியது போலிருந்தது; அதைக் கேட்டவுடன் என் கையிலிருந்த வாள் தானாகக் கீழே விழுந்தது” என்று பிற்காலத்தில் கூறினார்கள்.
அதற்கடுத்து
சென்னை எழும்பூர் மலபார் பள்ளியின் இமாம் கொடுவாயூர்
மௌலவி எஸ்.என். ஜாஃபர் ஸாதிக் ஃபாஸில் பாகவி ‘தலைசிறந்த சமூகப் பேச்சாளர்கள்’ எனும் தலைப்பில் பேசினார். அவர் தம் சொற்பொழிவில் கூறியதாவது:
நம் ஹள்ரத் அவர்கள், ஓத வருவதற்குமுன்னரே கேரளாவில் ஒரு
தலைசிறந்த பேச்சாளராக இருந்தார்கள். அவர்களின் பேச்சு வீரியமிக்கது. இவர் பேசினால்
நமது வாக்கு வங்கி சரிந்துபோய்விடுமோ என்று பயந்து, ஹள்ரத்
அவர்களைப் பேசவிடாமல் மேடையில் கல்லெறிந்து விரட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
ஒரு தடவை அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதரி, ஹள்ரத் அவர்களின் தந்தையிடம் வந்து, “உங்கள் மகனுக்குப் பேச்சுத்திறமையும் மொழிவளமும் உள்ளது. அவரை எங்களிடம் தந்துவிடுங்கள். நாங்கள் அவரை கம்யூனிஸ்ட் நாடான இரஷ்யாவுக்கு அனுப்பி கம்யூனிஸவாதியாக உருவாக்குகிறோம்” என்று கூறினார். அதைக் கேட்ட அவர்கள்தம் தந்தை, எங்கே நம் மகன் கடவுள் மறுப்புக்கொள்கையில் மாட்டிக்கொண்டுவிடுவானோ என்றெண்ணி, அதன்பின் ஓத அனுப்பிவைத்துவிட்டார்கள்.
ஹள்ரத்
அவர்கள் சொல்வதுண்டு. “எழுதிய எழுத்தாளன் மண்ணோடு மண்ணாக
மக்கிப்போன பின்னும் அவனது எழுத்து பிறரால் வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்” என்று கூறி, எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் ஊக்கம்தான் என்னைப் பத்திரிகைத் துறையில்
ஈடுபட வைத்தது.
அதன்பின் டாக்டர்
மௌலவி அல்ஹாஃபிழ் எம். சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி - முதல்வர் அல்ஹுதா அரபுக் கல்லூரி,
அடையாறு - ‘தலைசிறந்த இஸ்லாமிய மேடைப் பேச்சாளர்கள்’ எனும் தலைப்பில் பேசினார்.
அவர்தம் பேச்சில் கூறியதாவது: தலைசிறந்த தமிழக இஸ்லாமிய மேடைப் பேச்சாளர்கள் பலர் உள்ளனர்.
எனவே நான் 1990-2000 இடையே தலைசிறந்த
பேச்சாளர்களாக இருந்து, மறைந்துவிட்ட மேடைப்
பேச்சாளர்களை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன். ஏனென்றால்
மறைந்துவிட்ட நம் ஹள்ரத் அவர்கள் அக்காலக்
கட்டத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார்கள். ஆன்மிகம் சொட்டச் சொட்டப் பேசி
மக்களை அழ வைக்கவும் தெரியும். காரசாரமாகப் பேசி உணர்வுகளைத் தூண்டவும் தெரியும் அத்தகைய
பேச்சாளர்தாம் நமது ஹள்ரத் அவர்கள். சிங்கப்பூரில் பத்ருப்போர் குறித்து மூன்று நாள்கள்
6 மணிநேரம் பேசினார்கள். தொடக்கம்
முதல் இறுதி வரை முழுமையாகப் பேசினார்கள். அதுபோன்ற பேச்சை இது வரை யாரும் பேசியதில்லை.
திருப்பூர் சிராஜுல் முனீர் அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் எல்லோரும் பேசி முடித்தாயிற்று. ஹள்ரத் அவர்களிடம், “கல்வியின் சிறப்பு குறித்தெல்லாம் தாங்கள் பேச வேண்டாம். பட்டம் வாங்கும் மாணவர்களுள் ஒருவருக்கு கிட்னி ஃபெயிலியர். அவருக்கு நாளை ஆபரேஷன் நடைபெற உள்ளது. அவருடைய சிகிச்சைக்கான பொருளாதார உதவிக்காகத் தாங்கள் பேச வேண்டும்” என்று கூறப்பட்டது. “(நபியே) தானமாக எதைச் செலவழிப்பது என்று உம்மிடம் கேட்கின்றார்கள் (2: 215) என்று தொடங்கி, ஒரு மணி நேரம் பேசினார்கள். அவர்களுடைய பேச்சின் முடிவில் அம்மாணவரின் அறுவைச் சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடும் முடிந்துவிட்டது. ஆக திடீர்த் தலைப்பு கொடுக்கப்பட்டாலும் அது குறித்து குர்ஆன், ஹதீஸ்களை மேற்கோள் காட்டிப் பேசும் திறன்பெற்றவர் நம் ஹள்ரத் அவர்கள்.
80-90களில் மிகச் சிறந்த பேச்சாளர்களாக
வலம் வந்த சுல்தானுல் வாஇளீன் திருப்பூர் கமாலுத்தீன் ஹள்ரத், பள்ளப்பட்டி மணிமொழி மௌலானா, ஜமீன்
ஆத்தூர் அப்துல் அஸீஸ் ஹள்ரத் ஆகியோர் நினைவுகூரத்தக்கவர்கள். கையில் குர்ஆனை வைத்துக்கொண்டு
பல மணி நேரம் பேசக்கூடிய ஆற்றல்மிக்கோர்.
ஹதீஸ் அறிவிப்பாளர் பெயரோடு பேசுவார்கள். இலங்கை வானொலியில் கடந்த 30 வருடங்களாக
மணிமொழி மௌலானாவின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அவர்களின் பேச்சால் சமூகத்தில் மிகப்பெரும்
மாற்றம் ஏற்பட்டது எனலாம்.
90-2000 பேச்சாளர்களின் பொற்காலம் எனலாம். ஏகப்பட்ட பேச்சாளர்கள் தமிழகத்தில் வலம் வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கோர், ஏ.எம். முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஸில் பாகவி ஹள்ரத், பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத், எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹள்ரத், கலீல் அஹ்மது கீரனூரி ஹள்ரத், அய்யம்பேட்டை ஜியாவுத்தீன் ஹள்ரத், திருத்துறைப்பூண்டி உக்காஷா ஹள்ரத், பாளையங்காடு அப்துல் லத்தீப் ஹள்ரத், சித்தையன் கோட்டை தாஹா ஷரீஃப் ஹள்ரத், நீடூர் ஷம்ஸுல் ஹுதா ஹள்ரத், ஆவூர் அப்துஷ் ஷுகூர் ஹள்ரத், புரசைவாக்கம் நிஜாமுத்தீன் ஹள்ரத் முதலானோர் நினைவுகூரத்தக்கோர் ஆவர். ஆலிம்கள் வட்டத்தைத் தாண்டி பிற பேச்சாளர்களும் உண்டு. மிதவாதப் பேச்சாளராக சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத், தீவிரப் பேச்சாளராக வலம் வந்த பழனிபாபா-அஹ்மத் அலீ ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.
அதன்பின்
‘சன்மார்க்கச் சண்ட மாருதம் ஏ.எம். முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஸில்
பாகவி’ எனும் நூல் வெளியிடப்பட்டது. ஜாமிஆ
அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் முதல்வர் மௌலானா என்.பீ. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி நூலை
வெளியிட, முதல் பிரதியை மவ்லவி மலுக்கு முஹம்மது
இப்ராஹீம் தேவ்பந்தி பெற்றுக்கொண்டார். பிறகு மவ்லவி ஏ. முஹம்மது யூசுஃப் ஃபாஸில்
பாகவி, மவ்லவி காரீ இம்தியாஸ் அஹ்மது ரஷாதி, இன்ஜினீயர்
முஹம்மது சுல்தான், அல்ஹாஜ் இக்பால் உள்ளிட்டோர் அடுத்தடுத்த
பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
பின்னர் புதுப்பேட்டை மஸ்ஜித் மஹ்மூத் தலைமை இமாம் மவ்லவி ஹாஃபிழ் ஏ. பீர் முஹம்மது பாகவி நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் தம் பேச்சில் கூறியதாவது: 12 பிள்ளைகள், 33 பேரக் குழந்தைகள் எனப் பெருவாழ்வு வாழ்ந்த பெருமகனார் நம் ஹள்ரத். அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு மிகப் பெரும் பாடமாகும். இதிலுள்ள ஒவ்வொரு பக்கமும் ஒரு பாடத்தைச் சொல்கிறது.
கேரளாவிலுள்ள
பட்டாபிதான் ஹள்ரத் அவர்களின் சொந்த ஊர். ஒரு தடவை ஹள்ரத் அவர்கள் தம் தாயுடன் குடும்ப
உறுப்பினர்களோடு ஒரு காரில் பயணம் புறப்பட்டார்கள். திரும்பி வரும் வழியில் ஓரிடத்தில்
கார் நின்றுவிட்டது. ஹள்ரத் அவர்கள், “என்னாச்சு?” என்று கேட்டபோது, கார் ஓட்டுநர், “மௌலவி
பெட்ரோல் தீர்ந்தல்லோ” என்று கூறியுள்ளார். அதன்பின் வீட்டிற்கு
வந்து சேர்ந்துவிட்டார்கள். “மௌலவி பெட்ரோல் தீர்ந்தல்லோ” என்ற வார்த்தைகள்
அவர்தம் தாயாரைச் சிந்திக்கத் தூண்டின. அதனால் அவரது முகம் வாடி இருப்பதைக் கண்ட ஹள்ரத்
அவர்கள், விவரம் கேட்க, அவர்களின் தாய், “உன் சகோதரர்களை
முதலாளி என்றுதான் டிரைவர் அழைப்பார். ஆனால் உன்னை இன்று, ‘மௌலவி’ என்று அழைத்தாரே
அதைக் கவனித்தாயா? அதுதான் என்னைச் சிந்திக்க வைத்தது. மௌலவியாகிய
நீ மற்ற சகோதரர்களைப் போன்று சாதாரணமாக இருப்பதைக் கண்டுதான் நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.
அதன்பின்னரே ஹள்ரத் அவர்கள் அரபுக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் டாக்டர் மௌலவி அன்வர் பாதுஷா உலவி உரையாற்றினார். அவர் தம் பேச்சில் கூறியதாவது: நான் ஹள்ரத் அவர்களின் நேரடி மாணவர் கிடையாது. இருப்பினும் அவர்களிடமிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றிருக்கிறேன். கூத்தாநல்லூர் மன்பஉல் உலாவில் ஓதிக்கொண்டிருந்தபோது பூதமங்கலத்தில் ஒரு மீலாது விழாவில்தான் ஹள்ரத் அவர்களின் பேச்சை முதன்முதலில் கேட்டேன். அதில் அவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கவிதை வரிகளைச் சொல்லி அதற்கு அர்த்தம் சொன்னது என் நெஞ்சில் இன்றும் ஆணி அறைந்தார்போல் நிலைத்துநிற்கிறது.
நீண்ட நேரம் செல்பேசியில் பேசியவாறு நிறைய
அறிவுரைகளைப் பெற்றுள்ளேன். ஏனென்றால், “அறிவு என்பது ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல் போன சொத்து” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அதனடிப்படையில்
நான் அவர்களிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளேன்.
ஒரு தடவை ‘சிரிப்பும் அழுகையும்’ எனும் தலைப்பில் நான் பேச வேண்டி இருந்தது. இதை எந்தக் கோணத்தில் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, இது குறித்து ஹள்ரத் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா... என்ற வசனத்தின் முற்பகுதி மகிழ்ச்சி, இரண்டாம் பகுதி அழுகை அவ்வளவுதான்” என்று கூறினார்கள். அவர்களின் அந்த வார்த்தையைக் கேட்ட பிறகு, பயானுக்கான கரு கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.
அதன்பின்
கோவை அப்துல் அஸீஸ் பாகவி விருதை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசியதாவது: மேடைப் பேச்சில் சிறந்து விளங்குகின்ற ஆலிம்களுக்கும்
அரபுக் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுவோருக்கும் ஆண்டுதோறும் மர்ஹூம் முஹம்மது ஷப்பீர்
அலீ ஹள்ரத் அவர்களின் பெயரில் பேச்சாளுமை விருது வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். இந்த
விருதை இந்த ஆண்டு பெறுபவர் மௌலவி எஸ்.எஸ். அஹ்மது பாகவி அவர்கள்.
இவர் குறித்துச் சொல்ல வேண்டுமானால், முதன்முதலாகத் தமது பயானில் நாட்டு நடப்பைச் சேர்த்துப் பேசியவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தூத்துக்குடி அரபுக் கல்லூரி மாணவர்களும் ஊர்மக்களும் சேர்ந்து மிகப் பெரும் போராட்டம் செய்ய ஒன்று திரண்டு விட்டார்கள். அவ்வூர் டிஎஸ்பி அங்கு வந்து, “இன்று நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். சில நாள்கள் கழித்து, நீங்கள் ஊர்வலம் செல்ல நானே அனுமதி வாங்கித் தருகிறேன்” என்றார். அதேபோல் குறிப்பிட்ட நாளில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு ஆனது. அப்போது சிலர் ஆயுதங்களோடு வந்திருந்தார்கள். அதைப் பார்த்த நான் ஹள்ரத் அவர்களிடம் வந்து சொன்னேன். அப்போது அவர்கள் ஆற்றிய உரை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரும் அமைதியான முறையில் ஊர்வலம் செல்ல வழிவகுத்தது. தமது பேச்சால் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை படைத்த, பேச்சாளுமை மிக்க ஹள்ரத் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவது சாலப் பொருத்தம்.
பின்னர்
மலேசியா கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தலைமை இமாம் மௌலவி எஸ்.எஸ். அஹ்மது பாகவி அவர்களுக்கு
பேச்சாளுமை விருதை மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாஸில் பாகவி எனும் ராஹி ஃபிதாயி வழங்கினார்.
விருதாளர் சார்பாக மேலப்பாளையத்திலிருந்து வந்திருந்த அபுல் ஹசன் என்பவர் விருதைப்
பெற்றுக்கொண்டார். பின்னர் விருதாளர் தம் இருப்பிடத்திலிருந்தே காணொலிக் காட்சி
(ஸூம்) வழியாக ஏற்புரை நிகழ்த்தினார்.
அதிராம் பட்டணம் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹம்மது குட்டி ஹள்ரத் அவர்கள் கேரளாவிலிருந்து நம் ஹள்ரத் அவர்களைப் பற்றி செல்போன் மூலம் ஒலிவடிவில் பேசினார்கள். அது சபையோருக்கு ஒலிவாங்கியின் மூலம் ஒலிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில்
வேலூரைச் சார்ந்த கவிஞர் மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாஸில் பாகவி எனும் ராஹி ஃபிதாயி என்பார் எழுதிய தென்னிந்திய முஹத்திஸ்கள் எனும்
உர்தூ நூல் வெளியிடப்பட்டது. நூலை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது: வட இந்தியாவில்
மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் முஹத்திஸ்கள் வாழ்ந்துள்ளார்கள். தமிழ்மொழி ஆறாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையானது. ஏனெனில் முந்தைய இந்தியாவின் பல பகுதிகளில் கிடைத்த
கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. எனவே தமிழையும் படிக்க வேண்டும். அதேநேரத்தில் உர்தூ மொழியில்
பல்வேறு இஸ்லாமிய நூல்கள் உள்ளன. ஆகவே உர்தூ மொழியையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இறுதியில் அவைத் தலைவர் துஆவுடன் பகல் இரண்டு மணியளவில் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வுக்கு கேரளா, கர்னாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
-தகவல்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
துணைஆசிரியர், இனிய திசைகள் மாத இதழ், சென்னை.
================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக