புதன், 7 அக்டோபர், 2020

பாவையரின் பணிவிடை

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

(துணையாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்)

ஆண்கள் வெளியே சென்று உழைத்துச் சம்பாதித்து, பொருளீட்டி வருவதும் வீட்டிலுள்ள பெண்கள் சுவையாகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அன்போடு பரிமாறுவதும் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் ஒரு பழக்கம்; வாழ்வியல் நடைமுறை. என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் இந்த நடைமுறையில் இன்று வரை சின்னக் கீறலும் விழாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நவீனக் கால மாற்றத்திற்கேற்ப ஒரு பத்து சதவிகிதப் பெண்கள் வேண்டுமானால் வீட்டில் சமைக்காமல் ஓட்டலில் சாப்பிடலாம்; அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வரவழைத்து வீட்டில் சாப்பிடலாம். இன்னும் பத்து சதவிகிதப் பெண்கள், தாமாகச் சமைக்காமல் சமைப்பதற்கான ஒரு சமையற்காரரையோ ஒரு சமையற்காரியையோ பணியமர்த்திக் கொண்டிருக்கலாம். இது செல்வர்கள் வீட்டில் உள்ள நடைமுறை. ஆனால் இன்று வரை பெரும்பாலான பெண்கள் சாதிமதப் பாகுபாடின்றித் தம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தாமே தம் கைப்படச் சமைத்து. அன்போடு பரிமாறுவது நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.

கணவனுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சமைப்பது. துவைப்பது. வீட்டைத் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட இல்லற வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதை அடிமைத்தனம் என்று நவீனப் பெண்ணியவாதிகள் கூறுவதுண்டு. அவர்களின் அக்கூற்றை ஆமோதிக்கின்ற பெண்கள் சிலர் கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதைப் புறக்கணிக்கிறார்கள்; எதிர்த்துச் சண்டைபோடுகிறார்கள். நான் ஒரு நாள் சமைத்தால்  நீ ஒரு நாள் சமை என்று கூறும்  பெண்டிரும் உள்ளனர். இதனால் குடும்பத்தில் விரிசல்  ஏற்படவும் செய்கிறது. ஆண்கள் சிலர் இதனைப் பொறுத்துக்கொண்டு வாழ்கின்றார்கள்; சிலர் வெறுத்து ஒதுங்கிவிடுகின்றார்கள்.

இத்தகைய தருணத்தில், பணிவிடை செய்வதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறதா இல்லையா என்ற கோணத்தில் சில செய்திகளை நாம் தெரிந்துகொள்வது இதன் முக்கியத்துவத்தைப் பெண்களுக்கு உணர்த்தும்.

கணவனுக்குப் பணிவிடை செய்வதை மிகச் சாதாரணமாகப் பெண்கள் பலர் கருதியிருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன்மூலம் அவள் சொர்க்கத்தையே அடையலாம் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஓர் ஆண் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதன்மூலம் சொர்க்கத்தைப் பெற முடியும் என்பதைப்போல் ஒரு பெண் தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன்மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்பது உண்மை.

ஒரு பெண் தன் கணவனுக்குச் சம்பாதித்துக்கொடுக்கத் தேவையில்லை; பொருளீட்டிக்கொண்டுவர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் கணவனின் மனதை மகிழ்விக்கும் விதமாக நல்ல முறையில் சுவையாகச் சமைத்து அன்போடு பரிமாறுவதன்மூலம் அவனது அன்பைப் பெற்றுவிட்டால் அதற்காக அப்பெண்ணுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தருகிறான்.

பெண்கள் சிலர் கணவனுக்கு இணையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியவில்லை; குர்ஆன் ஓத முடியவில்லை; திக்ர் செய்ய முடியவில்லை என்றெல்லாம் எண்ணலாம். எப்போதும் வீட்டு வேலைகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்ளலாம். இத்தகைய பெண்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெண்களைப் பொருத்த வரை கடமையான வழிபாடுகளை மட்டும் செய்தாலே போதுமானது.  அவர்கள் தம் கடமையான வழிபாட்டிற்குப்பின் அடுத்துச் செய்ய வேண்டியது கணவனுக்கான பணிவிடைகளைத்தான். அதில்தான் அவர்களுக்கான சொர்க்கம் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்: ஒரு பெண் ஐவேளை தொழுது ரமழான் மாதம் நோன்பு நோற்று தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குப் பணிந்து நடந்தால் (மறுமைநாளில்) "நீ விரும்பிய எந்த வாசல் வழியாகவும் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்'' என்று சொல்லப்படும். (நூல்: இப்னு ஹிப்பான்)

இதேபோல், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ், அப்துர் ரஹ்மான் அஸ்ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள்:  "ஒரு பெண் ஐவேளை தொழுது ரமழான் மாதம் நோன்பு நோற்று தன் கற்பைப் பாதுகாத்து தன் கணவனுக்குப் பணிந்து நடந்தால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.'' (நூல்கள்: அல்பஸ்ஸார், அஹ்மது)

ஆக இந்த நபிமொழி கூறுவதைக் கவனத்துடன் பார்க்க வேண்டும். அல்லாஹ்விற்கான கடமையான ஐவேளைத் தொழுகையும் ரமளான் மாதத்தின் நோன்பும் பொருளாதார வசதியிருந்தால் ஸகாத் இவற்றை மட்டும் செய்துவிட்டு, எஞ்சிய பொழுதெல்லாம் கணவனுக்குப் பணிவிடை செய்வதிலும் அவனை மகிழ்விப்பதிலும் ஈடுபட்டாலே போதுமானது-அவள் சொர்க்கத்தை அடைந்துவிடலாம். கணவனுக்குப் பணிந்து நடத்தல் என்பது கணவன் இட்ட கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவருக்குப் பணிவிடை செய்வதையும் குறிக்கும்.

அறியாப் பெண்கள் சிலர், சமைத்து வைத்துவிட்டு, இறைவழிபாட்டில் அல்லது திருக்குர்ஆனை ஓதுவதில் ஈடுபடுவதுண்டு. அல்லது தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் மூழ்கிவிடுவார்கள். வீட்டிற்குக் கணவன் வந்ததும், அவருக்குப் பணிவிடை செய்யாமல், சோறு ஆக்கி வச்சிருக்கேன்; போட்டுச் சாப்பிடுங்கஎன்று சொல்லிவிடுவார்கள். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. அவள் குர்ஆன் ஓதுவதைவிடக் கணவனுக்குப் பணிவிடை செய்வதுதான் முக்கியமான இபாதத்-வழிபாடு ஆகும். ஒவ்வொரு பெண்ணும் கணவனுக்குப் பணிவிடை செய்வதற்காக எவ்வளவு நேரம் செலவழிக்கின்றாளோ அவ்வளவு நேரமும் இபாதத்-வணக்க வழிபாட்டில் கழிப்பதாகக் கணக்கிடப்படும். 

இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் தம் கணவருக்குச் செய்த பணிவிடைகளைச் சற்றுக் கூர்ந்து பார்ப்பது அவசியமாகும். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்திருந்தார்.

 அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.

அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இறைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்ஸாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ.) தொலைவில் இருந்தது... (முஸ்லிம்: 4397)

நபித்தோழியர் தம் கணவருக்கு எந்த அளவிற்குப் பணிவிடை செய்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின்மூலம் நாம் அறியலாம். கணவர் வைத்துள்ள வாகனத்தைப் பராமரிக்கும் பொறுப்பையும் மனைவியே மேற்கொண்டுள்ளார். இன்று கணவர் வைத்துள்ள இரு சக்கர வாகனத்தைத் துடைத்துத் தரச் சொன்னால் என்ன நடக்கும்? சமைத்தல், துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனின் வாகனத்தைப் பராமரித்தல், பிள்ளைகளைப் பேணுதல் உள்ளிட்ட எத்தனையோ பணிகளைப் பெண்கள் அன்றும் இன்றும் செய்துவருகின்றார்கள். ஆனால் இன்றைய பெண்களின் பணிவிடை குறைந்துபோய்விட்டது. பெண்களும் ஆண்களைப்போல் பணிக்குச் செல்வதால் கணவனுக்கு அவர்கள் செய்யும் பணிவிடைகள் குறைந்துவிட்டன. வீட்டிலுள்ள பெண்கள் சிலர் வேண்டா வெறுப்பாகச் செய்துவருகின்றனர்.







ஒரு மனைவி தன் கணவனுக்குப் பணிந்து நடப்பதில் ஒரு பகுதி அவள் அவனுக்குத் தன்னால் இயன்றவரை பணிவிடை செய்வதாகும். அதில் அன்றாட வீட்டுவேலைகள் செய்வது, அவனுக்கு உணவு பரிமாறுவது போன்றவை அடங்கும். எந்தப் பெண்ணும் இந்தப் பொறுப்பிலிருந்து நீங்கிக்கொள்ள முடியாது. ஆனால், கணவன் தன் மனைவியை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்க விரும்பினால் அது அவனுடைய விருப்பம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்குரிய மகளும் இதற்கான பொறுப்பாளியே ஆவார்.

அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்: என் மனைவி ஃபாத்திமா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள், நபியவர்களிடம் சென்று, மாவரைக்கும் கல் மூலம் தம் கை காய்ச்சிப் போய்விட்டது என்று தெரிவிக்க நாடினார். ஆனால், நபியவர்கள் அப்போது வீட்டில் இல்லை. எனவே, அச்செய்தியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தார். அதாவது தங்களுக்கு அண்மையில் கிடைத்துள்ள அடிமைகளுள் ஓர் அடிமையைக் கொடுத்துதவும்படி கேட்டுக்கொண்டார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நபியவர்களின் மகளாருடைய தேவையை அவர்களிடம் தெரிவித்தபோது, நபியவர்கள் தம் மகளாருடைய வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைந்தார்கள்.

அங்கே ஃபாத்திமா, அலீ இருவரும் தூங்குவதற்காக படுக்கையில் தயாராக இருப்பதைக் கண்டார்கள். தந்தையைப் பார்த்த ஃபாத்திமா படுக்கையிலிருந்து எழ முற்பட்டார். ஆனால் அவரைப் படுக்கையிலேயே நபியவர்கள் இருக்கச் சொன்னார்கள். அப்போது அவ்விருவருக்கிடையே நபியவர்கள் அமர்ந்தார்கள்; பிறகு அவர்களிடம்,  "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? நீங்கள் படுக்கச் செல்லுமுன், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) முப்பத்து மூன்று தடவையும் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் யாவும்) முப்பத்து மூன்று தடவையும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) முப்பத்து நான்கு தடவையும் (ஓதிக் கொள்வது) உங்களுக்கு ஓர் அடிமையை-பணியாளனைவிடச் சிறந்தது'' என்று சொன்னார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்: ஒரு மனைவி தன் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனவே, இது தொடர்பாக உயர் குடிப்பெண்ணுக்கும் சாதாரண பெண்ணுக்குமிடையிலோ ஏழைப் பெண்ணுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமிடையிலோ வித்தியாசப்படுத்திப் பார்ப்பது சரியில்லை. ஏனென்றால், பெண்களுள் மிகவும் உயர்குடிப் பெண்ணான ஃபாத்திமாவே தம் கணவருக்குப் பணிவிடை செய்துவந்துள்ளார். அந்தப் பணியில், தாம் சந்தித்த சிரமங்களைத் தம் தந்தையிடம் முறையிடச் சென்றார். ஆனால், அவரின் தந்தை அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை.

உயிருக்கு உயிரான தம் மகள் ஃபாத்திமா, தம் கையில் காய்ப்பு ஏற்படும் அளவிற்குத் தம் கணவருக்குப் பணிவிடை செய்ததை எண்ணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருந்தவில்லை; கவலைப்படவில்லை. மாறாக உதவியாளர் ஒருவரை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டும், உதவி செய்வதற்குப்  பதிலாக, ஒரு திக்ரைக்  கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்றால், ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளின் முக்கியத்துவம் என்னவென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே கணவனுக்குப் பணிவிடை செய்வதைச் செம்மையாகச் செய்துவரும் பெண்கள் உள்பட, தாம் செய்துவரும் பணிவிடைக்குப் பதிலாக இறைவனின் அன்பும் கருணையும் கிடைக்கப்பெறுவதோடு, நாளை மறுமையில் சொர்க்கத்தில் நுழைவதற்கான நல்வாய்ப்பும் அதன்மூலம் கிடைக்கும் என்பதை எண்ணி மகிழ வேண்டும். பணிவிடை செய்வதில் அசட்டையாக உள்ள பெண்கள் இனியாகிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆர்வத்தோடு செய்ய முன்வர வேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு, அவருக்கு அன்போடு பணிவிடை செய்யக்கூடிய நல்ல பெண்மணிகளாக வாழ எல்லாப் பெண்களுக்கும் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.

=========================