-முனைவர் மௌலவி நூ. அப்துல்
ஹாதி பாகவி பிஎச்.டி.
ஆனால் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர், திடீரென ஒலிக்கின்ற செல்பேசியை
எடுத்துப் பேசிக்கொண்டே ஓட்டுவதால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்குள்ளாவதுண்டு. அல்லது
மிகை வேகத்தால் விபத்து ஏற்படலாம். அல்லது காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல்களைக்
கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட கவனச்சிதறல் விபத்துக்குக் காரணமாவதுண்டு.
இதுபோன்ற வாகன ஓட்டிகள் தம்முயிரை இழப்பதோடு பிறரின் உயிரிழப்புக்கும் காரணமாகின்றனர். இதுபோன்றே கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் தம் கவனக்குறைவால்
தம்முயிரை இழப்பதோடு பிறரின் உயிரிழப்புக்கும் காரணமாகின்றனர்.
தற்காலத்தில் பெரும்பாலானோரின் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய ஒரு பொதுவான பொருள்
செல்பேசி ஆகும். அவசியத்துக்கும் அவசரத்துக்கும் பயன்படுத்த வேண்டிய பொருளை நம்முள்
பலர் எப்போதும் பயன்படுத்திக்கொண்டே இருப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதோடு செய்கின்ற
செயல்களில் கவனக்குறைவும் ஏற்படுகிறது. கவனக்குறைவால் அவருக்கு மட்டும் ஆபத்தில்லை.
பிறருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. செல்போன் பேசிக்கொண்டே மற்றொரு பணியையும் மேற்கொள்வதால்
ஏற்படுகின்ற கவனச் சிதறல் பல்வேறு தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகின்றது. செல்போன் பேசிக்கொண்டே சமைப்பது, பேசிக்கொண்டே தட்டச்சு
செய்வது, பேசிக்கொண்டே பணத்தை எண்ணுவது, பேசிக்கொண்டே சாலையைக்
கடப்பது, பேசிக்கொண்டே பேருந்தில் ஏறுவது, பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது முதலான பல்வேறு செயல்களை இப்படித்தான் பலர் செய்கிறார்கள்.
கடந்த காலங்களிலும் கவனக்குறைவு
இருந்தது என்றாலும் தற்காலத்தில் அது மிகையாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக செல்பேசியால்
பல்வேறு விபத்துகளும் பேரிழப்புகளும் ஏற்படுகின்றன என்றால் மிகையில்லை.
அடுப்பின் நெருப்பைச் சரியாகக் கவனிக்காததால் தமக்கும் விபத்தை ஏற்படுத்திக்கொண்டு, பிறருக்கும் விபத்தை ஏற்படுத்தும்
பெண்டிர் உண்டு. அடுப்பைப் பற்ற வைக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் 94 குழந்தைகள் கருகி இறந்த செய்தியை நாம் அனைவரும் அறிவோம். அதுபோல் ஆங்காங்கே நிகழ்கிற
கவனக்குறைவால் அவ்வப்போது கேஸ் சிலிண்டர் வெடிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சிலரின் சின்னச் சின்னக் கவனக்குறைவால் பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அல்லது உடலுறுப்புகளை இழந்து ஊனமாக வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நாம் ஒவ்வொரு
செயலிலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். நாம் கவனமாக இருப்பதால் நம்மையும் விபத்திலிருந்து
காத்து, பிறரையும் காத்துக்கொள்ளலாம்.
அது நம் கடமையாகும். இது குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "ஓர் இறைநம்பிக்கையாளர்
ஒரு பொந்தில் இரண்டு தடவை கொட்டுப்பட மாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 6133)
ஒரு தடவை ஓரிடத்தில் விபத்து ஏற்பட்டது; அல்லது ஒரு பொருளால் ஏற்பட்டது என்றால் அடுத்த தடவை அதில் மிகக் கவனமாக இருக்க
வேண்டும். இரண்டாம் தடவையும் அவ்விடத்திலேயே அல்லது அப்பொருளாலேயே விபத்தை ஏற்படுத்திக்கொண்டால்
அவன் கவனமற்றவன்; முட்டாள் என்று பொருள்.
ஒரு தடவை ஒருவனுக்குக் கடன் கொடுத்து அவன் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான்.
இரண்டாம் தடவை வந்து அவன் கடன் கேட்கும்போது, அவன்மீது இரக்கப்பட்டுக் கடன் கொடுப்பது அறிவுடைமையாகாது. முதல் தடவை அனுபவத்தை
வைத்து எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டே சென்றதால் ஒரு தடவை விபத்து ஏற்பட்டது. இப்போதுதான் உடல்
நலம் பெற்றிருக்கிறான். மீண்டும் அதேபோல் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது அறிவுடைமையாகாது.
முதல் தடவை அடிபட்டதன்மூலம் படிப்பினை பெற்று எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.
இல்லையேல் அவனை முட்டாள் என்றுதான் சொல்வோம்.
தனிமனிதன் தன்னைப் பற்றி அக்கறையோடும் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று
வலியுறுத்தும்போது பிறர் தொடர்பான நலம் தம் கையில் இருப்போர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும்
இருக்க வேண்டியது அவசியமாகும்.
எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய இடங்களில் பணியாற்றுவோர் மிகுந்த எச்சரிக்கையோடும்
விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவும் அவர்களின் உயிரைப்
பறித்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல பிறரின் உயிர்களும் பறிக்கப்படலாம். பெட்ரோல் நிலையங்கள், பட்டாசுத் தொழிற்சாலைகள், துப்பாக்கித் தொழிற்சாலைகள், தீப்பட்டித் தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் முதலானவை.
நாம் அடிக்கடி கேள்விப்படுகிற செய்தி: பட்டாசுத் தொழிற்சாலை வெடித்து, பெண்கள் உள்பட 7 பேர் மரணம். எவ்வளவு கவனமாக
இருக்க வேண்டிய இடம் அது! ஆனால் யாரோ சிலரின் கவனக் குறைவாலும் அலட்சியத்தாலும் பலரின்
உயிர்கள் பறிபோகின்றன.
பட்டாசுத் தொழில் பெரும்பாலான இடங்களில் குடிசைத் தொழிலாக, பாதுகாப்பற்ற நிலையில்
நடைபெற்று வருகிறது. அதனால்தான் இந்த விபத்தை நாம் அடிக்கடி கேள்விப்பட நேரிடுகிறது. அவ்வப்போது விபத்தைக் கேள்விப்பட்டும் மக்கள் மிகுந்த கவனத்தோடு பணியாற்றாமல் கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும்
செயல்படுவதே தொடர் விபத்துக்குக் காரணமாகும். தீப்பட்டித் தொழிற்சாலையிலும் அடிக்கடி
விபத்து ஏற்படுவதைக் கேள்விப்படுகிறோம். இதுவும் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகின்ற
ஒன்றாகும். பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்தும் பெண்கள்
தம் குடும்ப வறுமையைப் போக்க, உயிரைப் பணயம் வைத்து இத்தொழிலைச் செய்து
வருகின்றார்கள். காலப்போக்கில் அவர்களின் வறுமை ஒழிகிறதோ இல்லையோ, அவர்கள் ஏதேனும் விபத்தில்
மாட்டிக்கொண்டு தம் உயிரை விட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.
"மின்சாரக் கம்பி அறுந்து
விழுந்து ஒருவர் மரணம்''
என்ற செய்தியை அவ்வப்போது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த ஒருவர் செய்ய வேண்டிய பணியைச் செவ்வனே
செய்யாததால் பொதுமக்களுள் யாரோ ஒருவர் உயிரிழக்க வேண்டியுள்ளது. "செப்டிக் டேங்கைச்
சுத்தம் செய்ய அதனுள் இறங்கிய இரண்டு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறி இறப்பு'' என்ற செய்தியையும் நாம்
அவ்வப்போது கேள்விப்படுகிறோம். தொழிலாளிகளுக்கு வேண்டிய உபகரணங்களை வாங்கிக் கொடுக்காத
அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் அலட்சியத்தாலும் பல உயிர்கள் இதுபோன்று பறிபோகின்றன.
"செல்போன் பேசிக்கொண்டே
இரயில் தண்டவாளத்தைக் கடக்க
முயன்ற வாலிபர் அல்லது இளம்பெண் மரணம்'' என்ற செய்தியை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம்; நாளிதழ்களில் படிக்கிறோம்.
"விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி மரணம்; விளையாடிக்கொண்டிருந்த
குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி மரணம்; வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைமீது டி.வி. விழுந்து மரணம்'' போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆக தனிமனிதர்களின் கவனக்குறைவும் அதிகாரிகளின் கவனக்குறைவும் அலட்சியப்போக்கும் மரணங்களுக்கு வழிவகுக்கின்றன.
ஒருவரின் கவனக்குறைவால் அவருக்கு மட்டும் ஆபத்து ஏற்படுவது அல்லது உயிர்ப்பலி ஏற்படுவது
குறைவான இழப்புதான். ஆனால் ஒருவரின் கவனக்குறைவு அவரது உயிரையும் பறித்து, பிறரின் உயிர்களையும் பறிக்கிறதென்றால்
அது மிகப்பெரிய இழப்பாகும். ஆகவே தண்ணீர் லாரி ஓட்டுநர், பள்ளி வாகன ஓட்டுநர்,
பொதுப் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும்
ஓட்டுவது அவசியமாகும். அவர்களின் கவனம் சிதறினால் பற்பல உயிர்களை இழக்க வேண்டியது ஏற்படலாம்.
இனியாகிலும் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் மிகுந்த கவனம் செலுத்தி, "ஒருபோதும் என்னால் எந்த உயிரும் பறிபோகாதவண்ணம் என் பணியை மேற்கொள்வேன்'' என்று உறுதியெடுத்துக்கொள்ள
வேண்டும்.
"ஒவ்வொருவரும் பொறுப்பாளி; ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு
குறித்து விசாரிக்கப்படுவார்'' என்ற நபிமொழியை நெஞ்சில் நிறுத்தி கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்படுவோம்.
===========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக