திங்கள், 28 செப்டம்பர், 2020

கொரோனா-அச்சம் தவிர்!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

------------------------------------------------

அச்சமும் பயமும் மனிதனை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. எதைப் பார்த்தாலும் பயம்; பயணம் செய்யும்போதும் பயம்; நடக்கும்போதும் பயம்; பேசும்போதும் பயம்; எழுதும்போதும் பயம்; அதிகாரியைச் சந்திக்கும்போதும் பயம்; நோயைக் கண்டு பயம்; மரணத்தைக் கண்டு பயம். எதை நினைத்தாலும் பயம் கவ்விக்கொள்கிறது. இதற்கெல்லாம் தீர்வு உண்டா? நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும் பயந்தால் வேறெதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.

மனிதனின் பார்வைக்குப் புலப்படாத இறைவனுக்கு அஞ்சாமல் அவனை மறந்துவிடுவதால், அவனது கண்ணுக்குப் புலப்படுபவை, புலப்படாதவை ஆகிய எதைக் கண்டபோதிலும் எது குறித்துக் கேள்விப்பட்டபோதிலும் பயம் பற்றிக்கொள்கிறது. நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சமும் பயமும் தொற்றிக்கொள்கிறது. எங்கோ பரவுகின்ற நோய் குறித்துக் கேள்விப்பட்டதும் பயம் மனதைக் கவ்விக்கொள்கிறது.

தற்போது கொரோனா கிருமியைக் கேள்விப்படும்போதெல்லாம் பயம் பற்றிக்கொள்கிறது. அது நம்மைத் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் கவ்விக்கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகள் அதற்கு விடையாக அமைந்துள்ளன. தொற்றுநோய் கிடையாது; பறவைச் சகுனம் ஏதும் கிடையாது; ஆந்தைச் சகுனம் ஏதும் கிடையாது; ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5757)

இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் (பற்றிய நம்பிக்கை) கிடையாது; பறவைச் சகுனம் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே, ஓர் ஒட்டகத்துக்குச் சிரங்கு ஏற்பட்டிருக்கும். பின்னர் அது எல்லா ஒட்டகங்களையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றதே (அது எப்படி)?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதுதான் விதியாகும். அது சரி, முதல் ஒட்டகத்துக்குச் சிரங்கை ஏற்படுத்தியது யார்?'' என்று கேட்டார்கள். (நூல்: இப்னுமாஜா: 83)

ஆக மேற்கண்ட நபிமொழிகள் தெரிவிப்பவை என்னவென்றால், தொற்றுநோய் கிடையாது. எல்லாம் இறைவனின் விதி. இறைவன் யாருக்கு நாடுகின்றானோ அவருக்கு நோயைக் கொடுக்கின்றான். யாரை நாடுகின்றானோ அவரை அந்நோயிலிருந்து காப்பாற்றுகின்றான். சிலருக்கு நோயைக் கொடுத்து, பின்னர் காப்பாற்றுகின்றான். சிலருக்கு நோயைக் கொடுக்காமலே காப்பாற்றுகின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, இன்று வரை கொள்ளை நோய் என்பது உலகில் இருக்கத்தான் செய்கின்றது. அது அவ்வப்போது தலைகாட்டும். எனவே அதைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே அவர்களிடம்) நீர், ‘அல்லாஹ் எங்களுக்கு எழுதியதைத் தவிர வேறு எதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பொறுப்பாளன்; எனவே இறைநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்என்று கூறுவீராக. (9: 51) அல்லாஹ் நாடியதைத் தவிர வேறெதுவும் நம்மை அணுகாதுஎன்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்க வேண்டும். நம் மனதை எந்த அளவிற்கு உறுதியாகவும் நிலையாகவும் வைத்துக்கொள்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். அல்லாஹ் அத்தகைய ஆற்றலை நம் மனஉறுதிக்குக் கொடுத்துள்ளான்.

தீதும் நன்றும் பிறர்தர வாராஎனும் முதுமொழியை நாம் அறிவோம். அல்லாஹ் நாடாமல் நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. அல்லாஹ் நாடாமல் எந்தத் தீமையும் விளையப்போவதில்லை. அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் நமக்கு இறைநம்பிக்கை மிகுந்த வாழ்க்கையைத்தான் காட்டித் தந்துள்ளார்கள். எனவே நாம் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

தொற்றுநோய் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் மொழி கூறியிருந்தாலும் இறைநம்பிக்கையில் எல்லோரும் ஒரே அளவினர் கிடையாது. சிலர் தம் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாக இருக்கலாம். பலர் உறுதிகுறைந்தவர்களாக இருக்கலாம். சிலர் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக இருக்கலாம். பலர் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாக இருக்கலாம். ஆக நான்கு வகை மனிதர்கள் உள்ளனர். அவர்களுள் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாகவும் உள்ளோர்,  இறைநம்பிக்கையில் உறுதிகுறைந்தவர்களாக இருந்தாலும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக உள்ளோர்,  நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாக இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாக உள்ளோர் ஆகியோரைக் கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தாக்குவதில்லை. இறைநம்பிக்கையில் உறுதிகுறைந்தவர்களாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாகவும் உள்ளோரே பெரும்பாலும் இத்தகைய தொற்றுநோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அத்தகைய பலவீனமான இறைநம்பிக்கைகொண்டோரைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கருத்திற்கு எதிரான கருத்துகளையும் கூறியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் (5707) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நபிமொழி கூறும் உட்கருத்து என்னவெனில், இறைநம்பிக்கையில் பலவீனமானவர்கள்  பிறருக்கு உள்ள நோய் தம்மையும் தொற்றிக்கொள்ளுமோ என்று எண்ணலாம். அவர்களின் பலவீனமான நிலையைக் கருத்தில்கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “தொழுநோயாளியைக் கண்டால் வெருண்டோடிவிடுஎன்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். அதேநேரத்தில் இறைநம்பிக்கையில் வலுவானவர்கள் நோயாளிகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்கு அச்சமும் ஏற்படாது. எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்.

அதுபோலவே கொள்ளைநோய் பரவியுள்ள ஊரிலிருந்து யாரும் கொள்ளைநோய் இல்லாத ஊருக்குச் செல்ல வேண்டாம் என்ற கட்டளையும் அமைந்துள்ளது. ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5728) இந்தச் செய்தியும் இறைநம்பிக்கையில் பலவீனமானவர்களை மனதில் கொண்டு சொல்லப்பட்டதாகும். ஓர் ஊருக்குள் புதிதாக நுழைந்த ஒருவனின் மூலம் நோய் பரவினால், அவ்வூர் மக்கள் அனைவரும் அவனை ஏசுவர்.  இவனால்தான் நமக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவர். அது இறைநம்பிக்கைக்கு எதிரானதாகும். ஏனெனில்  நோயைக் கொடுப்பதும் அல்லாஹ், அதைக் குணப்படுத்துவதும் அல்லாஹ்தான். அவ்வாறிருக்கும்போது இவனால்தான் நோய் பரவியதுஎன்று கூறுவது எவ்வாறு சரியாகும்? இதையெல்லாம் தவிர்க்கும்முகமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்கள்.   

ஆக மேற்கண்ட நபிமொழிகளின் மாறுபட்ட கருத்துகளை அடிப்படையாக வைத்துச் சிந்திக்கும்போது, தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ள நேரத்தில் அறிஞர்கள் எடுத்துள்ள முடிவு சரியானதுதான் என்பது புலப்படும்.  அதாவது இறைநம்பிக்கையில் பலவீனமானவர்களும் பிற மதச் சகோதர, சகோதரிகளும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களின் பீதியைப் போக்கும் வகையில் நாமும் நம்முடைய வழிபாட்டு நேரங்களில் சில மாற்றங்களைச் செய்துகொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குகிறோம். எங்களால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் செயலில் காட்டுவதே நம் நோக்கமாகும். அதுவன்றி, “இறைவன்தான் நோயைக் கொடுக்கின்றான்; அவன்தான் அதைக் குணப்படுத்துகின்றான்என்பதில் முஸ்லிம்கள் உறுதியாகவே இருக்கின்றார்கள்.

தொற்றுநோய் பரவப் பல்வேறு காரணங்கள் உண்டு. நோயாளியைக் கூர்ந்து பார்த்தல், நோயாளியின் அருகிலேயே நீண்ட நேரம் இருத்தல், காற்றின் மூலம் பரவுதல் முதலானவை. மனிதர்கள் இரண்டு வகையினர் உண்டு. சூடான இயல்பு கொண்டவர்கள், குளிர்ச்சியான இயல்பு கொண்டவர்கள். குளிர்ச்சியான இயல்பு கொண்டவர்களுக்குத்தான் நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு. எனவே அத்தகையோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

 

நோய் உள்ளவரிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே தவிர, நோய் இல்லாதவர்களைப் பார்க்கும்போதும் அவர்கள் நம்மிடம் பேச எத்தனிக்கின்றபோதும் ஒதுங்கிச் செல்வது நன்றாக இருக்காது. அவ்வாறு செய்தால் நாம் யாரிடமும் பேசவோ பழகவோ முடியாது. அப்படியான சூழ்நிலைதான் இப்போது நம்மிடையே நிலவுகிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகம் கொள்வது, ஒதுங்கிக்கொள்வது எச்சரிக்கை உணர்வில் சேராது. நம்மோடு எப்போதும் இயல்பாகப் பழகுகின்றவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கும்போது  அவர்களிடம் நாம்  பேசாமல் ஒதுங்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொழுகை நேரத்திற்குப் பள்ளிக்குச் சென்று தொழுவதையும் பிற இடங்களுக்கு இயல்பாகச் செல்வதையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

இந்த (கஅபா எனும்) வீட்டின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவன்தான் அவர்களின் பசிக்கு உணவளித்தான். அச்சத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்” (106: 3-4) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த இறைவசனத்தின் அடிப்படையில் பசிக்கு உணவளித்து, அச்சத்திலிருந்தும் பீதியிலிருந்தும் அபயமளிப்பவன் அல்லாஹ் என்பதை நாம் உணர்வோம். அவன் ஒருவனை அஞ்சினால் வேறு எப்பொருளுக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. எனவே பரவிவருகின்ற நோயைக் கண்டு நாம் அஞ்சாமல் அல்லாஹ் ஒருவனையே அஞ்சி, அவனையே சார்ந்திருப்போம். அவனையே வணங்குவோம். அவனிடமே கையேந்துவோம்.

================================










கருத்துகள் இல்லை: