===========================
இறந்துவிட்ட பெற்றோருக்கும்
ஆசிரியர்களுக்கும் நன்மையைச் சேர்த்துவைக்க எல்லோரும் தகுந்த முயற்சி
செய்கின்றனர். அதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஏனென்றால்
வாழும்போது பெற்றோருக்குப் பணிவிடை செய்யாதவன்கூட, அவனுடைய பெற்றோர் இறந்துவிட்டால்
அவர்களுக்காக துஆ மஜ்லிஸ் ஏற்படுத்தி, நன்மையைச் சேர்த்து வைக்கத்
தவறுவதில்லை. சிலர் விதிவிலக்கு இருக்கலாம். அந்த வகையில், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மையைச் சேர்ப்பதில்
முதலிடம் வகிப்பது, திருக்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் நன்மைகளைச்
சேர்ப்பதுதான். மார்க்க அறிஞர்கள் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. வேறு அறிஞர்கள், ஓதப்பட்ட திருக்குர்ஆனின் நன்மையை அன்பளிப்புச்
செய்வது, இறந்துவிட்டவருக்குச் சேரும் என்று கூறுகின்றார்கள். அந்த
அடிப்படையில்தான் நாம் செயல்படுகின்றோம். இருப்பினும் இது ஓர் ஒப்பீட்டளவில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்பாடுதானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக
வழிகாட்டிய நல்லறம் இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நேரடியான நல்லறங்கள் நிறையவே உள்ளன. அவற்றுள் முதன்மையானது தண்ணீர்த் தானம் ஆகும். சஅத் (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ""அல்லாஹ்வின் தூதரே! சஅதின் தாய் இறந்துவிட்டார். எனவே (அவருக்காக) எதைத் தர்மம் செய்வது சிறந்தது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தண்ணீர்'' என்று கூறினார்கள். சஅத் (ரளி) அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி "இது சஅதுடைய தாயாருக்கு உரியதாகும்'' என்று கூறியதாக அவர்தம் மகனார் உபாதா (ரளி) அறிவிக்கிறார். (அபூதாவூத்: 1431)
ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், கிணற்றைத் தோண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்பளிப்புச் செய்தல், குளத்தைத் தூர்வாரி பொதுமக்கள் பயன்பெறச் செய்தல், பயனுள்ள மரங்களை நட்டு, வளர்த்து அவற்றின் பயனைப் பொதுவுடைமையாக்குதல், மஸ்ஜிதைக் கட்டி பொதுமக்களுக்காக அன்பளிப்புச் செய்தல், திருக்குர்ஆனை வாங்கி அன்பளிப்புச் செய்தல், நூல் நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட எத்தனையோ நிலையான நல்லறங்களைச் செய்ய முற்படலாமே? இவற்றுள் எதையாவது செய்தால், அது நீண்ட காலப் பயனை இறந்துவிட்ட பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சேர்க்குமே? ஏன் நம்முள் பலர் இதுபோன்று தூரநோக்கோடு சிந்திப்பதில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக