சனி, 10 ஆகஸ்ட், 2019

மறைவானவை மனித நன்மைக்கே!








-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

உலகில் எத்தனையெத்தனையோ விஷயங்கள் மறைவானவையாக உள்ளன. அவை அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே தெரிந்தவை. அவற்றை மனித அறிவாலும் ஆற்றலாலும் அறிய முடியாது. மனிதன் தனது புறக்கண்களால் காண முடியாதவையும் உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் மனித நன்மைக்காகவே அல்லாஹ் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளான். 

மனிதன் அறிய முடியாதவை ஐந்து என அகிலத்தைப் படைத்த அல்லாஹ் தனது திருமறையில் நவில்கின்றான்: நிச்சயமாக யுகமுடிவு (எப்போது ஏற்படும் என்பது பற்றிய அறிவு) அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். கருப்பைகளில் உள்ளதை அவன் அறிகின்றான். எந்த உயிரும் தான் நாளை என்ன சம்பாதிக்கும் என்பதை அறியாது. எந்த உயிரும் தான் எந்த நிலத்தில் உயிரிழக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனும் ஆவான்.” (31: 34)

தோன்றிய ஒவ்வொன்றிற்கும் அழிவு என்பது நிச்சயம் உண்டு. அதுபோலவே படைக்கப்பட்ட அண்டத்திற்கும் ஒரு நாள் அழிவுண்டு. அது எந்நாள் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அது குறிப்பிட்ட இன்ன நாளில் நிகழப்போகிறது என்று தெரிந்துவிட்டால், மனிதர்கள் இப்புவியில் நிம்மதியாக வாழ முடியுமா? அந்த அழிவு நாளை நினைத்து நினைத்தே வருந்திக்கொண்டிருப்பார்களே தவிர நிம்மதியாக வாழ மாட்டார்கள். 

அவனே மழையை இறக்கிவைக்கிறான்எனும் தொடரில் நிலத்தில் பொழிகின்ற மழை நீரில் எவ்வளவு மனிதனுக்குப் பயன்படும்; எவ்வளவு நிலத்தினுள் சேரும்; எவ்வளவு கடலில் கலக்கும் உள்ளிட்ட இவையெல்லாம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும். மேலும் மழைமூலம் விவசாயம் செழிக்குமா அழியுமா என்பதும் இறைவனுக்கு மட்டுமே தெரியும். புறக்காரணிகளை வைத்து இன்ன நாளில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டாலும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை மனிதன் அறிய முடியாதல்லவா?

கருப்பைகளில் உள்ளதை அவன் அறிகின்றான்எனும் தொடர் கவனிக்கத்தக்கது. ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் உண்மை நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான். அதாவது ஓர் ஆணின் உயிரணு பெண்ணின் சினைப்பையினுள் செலுத்தப்படுகின்றபோதே அது ஆணா, பெண்ணா என்பதை அவன் அறியும் ஆற்றல் உள்ளவன். 

அது ஆணா, பெண்ணா என்பதை அறிவது மட்டுமல்ல, அவன் நல்லவனா, கெட்டவனா, அவனுக்கான வாழ்வாதாரம் எவ்வளவு, புவியில் வாழும் காலம் எவ்வளவு உள்ளிட்டவையும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிடுகின்றன. இவையெல்லாம் தாயின் கருவறையில் குழந்தை உண்டாகிய நான்காவது மாதத்தில் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் அல்லாஹ் மட்டுமே தீர்மானிக்கின்றானே தவிர, எந்த வருடியும் (ஸ்கேனும்) கண்டுபிடிக்க முடியாது. 

இவையெல்லாம் மனிதனுக்கு நன்மைதானே? ஆம். பிறந்தவுடன் இறந்துவிடும் அல்லது ஐந்து வயதில் அக்குழந்தை இறந்துவிடும் என்பது முன்பே தெரிந்துவிட்டால் என்னாகும்? அக்குழந்தையின் தாயும் தந்தையும் நிம்மதியாக வாழ முடியுமா? ஆசையோடும் பாசத்தோடும் அக்குழந்தையை வளர்க்கத்தான் முடியுமா?

எந்த உயிரும் தான் நாளை என்ன சம்பாதிக்கும் என்பதை அறியாதுஎனும் இத்தொடர் நாளை என்ன நடக்கும் என்பதை மனிதன் அறிய மாட்டான் என்பதைத் தெரிவிக்கிறது. நாளை அவன் செய்யப்போகின்ற தொழிலில், வியாபாரத்தில் இலாபம் கிடைக்குமா, நட்டம் ஏற்படுமா என்பது அவனுக்குத் தெரியாது. நாளை அவன் நன்மை செய்யப்போகின்றானா, தீமை செய்யப் போகின்றானா என்பதெல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம். செய்யப்போகின்ற தொழிலில் ஏற்படப்போகின்ற நட்டம் குறித்த தகவல் முன்னரே அவனுக்குத் தெரிந்துவிட்டால் அவன் அந்தத் தொழிலைச் செய்ய முற்படமாட்டான். நாளை நடக்கவிருப்பதை முன்னரே தெரிந்துகொண்டால் அவன் நிம்மதியாக வாழ முடியாது. எதையும் நம்பிக்கையுடன் செய்யத் துணிவு ஏற்படாது. இதனால்தான் அல்லாஹ் அதையெல்லாம் மனித அறிவுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்துள்ளான். 

எந்த உயிரும் தான் எந்த நிலத்தில் உயிரிழக்கும் என்பதையும் அறியாதுஎனும் தொடர் பல்வேறு உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றது. பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்புண்டு என்றாலும் அவன் எப்போது, எங்கே, எப்படி இறப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது, எங்கே, எப்படி மரணிப்பான் என்று மனிதனுக்குத் தெரிந்துவிட்டால் அவன் தன் வாழ்நாளை நிம்மதியாகக் கழிக்க முடியுமா? தம் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக வாழத்தான் முடியுமா? ஒவ்வொரு நாளும் தான் இறந்துபோகப்போவதைப் பற்றியல்லவா சிந்தித்துக்கொண்டிருப்பான். யாருடனும் மனம்விட்டு நிம்மதியாகப் பேச முடியாது. நிம்மதியாகத் தூங்க முடியாது. அவனுடைய வாழ்க்கையே அலங்கோலமாகிவிடுமே

இவை போக, மனிதனின் கண்களுக்குச் சாதாரணமாகப் புலப்படாத வகையில் பல்வேறு பொருள்களை மறைத்து வைத்துள்ளான் இறைவன். அவையும் மனிதனுக்கு நன்மையே. நாம் அன்றாடம் குடிக்கின்ற நீரில் நம் கண்களுக்குப் புலப்படாத எத்தனையோ நுண்ணுயிரிகள் மறைந்து இருக்கின்றன. அவற்றுள் பல நன்மையைத் தரக்கூடியவையும், அவற்றுள் சில தீமையை ஏற்படுத்தக்கூடியவையும் உள்ளன. அவையெல்லாம் சாதாரணமாக நம் கண்களுக்குத் தெரியக்கூடிய விதத்தில் இருந்தால் நம்முள் யாரும் தண்ணீரைக் குடிக்க முடியுமா?

அதுபோலவே தயிர், தோசைமாவு, கொய்யாப்பழம் உள்ளிட்ட எல்லா உணவுப் பொருள்களிலும் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரி (ஈஸ்ட்)கள் உள்ளன. அவையெல்லாம் சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் அல்லாஹ் மறைத்துவைத்துள்ளான். ஒருவேளை அவையெல்லாம் அவற்றுள் இழைந்துகொண்டிருப்பது நம் புறக்கண்களுக்குப் புலப்பட்டால் நாம் அவற்றை நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? இரசித்து, ருசித்து உண்ணத்தான் முடியுமா?

நாம் செய்கின்ற நற்செயல்களுக்கான நன்மைகளையும் தீய செயல்களுக்கான தீமைகளையும் தூயோன் இறைவன் மறைத்தே வைத்துள்ளான். மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தபோதிலும் அப்பாவங்கள் தெரியாதவாறு மறைத்துவைத்துள்ள இறைவன் கருணையாளன் ஆவான். நாம் செய்யும் பாவங்கள் உடனுக்குடன் நம் முகத்தில் வெளிப்படும் விதத்தில் படைக்கப்பட்டிருந்தால் நம் நிலை என்னவாகும்? அந்தோ! யாரும் நிம்மதியாக வாழ முடியாதே!
பிறர் நம்மைப் பற்றி எண்ணுவதையும் நாம் பிறரைப் பற்றி எண்ணுவதையும் அல்லாஹ் வெளிப்படுத்தினால் என்னவாகும் நம் நிலை? எத்தனையெத்தனை தவறான எண்ணங்கள், எத்தனையெத்தனை குரூர எண்ணங்கள் பிறர்மீது கொள்கின்றோம்! உதட்டில் புன்னகையோடு பேசுகின்ற பலர் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள கபட எண்ணங்களையும் கடன் வாங்கும்போதே திருப்பிக்கொடுக்காமல் இவனை ஏமாற்றிவிட வேண்டும் என எண்ணிக்கொண்டே வாங்குவதையும் வெளிப்படுத்தினால் என்னாகும்? கணவனிடம் அன்பொழுகப் பேசும் மனைவியின் மனத்தில் உள்ளதையும் மனைவியிடம் காதலுடன் பேசும் கணவனின் உள்ளத்தில் உள்ளதையும் வெளிப்படையாகத் தெரியுமாறு செய்திருந்தால் யார்தாம் இவ்வுலகில் வாழ முடியும்? அத்தனையையும் மறைத்தே வைத்துள்ளானே இறைவன். இது அவன் நமக்குச் செய்த மிகப்பெரும் அருள் அல்லவா?

ஆக, அல்லாஹ் தன் படைப்பில் சிலவற்றை வெளிப்படையாகவும் பிறவற்றை மறைமுகமாகவும் அமைத்திருப்பது மனிதனின் நிம்மதியான வாழ்விற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டு நாம் அவனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்த முற்படுவோமாக!
===========================================


கருத்துகள் இல்லை: