திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இறந்தோர்க்கு நன்மையைச் சேர்க்கும்போது பாலினம் பார்க்கக் கூடாது

-----------------------------------------------------------------------------------------
இறந்துவிட்ட பெற்றோருக்கு நன்மையைச் சேர்க்கும் விதமாகச் சிலர் ஆடைகளை வாங்கிக் கொடுப்பதுண்டு. அப்போது சிலர் தம் அம்மாவின் நினைவாகச் சேலை வாங்கிக் கொடுப்பதும் அப்பாவின் நினைவாக வேட்டி வாங்கிக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. 

உங்கள் வீட்டருகே ஓர் ஏழை மூதாட்டி இருக்கிறார். அவருக்கு மாற்றுச் சேலை இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் அப்பாவின் நினைவாக ஒரு வேட்டியை வாங்கித் தர்மம் செய்ய நினைக்கின்றீர்கள். அப்போது வேட்டி வாங்கும் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு சேலையை வாங்கி அம்மூதாட்டிக்குக் கொடுங்கள். நிச்சயமாக அந்த நன்மை உங்கள் அப்பாவிற்குச் சேர்ந்துவிடும். 

அதுபோலவே உங்கள் அம்மாவின் நினைவாக ஒரு சேலை வாங்கிக் கொடுத்து அதன் நன்மையை உங்கள் அம்மாவிற்குச் சேர்க்க நினைக்கின்றீர்கள். ஆனால் பக்கத்துத் தெருவில் ஒரு முதியவர் மாற்று வேட்டி இல்லாமல் வாழ்கிறார். இப்போது உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு வேட்டியை வாங்கி உங்கள் அம்மாவின் நினைவாக அம்முதியவருக்கு வழங்கலாம். நிச்சயம் அதன் நன்மை உங்கள் அம்மாவிற்குச் சேர்ந்துவிடும்.

ஆக, உயிரோடுள்ள உங்கள் தாய்க்குச் சேலையும் அப்பாவுக்கு வேட்டியும் வாங்கிக் கொடுங்கள். அதேநேரத்தில் இறந்துவிட்ட தாய்-தந்தைக்கு நன்மையைச் சேர்க்க நாடும்போது பாலினம் பார்க்கத் தேவையில்லை. அருகிலிருப்போரின் தேவையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை உணர்வோம். இனி நீங்கள் அம்மாவின் நினைவாக ஒரு முதியவருக்கு வேட்டி வாங்கிக் கொடுக்கலாம். அப்பாவின் நினைவாக ஒரு மூதாட்டிக்குச் சேலை வாங்கிக் கொடுக்கலாம். உங்கள் வீட்டருகே உள்ளவர் என்ன தேவையுடையவராக இருக்கிறாரோ அதற்கேற்ப வழங்குங்கள். அவற்றின் நன்மை மட்டுமே இறந்தோருக்குச் சேரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
=======================================================

கருத்துகள் இல்லை: