ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

மகன் தந்தைக்காற்றும் உதவி!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
----------------------------------------------------------------------
தந்தை இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டுமென அவருடைய பிள்ளைகள் அறிந்துகொள்வது மிகமிக அவசியமாகும். இறந்துவிட்ட தந்தையின் உடலை மிகத் துரிதமாக நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அருகிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, தூரத்திலுள்ள உறவினர்களிடம், செய்தியைத் தெரிவித்து, துஆச் செய்யுமாறு மட்டும் கூறிவிட வேண்டும். ஏனென்றால் மிகத் தொலைவிலிருந்து அவர்கள் வந்துசேர்கின்ற வரை நல்லடக்கம் செய்வதைப் பிற்படுத்துவது சரியல்ல.

இரண்டாவது இமாமாக நின்று தந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது ஒரு மகனின் கடமையாகும். அது குறித்து மகன் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் தந்தைக்கு அவர்தம் மகனைவிட மனமுருகி துஆச் செய்ய யாரால் முடியும்? யாருக்கு அத்தகைய உணர்வு ஏற்படும்? தன் தந்தை மன்னிக்கப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வமும் அக்கறையும் மகனுக்குத்தான் இருக்கும். ஜனாஸா தொழுகையை நடத்துமுன் அவர்தம் மகன் மக்கள் முன்னிலையில் வந்து, "என் தந்தை உங்களுக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால் அதை அல்லாஹ்வுக்காக மன்னித்துவிடுங்கள்'' என்று கோரிக்கை விடுக்க வேண்டும். அத்தோடு "என் தந்தை உங்களுள் யாரிடமாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான சான்றைக் காட்டி அக்கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதுவே ஒரு மகனின் தலையாய கடமை. 

நல்லடக்கம் செய்து முடித்தபின் அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டி, அவரது மண்ணறை அருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் அவரது கேள்வி கணக்கு-விசாரணை எளிமையாக்கப்படுகிறது. நல்லடக்கம் செய்து முடித்தபின், இமாமோ முஅத்தினோ துஆ ஓதியவுடன் அங்கு வந்திருந்த மக்கள் சென்றுவிட்டாலும், மகன்களும் நெருங்கிய உறவினர்களும் அங்கேயே நின்று அவருடைய பாவமன்னிப்பிற்காக துஆச் செய்ய வேண்டும். இதைப் பலரும் அறிவதில்லை. 

இறந்துபோன தந்தையின் உடலைத் தாமதமாக நல்லடக்கம் செய்வது முதல் தவறு. இவர் வரவேண்டும், அவர் வர வேண்டும் என்று கூறி, மறுநாள் வரை தாமதப்படுத்துவதே நம் மக்களின் வழக்கமாக உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது, தந்தையின் பிரேதத்தைக் குளிப்பாட்ட ஆள் தேடப்படுகிறது. ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசலில் பணியாற்றுகின்ற முஅத்தின் வரவேண்டும்; அவர் எங்கேனும் வெளியூர் சென்றுவிட்டால் அடுத்த மஹல்லாவிலுள்ள முஅத்தின் அழைக்கப்படுவார். ஆக முஅத்தின்தான் ஜனாஸாவைக் குளிப்பாட்ட வேண்டும் என்ற எழுதப்படாத விதி நம்மிடையே உள்ளது. ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகள் யாரும் அதைச் செய்ய முன்வருவதில்லை. இறந்தபின் உடனடியாகச் செய்ய வேண்டிய, 'ஆடை மாற்றுதல்' என்பதைக்கூட முஅத்தின் வந்துதான் செய்ய வேண்டும். இதுதான் நம் மக்களின் இன்றைய நிலை.

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு மார்க்க அறிவைக் கற்பித்திருந்தால் அவர் இறந்தபின் அவருக்குச் செய்ய வேண்டியவற்றை மகனே முன்னின்று செய்வான். ஆனால் அவரோ பள்ளிவாசல் பக்கமே அவனை அழைத்துச் சென்றதில்லை. ஆகவே அவர் இறந்தபின் அவன் தூரவிலகி நிற்கின்றான். அவருக்கு உடை மாற்றவோ, அவரைக் குளிப்பாட்டவோ தெரிவதில்லை. இதுவே தெரியாதபோது, அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவது குறித்தா தெரியப்போகிறது? தொழுகையில் அல்லது தொழுகை முடித்து, மனமுருகி மன்னிப்புக்கோரும் விதம் குறித்து எப்படி அவன் அறிவான்?

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 3358) 

இந்நபிமொழியின் அடிப்படையில் மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு அவன் மனமுருகிச் செய்யும் துஆதான். அதுவும் அவனுக்குத் தெரியாது. இமாம் துஆ ஓத, மற்றவர்களோடு சேர்ந்து அவனும் ஆமீன், ஆமீன் என்று மனம் ஒன்றாமல் சொல்லிவிட்டுச் செல்வான். ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு அவன் செய்யும் துஆதானே? "என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் (17:24) என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதும் அதுதானே?

அது மட்டுமல்ல, தன் தந்தையின் இறுதித் தொழுகையில் கலந்துகொள்ள, பொதுமக்களுக்கு அழைப்புக் கொடுத்து, நிறையப் பேரைத் தொழுகையில் பங்குகொள்ளச் செய்வது ஒரு மகன் தன் தந்தைக்காற்றும் உதவியாகும். ஏனெனில் நிறையப் பேர் தொழுகையில் கலந்துகொண்டு, அவர்கள் அனைவரும் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறான். 
அது குறித்துக் கூறுகின்ற நபிமொழியைப் பாரீர்!

"இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லி­ம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களுள் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1729)

"ஒரு முஸ்லி­ம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்'' (முஸ்லிம்: 1730) என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார். ஆக நாற்பது முதல் நூறு பேர் வரை ஜனாஸா தொழுகையில் பங்குகொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்வது மகனின் தார்மீகக் கடமையாகும். அதுவே அவன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவியாகும். 

இதன் முக்கியத்துவம் குறித்தெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. எத்தனை பேர் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனும் அசட்டையான போக்கே காணப்படுகின்றது. ஜனாஸா தொழுகையின் முக்கியத்துவம், அதில் துஆ ஓதப்படுவதன் முக்கியத்துவம் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இறைநம்பிக்கைகொண்டு நமக்குமுன் இறந்துவிட்டோரின் பாவங்களுக்காக நாம் மன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்வது நம் கடமையாகும். அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்: "எங்கள் இறைவா! எங்களையும் இறைநம்பிக்கை கொண்டு எங்களை முந்திச் சென்றுவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக. மேலும் இறைநம்பிக்கையாளர்கள்மீது எங்களின் உள்ளங்களில் எந்தக் குரோதத்தையும் ஏற்படுத்திவிடாதே... என்று அவர்கள் கூறுவார்கள்.'' (59: 10) முன்சென்றுவிட்ட சகோதர, சகோதரிகளுக்காக இவ்வாறு நாம் பாவமன்னிப்புக் கோர வேண்டுமென இறைவனே கற்பிக்கின்றான்.

நம் மஹல்லாவில் இறந்துவிட்ட ஒருவருக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் பாவங்களை மன்னித்துவிடுமாறு கோரிக்கை விடுத்தால் அக்கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். இதனால்தான், ஒரு ஜனாஸாவுக்காக நாற்பது பேர் ஒன்றிணைந்து துஆச் செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இறந்துவிட்ட பெற்றோருக்காக நன்மையைச் சேர்த்துவைக்க எல்லோரும் தகுந்த முயற்சி செய்கின்றனர். அதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஏனென்றால் வாழும்போது பெற்றோருக்குப் பணிவிடை செய்யாதவன்கூட, அவனுடைய பெற்றோர் இறந்துவிட்டால் அவர்களுக்கான சடங்குகளைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் வைப்பதில்லை, சிலர் விதிவிலக்கு இருக்கலாம். அந்த வகையில், பெற்றோருக்காக நன்மையைச் சேர்ப்பதில் முதலிடம் வகிப்பது, திருக்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் நன்மைகளைச் சேர்ப்பதுதான். மார்க்க அறிஞர்கள் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. வேறு அறிஞர்கள், ஓதப்பட்ட திருக்குர்ஆனின் நன்மையை அன்பளிப்புச் செய்வது, இறந்துவிட்டவருக்குச் சேரும் என்று கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் நாம் செயல்படுகின்றோம். இருப்பினும் இது ஓர் ஒப்பீட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்பாடுதானே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக வழிகாட்டிய நல்லறம் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நேரடியான நல்லறங்கள் நிறையவே உள்ளன. அவற்றுள் முதன்மையானது தண்ணீர்த் தானம் ஆகும். சஅத் (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சஅதின் தாய் இறந்துவிட்டார். எனவே (அவருக்காக) எதைத் தர்மம் செய்வது சிறந்தது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "தண்ணீர்'' என்று கூறினார்கள். சஅத் (ரளி) அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி "இது சஅதுடைய தாயாருக்கு உரியதாகும்'' என்று கூறியதாக அவர்தம் மகனார் உபாதா (ரளி) அறிவிக்கிறார். (அபூதாவூத்: 1431)

ஆடையற்றோருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தல், கிணற்றைத் தோண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்பளிப்புச் செய்தல், குளத்தைத் தூர்வாரி பொதுமக்கள் பயன்பெறச் செய்தல், பயனுள்ள மரங்களை நட்டு, வளர்த்து அவற்றின் பயனைப் பொதுவுடைமையாக்குதல், மஸ்ஜிதைக் கட்டி பொதுமக்களுக்காக அன்பளிப்புச் செய்தல், திருக்குர்ஆனை வாங்கி அன்பளிப்புச் செய்தல், நூல் நிலையங்களை அமைத்தல், உள்ளிட்ட எத்தனையோ நிலையான நல்லறங்களைச் செய்ய முற்படலாமே? இவற்றுள் எதையாவது செய்தால், அது நீண்ட காலப் பயனை இறந்துவிட்ட பெற்றோருக்குச் சேர்க்குமே? ஏன் நம்முள் பலர் இதுபோன்று தூரநோக்கோடு சிந்திப்பதில்லை
=========================================






1 கருத்து:

Tallahassee TV Repairs சொன்னது…

Great blog post thanks for sharing