-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்ற மீ-டூ (நானும் பாதிக்கப்பட்டேன்)
எனும் முழக்கத்திற்கான தீர்வென்ன? அது எங்கே இருக்கிறது?
அதை யார் சொல்லியிருக்கிறார்? இஸ்லாம் அதற்கான விடையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்-விட்டது. அதைக்
கடைப்பிடிப்போர் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் புறக்கணித்தோர், அன்றாடம் தாம் எதிர்கொள்கின்ற
சமுதாயச் சிக்கல்களை வலைதளங்களில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மதுக்கடைக்குள் சென்று,
அங்கேயே நீண்ட நேரத்தைக் கழித்த ஒருவன், என்னையும் மது குடிக்க வைத்துவிட்டார்கள் என்று சொல்லலாமா? விபச்சார விடுதிக்குள்
சென்று, நீண்ட நேரத்தைக் கழித்த
ஒருவன், என்னை விபச்சார வழக்கில்
அநியாயமாகக் கைது செய்துவிட்டார்கள் என்று கூறலாமா? திரைப்படத் துறையில் சென்று மனமுவந்து நடிக்கத் தொடங்கிவிட்ட ஒரு நடிகை, என்னைக் கண்ட கண்ட இடங்களில்
தொடுகின்றார்கள் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் சமூகம் ஏற்குமா?
ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய இடங்களில் ஒழுக்கமாக இருந்துகொண்டால், இருக்க வேண்டிய எல்லைக்குள்
எல்லைமீறாமல் இருந்துகொண்டால் யாருக்கும் தொல்லை இல்லை. சந்தேகத்திற்குரிய இடங்களுக்குச்
செல்லாமல் பாதுகாப்பாக இருந்துகொள்வது நம் கடமை. தெரிந்தே அசிங்கமான இடங்களுக்குச்
சென்றுவிட்டு, பின்னர் அவன் என்னைச் சீண்டிவிட்டான்
என்று சொல்வது ஏற்புடையதல்ல.
"பொம்பள சிரிச்சா போச்சு'' எனும் பழமொழி எதை உணர்த்துகிறது? ஒரு பெண்ணின் சிரிப்பும் குழைவான பேச்சும் எதிரே உள்ள எதிர்பாலினத்தின் மனத்தில்
ஊடுருவி சில இரசாயன மாற்றங்களை உண்டுபண்ணும். பிறகு தொட்டுப் பார்க்கத் தூண்டும். பிறகுதான்
மற்றவை அரங்கேறத் தொடங்கும். அதற்குள் நிதானத்திற்கு வந்துவிட்டால் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பெண்சீண்டல், வன்புணர்வு உள்ளிட்ட அசிங்கங்களுக்குத்
தாழ்போடும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.
"தனிமையில் அந்நிய ஆடவர் ஒருவர் அந்நியப் பெண் ஒருத்தியுடன் இருக்கும்போது அங்கு மூன்றாம் ஆளாக ஷைத்தான் இருக்கவே செய்வான்.'' (நூல்: திர்மிதீ: 1091)
"தனிமையில் அந்நிய ஆடவர் ஒருவர் அந்நியப் பெண் ஒருத்தியுடன் இருக்கும்போது அங்கு மூன்றாம் ஆளாக ஷைத்தான் இருக்கவே செய்வான்.'' (நூல்: திர்மிதீ: 1091)
சுதந்திரம், பெண்விடுதலை எனும் நாகரிகப்
பெயர்களில், ஆணும் பெண்ணும் தனிமையில்
சந்தித்துப் பேசுவது, ஒன்றாக ஒரே அறையில் தங்குவது, தன்னோடு பணிசெய்பவர்தாமே
என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பது முதலானவை பெண்களுக்கு ஆபத்து. இதை எத்தனை முறை
எடுத்துச் சொன்னாலும் பெண்கள் உணர்வதே இல்லை. பட்டபின்னரே கதறி அழுகின்றார்கள்.
ஒன்றாகப் பணி செய்யும் ஆண்களோடு அசட்டு நம்பிக்கையில் ஒன்றாகத் தங்கும் பெண்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும்
வேறு மாநிலத்திற்கோ நாட்டிற்கோ பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதைத் தவிர்க்க
முடியாது. அது போன்ற சமயங்களில் தவறு நடக்க நிறைய வாய்ப்புண்டு. ஒரு நடிகை, தன் இயக்குநர் எங்கெல்லாம்
அழைக்கின்றாரோ அங்கெல்லாம் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது
தனிமையும் தொலைவும் தவறு செய்வதற்கு ஒருவிதத் துணிச்சலைக் கொடுத்துவிடும். அதனால்தான்
பெண்கள் ஆண்களின் ஆசைக்கு இரையாகின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையிலிருந்து ஒரு பெண் தன் கற்பைக் காத்துக்கொள்ள நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ஓர் அறிவுரையை வழங்குகின்றார்கள். "ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத)
நெருங்கிய ஆண் உறவினர் துணையில்லாமல் (தனியாக) ஒரு பகல் ஓர் இரவு தொலைவுக்குப் பயணம்
மேற்கொள்ளக்கூடாது.'' (நூல்: திர்மிதீ: 1090)
கற்பு, உயிர், உடைமை ஆகியவற்றைக் காத்துக்கொள்ள
ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் துணை தேவை. அந்த ஆண் துணை, தன் கணவனாக இருக்க வேண்டும். அல்லது தன்னை மணமுடிக்க முடியாத தந்தை, சகோதரன், மாமன், சிற்றப்பா, பெரியப்பா முதலான உறவாக
இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு, மயங்கிக் கீழே விழுந்தால், அவளை ஆதரவோடு அள்ளியெடுக்கின்ற
கை ஓர் அந்நியக் கையாக இருக்கக்கூடாது என்பதில் இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக இருக்கிறது.
காலம் செல்லச் செல்ல மோசமான மனிதர்கள் அருகி, படுமோசமான மனிதர்கள் பெருகி வருகிறார்களே தவிர நல்லவர்கள் மிகுந்து வருகிறார்கள்
என்று சொல்ல முடியுமா? அந்தக் காலத்தில்தான் அப்படியெல்லாம்
நடந்தன. இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உளமாரக் கூற முடியுமா? ஏனெனில் காணும் காட்சிகளெல்லாம்
மோசமானவை. அவை மனித மனங்களில் பதிந்துபோய் கிடக்கின்றன. நேரம் பார்த்து அவை ஒவ்வொரு
மனிதனுக்குள்ளிருந்தும் வெளிப்படுகின்றன.
அதுபோலவே பெண்கள் குறித்து, ஆண்களுக்கும் சில எச்சரிக்கைகள் உண்டு. ஓர் ஆண் தன் கற்பைக் காத்துக்கொள்ள, பெண்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். பள்ளிக்கூடம், அலுவலகம், நிறுவனம், தொழிற்கூடம் முதலான இடங்களில்
ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள். அங்குள்ள ஓர் அதிகாரி அல்லது மேலாளர்
தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்மீது வீண்பழி சுமத்தி, ஒரு பெண் அவதூறு கூறலாம். அசிங்கப்படுத்த முனையலாம். அழகான ஓர் ஆணைக் கண்டு, அவனால் ஈர்க்கப்பட்டுவிட்டால்
அவனை அடைய எதையும் செய்வாள் பெண் என்பதையும் ஆண்கள் மறக்கக்கூடாது. குடும்ப ஆண்கள்
பலர், தம் சபலப் புத்தியால் பெண்களிடம்
மாட்டிக்கொண்டு, மத்தளத்திற்கு இருபுறமும்
அடி என்பதைப்போல், கட்டிய மனைவியிடமும் தொட்டுவிட்ட
பெண்ணிடமும் திண்டாடுகின்றார்கள். பெண் விரிக்கும் வலையில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து
மீளுவது கடினம். பொருளாதாரமும் கரைந்து நிம்மதியும் பறிபோய்விடும்.
இவ்விடத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ள அறிவுரையைத் தெரிந்துகொள்வது ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும்:
"திண்ணமாக இவ்வுலகம் பசுமையானது; இனிமையானது. அல்லாஹ் அதில் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். நீங்கள் எப்படிச்
செயல்படுகின்றீர்கள் என்பதைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அந்தோ! உலகத்தில் எச்சரிக்கையாக
இருங்கள்; பெண்களிடம் எச்சரிக்கையாக
இருங்கள்.'' (நூல்: இப்னுமாஜா: 3990)
பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை
செய்துள்ளார்கள். ஆண்களிடம் பெண்கள் எவ்வாறு
எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதேபோல், பெண்களிடம் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து
அறியலாம்.
ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனிமையில் சந்திக்கக் கூடாது என்பதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
ஓர் ஆணால் ஒரு பெண்ணின் கற்புக்கும் மானத்திற்கும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும்
முன்னேற்பாடே இது. மேலும் ஒரு பெண்ணால் ஓர் ஆணின் மானத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இழுக்கு
ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் முன்னேற்பாடும் இதில் உள்ளடங்கியுள்ளது. ஒரு பெண்ணால்
ஓர் ஆணுக்கு அப்படி என்ன களங்கம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று கேட்கலாம். ஒரு பெண் நினைத்தால், ஓர் ஆண் ஒழுக்கமானவன் என்ற
நற்சான்றிதழையும் பெற்றுத் தரலாம். ஒழுக்கங்கெட்டவன் என்ற அவப்பெயரையும் பெற்றுத்தரலாம்.
இரண்டும் அவளால் மட்டுமே முடியும். மேலும் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்படும்
இரசாயன மாற்றங்களைப் போலவே அவளுக்கும் ஏற்படும். அப்போது பெண்ணின் ஈர்ப்பாற்றல் மிகுதியாக
இருந்தால் அவள் அந்த ஆணை இழுத்துவிடுவாள். ஏனென்றால் ஆண்-பெண் அனைவரின் நாடி நரம்பெல்லாம்
ஷைத்தான் உட்புகுந்து ஓடிக்கொண்டிருக்கின்றான். அவனுடைய வேலையே மனித மனங்களைக் கெடுப்பதும்
எண்ணங்களைச் சிதைப்பதும் தவறு செய்யத் தூண்டுவதுமே ஆகும்.
நபி (ஸல்) அவர்கள்,
"(கணவன் உடனில்லாமல்) தனியாக இருக்கும் பெண்களிடம் நீங்கள் செல்லாதீர்கள். ஏனென்றால்
ஷைத்தான் உங்களின் ஒருவரது இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்'' என்று கூறினார்கள்.
"தங்களி(ன் உடலி)லுமா?''
என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னிலும்தான்; எனினும் அவனுக்கெதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்துவிட்டான் (அவனிடமிருந்து நான்
பாதுகாப்புப் பெற்றிருக்கிறேன்)'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1092)
ஷைத்தான் ஒருவரின் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமம்தானே? ஆண் மனத்தளவில் உறுதியாக
இருந்தால், பெண்ணின் மனத்திற்குள்
புகுந்து வழிகெடுத்துவிடுவான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மனத்தளவில் வலுவாக
இருந்ததால், ஹவ்வா அம்மையாரிடம் சென்று, தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்ணுமாறு தூண்டினான். அதன்பின்னர் அவர் தம் கணவரிடம்
சென்று வலியுறுத்தவே, பிறகுதான் ஆதம் (அலை) அவர்கள்
அம்மரத்திலிருந்து புசித்தார்கள் என்பது வரலாறு. அதுபோலவே யூசுஃப் (அலை) அவர்களின்
அழகிய தோற்றத்தில் மயங்கிய அமைச்சரின் மனைவி, சமயம் பார்த்து, அவரை அள்ளிப் பருகிட முனைந்து, ஆசைக்கிணங்க அழைத்தபோது, அவளுக்கிணங்காது மறுத்து, அவளிடமிருந்து வெருண்டோடுகிறார்.
அப்போது அவரது சட்டையைப் பின்புறமாகக் கிழித்துவிடுகிறாள். எதிர்பாராவிதமாக அவளின்
கணவர் உள்ளே வருகிறார். அச்சமயத்தில் அப்பெண் தன் குற்றத்தை மறைப்பதற்காக இறைத்தூதர்
யூசுஃப்மீது பழிபோடுகிறாள். இதுவே பெண்ணின் இயல்பு.
செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளத் துணிவில்லாத பெண்கள் ஆண்கள்மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வார்கள்.
எனவே ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னெச்சரிக்கை.
அதன் கண்ணோட்டத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு வானவர்கள் (இவ்வாறு) அழைத்துக்
கூறாமல் இருப்பதில்லை: "பெண்களால் ஆண்களுக்குக் கேடே. ஆண்களால் பெண்களுக்குக்
கேடே.'' (நூல்: இப்னுமாஜா:
3989)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக