வியாழன், 18 அக்டோபர், 2018

உன்னை நீயே செதுக்கு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(‘நீ’ எனும் சொல்லை ‘நீங்கள்’ என்று படித்துக்கொள்ளுங்கள். எழுத்தின் ஓட்டத்திற்கேற்ப உணர்வுப்பூர்வமாக இருக்கவே ஒருமையில் எழுதப்பட்டுள்ளது.) 

உன்னை நீயே அடக்கு; உனக்காக நீயே திட்டமிடு; அத்திட்டத்தின்படி நீ செயல்படு; எண்ணியதை முடி; உன்னை நீயே பாராட்டிக்கொள்; உன்னை நீயே தட்டிக்கொடு; சோர்விலிருந்து சுறுசுறுப்படை; உன்னை நீ புதுப்பித்துக்கொள்ள நாள்தோறும் உன்னை நீயே செதுக்கு; உன் அறியாமை இருளை விலக்கு; உன் அறியாமையை விலக்க, நாள்தோறும் ஒவ்வொரு செதிலாய் உன்னிலிருந்து பெயர்த்தெடு; மக்கள் மத்தியில் பேரறிஞராய் உயர்ந்திடு.

உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்பும் இவ்வரிகளை நான் உனக்காக எழுதவில்லை; எனக்காக நான் எழுதிக்கொள்கிறேன். ஆம்! மேற்கண்ட வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் நான் இப்போது ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளேன். அதை உன்னோடு பகிர்ந்துகொண்டு, உன் துஆவைப் பெறுவதற்காகவே இதை எழுதுகிறேன். ஏனென்றால் நான் இதுவரை வளர்ந்துள்ளதும் உயர்ந்துள்ளதும் நல்லுள்ளம் கொண்டோரின் துஆவாலும் வாழ்த்துக்களாலும்தான் என்பதை நான் மறவேன். 

அது என்ன புதிய முயற்சி? அது இந்த வயதில் சாத்தியமா? என்று நீ கேட்கலாம். “அது சாத்தியமா?” என்று நாம் கேட்டுக்கொண்டே காலம் கடத்துவதற்குள் மற்றொருவன் அதைச் செய்து முடித்துவிடுகிறான். எனவே சாத்தியமா என்ற  கேள்விக்கே இடமில்லை. இறைவன்மீது வலுவான நம்பிக்கை வைத்துத் தொடங்கிவிட்டால் அதை அடைகின்ற வரை போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது என்ன என்பதைச் சற்று நேரத்தில் சொல்கிறேன். 

அதற்குமுன் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். நான் பாக்கியாத்தில் ஓதிய காலத்தில், மதுரை ஆசியன் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டிருந்த தமிழ்வழி  ஆங்கிலப் பயிற்சிப் புத்தகத்தை சகவகுப்புத்தோழர் நூருல் அமீனிடமிருந்து ஐம்பது ரூபாய்க்கு வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.  அதற்குப்பின் விவேகானந்தா இன்ஸ்டிட்யூட் மூலம் வெளிவந்த நூல் தொடங்கி பல்வேறு ஆங்கில இலக்கண நூல்களைப் படித்துக்கொண்டே இருந்தேன். வருடங்கள் உருண்டோடின. இன்று, ‘முஸ்லிம் ஃபேமிலி’ எனும் ஆங்கில நூலை ‘இஸ்லாமிய இல்லறம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன். (400 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.)

ஒரு பருவத்தில் தொடங்குகின்ற முயற்சி, சில ஆண்டுகளுக்குப்பின் ஒரு திறமையாக மிளிர்வதை நீ காணலாம். இதைத்தான் நான் இப்படிச் சொல்கிறேன்: “உன் அறியாமையை உன்னிலிருந்து செதில் செதிலாய்ப் பெயர்த்தெடு; மக்கள் மத்தியில் பேரறிஞராய் ஒளிர்ந்திடு.”

அதுபோலவே, தமிழ் இலக்கண நூல்களை மிகுதியாக வாசித்துக்கொண்டே இருந்தேன். தமிழ் இலக்கணக் குறிப்புகளையும் கருத்தூன்றிப் படித்தேன்; படித்துக்கொண்டே இருக்கிறேன். “அடிக்க அடிக்க அம்மியும் நகரும்” என்ற முதுமொழிக்கேற்ப, படிக்கப் படிக்க மனத்தில் ஆழமாக அவை பதியும் என்பதும் உண்மை. அதன் பயனாக பாக்கியாத்தில் அல்இர்ஷாத்-கையேட்டுப் பிரதிக்கு ஆசிரியராக இருந்து, இன்று ‘இனிய திசைகள்’ எனும் மாத இதழுக்குத் துணையாசிரியராக இருந்து வருகிறேன். மேலும் பல்வேறு தமிழ்நூல்களைப் பிழைதிருத்தம் செய்து, அவற்றைச் செவ்வையாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன். 

ஒரு காலத்தில் தூவுகின்ற விதையும், நட்டு வைக்கின்ற செடியும் பிற்காலத்தில் விருட்சமாகிப் பயன் நல்குவதைப்போல், ஒரு காலத்தில் நீ எடுத்து வைக்கின்ற முன்னேற்றத்திற்கான காலடி பின்னொரு காலத்தில், அது உன்னுள் ஒரு திறமையாக மேம்படும். எனவே நீ உன் வயதைக் கருத்தில் கொள்ளாமல் இன்று தொடங்குகின்ற முயற்சி, சில ஆண்டுகள் கழித்து, அது ஒரு திறமையாக உன்னுள் வளர்ந்திருப்பதைக் காண்பாய்.  

சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். ஏதாவது ஓர் அரும்பணியைச் செய்ய வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன். உலகில் எத்தனையோ பேருக்கு வாய்த்துள்ள நற்பேறு எனக்கு மட்டும் வாய்க்காமலா போய்விடும் என்ற உயர் எண்ணத்தில், திருக்குர்ஆனை மனனம் செய்யலாமே என முடிவெடுத்து, உடனடியாகத் தொடங்கிவிட்டேன். 

சில மாதங்களுக்குள் யூசுஃப், கஹ்ஃப் ஆகிய இரண்டு அத்தியாயங்களை மனனம் செய்துவிட்டேன். “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப, காலப்போக்கில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துவிடலாம் அல்லவா? திருக்குர்ஆனை மனனம் செய்தோர் பட்டியலில் என் பெயரையும் ஏக இறைவன் இடம்பெறச் செய்துவிடலாமல்லவா?

என்னைப்போல் உன்னைக் காண எனக்கோர் ஆசை. அதனால்தான் இதை நான் உன்னிடம் கூறுகிறேன். ஒருவேளை நீயும் இம்முயற்சியைத் தொடங்கிவிட்டால், உனக்குப் பயனளிக்குமே என்ற நன்னோக்கில், ஒரு குறிப்பையும் கூறிவிடுகிறேன். அதாவது மனனம் செய்யுமுன், அப்பகுதியின் தமிழாக்கத்தை ஒரு தடவை வாசித்து, நன்றாக மனத்தில் இருத்திக்கொண்டு, அதன்பின் மனனம் செய்யத் தொடங்கினால் அது உன் மனத்தில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். 

இத்தனை வயதுக்குப்பின் என்னால் இது முடியுமா என்று தயங்காமல், முன்னே சென்றால் எதுவும் எளிதுதான். என்னைப்போல் உன்னையும் காணும் ஆவலோடு முடிக்கிறேன்.  
தொடர்ந்து செதுக்குவோம்!...    

குறிப்பு: மனனம் செய்வதற்கான உத்திகளையும் மனத்தில் நிலையாக நிறுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளையும் கூறுவதோடு, விரைவில் மனனம் செய்து முடிக்க, துஆ செய்ய மறந்துவிடாதீர்கள். 
===========================================

கருத்துகள் இல்லை: