-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களுக்கும்
உரிய வழிகாட்டுதல் உள்ளது. ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு
பொறுப்புகள் உள்ளன. மனைவி, பிள்ளைகள், தாய்-தந்தை உள்ளிட்டோருக்குச் செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்புகள், அண்டைவீட்டார், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய சமூகப் பொறுப்புகள்
அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவை உள்ளன.
குடும்பப் பொறுப்புகள், சமூகப் பொறுப்புகள், அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகிய அனைத்தும் இருக்கும்போது, ஒருவர் ஆன்மிகப் பாதையில் சென்று அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும் அவனை வழிபடுவதிலும்
முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று இல்வாழ்வைவிட்டு ஒதுங்கிக் கொண்டால் அவரால் மற்ற
பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது. அதனால் அவர் தம் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றாத
குற்றத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் அனைவர்மீதும் கடமையே.
ஆனால் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் தம் குடும்பத்தை விட்டுவிட்டு, நான் எல்லோரையும் தொழுகைக்கு அழைக்கச் செல்கிறேன் என்று மூட்டையைக்
கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டால் அவர் தம் குடும்பப் பொறுப்பைப் பாழ்படுத்திய குற்றத்திற்கு
ஆளாகிவிடுவார்.
சமூகச் சேவையில் ஈடுபடுதல் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் ஒருவர்
தம் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில்கொள்ளாமல் அவர்களுக்காக உழைக்க முனையாமல்
அதில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொருவரும் தமக்கென ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டால் மற்ற பொறுப்புகளை நிறைவேற்றாத குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் நபி (ஸல்)
அவர்கள் தனியொரு பாதையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. எல்லா நற்செயல்களையும்
செய்தார்கள். எல்லாப் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றினார்கள். அப்படி வாழ்வதற்கே
அவர்கள் தம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டினார்கள். அது மட்டுமல்ல, ஒரேயடியாக ஒரு பாதையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற பொறுப்புகளைக்
கவனிக்காமல் விட்டுவிட எத்தனித்த தோழர்களைக் கண்டித்து அறிவுரையும் கூறினார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரளி)
அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட
குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.
அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோல்
தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட
நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களுள் ஒருவர், “(இனிமேல்) நான்
என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில்
தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள்கூட விடாமல் காலமெல்லாம்
நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களைவிட்டு ஒதுங்கியிருக்கப்போகிறேன்; ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன்; ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 5063)
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன்; ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 5063)
மற்றொரு தடவை ஒரு நபித்தோழர் இரவெல்லாம் நின்று வணங்குவதையும்
பகலெல்லாம் நோன்பு நோற்பதையும் கேள்விப்பட்டு உடனடியாக அவரிடம் சென்று அவரைக் கண்டிக்கின்றார்கள்.
அவர் செய்ய வேண்டிய நடுநிலையான நற்செயல்கள் எப்படி அமைய வேண்டுமென வழிகாட்டுகின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீர் இரவெல்லாம்
நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே!
(அது உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். நான், “ஆம்'' என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி
(ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்)
தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள்
நோன்பை) விட்டுவிடுவீராக! ஏனெனில், உமது உடலுக்குச்
செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணிற்குச்
செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச்
செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச்
செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு... என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 6134)
ஆக வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதிலும் நடுநிலையைப்
பேண வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஆன்மிக குருவாகத் திகழ்வோர் பலர் தமக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு, தம்மீது அம்மக்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பையும் மரியாதையையும்
தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். அவர்களிடமிருந்து பணஉதவி பெறுவதை
முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
தம்மை மிகப்பெரிய ஆளாகவும் பிற மனிதர்களைவிடத் தாம் உயர்ந்தவர்
என்ற மமதையோடும் சிலர் திகழ்வதைக் காணமுடிகின்றது. பொதுமக்கள் முன்னிலையில் அந்த ஆன்மிக
குரு மேடையில் வீற்றிருக்கும்போது அவருடைய சீடர்கள் அவருக்காகக் குனிவதையும் காலில்
விழுவதையும் அவர் தடுப்பதில்லை. இது ஓர் ஆன்மிகக் குருவிற்கு அழகா?
“ஆதமுடைய பிள்ளைகளை நாம் கண்ணியப்படுத்தியிருக்கிறோம்” (17: 70) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒவ்வொரு
மனிதனும் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரியவன் ஆவான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை
உள்ளது. அப்படியிருக்கும்போது மனிதன் பிற மனிதர் முன்னிலையில் தலைசாய்ப்பதும் காலில்
விழுவதும் எங்ஙனம் சரியாகும்? அந்த ஆன்மிக
குரு எவ்வாறு இதை அனுமதிக்கிறார்? அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதைக்கூட விரும்பவில்லையே?
ஆன்மிகத்திற்காக எல்லாப் பொறுப்புகளையும் துறப்பதோ குடும்ப வாழ்க்கையை
இழப்பதோ எப்படி உண்மையான ஆன்மிகமாகும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய வழியைக் காண்பிக்கவில்லையே!
முழுநேர ஆன்மிகம், முழுநேர வியாபாரம்-இரண்டுமே தவறுதான்.
எல்லாவற்றிற்கும் சிறிது நேரம் ஒதுக்கிச் செயல்படுவதும் எல்லா வகையான பொறுப்புகளையும் கவனிப்பதுமே நபிவழியாகும்.
எல்லாவற்றிற்கும் சிறிது நேரம் ஒதுக்கிச் செயல்படுவதும் எல்லா வகையான பொறுப்புகளையும் கவனிப்பதுமே நபிவழியாகும்.
ஒன்றை மட்டுமே செய்யும்போது மற்றொரு பொறுப்பைத் தட்டிக் கழித்தவர்களாக
ஆகின்றோம். அதேநேரத்தில் ஒருவர் நல்ல முறையில் வியாபாரம் செய்துகொண்டே ஆன்மிகத்தில்
ஆழ்ந்தவராக இருக்க முடியும். அவர்தம் வியாபாரத்தை மேற்கொள்ளும்போது தம்மைப் படைத்த
இறைவனை நினைத்து, அவனுக்கு அஞ்சியவாறே ஒவ்வொரு கொடுக்கல்
வாங்கலையும் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்தால் அவர் அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த அடியாராக ஆகிவிடுகிறார்.
இவ்வாறே பிற செயல்களைச் செய்கின்ற ஒவ்வொரு மனிதரும் தாம் செய்யும் செயல்களில் இறைவனுக்கஞ்சிச்
செயல்பட்டால் அதுவே ஆன்மிகம்.
எனவே ஆன்மிகம் என்பது ஒரு தனி வழி அல்ல. அது நம் வாழ்க்கையின்
ஒவ்வொரு செயல்பாட்டிலும் இரண்டறக் கலந்து இழையோடிக் காணப்படுவதாகும் என்பதைப் புரிந்துகொண்டு
ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
=================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக