புதன், 10 அக்டோபர், 2018

அண்ணல் நபியின் தொலைநோக்கு!


----------------------------------------------------
இன்றைய அறிவியல் யுகத்தில் மனிதனுக்கு மனிதன் நேரடி முகம் காணும் நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ முகநூல் நண்பர்கள் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு நட்பு வட்டம் நீண்டு காணப்படுகிறது. அண்டை வீட்டுக்காரனோடு நட்பு வைத்துக்கொள்ள முடியாத நாம் அண்டை மாநிலம், அண்டை நாடு என நம் நட்பை விரிவுபடுத்திக்கொண்டு செல்கிறோம்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு- எனும் குறளும் தற்கால நட்புக்கு வலுசேர்க்கிறது என்றே கூறலாம்.

நேரடியாகப் பார்த்துப் போலிப் புன்னகை புரிவதைவிட நெஞ்சத்துள் ஆழமாக நிலைத்திருக்கும் நட்பே உண்மையான நட்பாகும். அதனடிப்படையில் நாம் நேரடியாகக் காணும் நண்பர்களைவிட, நம்மை நிழற்படத்தில் மட்டுமே பார்த்து, எந்தவிதப்  பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் பதிவிடுகின்ற நிழற்படங்களுக்கும் ஆக்கங்களுக்கும் ‘லைக்’ போட்டு, நம்மை உற்சாகப்படுத்துகின்ற, வாழ்த்துகின்ற நண்பர்கள் எவ்வளவு உயர்வானவர்கள் என்பதை ஒவ்வொருவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய துக்கச் செய்திகளைப் பார்த்ததும், இன்னா லில்லாஹி... சொல்லி நமக்காகவும் நம்மில் இறந்துவிட்ட உறவினர்களுக்காகவும் துஆ செய்து பதிவிடுகின்ற நண்பர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள்! நாம் பதிவிடுகின்ற நல்ல செய்திகளைப் பிறருக்கும் பரிமாறி, “இதோ என் நண்பர் எழுதிய ஆக்கத்தை நீயும் படித்துப்பார்” என்று பெருமையோடு முன்னிலைப்படுத்துகிற நண்பர்கள் எவ்வளவு கண்ணியத்திற்குரியவர்கள்!

இத்தகைய தொலைதூர நட்பைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று தேடியபோதுதான் அண்ணல் நபியவர்களின் தொலைநோக்கைப் புரிய முடிந்தது. ஆம்! முகம்காணாத் தொலைதூர நட்புக்கும் இஸ்லாத்தில் இடமுண்டு. அதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தே கூறியுள்ளார்கள் என்பதை அறியும்போது வியப்பு மேலிடாமல் இருக்க முடியாது.

“இரண்டு அடியார்கள் அல்லாஹ்விற்காக நேசித்தால்-அவர்களுள் ஒருவர் கிழக்கிலும் மற்றொருவர் மேற்கிலும் இருந்தாலும்-மறுமை நாளில் அவ்விருவரையும் அல்லாஹ் ஒன்று சேர்த்து, ‘இவரைத்தான் நீ எனக்காக (உலகில்) நேசித்து வந்தாய்’ என்று கூறுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:  ஷுஅபுல் ஈமான்-பைஹகீ: 8606)

இந்த நபிமொழியின் அடிப்படையில் நம்முடைய நண்பர்களுள் ஒருவர் உள்நாட்டில் இருக்கிறார், மற்றொருவர் அயல்நாட்டில் இருக்கிறார். இருவருக்குமிடையே எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனாலும் இறைவனுக்காக முகம்காணா நட்பை வளர்க்கிறார் என்றால் நாளை மறுமையில் அந்த நண்பர்களை ஒன்றுசேர்ப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

எனவே நம் நட்பு முகம்காணா நட்பாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக நேசிக்கும் உண்மை நட்பாக, நல்லனவற்றை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் நட்பாக, ஒருவருக்கொருவர் இறைவனை நினைவூட்டிக்கொள்ளும் நட்பாக ஆக்கிக்கொள்ள முனைவோம். இம்மையில் இயலாவிட்டாலும் மறுமையில் சொர்க்கத்தில் சந்திப்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
================================================= 

கருத்துகள் இல்லை: