புதன், 26 செப்டம்பர், 2018

அரபுக் கல்லூரியில் "சீட்' கிடைக்கவில்லையா?!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

"என்னோட பையன் ஒழுங்கா படிக்க மாட்டேங்கிறான், என்ன செய்யலாம்?'' என்று கேட்டால், "அவனை ஏதாவது அரபுக் கல்லூரியில் சேர்த்துவிடுங்க'' என்று பதில் சொல்வார்கள். இது கடந்த கால உரையாடல். தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. "என் மகனுக்கு அரபுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லையே!'' என்று ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அரபுக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொத்தாம் பொதுவாக எல்லோருக்கும் இடம் இல்லை. குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 

அரபுக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர், எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; திருக்குர்ஆனைப் பார்த்து, சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்; பொது அறிவுத் திறன் இருக்க வேண்டும்; சொன்னால் புரிந்துகொள்கின்ற திறன் இருக்க வேண்டும்; வாசித்ததை விளக்கிக் கூறுகின்ற திறன் இருக்க வேண்டும்-என்று பட்டியல் நீள்கிறது. 

ஏன் இத்தனை நிபந்தனைகள்? தற்போது நடைபெற்று வரும் அரபுக் கல்லூரிகள் முந்தைய தலைமுறை அரபுக் கல்லூரிகள் அல்ல. அவை நவீன அரபுக் கல்லூரிகள். காலத்தின் சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றப்பட்டுள்ள, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள். இவை இரட்டைக் கல்வி முறை-பாடத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. அதன்படி ஒருவர் ஏழாண்டுகளில் ஆலிமாக ஆவதோடு பி.காம்., பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றவராகவும் பல்கலைக் கழக அங்கீகாரம் பெற்ற-இளங்கலைப் பட்டத்திற்கு நிகரான அஃப்ஸலுல் உலமா-அரபுமொழித் தேர்வெழுதி சான்றிதழ் பெற்றவராகவும் வெளிவருகிறார். 

காலை முதல் முற்பகல் வரை மார்க்கப் படிப்பு; பிற்பகல் முதல் மாலை வரை பள்ளிப் படிப்பு. எல்லாம் ஒரே வளாகத்திற்குள் கிடைத்துவிடுகின்றன. இரண்டையும் ஒருசேரக் கற்க வேண்டியுள்ளதால் திறமை மிக்கோருக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. எனக்குத் தெரிந்த இரட்டைக் கல்வி முறை அரபுக் கல்லூரி ஒன்றில் சேர விண்ணப்பித்தோர் எண்ணிக்கை நூற்றைம்பது. சேர்க்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையோ முப்பது மட்டுமே. ஆகவே எழுத்துத் தேர்வு,  நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்மூலம் வடிகட்டித் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இரண்டு கல்விகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றார்களா? இக்கேள்விக்கு விடையாக அவர்கள் சொன்ன பதில்: எங்கள் கல்லூரியின் மூலம் பிளஸ்-டூ தேர்வெழுதிய மாணவர்கள் பலர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் நானூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளதோடு தேர்வெழுதிய அத்துணை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இரண்டு கல்விகளிலும் தேர்ச்சி பெற்று வெளிவருவதால் அவர்கள் பணியாற்றுகின்ற களம் விரிவடைகிறது. இமாமாக, ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, கணிப்பொறி இயக்குபவராக-பல்வேறு தளங்களில் பணியாற்றுகின்றார்கள். சிலர் இளங்கலை முடித்தபின், நேரடியாகக் கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ சேர்ந்து முதுகலை, இளம் முனைவர் (எம்.ஃபில்.), முனைவர் (பிஎச்.டி.) வரை தொடர்கின்றார்கள். 

எனவே உங்கள் பிள்ளைகளை ஈருலகப் பயன்மிக்க மார்க்கக் கல்வி பயின்ற ஆலிமாக உருவாக்க நீங்கள் விரும்பினால், உங்கள் மஹல்லாவின் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பில் சிறு பிராயத்திலேயே அவர்களைச் சேர்த்து, திருக்குர்ஆனைப் பார்த்து, சரளமாக ஓதுமாறு செய்துவிடுங்கள்.  அத்தோடு எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து, தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுங்கள். அதன்பின்னர் அரபுக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் அங்கு அவர்களுக்கு "இடம்' கிடைக்கும்.

இரட்டைக் கல்வி முறையில் இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ முடியுமா என்ற வினாவுக்கு விடையாக, வியப்பான செய்தியொன்றை நான் சொல்கிறேன். இரண்டு கல்வியையும் சிறந்த முறையில் கற்பது மட்டுமல்ல, சிலர் குறிப்பிட்ட கல்வியாண்டிற்குள் தன்முனைப்போடு திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்களாக உருவாகிவிடுகின்றார்கள். இதற்கு மேல் என்ன யோசனை? உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாக உருவாக்க இப்போதிருந்தே உங்கள் முயற்சியைத் தொடங்கிவிடுங்கள்.  

====================== ======================



கருத்துகள் இல்லை: