அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மாதந்தோறும் நடைபெறும் நூல் ஆய்வரங்கம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாநில சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆரம்பமாக புதுப்பேட்டை பள்ளிவாசலின் தலைமை இமாம் மெளலானா பீர் முகம்மது பாகவி கிரா அத் ஓதினார். அடுத்து சென்னை மாவட்டச் செயலாளர் வந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
முதலில் நாடறிந்த பேராசிரியர் மெளலானா அ.முஹம்மது கான் பாகவி அவர்கள். மெளலவி முனைவர் பி.எஸ். சையது மஸ்ஊது ஜமாலி எழுதிய " இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலை ஆய்வு செய்யும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
''இப்புத்தகத்தைப் படிக்கும்போது மிகப் பெரிய ஈர்ப்புத் தன்மையை உணர்ந்தேன். இப்புத்தகத்தை எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் அது ஈடாகாது'' என்றார்.
ஃபிக்ஹுகளில் ஸஹாபாக்களின் பங்கு என்ன என்பதை சிறப்பான முறையில் நூலாசிரியர் தந்துள்ளார். ஸஹாபாக்களின் வாழ்க்கையில் தவறுகள் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தன. அதன் மூலமாக நமக்குப் பல்வேறு சட்டங்கள் கிடைத்தன.
இக்காலத்தில் தாங்களே நேர்வழியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு தவற்றில் ஈடுபடுவதும் அவற்றை மறைக்க முயல்வதையும் பார்க்கிறோம். ஆனால் சத்திய ஸஹாபாக்கள் தவறு செய்தால் அதைத் தாமே முன்வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறி, பரிகாரம் தேடக்கூடியவர்களாக, மறுமைக்குப் பயந்து தண்டனையைக் கேட்டுப் பெறக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
அடுத்து இப்புத்தகத்தில் இமாம்களின் பங்கை நூலாசிரியர் சிறப்பான முறையில் கோர்வை செய்துள்ளார். அறியாமை என்பது முகப் பெரிய முஸீபத். அதை அகற்றியதில் மிகப் பெரிய பங்கு இமாம்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டு நூலாசிரியர் அதைச் சிறப்பாக விளக்கியுள்ளார் என்றார்.
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மாணவர்களுடன் ஆலோசனை செய்ய ஒரு ஃபத்வா குழுவை ஏற்படுத்தி ஃபத்வா வழங்கி வந்தார்கள். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் ஃபிக்ஹு குழுவை ஏற்படுத்தி மக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றார்.
மேலும் புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்று குறிப்பிட்டு
"என்னை உலகம் ஊதாரி என்று சொன்னாலும் புத்தகம் வாங்குவதை (எவ்வளவு காசு கொடுத்தும்) விட மாட்டேன்'' என்ற நேருஜியின் கருத்தைக் கோடிட்டுக் காண்பித்து முனைவர் மஸ்ஊது ஜமாலி எழுதிய புத்தகத்தை அனைவரும் படித்து, பகிர வேண்டும் எனக் கூறி முடித்தார்.
அடுத்ததாக மெளலானா முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்கள் அதிரை இப்ராஹீம் அன்சாரி எழுதிய இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்ற நூலை ஆய்வு செய்யும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்:
வறுமை ஒழிப்புத் திட்டத்தில் ஸக்காத்தின் பங்கை நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டு அது தற்காலத்தில் கலீபாக்கள் காலத்தில் இருந்த நடைமுறை போன்று இப்போது சரியாக நடைமுறைப் படுத்தாமல் இருப்பதால் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் தொய்வு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்ற நூலாசிரியரின் கருத்தைக் கோடிட்டுக் காண்பித்து இப்புத்தகத்தில் மார்க்கத்திற்கு முரணாக எந்தக் கருத்தும் இல்லாதது பாராட்டத்தக்கது என்றார். மேலும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றார்.
ஆய்வரங்கத்திற்கு வந்திருந்த அதிரை இப்ராஹீம் அன்சாரி, "தனது நூலை ஆலிம் பெருமக்கள் அரங்கில் ஆய்வு செய்து நல்ல கருத்துகளைத் தந்ததற்கு நன்றியைத் தெரிவித்தார்."
ஆலிம் பெருமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படிக்கு
மெளலவி முனைவர் அ காஜா முயீனுத்தீன் ஜமாலி,
செயலாளர், ஜமாத்துல் உலமா சபை, சென்னை மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக