-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
யார் தம் வாழ்க்கைக்கான திட்டம் தீட்டி, குறிக்கோளை மனத்தில் நிறுத்தி, செயல்படுகிறாரோ அவரே
தம் வாழ்வில் உயர முடியும். தம் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். திட்டமிடாத மனித வாழ்க்கை
வீணாகும். அவன் தன் வாழ்வில் எதையும் செய்யவோ அனுபவிக்கவோ முடியாது.
காலையில் விழித்தெழுவது முதல் இரவு
படுக்கைக்குச் செல்வது வரை அனைத்துச் செயல்பாடுகளுக்கும் திட்டம் வேண்டும். இல்லையேல்
எதையும் தீர்க்கமாகச் செய்ய முடியாது. எதிலும் பிடிப்பும் அழுத்தமும் இருக்காது.
இரவில் இத்தனை மணிக்குள் தூங்கச் சென்றுவிடுவேன்; அதிகாலையில் இத்தனை மணிக்குத் துயிலெழுவேன்; இத்தனை மணிக்குத் தொழுகச் செல்வேன்; இத்தனை மணிக்குக் கடையைத் திறப்பேன்; அலுவலகம் செல்வேன்; வியாபாரத்திற்குப் புறப்படுவேன்; இத்தனை மணிவரை வியாபாரம் செய்வேன்; இத்தனை மணிக்குப் பகலுணவு உண்பேன் என
ஒவ்வொரு செயலையும் முன்னரே திட்டமிட்டுக் கொண்டால்தான் அதையதை அந்தந்த நேரத்திற்குச்
செய்ய முடியும்.
எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்
எனும் போக்கு சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். செயல்களில் ஓர் ஈர்ப்பும் பிடிப்பும் இருக்காது.
செய்தாலும் வெற்றி இருக்காது. நிதானமாகச் செயல்படவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு அறிவுரை கூறுங்கள்'' எனக் கேட்கிறார். அப்போது நபி (ஸல்)
அவர்கள், "ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசனை மேற்கொள்.
அதன் முடிவு நன்மையானதாக இருந்தால் அதைச் செயல்படுத்து; அதில் ஏமாற்றத்தை அஞ்சினால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடு'' என்று கூறினார்கள். (நூல்: ஷுஅபுல்
ஈமான்: 4328)
அதாவது ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்களும்
அனுபவசாலிகளும் உண்டு. ஒருவன் புதிதாகத் தொடங்கவுள்ள தொழில், திருமணம், சொத்து வாங்குதல், சொத்தை விற்றல் உள்ளிட்ட எதுவாயினும் அதைச் செய்யலாமா, வேண்டாமா என ஆலோசனை செய்ய வேண்டும்.
அது குறித்துத் திட்டமிட வேண்டும். பின்னர் அதைச் செயல்படுத்த வேண்டும். அத்தொழில்
செய்வது இவ்விடத்திற்கு ஏற்றதல்ல என ஓர் அனுபவசாலி கூறினால் அதை ஏற்று, அதனைத் தொடங்காமல் விட்டுவிட வேண்டும்.
இதுவே திட்டமிடுதலுக்கான அடிப்படையாகும். அத்தகைய செயலில்தான் வெற்றி இருக்கிறது.
இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய
ஒரு பொன்மொழி நினைவுகூரத்தக்கது: "நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதாகும்.
அவசரம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும்.''
(நூல்: திர்மிதீ)
மனிதன் தன் வாழ்க்கைத் திட்டங்களைச்
சரியான முறையில் திட்டமிடாததால்தான் ஒவ்வொரு நாளும் அவன் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
உரியவர்களிடம் கேட்கவோ, ஆலோசனை செய்யவோ, எதிர்கால வாழ்க்கையைப் பற்றித் திட்டமிடவோ
நினைப்பதில்லை. அதனால் மனிதன் வாழ்க்கையில் தோல்வி காண்கிறான்.
ஒரு மனிதனின் திட்டமிடாத வாழ்க்கையால்
அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு நேரம் ஒதுக்கித் தொழ முடியவில்லை. அல்லும் பகலும் உலக
வாழ்க்கைக்கான தேடலிலேயே நேரம் கரைந்துவிடுவதால் படைத்தோனை வழிபட நேரம் ஒதுக்க முடியவில்லை.
திட்டமிடாத வாழ்க்கையால் இவ்வுலகில் ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து மறைந்தாலும் மறுமையில்
வெற்றிபெற முடியாது என்பதை அவன் உணர்வதே இல்லை.
திட்டமிட்ட வாழ்க்கையை மேற்கொள்கின்ற
மனிதன், ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகின்றான்.
தன் அன்றாட அலுவல்களைச் செய்கிறான். தன் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்கிறான். தன்
பெற்றோரைப் பேணுகின்றான். தன் உறவினர்க்குக் கொடுத்து உதவுகின்றான். இன்னும் எண்ணற்ற
செயல்களைத் தொய்வின்றிச் செய்துவருகின்றான். அத்தகையவன் இம்மையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து
மறுமையிலும் வெற்றி பெறுவான் என்பதில் ஐயமில்லை.
அரசு கடைப்பிடிக்கின்ற குடும்பக் கட்டுப்பாடு
எனும் திட்டமும், ஏழைகள் மிகுதியாக உள்ளமையும் திட்டமிடாத
செயல்பாடுகளுக்கான சான்றுகள் ஆகும். மனிதனுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை நிறைவாகத்
தந்துள்ளான் இறைவன். புவியின் நிலப்பரப்பில் அன்றைய மனிதன் செய்த வேளாண்மையைவிட இன்றைய
மனிதன் நவீன ஆயுதங்களையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி மிக நேர்த்தியாக வேளாண்மை செய்கிறான்; அபரிமிதமாக மகசூல் செய்கிறான். அப்படியிருக்க
ஏழைகள் மிகுதியாகக் காணப்படுவதேன்? கோடானு கோடிப்பேருக்கு உணவுப் பொருள்
உரிய முறையில் கிடைக்கப் பெறாதது ஏன்? அன்று நிலப்பரப்பில் மட்டும்தான் விவசாயம் செய்தான். இன்று ஒரே
நிலத்தின் பல அடுக்குகளில் பயிரிட்டு மகசூலைப் பெருக்குகிறான். அப்படியிருந்தும் ஏழைகள்
மிகுந்திருப்பதேன்? சரியான திட்டமிடாமைதான்.
மக்கள்தொகை மிகுதியாகி மனிதர்கள் வாழ்வதற்கு
இடப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்பதற்காக அரசு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக்
கடைப்பிடிக்கின்றதா? இப்புவிமேல் எவ்வளவு எண்ணிக்கையிலான
மக்களும் வாழ்வதற்கான ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். அதற்கான அறிவை மனிதனுக்கு அவன்
வழங்கியுள்ளான். அன்று பத்து ஏக்கர் நிலப் பரப்பில் இருநூறு பேர் வாழ்ந்தார்கள் என்றால், இன்று அதே அளவுள்ள நிலப்பரப்பில் பத்தாயிரம்
பேர் வாழலாம். அத்தகைய அறிவு வளர்ச்சியை மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ளதால்தான் இருபது, முப்பது அடுக்குகள் கொண்ட தொகுப்பு
வீடுகள் பெருகியுள்ளன.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற
அச்சமா? மிகுதியான மழைப்பொழிவை இறைவன் கொடுத்துக்கொண்டுதான்
இருக்கிறான். அதை உரிய முறையில் சேமிக்கவும் பங்கீடு செய்யவும் அரசிடம் திட்டமில்லை.
அதனால்தான் பலருக்குக் குடிநீர்ப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதே தவிர இறைவன் தனது அருளை நிறுத்திக்கொள்ளவில்லை.
ஒரு பக்கம் பெருமழை பொழிகிறது. மறுபக்கம் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வேளாண்மைப் பயிர்கள்
வாடுகின்றன; அழிகின்றன.
இன்றைய இந்தியா பொருளாதாரத்தில் பின்னடைவு
கண்டுள்ளதே காரணமென்ன? சரியான பொருளாதாரச் சிந்தனையும் திட்டமும்
அரசிடம் இல்லை. தவறான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுவதாலும் இறைவன் தடுத்துள்ள வட்டி முறையைப் பின்பற்றுவதாலும் பொருளாதாரப் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே மிகுதியான பணம் செலவாகிவிடுவதால்
மக்களுக்கான திட்டங்களைச் சரியான முறையில் செயல்படுத்த அரசாங்கத்தால் இயலவில்லை.
முஸ்லிம்கள் பலர் தம் பெண்பிள்ளைகளை
ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் படிக்க வைக்கின்றனர்.
பின்னர் அவர்களை உரிய இடத்தில் திருமணம்
செய்துகொடுத்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் தம் திருமணத்திற்குப் பிறகு எந்த வேலைக்கும்
செல்லாமல் தம் கணவன் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அக்கல்வி
சமுதாயத்திற்குப் பயன்படாமலேயே போய்விடுகின்றது. இதற்குப் பதிலாக அவர்களைப் பெண்கள்
சார்ந்த துறைகளில் கவனம் செலுத்திப் படிக்க வைத்தால் அவர்களின் கல்வி சமுதாயத்திற்கும்
தம் குடும்பத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும். பெண்கள் மருத்துவம், நர்சிங், சிறுவர் மருத்துவம், ஹோம் சயின்ஸ், கற்பித்தல் துறை, தட்டச்சுப் பயிற்சி முதலானவை பெண்களுக்கு உகந்தவை.
இக்கல்வியால்
சமுதாயத்திற்குப் பெரிதும் பயனளிக்க முடியும்.
மேலும் இக்கல்வியால் வீட்டைவிட்டுச் செல்லாமலும் சமுதாயத்திற்குப் பயனளிக்க
முடியும்.
இப்படி எத்தனையெத்தனையோ துறைகளில் மனிதன்
தோல்வி கண்டுள்ளதற்குத் திட்டமிடாமைதான் காரணம். மனிதன் தன் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டுச்
செய்யத் தொடங்கிவிட்டால் அவன் இவ்வுலகில் இன்புற்று வாழ்ந்து எல்லா இன்பங்களையும் அனுபவிப்பதோடு
எல்லோரையும் மகிழ்ச்சியாக வாழவைக்கவும் முடியும் என்பதே உண்மை.
===============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக