மருத்துவருக்குத் துணையாகப் பணியாற்றும் கம்மவுண்ட்டர், நர்ஸ் ஆகியோருக்குக் குறிப்பிட்ட படிப்பும் பயிற்சியும் இருப்பதைப்போல் பள்ளிவாசலில் பணியாற்றும் இமாமுக்குத் துணையாகப் பணியாற்றுகின்ற பிலாலுக்கு (முஅத்தின், மோதினார்) இஸ்லாமியச் சமுதாயத்தில் எந்தப் படிப்பும் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. இதனால் யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம் என்ற நிலையே இதுநாள் வரை இருந்துவருகிறது.
“யார் வேண்டுமானாலும் பிலால் ஆகலாம்” என்ற நிலை இருப்பதால்தான் இன்று தமிழ்நாட்டில் பிலால் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தைப் படித்தனர்; எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருந்தனர். அதனால் ஆர்வமுள்ளோர் பிலாலாகப் பணியில் சேர்ந்துகொண்டனர். ஆனால் தற்காலத்தில் அந்தந்தப் பணிக்கு உரியதை மட்டுமே அவரவர் படிக்கின்றனர். அதனால்தான் பிலால் பணிக்குத் தமிழ்நாட்டில் பற்றாக்குறை உள்ளது.
எனவே இக்குறையை நீக்க பிலால் பணிக்கு விருப்பமுள்ளோருக்கு உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். சான்றிதழ் உள்ளோரை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டால் தகுதியான ஆள்களை நம் தமிழகத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கான பயிற்சியை அரபுக் கல்லூரிகளே வழங்க முன்வர வேண்டும்.
பிலால் பணிக்கு உரிய மரியாதையும் தக்க சம்பளமும் வழங்கப்பட்டால் நம் தமிழகத்திலிருந்தே அதற்குரிய ஆள்களை நாம் நியமித்துக் கொள்ளலாம். இல்லையேல் இப்பணிக்கு வடமாநிலங்களிலிருந்துதான் ஆள்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக