சமநிலைச்
சமுதாயம் மாத இதழில் எனது வாசகர் கடிதம்
எச். பீர் முஹம்மது
எழுதியிருந்த பொங்கல் பண்டிகையும் தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலும் கட்டுரை
வாசித்தேன். பொங்கல் பண்டிகையை முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களைப்போல்
முஸ்லிம்களும் முஸ்லிம் விவசாயிகளும் கொண்டாட வேண்டும் என்றும் தமிழ்
முஸ்லிம்கள் என்பதை இக்கொண்டாட்டத்தின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும்
என்றும் கூறுகிறார்.
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் உவப்பையும் திருப்தியையும் பெறுவதாக
இருக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம் விவசாயிகள் தம் அறுவடையை முடித்து, மகசூலை வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகு பொங்கல் பண்டிகையன்று ஒரு சிறப்பு விருந்துக்கு
ஏற்பாடு செய்து விவசாயத் தொழிலுக்கும்,
வேளாண்மைக்கும், அறுவடைக்கும் பாடுபட்ட அத்தனை உழவர்களையும் அழைத்து விருந்துண்ணச் செய்தால் அதை
எந்த ஆலிமும் எதிர்க்க மாட்டார். இஸ்லாமியச் சட்டப்படி, ஒரு விவசாயி சுயமாகத் தண்ணீர் இறைத்து வேளாண்மை செய்தால்
5 சதவிகிதமும், மழைநீர் மூலம் விவசாயம் செய்தால் 10 சதவிகிதமும்
ஸகாத் கொடுக்க வேண்டும். அதை இந்த வகையிலாவது அவர்கள் நிறைவேற்றலாம்.
முஸ்லிம்களின் பண்டிகைகளின்போது
பிற சமய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் பிற
சமயத்தவர் பண்டிகைகளில் குறிப்பாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது முஸ்லிம் அரசியல்-சமூகத் தலைவர்கள்
ஒரு வாழ்த்துக்கூடச் சொல்வதில்லையே ஏன்?
என்று வினவுகிறார். இது எப்படி
இருக்கின்றதென்றால், பிற சமயத்தவர் நம்முடைய தர்ஹாக்களுக்கு வருகின்றனர்.
நாம் ஏன் அவர்களுடைய கோவில்களுக்குப் போகக்கூடாது? என்று கேட்பதைப்போல்
உள்ளது. அவர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களுடைய தெய்வங்களோடு இணைந்துதான் இருக்கும்.
அப்போது நாம் வாழ்த்தினால் அவர்களுடைய தெய்வ வழிபாட்டைச் சரியென ஆமோதிப்பதாகவே கருதப்படும்.
அதனால்தான் யாரும் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்பதைக் கட்டுரையாளர் உணர
வேண்டும்
அதேநேரத்தில் எந்த
ஊரிலும் முஸ்லிம்கள் பொங்கல் ஆக்குவதில்லை என்றும் சொல்லிவிட முடியாது. எனக்குத் தெரிந்து
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓணாங்குடி எனும் கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் விவசாயிகள். அவர்கள்
தம் அறுவடைக்காலம் முடிந்ததும் தைப் பொங்கலன்று தம் வீடுகளின்முன் பொங்கல் வைக்கின்றனர்.
இதை எந்த ஆலிமும் தடுக்கவில்லை.
ஈத் திருநாளில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீரவிளையாட்டுக்கு அனுமதியளித்ததைப்போல் பொங்கல் திருநாளில்
முஸ்லிம்கள் வீரவிளையாட்டுகளை நடத்தலாமே? என்று கூறுகிறார். வீர விளையாட்டுகளைத் திருநாளில் மட்டுமின்றி, மற்ற நாள்களிலும் விளையாட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
குதிரையேற்றம், அம்பெய்தல், ஓட்டப்போட்டி
உள்ளிட்ட உடல் நலனை மேம்படுத்துகின்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டியிருக்கின்றார்கள்.
ஆகவே அதையெல்லாம் எந்த ஆலிமும் தடுக்கப்போவதில்லை.
ஈத் திருநாள்களைத்
தவிர மற்ற எந்தக் கொண்டாட்டத்திற்கும் உலமாக்களின் ஆதரவு இல்லை என்பதை இலைமறை காயாகக்
குறிப்பிடுகிறார். அவ்வாறில்லை. வழிபாடு சாராத தேச நலனையும் உயர்வையும் கொண்ட எந்தக்
கொண்டாட்டத்தையும் உலமாக்கள் உதாசீனப்படுத்தியதில்லை. இந்திய விடுதலை நாள்,
குடியரசு நாள் போன்ற தேசிய
நாள்களில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். அதை உலமாக்கள் ஒருபோதும்
எங்கேயும் தடுத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓர் ஆலிம் தலைமையேற்றுள்ள கட்சிதான்
மதுரையில் ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சுதந்திர நாளை மாபெரும் பேரணியாக நடத்திக்காட்டியது.
கலந்துகொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் இங்கு தமிழன்
கொண்டாடுகின்ற எந்தக் கொண்டாட்டமும் கடவுளை மையமாக வைத்துத்தான் நடைபெறுகிறது. எனவே
அதை அப்படியே பின்பற்றித் தமிழ்பேசுகின்ற முஸ்லிம்கள் கொண்டாட வேண்டுமென்ற
எந்த அவசியமுமில்லை. அதேநேரத்தில் தமிழ்மொழியையோ, தமிழ்நாட்டையோ, இந்தியாவையோ மையமாக வைத்து ஒரு விழா நடந்தால் அதில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதற்கு எந்தத்
தடையும் இல்லை.