திங்கள், 31 மார்ச், 2014

தெரிந்ததைச் சொல்கிறேன் (முன்னுரை)




முன்னுரை

எழுதுகோலால் கற்பித்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நற்போதனைகளை மக்கள் யாவருக்கும் போதிக்க வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்கள்தம் தோழர்கள்மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக!

ஜனாப் டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ ஐ.பீ.எஸ். அவர்கள் எழுதியுள்ள, தெரிந்ததைச் சொல்கிறேன் எனும் நூல் என் பார்வைக்கு வந்தது. இந்நூலின் தமிழ்நடையைச் சீராக்கி, பிழைதிருத்தம் செய்து தருமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகவே இந்நூலைப் புரட்டிப் பார்த்தபோது அவர் தம் நெஞ்சத்தில் தோன்றிய கருத்துகளை எந்த வஞ்சமும் இல்லாமல் சமுதாயம் சீராக வேண்டும் என்ற நன்னோக்கத்தில்தான் கூறியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவர் எதையும் நேர்படப் பேசுகின்ற பழக்கமுடையவர். அவர் காவல்துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதால், அவர் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லும்போதும்  காவல்துறைக்கே உரித்தான மிடுக்கு தென்படுகிறது. கண்டிக்கும் உணர்வோடும் ஆதங்கத்தோடும் கருத்துகளை எடுத்து வைக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நம் சமுதாயத்தில் புரையோடிக்கிடப்பவை.
அவர் இந்நூலில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சிலருக்குப் பேசுவது எவ்வாறு என்றுகூடத் தெரிவதில்லை. மனைவியிடம் பேசுவதைத் தாயிடம் பேசுகிறார். தாயிடம் பேசுவதை மனைவியிடம் பேசுகிறார். அறிவாளிகளிடம் பேச வேண்டியதைப் பொதுமக்களிடம் பேசுகிறார். பொதுமக்களிடம் பேச வேண்டியதை அறிவாளிகளிடம் பேசுகிறார் என்று தெரிவிக்கிறார். ஆம்! நம்முள் இருவர் சந்தித்துக்கொண்டால் எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தொடர்பே இல்லாததையெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள். நாம் எதுவும் பேசவில்லையானாலும், “என்ன நீங்கள் பேசவே மாட்டீர்களா?” என்று 
கேட்கின்றார்கள்.

பேசுவதை அறிந்து பேச வேண்டும். தெரிந்ததைப் பற்றிப் பேச வேண்டும். தெரியாததைப் பற்றிப் பேசக்கூடாது. தெரியாததையெல்லாம் தெரிந்ததைப் போல் பேசினால் இறுதியில் நாம் அறிவிலிகளாக ஆகிவிடுவோம். எனவே எதைப் பேசினாலும் பொருள்படப் பேசுவோம்.

மற்றொரு கட்டுரையில், “தொலைக்காட்சிப்பெட்டி, கணிப்பொறி ஆகியவற்றைப் பிள்ளைகளின் படுக்கை அறைகளில் வைக்காமல் பொதுஅறையில் வைக்க வேண்டும். ஆடல், பாடல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற போர்வையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அதில் ஆபாசக் காட்சிகளும் காட்டப்படுகின்றன. அவை ஒளிபரப்பப்பட்டால் உடனே அந்த நிகழ்ச்சியை மாற்றிவிட வேண்டும். அதுபோன்ற காட்சிகளை நம்முடைய பெற்றோர் பார்க்கமாட்டார்கள். நாமும் பார்க்கக்கூடாதுஎன்ற எண்ணத்தைப் பிள்ளைகள் மனதில் தோன்றச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டுப் பிள்ளைகளுடன் அமர்ந்து பெற்றோரும் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாதுஎன்று அறிவுரை கூறுகிறார்.
 
இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் கெட்டுப்போக நாமே காரணமாக இருக்கின்றோம். குறிப்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றபோது ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்கக்கூடாது என்று ஒரு பட்டியல் போட்டுத்தான் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கட்டுப்பாடு இல்லையென்றால் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்பதைப் 
பெற்றோர் உணர வேண்டும். 

இன்றைக்குச் சின்னப் பிள்ளைகள்கூடத் திரைப்படங்களில் பேசப்படுகின்ற வசனங்களைத் தம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் பல மோசமான பொருள்கொண்ட வசனங்கள். அவற்றின் பொருள்கூடப் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை பெறச் செய்வது பெற்றோரின் பொறுப்புதான். அதற்காக அவர்கள் தம்முடைய மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
தன் செல்ல மகள் விருப்பப்பட்டுக் கேட்கின்றாளே என்று அந்த அப்பாவிப் பெற்றோரும் ஒரு செல்பேசி வாங்கிக் கொடுத்தார்கள். செல்பேசி வாங்கியதும் அவளுடைய நடை, உடை, பாவனை, பேச்சு அத்தனையும் மாறிவிட்டனஎன்று சொல்கிறார்.

நவீனச் சாதனங்கள் யாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தே உள்ளன. அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கத்தியை வைத்துக்கொண்டு ஓர் ஆப்பிளை நறுக்கிச் சாப்பிடலாம். அதே கத்தியில்  ஒரு மனிதனின் உயிரையும் மாய்க்கலாம். ஆனால் எது அறிவுடைமை என்பதை நாம் நம் பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

செல்பேசி, இணையதள வசதியுடன்கூடிய கணினி போன்றவற்றை நாம் நம் செல்லப் பிள்ளைகளுக்கு அன்போடு வாங்கிக்கொடுக் கின்றபோது, அதன்மூலம் அவர்கள் கல்வியறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொண்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற் கும் நல்லது. அதற்கு மாறாக, அவர்கள் தேவையில்லாதவற்றைப் பார்க்கவோ படிக்கவோ தொடங்கிவிட்டால் அது அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் தீமையாகவே முடியும். அதனால்தான் அவற்றை வீட்டின் பொதுவான 
இடத்தில் வைக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

இன்னும் இந்தச் சமுதாயத்திலுள்ள செல்வர்கள் தம் செல்வத்தை அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் சமுதாய முன்னேற்றத்திற்காகத் தாராளமாகச் செலவு செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் மனமுவந்து மாசற்ற மனதோடு இறைப்பாதையில் செலவழிக்கத் தொடங்கிவிட்டால் இஸ்லாமியச் சமுதாயம் மென்மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்று தெரிவிக்கிறார்.

இந்நூலில் அவர் தம் சிந்தனையில் பட்டதை உள்ளது உள்ளபடி கூற முனைந்துள்ளார். எனவே இந்நூலின் கருத்துகள் செயல்பாட்டுக்கு வந்தால் சமுதாயம் பயனடையும் என்பதில் ஐயமில்லை.

அவர் மென்மேலும் பல நூல்களை எழுதி, இச்சமுதாய மக்களைத் தட்டி 
எழுப்ப உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக!
 அன்புடன்
மௌலவி, காரீ, நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்.ஃபில்
ஆலங்குடி 
09-12-2013