சனி, 27 ஜூலை, 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்... தொடர்-3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களில் எளிதாகப் பதிகின்ற வகையில் மும்மூன்றாகக் கூறிய அறிவுரைகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று: மூன்று மஸ்ஜிதுகளுக்குத் தவிர (நன்மையைக் கருதிப்) பயணம் மேற்கொள்ளப்படாது. 1. மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுல் அக்ஸா, 3. என்னுடைய இந்த மஸ்ஜித் (மஸ்ஜிதுந் நபவீ) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 1122)

மக்கள் நன்மையைக் கருதி மஸ்ஜிதுகளுக்குச் செல்ல நாடினால் மேற்கண்ட இந்த மூன்று மஸ்ஜிதுகளுக்குச் செல்லலாம். இவை தவிர மற்ற மஸ்ஜிதுகளுக்கு நன்மையை நாடிச் செல்லக்கூடாது என்பதே நபிகளாரின் கூற்றிலிருந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். ஏனெனில் இந்த மஸ்ஜிதுகளுக்குத்தான் மற்ற மஸ்ஜிதுகளைவிட அதிகமான நன்மையைப் பெற்றுத்தருகின்ற சிறப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியுள்ள மற்றொரு நபிமொழி அதற்கு ஆதாரமாக உள்ளது.

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஒரு இலட்சம் மடங்கு சிறப்புடையதாகும். மதீனாவிலுள்ள (என்னுடைய) மஸ்ஜிதில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறப்புடையதாகும். பைத்துல் முகத்தசில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற மஸ்ஜிதுகளில் தொழுவதைவிட ஐந்நூறு மடங்கு சிறப்புடையதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: தப்ரானீ, இப்னு குஸைமா)

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் மக்கள் பலர் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் நன்மையை நாடிச் செல்கின்றார்கள். அதன்பின் மஸ்ஜிதுன் நபவீக்குச் செல்கிறார்கள். அங்கு சில நாள்கள் தங்கித் தொழுதுவிட்டு வருகின்றார்கள். அதையும் தாண்டி, அல்லாஹ்வின் சான்றுகளைக் காணப்புறப்பட்டவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கும் சென்றுவருகின்றார்கள். ஆக, இன்றைக்கு இம்மூன்று பள்ளிகளுக்குச் செல்வது எளிதாகிவிட்டது. அத்தகையோர் நன்மையை நாடி இம்மூன்று பள்ளிவாசல்களுக்குச் செல்லலாம். இவை தவிர வேற்று ஊர்களுக்கோ மஸ்ஜிதுகளுக்கோ நன்மையை நாடிச் செல்ல வேண்டிய அவசியமோ கடமையோ இல்லை என்று விளங்க முடிகிறது.

மூன்று பேரைவிட்டு எழுதுகோல்  உயர்த்தப்பட்டுவிட்டது. 1. தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, 2. சிறுவன் பெரியவனாகின்ற வரை, 3. பைத்தியக்காரன் சுயசிந்தனையுடையவனாக ஆகும் வரை- என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ: 1343)

அதாவது தூங்குபவன், சிறுவன், சுயசிந்தனை இழந்தவன்-ஆகிய மூவரும் செய்கின்ற  செயல்பாடுகள் தம் சுயகட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். தம் சுய சிந்தனையை இழந்து ஒருவன் செய்யும் செயல் சுயசிந்தனையோடு செய்பவனுடைய செயலோடு ஒப்பிடப்பட மாட்டாது. ஒரு சிறுவன், அவன்தன் பருவ வயதை அடைகின்ற வரை அவன் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளும் பிழைகளும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. தொழுகை அவன்மீது கடமையாவதில்லை. எனவே தொழுகையை விட்டதற்கான தண்டனைக்கு ஆளாக மாட்டான். இதுவெல்லாம் பருவ வயதை அடைகின்ற வரைதான். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பொறுத்த வரை 14 வயது வரை. அவன் 15 வயதை அடைந்துவிட்டால் முற்றிலும் வளர்ச்சியடைந்த, சுயசிந்தனையோடு  செயல்படுகின்ற ஆற்றலைப் பெற்றுவிடுகின்றான். அதன்பின்னர் அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அவனே  பொறுப்பாளியாவான். நன்மை செய்தால்  நன்மைக்கும் தீமை செய்தால் தீமைக்கும் அவனே பொறுப்பாளியாவான்.

இன்றைய இந்தியச் சட்டப்படி 17 வயது வரை பால்ய பருவமாகவும் 18 வயதை அடைந்தால்  வாலிபப் பருவமாகவும் கணிக்கப்படுகிறது. அதாவது, 18 வயதை அடைந்தால்தான் அவன் சட்ட வரம்புக்குள் வருவான். அது வரை அவன் சிறுவனாகவே கருதப்படுவான். ஆகவே 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மூன்றாண்டு காலங்களில் அவன் செய்கின்ற குற்றச் செயல்களுக்கு அவனைப் பொறுப்பாளியாக்குவதில்லை. ஆனால் அப்பருவத்தில் அவன் தன்னை அறிந்தேதான் பாலியல் குற்றங்களிலும் கொலைக் குற்றங்களிலும் ஈடுபடுகின்றான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி, குறுமதி கொண்ட சிலர் சிறுவர்களைப் பயன்படுத்திச் சில குற்றச் செயல்களைச் செய்யவைக்கின்றார்கள் என்பதும் உய்த்துணர வேண்டிய உண்மை. எனவே இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதை அடைந்துவிட்ட ஒருவன் பிற மனிதர்களைப்போல் சட்ட வரம்புக்குள் வந்துவிடுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உறங்குபவன் இறந்தவனில் பாதி என்பார்கள். உறங்குபவன் தன் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றான். எனவே அவன் தன் உறக்கத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாகிவிட்டால், அவன் தவறாகச் செய்துவிட்ட சட்ட வரம்புக்குள் வருகின்றான். சான்றாக, ஒருவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது உருண்டு அல்லது மேலிருந்து கீழே படுத்திருப்பவன்மீது விழுந்ததால், அவன் இறந்துவிட்டான் என்றால், அவன் மற்றவர்களைப்போல் பழிக்குப் பழி வாங்கப்படமாட்டான். மாறாக, தவறுதலாகச் செய்துவிட்ட சட்டவரம்புக்குள் வருவான். அதன்படி அவன் இறந்தவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு கொடுப்பான்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுயநினைவிழந்த பெண்ணொருத்தி விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறி அவர்களின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரளி) அவர்கள் (அங்கிருந்த) மக்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, அவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் அவளைக் கல்லால் அடிப்பதற்காகக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்கள் அலீ (ரளி) அவர்களைக் கடந்து       அப்பெண்ணைக் கொண்டுசென்றார்கள். அலீ (ரளி) அவர்கள், என்ன விஷயம்? என்று வினவினார்கள்.  இன்ன குலத்தைச் சார்ந்த இவள் பைத்தியக்காரி. இவள் விபச்சாரம் செய்துவிட்டாள். எனவே உமர் (ரளி) அவர்கள் இவளைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு எங்களை ஏவியுள்ளார்கள் என்று கூறினார்கள். அப்போது அலீ (ரளி) அவர்கள், இவளைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள் என்று கூறி, அவர்களுடன் அலீ (ரளி) அவர்களும் சென்று, அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்குத் தெரியாதா? மூன்று பேரைவிட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது. சுயநினைவிழந்தவன் தெளிவடைகின்ற வரை, தூங்குபவன் விழித்தெழுகின்ற வரை, சிறுவன் பருவ வயதை அடைகின்ற வரை. அதனைக் கேட்ட உமர் (ரளி) அவர்கள், ஆம் என்று கூறினார்கள்.  இவள் சுயநினைவற்றவளாக இருப்பதுடனே இவளுடைய நிலை என்ன? என்று அலீ (ரளி) அவர்கள் வினவ, உமர் (ரளி) அவர்கள், (அவளுக்கு) ஒன்றுமில்லை என்று கூறினார்கள். அப்படியானால் அவளை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே உமர் (ரளி) அவர்கள் அவளை விட்டுவிட்டார்கள். பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.  (அபூதாவூது: 3823)

ஆக, மூன்றுபேர் செய்யும் செயல்பாடுகள் பிறருக்கு வழங்கப்படுகின்ற சட்டவரம்புக்குள் வராது என்பதையே மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

மூன்று விசயங்களை வினையாகச் செய்தாலும் வினைதான். விளையாட்டாகச் செய்தாலும் வினைதான். 1. திருமணம், 2. தலாக்-மணவிலக்கு, 3. மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளல்-என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2029)

அதாவது, ஒருத்தி தன் உறவுக்காரனிடம் அன்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீ என்னைத் திருமணம் செய்துகொள்கின்றாயா மச்சான்? என்று வினவ, அவனும் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டால் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிடும். அதன்பின் நான் விளையாட்டுக்குத்தானே சொன்னேன் என்று சொல்ல முடியாது. எனவே இதுபோன்ற பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒருவன் தன் மனைவியைப் பார்த்து, நீ தலாக் என்று கூறிவிட்டால் அவள் அப்போதே தலாக் ஆகிவிடுவாள். நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்று கூறினாலும் அவ்விருவருக்கிடையே தலாக் நிகழ்ந்துவிடும். இருப்பினும் மீண்டும் சேர்ந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் இவ்வாறு அவன் மூன்றாம் தடவை கூறிவிட்டால் அவ்விருவருக்கிடையே முற்றிலும் பிரிவு ஏற்பட்டுவிடும். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ இயலாது. அவளை மற்றொருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவன் சுயமாக அவளைத்  தலாக் விட்டால்தான் முதல் கணவன் அப்பெண்ணை மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். எனவே இதுபோன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதுபோலவே, ஏற்கெனவே தலாக் விட்டுவிட்ட தன் மனைவியை, நான் உன்னைத் திரும்ப அழைத்துக்கொண்டுவிட்டேன் என்று விளையாட்டாகக் கூறினாலும் அவர்கள் இருவரிடையே திருமணப் பந்தம் மீண்டும் ஏற்பட்டுவிடும். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். எனவே  நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை நிதானத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.







========================