செவ்வாய், 5 ஜூலை, 2011

பேச்சைக் குறைப்போம்!

அன்று முதல் இன்று வரை பேசாதவர் எவரும் இல்லை. அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் பேசுவதை நிறுத்தியதில்லை. நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நமக்குச் சீராக உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ள அல்லாஹ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான். நாம் பேசுகின்ற பேச்சு பதிவுசெய்யப்படுகின்றது. அல்லாஹ் அதற்காக நம்முடைய தோளின் வலப்புறமும் இடப்புறமும் வானவர்களை நிர்ணயித்துள்ளான். அவர்கள் நாம் பேசுகின்ற பேச்சை அப்படியே பதிவு செய்துவிடுகின்றார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு (வான) வர் எடுத்தெழுதும்போது, அவனிடம் (அதை) எழுத எதிர்பார்த்துத் தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை(50-17-18)

ஆக, நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அதற்காகவே இரண்டு வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இடப்புறத்தில் உள்ளவர் தீமையைப் பதிவுசெய்கின்ற அதே நேரத்தில் வலப்புறத்தில் உள்ளவர் நன்மை யைப் பதிவுசெய்கிறார். இதையெல்லாம் மறந்துதான் நாம் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய பேச்சால் யாருக்கு என்ன பயன்? எத்தனை பேர் பயன்பெறுவர் என்று யோசித்துப் பேசத் தொடங்கி னால் நம்முடைய பேச்சு குறைந்துவிடும்.

யாரொருவர் தம்முடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள உறுப்பை (நாவை)யும் இரண்டு தொடைகளுக்கு இடையிலுள்ள (அந்தரங்க) உறுப்பையும் பாதுகாத்துக்கொள்வதாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறாரோ அவருக்குச் சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)

நாவையும் அந்தரங்க உறுப்பையும் பாதுகாத்துக்கொள்கின்ற வருக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அவ்விரண்டு உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, நாம் நம்முடைய நாவைப் பாதுகாத்துக்கொள்வதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். எலும்பு இல்லாத நாவு பல எலும்புகளை முறிக்கக்கூடிய ஆற்றல் பெற்றதாகும். தீயால் சுட்ட புண்கூட ஆறிவிடும். ஆனால் நாம் ஒருவரை நம் நாவால் திட்டிய வார்த்தைகள், அதனால் அவரின் நெஞ்சில் ஏற்பட்ட வடு என்றும் அழியாமல் மீண்டும் மீண்டும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கும். அதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்: தீயினால் சுட்டபுண் உள்ளாறும்-ஆறாதே நாவினால் சுட்ட வடு.

நபித்தோழர் ஒருவர், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், "என்னுள் நீங்கள் மிகவும் அஞ்சக் கூடியது எது?" என வினவுகிறார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவைப் பிடித்து, பின்னர் "இதுதான்" என்று கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ, நசயீ, இப்னு மாஜா)

ஆம்! நம்முடைய நாவு அவ்வளவு மோசமானது; அதே நேரத்தில் வலுவானது; ஆபத்தைத் தேடிவரக்கூடியது.

ஒருவர் காலையில் விழித்தெழுந்தவுடன் மற்ற உறுப்பு களெல்லாம் நாவிடம், "நீ எங்கள் விசயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; (ஏனென்றால்) நாங்கள் அனைவரும் உன்னைச் சார்ந்துதான் இருக்கிறோம். எனவே நீ சீராக இருந்தால் நாங்கள் சீராக இருப்போம்; நீ கோணலாக ஆகிவிட்டால், நாங்களும் கோணலாக ஆகிவிடுவோம்" என்று கோரிக்கை வைக்கின்றன. (நூல்கள்: திர்மிதீ, நசயீ, இப்னுமாஜா)

உடல் உறுப்புகள் யாவும் பாதுகாப்புப் பெறுவதும், அவை காயப்படுவதும் நாவின் நுனியில் இருக்கிறது. ஒருவர் தம் நாவை அடக்கித் தேவையானதை மட்டும் பேசினால் அவர் பாதுகாப்புப் பெறுவார். இல்லையேல் மற்ற வர்களிடம் அடிபடுவார் என்பது இயல்புதான். எலும்பு இல்லாத நாவு பல எலும்புகளையும் முறிக்கக்கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைகொண்ட ஒரு முஸ்லிம் பேசினால் நன்மையையும், நல்லனவற்றையுமே பேச வேண்டும். இல்லையேல், அமைதியாக இருந்துவிட வேண்டும். மாறாக, தேவையற்றதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்பதையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்றைக்குப் பேசுவது மிக எளிதாகிவிட்டது. எங்கிருப்பவரும் எங்கிருப்பவருடனும் எளிதில் பேசிவிட முடிகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஒவ்வொருவரின் கையிலும் அலைபேசி. எங்கே அலைந்தாலும் பேசிக்கொண்டே அலையலாம். இன்றைய யுவன்-யுவதிகளுக்கு அலைபேசியை எடுத்தால் வைக்க மனம் வருவதில்லை. பேச்சிலேயே இலயித்துவிடுகின்றார்கள். என்ன பேசுகிறோம்; எதைப்பேசுகிறோம் என்றெல்லாம் கவலையில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

அதிலும் யாராவது அன்பாகக் குழைந்துபேசி விட்டால் போதும் அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதில் ஆர்வம் பிறந்துவிடுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பாதிக்கப்படுகின்றனர். காரணம், பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதேநேரத்தில் அன்பாக யாரேனும் பேசிவிட்டால் அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். அத்தகைய மெல்லிய மனம் படைத்தவர்களை வசியப்படுத்துவதற்கென்றே சிலர் அலைகின்றனர். அவர்களின் காதல் வலையில் வீழ்ந்து சீரழிவது இளம்பெண்கள்தாம்.
அண்மைக்காலங்களில் குடும்பப் பெண்களும் இந்த வலையில் வீழ்ந்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனையான விசயம்.

இதற்குக் காரணம், பிற ஆடவர்களுடன் தேவையின்றிப் பேசுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது என்பதை அறியாமல் இருப்பதுதான். ஹராம் என்று தெரியாமல் அந்நிய ஆண்களோடு அரட்டை அடிப்பது, சிரித்துப் பேசுவது, கொஞ்சிப் பேசுவது, பாலுணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளைப் பேசுவது ஆகியவையே நம் குடும்பப் பெண்களையும் சீரழிக்கத் தொடங்கிவிட்டது.
ஆகவே, பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாவை அடக்க வேண்டியது கட்டாயமாகும். அன்றைக்குத் தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவது மிகவும் சிரமமாக இருந்தது. இன்றைக்கு தொலைவில் உள்ளவர்களோடு பேச தொலைப்பேசி, அலைபேசி ஆகியன வந்துவிட்டன. ஆகவே அவர்கள் யாருடனும் எப்போதும் எளிதாகப் பேசமுடிகிறது; அதன் மூலம் வழிகெட முடிகிறது. இதைக் களைய வேண்டுமெனில் ஒரு பெண் யாருடன் பேச அனுமதியுள்ளது; யாருடன் பேசக்கூடாது என்ற இஸ்லாமியச் சட்டத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அத்தோடு அவள் தம் பெற்றோருடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிடமே எதைப் பற்றியும் ஆலோசனை கேட்க வேண்டும்.
பருவ வயதுப்பெண்கள் தம் தந்தையிடமும், மணமான பெண்கள் தம் கணவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுக்கு உரிய ஆலோசனையை அவர்கள் வழங்குவார்கள். அதனால் தேவையற்றவர்கள் தம் வாழ்க்கையில் குறுக்கிடுவதை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடலாம். இந்த நிலை தற்காலத்தில் இல்லாததால்தான் பெண்கள் அன்புக்காகத் திசைமாறுகிறார்கள். இறுதியில் அவர்களின் வாழ்க்கையே திசைமாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டி ருப்பவர்களுக்கு மூளைப் புற்று நோய் வருகிறது என்று தற்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

குறிப்பாக, அலைபேசியில் பேசுகின்றபோது, மூளையின் இரத்தம் பாதிக்கப்பட்டு அது உடல் முழுவதும் பரவி உடலுக்கும் மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மைக் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய ஒரே செயல், பேச்சைக் குறைப்பதே ஆகும். அதனால் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றிபெறலாம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை: