வியாழன், 16 ஜூன், 2011

எண்பத்து மூன்று வயதிலும்...


இவர் பெயர் நூர் முஹம்மது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆவர். அவர்களுள் மூவர் பெண்கள்; நால்வர் ஆண்கள். அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இராஜகோபாலத் தொண்டைமான் மன்னராக இருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்த இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் ஒரு கடையில் விற்பனையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், ஓர் எண்ணெய் ஆலையில் கணக்காளராக நீண்ட காலம் பணிசெய்து ஓய்வுபெற்றார்.

1964ஆம் ஆண்டில், இவர் தம் 36 ஆம் அகவையில் ஃபாத்திமா பீவி என்பாருடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மூலம் இவருக்கு ஒரு பெண்குழந்தையும் ஆறு ஆண்குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுள் சித்தீக், அப்துல் லத்தீப், அப்துல் ஹாதி, அப்துல் ரஜாக், முபாரக் நிசா ஆகியோரே தற்போது உள்ளனர். இவர் தம் மனைவி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர், சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு 1982ஆம் ஆண்டு தமது 37ஆம் வயதில் இறப்பெய்தினார். அவர் இறந்தபோது அவருடைய கடைசிக் குழந்தை கைக்குழந்தையாக இருந்தது.

இவர் தம் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற ஒரே காரணத்துக்காக மறுமணம் ஏதும் செய்துகொள்ளாமல் தம் பிள்ளைகளை வளர்த்துவந்தார். அவர்கள் அனைவரையும் ஓரளவு படிக்கவைத்தார். பின்னர் வறுமை காரணமாக, ஒவ்வொருவரும் மளிகைக் கடையில் பணிபுரியத் தொடங்கிவிட்டனர். மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்தாலும், கிடைத்த வருவாய்க்குள் தம் பிள்ளைகள் அனைவரையும் வளர்த்து ஆளாக்கினார்; வறுமையிலும் இவர் ஒருபோதும் பிறரிடம் கடன் வாங்கியதில்லை. நேர்மையும் நாணயமும் இவரை மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கச்செய்தன. இவர் தம் கடைசி மகனைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். இப்போது அவருக்கு 16 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தற்போது தம் இரண்டாவது மகன் சித்தீக் உடன் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை எனும் ஊரில் வசித்துவருகிறார். சிறுவயது முதல் தொழுகை, நோன்பு ஆகிய இறைக்கடமைகளைக் கடைப்பிடித்துவருகிறார். இப்போது இவருக்கு 83 வயதாகியும் திருக்குர்ஆன் ஓதுவதையும், தொழுவதையும் கைவிடவில்லை. இப்போதும் இவர் பள்ளிக்கு நடந்தே சென்று ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி வருகிறார். இவரைக் காண்போர் இவரின் ஆரோக்கியத்தையும், இறைக்கடமையை நிறைவேற்றும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைகின்றனர். வல்ல அல்லாஹ் அவருக்கு நிறைந்த சுகத்துடன்கூடிய நீண்ட ஆயுளை வழங்க துஆ செய்வோம்.