சனி, 2 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 9)



உணவுப்பொருளைப் பெறச் செல்லுதல்


மஅமர் என்பவரிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அறிவித்துள்ளார்: நிச்சயமாக நும்ரூதிடம்தான் சேமிக்கப்பட்ட உணவுப்பொருள் இருந்தது. அந்த உணவுப் பொருளைப் பெறுவதற்காக மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அவனிடம் செல்வார்கள். யாரெல்லாம் உணவுப்பொருள் வாங்குவதற்காகச் சென்றார்களோ அவர்களோடு இப்ராஹீம் நபியும் சென்றார். அன்றுதான் மக்களெல்லாம் உணவுப்பொருளுக்காக அங்கு ஒன்றுகூடுவார்கள். அன்றுதான் அவ்விருவருக்கும் இடையே அந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அவன் மற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கியதைப் போன்று இப்ராஹீம் நபிக்கு வழங்கவில்லை. எனவே, அவர் எந்த உணவுப்பொருளும் இன்றி திரும்பிவந்துவிட்டார்.


அவர் தம் வீட்டை நெருங்கியபோது, அங்கு ஒரு மண்குவியலைப் பார்த்தார். அவர் வைத்திருந்த இரண்டு பைகளையும் அம்மண்ணால் நிரப்பினார். நான் என் குடும்பத்தினரிடம் வந்தால், என்னைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டார். அவர் தம் வீட்டை அடைந்தபோது தம்முடைய பைகளை வைத்துவிட்டு, படுக்கையில் சாய்ந்து அசதியில் ஆழ்ந்துறங்கிவிட்டார்.


அவருடைய துணைவி சாரா அம்மையார் அவ்விரண்டு பைகளையும் கண்டார். அவ்விரண்டிலும் இனிய உணவுப் பொருள் நிறைந்திருந்ததைக் கண்டு, மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து, உணவு சமைக்கத் தொடங்கினார். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவரின் குடும்பத்தினர் உணவை உண்டுகொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அவர், இது உங்களுக்கு ஏது? என்று வினவினார். நீர் கொண்டு வந்ததிலிருந்துதான் (செய்தோம்) என்று பதிலளித்தார். அப்படியானால், இது அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த உணவு என்பதை அறிந்துகொண்டார். (நூல்: தஃப்சீர் அப்துர் ரஸ்ஸாக் )


நிராகரித்த நும்ரூத்


ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) கூறியுள்ளார்: அந்த அகங்கார அரசனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும்படி அவனுக்கு அழைப்புவிடுக்கச் செய்தான். ஆனால், அவனோ அதை மறுத்துவிட்டான். இரண்டாம் தடவை, அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். பின்னர், மூன்றாம் தடவை அவர் அவனை அழைத்தார். அப்போதும், அவன் மறுத்துவிட்டான். நீர் உம் படைகளைத் திரட்டுவீர்; நான் என் படைகளைத் திரட்டுகிறேன் என்று கூறினான். நும்ரூத் தன்னுடைய படைகளைச் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் திரட்டினான். எனவே அல்லாஹ், அவன் சூரியனையே பார்க்க முடியாதவாறு அதிகமான கொசுக்களை அனுப்பினான். அல்லாஹ் அவற்றை அவர்கள் மீது ஏவினான். அவை அவர்களின் உதிரங்களைக் குடித்து இறைச்சிகளைச் சாப்பிட்டன. அவர்களை வெறும் எலும்புக்கூடுகளாக விட்டுவிட்டன. அவற்றுள் ஒரு கொசு மட்டும் அந்த அரசனின் மூக்குத் துவாரத்தினுள் நுழைந்துகொண்டது. அது அவனுடைய மூக்குத் துவாரத்தினுள் 400 ஆண்டுகள் தங்கியிருந்தது. அதன் மூலம் அவனை அல்லாஹ் வேதனைப்படுத்தினான். அதன் காரணமாக, அவன் அத்தனை ஆண்டுகளும் தன்னுடைய தலையில் சுத்தியலால் அடித்துக்கொண்டிருந்தான். அதன் மூலம் அவனை அல்லாஹ் அழிக்கின்ற வரை இந்நிலை நீடித்தது. அல்லாஹ்வே நன்கறிபவன். (நூல்: தஃப்சீர் தப்ரீ)


சிரியா செல்லுதல்


* (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார். (அவரிடம் இப்ராஹீம்,) திண்ணமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டுத்) துறந்து செல்கிறேன். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன் என்று கூறினார். மேலும், அவருக்கு இஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியில், நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 26-27)


* நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச் செய்தோம். இன்னும் நாம் அவருக்கு இஹாக்கையும் மேலதிகமாக யஅகூபையும் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நல்லோராக ஆக்கினோம். இன்னும், நம் கட்டளையால் (மக்களுக்கு) நல்வழிகாட்டும் தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். மேலும், நன்மையான செயல்களைப் புரியுமாறும், ஸகாத்தைக் கொடுத்து வருமாறும் நாம் அவர்களுக்கு வேத அறிவிப்புச் செய்தோம். அவர்கள் நம்மையே வழிபடுபவர்களாக இருந்தனர். (21: 71-73)


இப்ராஹீம் நபியின் சந்ததிகள்


இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வுக்காக தம்முடைய சமுதாயத்தாரைவிட்டுப் புறப்பட்டார். அவர்களுக்கு முன்னிலையில் அவர் நாடு துறந்து சென்றார். அவருடைய துணைவி குழந்தையே பெற்றெடுக்காதவராக இருந்தார். எனவே, இப்ராஹீம் நபிக்கு எந்தக் குழந்தையும் இல்லை. அவருடன் அவருடைய சகோதரர் லூத் பின் ஹாரான் பின் ஆஸர் இருந்தார். அதன் பிறகு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு நற்குழந்தைகளைக் கொடுத்தான். அவருடைய சந்ததிகளில் நபித்துவத்தையும் வேதத்தையும் வழங்கினான். அவருக்குப் பிறகு வந்த ஒவ்வொரு நபியும் அவருடைய வமிசத்தைச் சார்ந்தவர்களே ஆவர். அவருக்குப்பின் வழங்கப்பட்ட வேதங்கள் யாவும் அவருடைய வமிசத்தைச் சார்ந்த நபிமார்களுக்கே வழங்கப்பட்டன. ஏனென்றால், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதற் காகவும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காகவும் அவர்தம் குடும்பத்தையும் உறவினர்களையும் சொந்த நாட்டையும் தியாகம் செய்ததை அல்லாஹ் கண்ணியப்படுத்தி அவருக்கு வெகுமதியளிக்கவே இவ்வாறு செய்தான்.


எந்த நாடு?


இப்ராஹீம் நபி எந்நாட்டை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்றார் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவர் சென்ற நாடு சிரியாதான். அது பற்றித்தான் அல்லாஹ் கூறுகின்றான்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸ்)பால் (வரச் செய்து) ஈடேற்றம் பெறச்செய்தோம். (21: 71) இக்கருத்தை உபை பின் கஅப் (ரளி), அபுல்ஆலியா மற்றும் கத்தாதா (ரஹ்-அலைஹிம்) கூறியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அல்அவ்ஃபீ (ரஹ்) அறிவித்துள்ளார்: அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்த)பால் (வரச் செய்து)... என்ற வசனத்தில் அந்த பூமி `மக்காதான் என்று கூறிவிட்டு, அதற்கான ஆதாரமாக, மற்றொரு வசனத்தை ஓதிக்காட்டுகிறார்: (அல்லாஹ்வை வழிபடுவதற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் திண்ணமாக `பக்கா (எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நல்வழியாகவும் இருக்கிறது(3: 96) என்ற வசனத்தை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்கிறார். கஅபுல் அஹ்பார் (ரளி) அவர்கள், அது ஹர்ரான் என்னும் ஊராகும் என்று கருதுகிறார்.


வேதக்காரர்களின் கூற்றினை நாம் ஏற்கெனவே கூறியுள்ளோம். அதாவது இப்ராஹீம் நபி பாபில் நகரத்திலிருந்து புறப்பட்டார். அவருடன் அவருடைய சகோதரரின் மகன் லூத், அவருடைய சகோதரர் நாஹூர், இப்ராஹீம் நபியின் மனைவி சார்ரா மற்றும் அவருடைய சகோதரர் நாஹூரின் மனைவி மல்கா ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹர்ரான் எனும் இடத்தில் தங்கினர். அவ்விடத்தில் இப்ராஹீம் நபியின் தந்தை தாரிஃக் இறந்துவிட்டார்.


சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபியும் லூத் நபியும் சிரியாவை நோக்கிப் புறப்பட்டனர். அவர் அங்கு சார்ராவைச் சந்தித்தார். அவர் ஹர்ரான் நாட்டு அரசனின் மகள் ஆவார். அவர் தம்முடைய சமுதாய மக்களின் மார்க்கத்தைப் பற்றிக் குறைகூறினார். எனவே, இப்ராஹீம் நபி அதை எந்த மாற்றமும் செய்யமாட்டேன் என்று கூறி அவரை மணந்துகொண்டார். இதை இப்னு ஜரீர் (ரஹ்) அறிவித்துள்ளார். மிகவும் பிரபலமான கருத்து என்னவெனில், சார்ரா என்பவர், இப்ராஹீம் நபியின் பெரிய தந்தை ஹாரான் என்பவரின் மகளாவார் என்பதுதான். அவர் பக்கம்தான் ஹர்ரான் என்பது இணைக்கப்படுகிறது. திண்ணமாக சார்ரா என்பவர் இப்ராஹீம் நபியின் சகோதரர் ஹாரான் உடைய மகளும் லூத் நபியின் சகோதரியும் ஆவார் என்று எவர் கருதுகின்றாரோ, அவர் உண்மையைவிட்டு வெகுதொலைவில் உள்ளார்; அறியாமல் சொல்லிவிட்டார் . இதை சுஹைலீ (ரஹ்), குதைபீ மற்றும் நக்காஷ் ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். 


தன்னுடைய சகோதரரின் மகளைத் திருமணம் செய்வது அந்தக் காலத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஒருவேளை யூதப் பாதிரியார்கள் சிலர் கூறுவதைப்போல், அந்தச் சட்டம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் நபிமார்கள் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். அல்லாஹ்வே நன்கறிபவன். பிறகு, மிகவும் பிரபலமான மற்றொரு கருத்து, இப்ராஹீம் நபி பாபில் நகரத்தைத் துறந்து சென்றபோது, தம்மோடு சார்ராவையும் அழைத்துச் சென்றார் என்பதாகும். இது ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபி சிரியாவை வந்தடைந்தபோது அல்லாஹ் அவருக்கு வேத அறிவிப்புச் செய்தான். அதாவது நான் இந்நிலத்தை உமக்குப் பின்னால் வருகின்றவர்களுக்காக ஆக்கப்போகிறேன் என்று கூறினான். எனவே, இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வின் இந்த அருட்கொடைக்கு நன்றிசெலுத்தும் விதமாக, அவனுக்காக ஓர் அறுக்குமிடத்தை உருவாக்கினார். அதன் குப்பாவை பைத்துல் மக்திஸின் கிழக்கு நோக்கி அமைத்தார். பிறகு, அவர் யமன் நாட்டை நோக்கி நடந்தார். அப்போது அந்நாடு மிகவும் வறட்சியாகக் காணப்பட்டது. எனவே, அவர்கள் எகிப்து நாட்டை நோக்கிப் பயணம் செய்தனர்.


எகிப்து நாட்டு அரசனுடன் சார்ரா அம்மையாருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது. இப்ராஹீம் நபி சார்ரா அம்மையாரிடம், நான் இவருடைய சகோதரி என்று கூறிவிடு என்று சொல்லிக்கொடுத்தார். பின்னர், அந்த அரசன் சார்ரா அம்மை யாருக்குப் பணிவிடை செய்யத் தன்னுடைய அடிமைப்பெண் ஹாஜிர் (அலை) அவர்களை அனுப்பிவைத்தான் என்பது பற்றிக் கூறியுள்ளனர். பிறகு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான். எனவே அவர்கள் அருள்நிறைந்த நாட்டை நோக்கிச் சென்றனர். அதாவது பைத்துல் மக்திஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கினர். அவருடன் கால்நடைகள், பணியாளர்கள் மற்றும் பொருட்கள் இருந்தன.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

கருத்துகள் இல்லை: