இப்ராஹீம் மூன்று பொய்களைத் தவிர கூறவில்லை. அவற்றுள் இரண்டு அல்லாஹ்விற்காக இருந்தன. ஒன்று: நான் நோயாளி என்று கூறியதாகும். இரண்டாவது: மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறியதாகும். ஒரு நாள் இப்ராஹீம் நபியும் சார்ரா அம்மையாரும் ஓர் ஊரில் இருந்த கொடுங்கோல் அரசனிடம் வந்துவிட்டார்கள். இச்செய்தி அங்கிருந்த அந்த அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது: இங்கு ஒருவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள். அதைக் கேட்டவுடன் அவரை (இப்ராஹீம்) அழைத்து வர ஆள் அனுப்பினான். அப்பெண் பற்றி அவரிடம் அந்த அரசன், அவள் யார்? என்று கேட்டான். இப்ராஹீம் நபி, அவள் என் சகோதரி என்று கூறிவிட்டார். அவர் சார்ரா அம்மையாரிடம் வந்தார். சார்ரா! உன்னையும் என்னையும் தவிர இந்நிலப்பரப்பில் (தற்போது) எந்த நம்பிக்கையாளரும் இல்லை. அவன் என்னிடம் (உன்னைப் பற்றிக்) கேட்டான். திண்ணமாக நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். எனவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று தம் மனைவியிடம் கூறினார்.
அப்போது அந்த அரசன் சார்ரா (அலை) அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பினான். சார்ரா அவனிடம் சென்றபோது, அந்த அரசன் சார்ராவை அடைய வேண்டுமென்ற நோக்கத்தில், அவரை நெருங்கினான். அதேநேரத்தில், அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை அணைக்க நெருங்கினான்; இப்போது அவன் முன்பு போலவே தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போது, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். அப்போது அவன் தன்னுடைய காவலர்களுள் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை. நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஷைத்தானைத்தான் என்று கூறினான். பின்னர், அந்த அரசன் சார்ராவுக்குத் தன்னுடைய பணிப்பெண் ஹாஜிரை அன்பளிப்பாக வழங்கினான். சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்த போது வந்தார். எனவே, அவர் தம் கையால் சைகை செய்து, என்ன ஆனது? என்று கேட்டார். அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான். மேலும், அவன் ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பி யுள்ளான் என்று பதிலளித்தார் என அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். வான்மழை (ப் பிரதேச) மக்களே! அவரே(ஹாஜர்) உங்கள் தாய் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)*1
இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர அறவே பொய் சொன்னதில்லை. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்காகத்தான். நான் நோயாளி என்பதும், மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்பதும் அவர் கூறிய கூற்றுக்களாகும். ஒரு கொடுங்கோல் அரசனின் ஊருக்கு அவர் சென்று, அங்கு ஒரு வீட்டில் தங்கினார். இச்செய்தி அந்த அரசனுக்குச் சென்றது. இங்கு ஒரு மனிதர் வந்துள்ளார். அவருடன் ஓர் அழகான பெண் இருக்கிறாள் என்று அவரிடம் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான். அவனிடம் இப்ராஹீம் நபி சென்றதும், அவரிடம் அந்த அரசன் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டான். திண்ணமாக அவர் என் சகோதரி என்று இப்ராஹீம் (அலை) கூறிவிட்டார். அவர் தம் மனைவி சார்ராவிடம் சென்று, அவன் உன்னைப் பற்றிக் கேட்டான். நீ என்னுடைய சகோதரி என்று கூறிவிட்டேன். இன்றைய நாளில் உன்னையும் என்னையும் தவிர வேறு எந்த முஸ்லிமும் இங்கு இல்லை. எனவே நீ என்னுடைய சகோதரி ஆவாய். ஆகவே, நீ அவனிடம் (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே! என்று கூறினார். சார்ரா (அந்த அரசனிடம்) சென்றார். அவர் சென்றபோது அந்த அரசன் அவரைத் தொட நெருங்கினான். அப்போது அவன் பிடிக்கப்பட்டான். ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாம் தடவையும் அவன் அவரை நெருங்கினான்; இப்போது அவன் மிகவும் கடுமையாகப் பிடிக்கப்பட்டான். அந்நேரத்தில், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வீர்! நான் உமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று அவன் கெஞ்சினான். எனவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்; அவன் விடுவிக்கப்பட்டான். இவ்வாறு மூன்று தடவை நடந்தது.
உடனே, அவன் திகைத்தவனாக, அவனுடைய பணியாளர்களுள் ஒருவனை அழைத்து, நீ என்னிடம் மனித (இனத்தி)னைக் கொண்டு வரவில்லை; மாறாக, ஒரு ஷைத்தானைத்தான் கொண்டு வந்துள்ளாய். அவரை வெளியேற்று; அவருக்கு ஹாஜிரைக் கொடுத்தனுப்பு என்று கூறினான். இப்ராஹீம் நபி தொழுதுகொண்டிருந்தபோது, அவர் வந்தார். அவர் வந்ததை உணர்ந்த இப்ராஹீம் நபியவர்கள் திரும்பினார்; அவரைப் பார்த்து, என்ன நடந்தது? என்று வினவினார். அநியாயக்காரனின் சூழ்ச்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன். மேலும், அவன் எனக்கு ஹாஜிரைப் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளான் என்று கூறினார். *2 (நூல்: பஸ்ஸார்)
இமாம் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபி மூன்று பொய்களைத் தவிர (வேறு எதையும்) கூறவில்லை. அவர், அவர்களின் தெய்வங்களிடம் திருவிழாவுக்காக அழைக்கப்பட்ட போது, நிச்சயமாக நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதான இதுதான் அதைச் செய்தது என்று கூறினார். (தம் மனைவியான) சார்ராவைப் பார்த்து, இவர் என் சகோதரி என்று கூறினார். (நூல்:முஸ்னத் அஹ்மத்)
இப்ராஹீம் நபி ஒரு சிற்றூருக்கு வந்தார். அதில் அடக்கி ஆள்கின்ற ஓர் அரசன் இருந்தான். இரவு நேரத்தில் இப்ராஹீம் நபி தம்முடைய அழகான மனைவியுடன் அங்கு சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அரசன் அவரிடம் ஓர் ஆளை அனுப்பினான். உம்முடன் உள்ள இவர் யார்? என்று வினவினான். அதற்கு அவர், என் சகோதரி என்று பதிலளித்தார். (வந்தவர்) அவரை என்னோடு அனுப்பிவைப்பீர்! என்று கேட்டார். அவர் அவரை வந்தவருடன் அனுப்பிவைத்தார். (அவர் தம் மனைவியை அவரோடு அனுப்பியபோது) என் சொல்லை நீ பொய்யாக்கிவிடாதே! நீ என் சகோதரி என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். திண்ணமாக, இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். அவர் அந்த அரசனிடம் சென்றபோது, அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளை நெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக் கொண்டான்.
அபூஸினாத் (ரஹ்) கூறியுள்ளார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். அவன் அவரை நோக்கி எழுந்துவந்தான். அவர் (சார்ரா) உடற்சுத்தி செய்துவிட்டுத் தொழுக ஆரம்பித்தார். பின்னர், அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கைகொண்டுள்ளதையும், நான் என் கணவரைத் தவிர (அனைவரிடமும்) என் கற்பைப் பாதுகாத்திருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருந்தால், ஓர் இறைமறுப்பாளனை என்மீது சாட்டிவிடாதே! இதன் பின்னர், அவன் (குரல்வளைநெரிக்கப்பட்டாற்போல்) மிக உயர்ந்த சப்தமிட்டான்; அவன் தன்னுடைய காலை உதைத்துக்கொண்டான். அபூ ஸினாத் (ரஹ்) கூறுகிறார்: இறைவா! அவன் இறந்துவிட்டால், `அவள் அவனைக் கொன்றுவிட்டாள் என்று சொல்லப்படும் என்று தம் இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தவுடன், அவன் விடப்பட்டான் என்று அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். மூன்றாவது அல்லது நான்காவது தடவைதான் அந்த அரசன், நீங்கள் என்னிடம் ஒரு ஷைத்தானையே அனுப்பியுள்ளீர். அவரை இப்ராஹீமிடம் அனுப்பிவையுங்கள்; அவருக்கு ஹாஜிரை (பணிப்பெண்ணை)க் கொடுங்கள் என்று கூறினான்.
அவர் (தம் கணவர்) இப்ராஹீமிடம் திரும்பிச் சென்று, கூறினார்: திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான்; ஒரு பணிப்பெண்ணையும் (எனக்கு) அவன் வழங்கியிருக்கிறான் என்பதை நீர் உணர்வீரா? என்று கேட்டார்.*3
இப்னு அபூஹாத்திம் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் மூன்று வார்த்தைகளைக் கூறினார். அவற்றுள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைவிட்டு அப்பாற்பட்டதாக இல்லை. நான் நோயாளி என்று கூறினார். (இச்சிலைகளை யார் உடைத்தார்? என்று கேட்கப்பட்டபோது) மாறாக, அவற்றுள் பெரியதுதான் அதைச் செய்தது என்று கூறினார். அந்த அரசன் தம் மனைவி (சார்ரா)வை நாடிய போது, இவர் என் சகோதரி என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)
மேற்கண்ட நபிமொழியில், இவர் என் சகோதரி என்று கூறியதன் பொருள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் என் சகோதரி என்பதாகும். மேலும் அவர் தம் மனைவியிடம், திண்ணமாக இந்நிலத்தில் (தற்போது) உன்னையும் என்னையும் தவிர எந்த நம்பிக்கையாளரும் இல்லை என்று கூறினார். இதன் பொருள் என்னவெனில், உன்னையும் என்னையும் தவிர முஃமினான கணவன்-மனைவி யாரும் இல்லை என்பதாகும். ஏனென்றால், அவர்களுடன் லூத் இருந்தார். அவர் ஒரு நபி ஆவார். எனவே அந்தப் பொருள்தான் இங்கு மிகச் சரியானதாகும். சார்ரா (அலை) அவர்கள் தம் கணவர் இப்ராஹீம் நபியிடம் திரும்பி வந்தபோது, அவர் தம் மனைவியிடம், `மஹ்யம் என்று கேட்டார். அதாவது என்ன ஆனது? என்று பொருளாகும்.
அதற்கு அவர், திண்ணமாக அல்லாஹ் இறைமறுப்பாளனின் சூழ்ச்சியைத் திருப்பிவிட்டான் என்று பதிலளித்தார். மற்றோர் அறிவிப்பில், அந்த அரசனைப் பற்றிக் கூறியபோது, `பாவி என்றும், `பணிப்பெண்ணைக் கொடுத்தான் என்றும் வந்துள் ளன. தம் மனைவி சார்ராவை அரசனிடம் அனுப்பியபோது, இப்ராஹீம் நபி அல்லாஹ்வைத் தொழுக ஆரம்பித்துவிட்டார். தம் மனைவியைப் பாதுகாக்கக் கோரினார். தம் மனைவியைத் தீய நோக்கத்தோடு நாடிய அந்த அரசனின் தீங்கை அப்புறப்படுத்தும்படி வேண்டினார். அதேபோலவே அவரும் (சார்ரா) செய்தார்.
அல்லாஹ்வின் விரோதியான அந்த அரசன் தீய எண்ணத்தோடு அவரை அடைய முற்பட்டபோது, அவர் எழுந்துசென்று உடற்சுத்தி செய்து, தொழுகத் தொடங்கிவிட்டார். பின்னர் முன்சென்ற அந்த இனிய பிரார்த்தனையை அல்லாஹ் விடம் கேட்டார். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவிதேடுங்கள். (2: 45) தன்னுடைய அடியார், தூதர், நண்பர் இப்ராஹீமின் மாசற்றதன்மைக்காக அவரை (சார்ரா) அல்லாஹ் பாதுகாத்தான்.
அறிஞர்கள் சிலர், சார்ரா, மூசாவின் தாய் மற்றும் மர்யம் ஆகிய மூன்று பேரும் நபிப்பட்டம் பெற்றவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பான்மையோர், அவர்கள் மூவரும் வாய்மையாளர்கள் என்றும் அல்லாஹ் அவர்களைத் திருப்தி கொண்டான் என்றும் கூறியுள்ளனர்.
திண்ணமாக அல்லாஹ் இப்ராஹீம்-சார்ரா இருவருக்கிடையே இருந்த திரையை அகற்றினான். இப்ராஹீம் நபியிடமிருந்து சென்றதிலிருந்து அவரிடம் அவர் திரும்பி வருகின்றவரை, அவர் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவர் அந்த அரசனிடம் (மாட்டிக்கொண்டு) இருந்தபோது, அவரை அவர் நேரடியாகக் கண்டார். அவனிடமிருந்து அவரை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்று பார்த்தார். அது அவருடைய உள்ளத்திற்கு இதமாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் மிக அமைதியாகவும் இருப்பதற்காக (அவர் நேரடியாகக் கண்டார்). ஏனென்றால், அவர் சார்ராவை மிகுந்த மார்க்கப்பற்றிற்காகவும் அவருடைய உறவினராக இருந்ததாலும் அவருடைய மிகுந்த அழகுக்காகவும் மிக அதிகமாக விரும்பினார். ஹவ்வாவிற்குப் பிறகு சார்ராவின் காலம் வரை அழகுமிக்கவர் அவரைத் தவிர யாருமில்லை எனக் கூறப்படுகிறது. மேற்கண்ட விசயத்தை, தாம் சில வரலாற்று நூற்களில் கண்டதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். (நூல்: கஸஸுல் அன்பியா லிஸ்ஸஆலபீ)
வரலாற்று ஆசிரியர்கள் சிலர், திண்ணமாக எகிப்து நாட்டின் ஃபிர்அவ்ன், மிகவும் பிரபலமான அநியாயக்கார அரசனான ளஹ்ஹாக் உடைய சகோதரனாக இருந்தான். எகிப்தில் அவனுடைய சகோதரனுக்குக்கீழ் நகராட்சித் தலைவனாக இருந்தான். அவனுடைய பெயர், சினான் பின் உல்வான் பின் உபைத் பின் ஊஜ் பின் இம்லாக் பின் லாவத் பின் சாம் பின் நூஹ் ஆகும்.
அத்தீஜான் எனும் தம்முடைய நூலில் இப்னு ஹிஷாம் கூறியுள்ளார்: சார்ராவை அடைய நாடியவன் அம்ர் பின் இம்ரவுல்கைஸ் பின் மாயிலபூன் பின் சபா ஆவான். அவன் எகிப்தில் இருந்தான். இதை சுஹைலீ (ரஹ்) அறிவித்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
----------------அடிக்குறிப்புகள்------------------------
*1 (அ.கு) இந்த அறிவிப்பாளர் வரிசையில் அவர் மட்டுமே தனியாக இதைப் பதிவுசெய்துள்ளார். இது `மவ்கூஃப் தரத்தில் உள்ளது.
*2 (அ.கு) இதை அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) அறிவித்துள்ளார். பிறகு, அல்பஸ்ஸார் கூறுகிறார்: ஹிஷாம் என்பவர்தாம் முஹம்மத் மற்றும் அபூஹுரைரா (ரளி) அவர்களோடு இதை இணைத்துள்ளார். வேறு யாரும் அவ்வாறு இணைத்ததாக நான் அறியவில்லை. மற்றவர்கள் இதை நபித்தோழர்களோடு முடிவுறுகின்ற வகையில் (மவ்கூஃப் தரத்தில்) அறிவித்துள்ளனர்.
*3 (அ.கு) இம்முறையில் இந்த நபிமொழியை இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். ஆனால், இது சரியான நபிமொழியின் தரத்தில் அமைந்துள்ளது. இதே நபிமொழியை அபூஹுரைரா (ரளி) மூலம் புகாரீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்.
அரபி: அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்)
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக