வியாழன், 28 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 12)

சார்ரா அம்மையாரின் சீற்றம்

ஹாஜிர் (அலை) அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) பிறந்தபோது, சார்ரா அம்மையாரின் சீற்றம் அதிகமானது. எனவே, அவர் தம் கணவர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ஹாஜிரை என் கண்பார்வையிலிருந்து மறைத்துவிடுவீராக! என்று கேட்டுக்கொண்டார். ஆகவே, இப்ராஹீம் நபியவர்கள் ஹாஜிரையும் அவருடைய மகன் இஸ்மாயீலையும்  அழைத்துச் சென்று, இன்று மக்கா என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அவருடைய குழந்தை இஸ்மாயீல் அந்நேரத்தில் பால்குடிப் பாலகராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு அவர் அவ்விருவரையும் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். ஹாஜிர் (அலை) எழுந்து அவருடைய ஆடையைப்  பிடித்துக்கொண்டு, “இப்ராஹீமே! எங்களை இங்கே விட்டுவிட்டு நீர் எங்கே செல்கின்றீர்? எங்களுக்குத் தேவையான அளவுக்கு (உணவுப்பொருள்) இங்கு இல்லையே?” என்று வினவினார். ஆனால், அவர் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் தொடர்படியாகக் கேள்விகள் கேட்டும் அவர் பதிலளிக்காதபோது, “இதைச் செய்ய அல்லாஹ்தான் உம்மை ஏவினானா?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று ஹாஜிர் (அலை) மறுமொழி பகன்றார்.

ஷைக் அபூமுஹம்மத் பின் அபூஸைத் (ரஹ்) தம்முடைய `அந்நவாதிர் எனும் நூலில் கூறியுள்ளார்: திண்ணமாக சார்ரா (அலை) ஹாஜிர் (அலை) மீது கோபம்கொண்டார். எனவே, ஹாஜிருடைய மூன்று உறுப்புகளை வெட்டு (துளையிடு)வதாக சார்ரா அம்மையார் சத்தியம் செய்துகொண்டார். ஆகவே, இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜிரிடம், இரண்டு காதுகளையும் துவாரமிட்டுக்கொள்வதோடு, அவருடைய கீழுறுப்பையும் விருத்தசேதனம் (கத்னா) செய்து (துளையிட்டுக்)கொள்ள வேண்டும் என்று ஏவினார். அதன் மூலம் சார்ரா (அலை), தாம் செய்த சத்தியத்தை நிறைவேற்றியவராக ஆகிவிட்டார்.

ஸ்ஸுஹைலீ (ரஹ்) கூறுகிறார்: பெண்களுள் முதன்முதலில் விருத்த சேதனம் (கத்னா) செய்துகொண்டவர் ஹாஜிர் (அலை) ஆவார். அவர்களுள் முதன்முதலில் தம் இரண்டு காதுகளில் துவாரமிட்டுக்கொண்டவரும் அவரே. முதன்முதலில் அவரே தம்முடைய ஆடையை நீளமாகத் தொங்கவிட்டார்.

மனைவி-மகனைத் துறத்தல்

முதன்முதலில் இடுப்புக் கச்சையை அணிந்தவர் இஸ்மாயீல் நபியின் தாயார் ஹாஜிர் (அலை) ஆவார். சார்ரா தம்மீது கொண்டுள்ள மனக்கசப்பை நீக்கிக்கொள்வதற்காகவே அவர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள், அவரையும் அவருடைய பால்குடி மகனான இஸ்மாயீலையும் அழைத்துச் சென்றார். மஸ்ஜிதின் மேற்புறத்தில் ஸம்ஸம் அருகில் பெருமரத்தின் நிழலில் அவ்விருவரையும் விட்டுவிட்டார். அந்நாளில் மக்காவில் யாருமில்லை. அங்கு எந்தத் தண்ணீரும் இல்லை.  அவர்கள் அருகில் பேரீச்சம்பழம் நிறைந்த ஒரு பையையும் தண்ணீர் நிறைந்த ஒரு குடுவையையும் வைத்து,  அவ்விருவரையும் அங்கேயே விட்டுவிட்டார் என்று இப்னு அப்பாஸ் (ரளி)  கூறியுள்ளார்கள்.   (நூல்: புகாரீ)

இப்ராஹீம் நபி திரும்பிச் செல்லுதல்

அவ்விருவரையும் விட்டுவிட்டு இப்ராஹீம் நபி திரும்பிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பின்னாலேயே இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரும் சென்றார். எந்த மனிதரும், எந்தப் பொருளும் இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு இப்ராஹீமே! நீர் எங்கே செல்கின்றீர்? என்று அவர் வினவினார். இவ்வாறு அவர் பல தடவை கேட்டார். ஆனால், அவரோ அவரைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதன் பின்னர், “இவ்வாறு செய்ய அல்லாஹ்வா உம்மை ஏவினான்?” என்று வினவினார். ஆம்! என்று பதிலளித்தார். அப்படியானால், அவன் எங்களை வீணாக விட்டுவிடமாட்டான் என்று கூறிவிட்டுத் திரும்பி (அதே இடத்துக்கு) வந்துவிட்டார்.

இப்ராஹீம் (அலை) நடந்துசென்றார். யாரும் அவரைப் பார்க்க முடியாத மலைப்பாதை அருகே வந்து இறையாலயத்தை முன்னோக்கி, தம் இரண்டு கைகளை உயர்த்திப் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: எங்கள் இறைவா! திண்ணமாக நான் என் வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே  குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா!  இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்கள்பால் கவரச் செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன்மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).  (14: 37)

ஸ்மாயீலின் தாய் அவருக்கு அமுதூட்டத் தொடங்கினார். அவர் அருகில் இருந்த தண்ணீரை அருந்தத் தொடங்கினார். அந்தத் தண்ணீர்க் குடுவையில் தண்ணீர் இருந்த வரை அதை அவர் அருந்தினார். அது முடிந்தபின் அவரும் அவருடைய பிள்ளையும் தாகம்கொண்டனர். அவருடைய குழந்தை சிரமப்படுவதைப் பார்த்தார். அக்குழந்தையைப் பார்க்கச் சகிக்காமல் (அங்கிருந்து) நடந்தார். அவருக்கு அருகில் ஸஃபா குன்று இருந்ததைக் கண்டார்.  அக்குன்றின் மேல் ஏறினார். பின்னர் அந்தப் பள்ளத்தாக்கை முன்னோக்கி யாராவது வருகிறாரா என்று பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. எனவே ஸஃபாவிலிருந்து இறங்கினார். பின்னர், அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதியை அவர் அடைந்தபோது, அவர் தம்முடைய உடற்கவசத்தின் ஓரத்தை உயர்த்திக்கொண்டார். பிறகு, அவர்  சிரமப்படக்கூடியவன் ஓடுவதைப்போல் ஓடினார். அவ்வாறே அவர் அந்தப் பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார். பின்னர், மர்வா குன்றுக்கு வந்தார். அதன் மீது ஏறினார். யாராவது வருகின்றாரா என்று தேடிப் பார்த்தார். ஆனால், அவர் யாரையும் காணவில்லை. இவ்வாறே அவர் ஏழு தடவை செய்தார்.
அதனால்தான் (இன்றைய) மக்கள் அவ்விரண்டையும் (ஸஃபா-மர்வா) சயீ செய்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஸம்ஸம் தண்ணீர் ஹாஜிர் (அலை)  மர்வாவை அடைந்தபோது ஒரு சப்தத்தைக் கேட்டார். அமைதியாக இரு! என்று தம்மைத்தாமே கூறிக்கொண்டார். பிறகு, அவர் கூர்ந்து கவனித்தபோது மீண்டும் அந்தச் சப்தத்தைக் கேட்டார். உன்னிடம் உதவி இருப்பதால்தான் நீ கேட்கச் செய்திருக்கிறாய் என்று கூறிக்கொண்டே அப்பக்கம் பார்த்தார். அங்கே ஸம்ஸம் தண்ணீர் (இடத்தின்) அருகே ஒரு வானவர் இருப்பதைக் கண்டார். அவர் தம்முடைய குதிங்காலால் (அல்லது சிறகால்) அதைத் தோண்டினார்; தண்ணீர் வெளிவந்தது; அதனைச் சுற்றி ஹாஜிர் பாத்தி கட்டத் தொடங்கினார்; அவர் தம் கையாலே ஸம்ஸம் (நில்நில்) என்று சொல்லலானார்; தம் கைகளால் தண்ணீரை எடுத்துக் குடுவையில் நிரப்பினார்; அவர் (தமக்குத் தேவையான) தண்ணீரை எடுத்துக்கொண்டபோதும் அது நில்லாமல் பொங்கிவழிந்து கொண்டிருந்தது.
ஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள்புரியட்டும்! அவர் ஸம்ஸமை (பாத்தி கட்டாமல் அப்படியே) விட்டிருந்தால் அது ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகியிருக்கும். அவர் அதிலிருந்து பருகினார்; தம் பிள்ளைக்குப் பாலூட்டினார். அப்போது ஒரு வானவர் அவரிடம், “நீர் வீணாகப் போய்விடுவீர் என்று அஞ்சாதீர்!; ஏனென்றால், இவ்விடத்தில் அல்லாஹ்வுக்காக ஒரு வீடு இருக்கிறது. அவ்வீட்டை இந்தச் சிறுவரும் அவருடைய தந்தையும் கட்டுவார்கள் என்று கூறினார். நிச்சயமாக அல்லாஹ் அவருடைய குடும்பத்தினரை வீணாக விட்டுவிடமாட்டான் என்று வானவர் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரளி)  அறிவித்துள்ளார்கள்.

இறையாலயத்தைக் கட்டத் தொடங்குதல்

அவ்வீடு நிலத்தைவிட்டு உயர்ந்து ஒரு குன்றைப் போல் (உயர்ந்து) நின்றது. (அவ்வப்போது) அதனை நோக்கி பெருவெள்ளம் வரும். அது இடப்புறத்தையும் வலப்புறத்தையும் அரித்துச் செல்லும். ஜுர்ஹும் குலத்தினர் அவ்விடத்திற்கு வருகின்ற வரை அது அவ்வாறே இருந்தது. அவர்கள் கதாஉ என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.  அவர்கள் மக்காவின் தாழ்வான ஒரு பகுதியில் தங்கினர். அப்போது அவர்கள் ஒரு பறவை வட்டமிடுவதைக் கண்டார்கள். திண்ணமாக அந்தப் பறவை தண்ணீரைக் கண்டுதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் அந்தப் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று, அங்குள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று (பேசிக்கொண்டனர்).  ஆகவே, அவர்கள் அதனை நோக்கி ஓரிரு சிறுவர்களை அனுப்பி, தகவல் தெரிந்துவரச் செய்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது (தாம் நாடிய) தண்ணீர் அவர்களுக்கு அருகிலேயே இருந்தது. எனவே அவர்கள் (தம்முடைய உறவினர்களிடம்) திரும்பிச் சென்று அங்குத் தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் அவர்கள் அதை நோக்கிச் சென்றனர்.
ஸ்மாயீலின் தாய் தண்ணீர் அருகே இருந்ததைக் கண்ட அவர்கள், “நாங்கள் இங்குத் தங்குவதற்குத்  தாங்கள் அனுமதி தருகின்றீர்களா?” என்று கேட்டனர். ஆம்! நான் அனுமதிக்கிறேன். ஆனால், எங்களிடம் உள்ள தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு அவர்கள், அதை ஆமோதித்தனர்.
ஸ்மாயீலின் தாய் மனிதர்களை விரும்புகின்ற நிலையில், அவர்கள் அங்கு வந்து தங்கியது அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. எனவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்கள் தம் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள். அவர்களோடு அவர்களின் குடும்பத்தினரும் வந்து தங்கினர். இறுதியில், அவர்கள் மூலம் பல வீடுகள் உண்டாகிவிட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்.

ஸ்மாயீல் நபியின் திருமணம்

ஸ்மாயீல் (அலை) வாலிபர் ஆனார். அம்மக்களிடம் அரபிமொழியைக் கற்றுக்கொண்டார். அவர் இளைஞராக ஆனபோது அவர்கள் மத்தியில் ஒரு சிறப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் ஆகிவிட்டார். அவர் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களிலிருந்து ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.

ஸ்மாயீலின் தாய் மரணமடைந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, தாம் விட்டுச்சென்ற தம் குடும்பத்தினரைப் பார்க்க இப்ராஹீம் (அலை) வந்தார். அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவர் தம் மகனின் மனைவியிடம் (மருமகள்) கேட்டார். அவர் எங்களுக்காக உழைத்துப் பொருளீட்டச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அதற்கு அவர், “நாங்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறோம்; மிகவும் சிரமமான நிலையிலும் சிக்கலிலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறி அவரிடம் தம் வாழ்க்கையைப் பற்றி முறையிட்டார். உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! அவர், உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று தெரிவிப்பீர்! என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்மாயீல் (அலை) அவர்கள் தம் பணியிலிருந்து திரும்பி தம் இல்லம் அடைந்தபோது, யாரோ ஒரு மனிதர் வந்து சென்றதைப் போன்று உணர்ந்தார். யாரேனும் உம்மிடம் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! இந்த மாதிரி ஒரு முதியவர் வந்தார். உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றித் தெரிவித்தேன். நம்முடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். நாங்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினேன்எனத் தெரிவித்தார். அவர் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று விசாரித்தார். ஆம்! உமக்கு அவருடைய சலாமைத் தெரிவிக்கச் சொன்னார். உம்முடைய வீட்டின் வாசற்படியை மாற்றியமைக்கச் சொன்னார் என்று அப்பெண் கூறினார்.
.
அப்போது இஸ்மாயீல் (அலை), “வந்தவர் என்னுடைய தந்தை ஆவார். நான் உன்னைப் பிரித்துவிடுமாறு எனக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். எனவே, நீ உன்னுடைய தாய்வீட்டுக்குச் சென்று அவர்களோடு இருந்துகொள் என்று கூறிவிட்டு, அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர், அந்த வமிசத்திலிருந்து மற்றொரு பெண்ணை அவர் மணந்துகொண்டார். பின்னர், அல்லாஹ் நாடிய காலம் வரை இப்ராஹீம் (அலை) தம் பிள்ளையைப் பார்க்க வரவில்லை. (நீண்ட காலத்திற்குப் பிறகு) ஒரு நாள் அங்கு வந்தார். ஆனால், அவர் இஸ்மாயீலைக் காணவில்லை. அவருடைய மனைவியிடம் சென்று, தம் மகனைப் பற்றி விசாரித்தார். அவர் எங்களுக்காக உழைத்துச் சம்பாதிக்கச் சென்றுள்ளார் என்று பதிலளித்தார். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்களுடைய வாழ்க்கைநிலை எப்படி இருக்கிறது? என்று அவரிடம் அவர் வினவினார். நாங்கள் நலவுடனும்  செல்வநிலையிலும் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். பின்னர், அவர், உம்முடைய உணவு என்ன? என்று இப்ராஹீம்  (அலை)  வினவினார். `இறைச்சி என்று அவர் பதிலளித்தார். நீங்கள் அருந்துகின்ற பானம் என்ன? என்று வினவினார். `தண்ணீர் என்று விடையளித்தார். அதைக் கேட்ட அவர், “இறைவா! அவர்களுடைய இறைச்சியிலும் தண்ணீரிலும் நீ அருள்புரிவாயாக! என்று பிரார்த்தனை செய்தார். 

அந்நாளில் அவர்கள் தானியங்களைச் சாப்பிடவில்லை. அவர்களிடம் தானியம் இருந்திருந்தால் அவர் அவர்களுக்காக அதில் அருள்புரியும்படி பிரார்த்தனை செய்திருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், மக்கா அல்லாத இடத்தில் அவ்விரண்டும் கிடைக்கப் பெறாமல் யாரும் இருக்கமாட்டார் என்று கூறினார்கள்.

பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள், “உம்முடைய கணவர் வந்தால் என்னுடைய சலாமை அவருக்குச் சொல்வீர்! மேலும், அவருடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளச் சொல்வீர்! என்று கூறினார். இஸ்மாயீல் (அலை) அவர்கள்  பணியிலிருந்து  தம் இல்லம் திரும்பியபோது, “யாரேனும் வந்தாரா?” என்று வினவினார். ஆம்! நல்ல தோற்றமுடைய ஒரு முதியவர் வந்தார் என்று கூறிவிட்டு அவரை அந்தப் பெண்மணி புகழ்ந்தார். அவர் உம்மைப் பற்றிக் கேட்டார். நான் அவருக்கு உம்மைப் பற்றிச் சொன்னேன். நம்முடைய வாழ்க்கை நிலையைப் பற்றி விசாரித்தார். நான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தேன் என பதிலளித்தார்.  அவர்  உன்னிடம் ஏதேனும் அறிவுரை கூறினாரா?” என்று அவர் கேட்டார். ஆம்! அவர் உமக்கு சலாம் கூறக் கேட்டுக்கொண்டார். மேலும்,  அவர் உம்முடைய வீட்டின் கதவை நிலைப்படுத்தி வைத்துக்கொள்ளும்படி கூறினார் என்று பதிலளித்தார். வந்தவர் என் தந்தைதான். வீட்டின் கதவு என்பது நீதான். நான்  உன்னை நிலையாக வைத்துக்கொள்ள அவர் என்னை ஏவியுள்ளார் என்று கூறினார்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

  




கருத்துகள் இல்லை: