ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 8)

பல்லியைக் கொல்லுங்கள்!

நபி (ஸல்) அவர்கள், பல்லியைக் கொல்ல ஏவினார்கள்; ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று கூறியதாக உம்மு ஷரீக் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)1

பல்லியைக் கொல்லுங்கள். ஏனென்றால், அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்தபோது நன்றாக எரிவதற்காக நெருப்பின்) மீது ஊதியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) எனவே, ஆயிஷா (ரளி) அவர்கள் அதைக் கொன்றுவந்தார்கள் என்று இப்னு உமர் (ரளி) மூலம் விடுதலை பெற்ற நாஃபிஹ் (ரளி) கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார். அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட அப்பெண், இந்த ஈட்டி எதற்காக? என்று வினவினார். நாங்கள் பல்லியைக் கொல்வோம் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள்: திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்பினுள் போடப்பட்டிருந்தபோது, உயிரினங்கள் யாவும் அதை அணைக்க முற்பட்டன. ஆனால், பல்லி மட்டும் அவர் மீது (நெருப்பு நன்றாகப் பற்றி எரிவதற்காக) அதை ஊதத் தொடங்கியது என ஆயிஷா (ரளி) கூறியதாக நாஃபிஹ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)2

ஃபாகிஹ் பின் அல்முஹீரா (ரளி) அவர்களின் மூலம் விடுதலை பெற்ற சாயிபா எனும் பெண்மணி (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தேன். அவரின் வீட்டில் ஓர் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் அன்னையே! இந்த ஈட்டியை வைத்து என்ன செய்வீர்கள்? என்று வினவினேன். இது இந்தப் பல்லிகளுக்காக (நாங்கள் வைத்திருக்கிறோம்). இதன் மூலம் அவற்றை நாங்கள் கொல்வோம் என்று பதிலளித்தார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் கூறிய விசயத்தைக் கூறினார்கள். திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்புக்குள் போடப்பட்டபோது நிலத்திலிருந்த எந்த உயிரினமும் அந்த நெருப்பை அணைக்காமல் இல்லை. ஆனால், பல்லி மட்டும் அவருக்கு (நன்றாக நெருப்பு எரிவதற்காக) ஊதத்தொடங்கியது. எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்ல ஏவினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)*3

இப்ராஹீம் நபியின் விவாதம்

* அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டான் என்பதற்காக (ஆணவங்கொண்டு) இப்ராஹீமிடம், அவருடைய இறைவன் குறித்து எதிர்வாதம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (அதற்கு) இப்ராஹீம், அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்) என்று கூறினார். அப்போது (அல்லாஹ்வை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

பிடிவாதமான, வரம்புமீறிய, அநியாயக்கார அரசனுடன் இப்ராஹீம் நபி செய்த விவாதத்தை அல்லாஹ் கூறுகின்றான். அவன், தன்னைத் தானே கடவுள் என்று வாதிட்டான். ஆனால், அவன் கூறிய கூற்றை இப்ராஹீம் நபியவர்கள் ஒரு பலமான ஆதாரத்தின் மூலம் உடைத்தெறிந்தார். மேலும், அவனுடைய அதீத அறியாமையையும் குறைவான அறிவையும் அவர் அவனுக்கு விளக்கினார். அவனுடைய ஆதாரத்தை உடைத்தெறிந்தார். ஆதாரம் காண்பிக்கின்ற வழிமுறையை அவனுக்கு விளக்கினார்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் வரலாறு மற்றும் வமிசம் பற்றிய ஆய்வாளர்களும் கூறியுள்ளதாவது: அவன் பாபிலோன் நகரத்தின் அரசனாவான். அவனுடைய பெயர், நும்ரூத் பின் கன்ஆன் பின் கூஷ் பின் சாம் பின் நூஹ் ஆகும். இதை முஜாஹித் (ரஹ்) கூறியுள்ளார். நும்ரூத் பின் ஃபாலஹ் பின் ஆபிர் பின் ஸாலிஹ் பின் அர்ஃபக்ஷத் பின் சாம் பின் நூஹ் என்பதாகும் என்று மற்றோர் கூறியுள்ளனர். முஜாஹித் (ரஹ்) அவர்களும் மற்றோரும் கூறியுள்ளதாவது: அவன் உலகம் முழுமைக்கும் அரசனாக இருந்தவர்களுள் ஒருவனாவான். அவன் உலகம் முழுவதையும் ஆட்சி செய்தான். அவ்வாறு ஆட்சி செய்தவர்கள் நால்வர் ஆவர். அவர்களுள் இருவர் இறைநம்பிக்கையாளர்கள்; வேறு இருவர் இறைமறுப்பாளர்கள் ஆவர். இறைநம்பிக்கையாளர்களான இருவர், துல்கர்னைன் மற்றும் சுலைமான் (அலை) ஆவர். இறைமறுப்பாளர்களான இருவர், நும்ரூத் மற்றும் புஃக்த்துநஸ்ஸர் ஆவர்.

நும்ரூத் என்பவன் நானூறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்தான். அவன் மிகவும் வரம்பு மீறினான்; அடக்கி ஆண்டான்; அநியாயம் செய்தான்; இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

நும்ரூதின் கர்வம்

இப்ராஹீம் நபி, இணையில்லாத, தனித்தவனான அல்லாஹ் ஒருவனையே வழிபட வேண்டும் என்று அவனை அழைத்தார். ஆனால், அவனுடைய அறியாமையும், வழிகேடும், நீண்ட ஆசையும் அவனைத் தன் படைப்பாளனையே மறுக்கச் செய்தன. அது குறித்து இப்ராஹீம் நபி அவனுடன் தர்க்கம் செய்தார். அவனோ, தானே இறைவன் என்று வாதிட்டான். அப்போது இப்ராஹீம், என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான் என்று கூறியபோது, நானும் உயிர்கொடுப்பேன்; இறக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். (2: 258)

கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியுள்ளனர்: இரண்டு நபர்கள் அவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார்கள். அவ்விருவருக்கும் மரண தண்டனை உறுதியாகிவிட்டது. அப்போது, அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது ) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதினான். ஆனால், இது விவாதம் செய்வதற்கேற்ற முறை இல்லை. மாறாக, இது விவாதம் செய்கின்ற முறைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது; இதில் எதிராளியின் விவாதத்தை எதிர்கொள்கின்ற எந்த வழிமுறையும் பின்பற்றப்படவில்லை; அவனது இத்தகைய செயல்பாடு எந்த விவாத முறையிலும் இல்லை; ஆகவே, இது விதண்டாவாதமே ஆகும்.

உண்மையில் இது விவாதத்தை முறிப்பதாகும்; உயிரினங்களை உயிர்ப்பித்தல் மற்றும் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை நேரடியாக நிகழ்வதின் மூலம் படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்துக் கொண்டார். மேலும், அதைச் செய்பவன் ஒருவன் கண்டிப்பாக இருக்கிறான் என்பதையும், அவன் இல்லாமல் அது தானாகவே இயங்க முடியாது என்பதையும், படைத்தல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துதல் போன்ற நேரடியாக நிகழக்கூடிய செயல்களுக்கு திண்ணமாக ஒரு படைப்பாளன் வேண்டும் என்ற அவசியத்தையும், விண்மீன்கள், காற்று, மேகம் மற்றும் மழை போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல், கண்கூடாகக் காணப்படுகின்ற உயிரினங்களைப் படைத்தல் பின்னர் அவற்றை மரணிக்கச் செய்தல் இவை அனைத்தையும் செய்யக்கூடிய படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் இப்ராஹீம் நபி உணர்ந்து, இவற்றையே அவர், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக எடுத்துவைத்தார்.

இதனால்தான் இப்ராஹீம் நபி கூறினார்: என்னுடைய இறைவன் உயிர் கொடுப்பான்; இறக்கச் செய்வான். (2: 258) அதன்பின் அந்த அறிவற்ற அரசன் கூறினான்: நானும் உயிர் கொடுப்பேன்; இறக்கச் செய்வேன். (2: 258) அவன் கூற்றுப்படி, நேரடியாகக் கண்ட இந்த நிகழ்வுகளைச் செய்யக்கூடியவன் நான்தான் என்று அவன் நாடியிருந்தால், அவன் கர்வமும் பிடிவாதமும் கொண்டுவிட்டான். அல்லது கத்தாதா, சுத்தீ மற்றும் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்-அலைஹிம்) ஆகியோர் கூறியபடி, (அவன் அவ்விருவருள் ஒருவனைக் கொலைசெய்யுமாறும் மற்றொருவனை மன்னித்து விட்டுவிடுமாறும் ஏவினான். (அதாவது) அவ்விருவருள் ஒருவனுக்கு அவன் உயிர்கொடுத்ததைப் போன்றும் மற்றொருவனை மரணிக்கச் செய்ததைப் போன்றும் அவன் கருதிக் கொண்டான்.) அவன் இக்கருத்தை நாடியிருந்தால், அவன் இப்ராஹீம் நபியின் கூற்றுக்குத் தொடர்பான எதையும் கூறவில்லை. ஏனென்றால், அவன் அவரின் வாதத்தை மறுக்கவுமில்லை. அவர் காட்டிய ஆதாரத்திற்கு எதிராக எந்த ஆதாரத்தையும் காட்டவுமில்லை.

நும்ரூதை வாயடைக்கச்செய்தல்

அந்த அரசனின் விவாதம் முடிவுற்றபோது, அங்கிருந்தவர்களின் உள்ளத்தில் அந்த விவாதம் மிகச் சிறிதாகத் தோன்றியிருக்கலாம். எனவே, படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்காகவும் நும்ரூதின் வாதத்தை முறியடிப் பதற்காகவும் மற்றோர் ஆதாரத்தை இப்ராஹீம் நபி எடுத்து வைத்தார். அவர் கூறினார்: திண்ணமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; (முடிந்தால்) நீ அதை மேற்கில் உதிக்கச் செய் (பார்க்கலாம்). (2: 258) 

 அதாவது இந்தச் சூரியன் ஒவ்வொரு நாளும் இறைவனுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்கிவருகிறது. அதனைப் படைத்தவன், அதனை ஆள்பவன், அதனைச் சுழலச் செய்பவனின் சுழற்சிக்கேற்ப அது கிழக்கில் தோன்றுகிறது. அந்த இறைவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன். நீயே உயிர்கொடுப்பவனாகவும் மரணிக்கச்செய்பவனாகவும் இருந்தால், இந்தச் சூரியனை மேற்கிலிருந்து உதிக்கச்செய். மேலும், எவன் உயிர்கொடுக்கவும் மரணிக்கச்செய்யவும் செய்கின்றானோ அவன்தான், தான் விரும்பியதையெல்லாம் செய்வான்; அவனை எதுவும் தடுக்காது; அவனை யாரும் வெல்ல முடியாது. மாறாக, அவனே எல்லாப் பொருளையும் அடக்கி ஆள்கிறான்; அவனுக்கே எல்லாப் பொருட்களும் பணிகின்றன. நீ நினைப்பதைப் போன்று நீ இருந்தால், இதைச் செய்துகாட்டு. நீ இதைச் செய்யவில்லையென்றால், நீ நினைப்பதைப் போன்றவனாக நீ இல்லை என்பதை விளங்கிக்கொள். இது போன்ற எச்செயலையும் உன்னால் செய்ய முடியாது என்பதை நீயும் ஒவ்வொருவரும் அறிவர். மேலும், ஒரு கொசுவையோ அதைவிடச் சிறிய உயிரினத்தையோ உன்னால் படைக்க முடியாது; நீ மிகவும் இயலாதவன் என்று இப்ராஹீம் (அலை) கூறினார்.

இப்ராஹீம் (அலை) அந்த அரசனுடைய வழிகேட்டையும், அறியாமையையும், அவனுடைய வாதத்தில் அவன் பொய்யன் என்பதையும் எடுத்துரைத்தார். அவன் செல்கின்ற பாதை தவறானது என்பதையும் மக்களின் அறியாமையை வைத்தே அவர்களை அவன் ஆட்சி செய்கின்றான் என்பதையும் அவனுக்கு விளக்கினார். அச்சமயத்தில், இப்ராஹீம் நபிக்குப் பதில் கொடுக்க அவனிடம் ஒன்றுமில்லை. எனவே, விவாதம் முடிந்துவிட்டது; அவன் அமைதியாகிவிட்டான். ஆகவேதான் அவர் கூறினார்: (அல்லாஹ்வை) மறுத்த அவன், வாயடைத்துப் போனான். அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டமாட்டான். (2: 258)

சுத்தீ (ரஹ்) கூறியுள்ளார்: அந்த விவாதம், இப்ராஹீம் நபியவர்கள் நெருப்புக் குண்டத்திலிருந்து வெளியேறிய அன்று, அவருக்கும், நும்ரூத் அரசனுக்கும் இடையே நடைபெற்றது. அந்நாளில் மக்களெல்லாம் ஒன்றுகூடவில்லை. அப்போது இந்த விவாதம் அவ்விருவருக்கிடையே நடைபெற்றது.

--------------------------அடிக்குறிப்புகள் -------------------------

1.இதே நபிமொழியை முஸ்லிம், நசயீ மற்றும் இப்னுமாஜா போன்ற நூற்களிலும் காணலாம். 2.மேற்கண்ட இரண்டு நபிமொழியையும் இமாம் அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார். *3. இதே நபிமொழியை இப்னுமாஜா நூலிலும் காணலாம்.




அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
  

கருத்துகள் இல்லை: