செவ்வாய், 19 அக்டோபர், 2010

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 11)

புனிதபூமிக்கு வருகை தருதல்

பின்னர், இப்ராஹீம் நபி, எகிப்தை விட்டுவிட்டுப் புண்ணிய நாட்டை நோக்கி  நடக்கலானார். அது அங்கிருந்த பைத்துல் முகத்தஸ் ஆகும். அவருடன் கால்நடைகள், அடிமைகள் மற்றும் மிகுதியான பொருள்கள்  இருந்தன. அவர்களுடன் கிப்தி வமிசத்தையும் எகிப்து நாட்டையும் சேர்ந்த ஹாஜர் என்பவர் சேர்ந்து வந்தார்.

திண்ணமாக லூத் (அலை) இப்ராஹீம் நபியின் கட்டளையின்பேரில் அவருடைய அதிகமான பொருட்களிலிருந்து ஹவ்ர் எனும் நகருக்காகச் செலவுசெய்தார். ஹவ்ர் என்று அறியப்படுவது ஸுஹர் எனும் நகரமாகும். அவர் சதூம் எனும் நகரத்தில் தங்கினார். அதுதான் அந்தக் காலத்தில் அந்நகரங்களின் தாயாக இருந்தது. ஆனால், அந்நகர மக்களெல்லாம் தீயவர் களாகவும் இறைமறுப்பாளர்களாகவும் பாவிகளாகவும் இருந்தனர்.
அச்சமயத்தில், அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்து, அவர் தம் பார்வையை எல்லாப் பக்கமும் விசாலப்படுத்தக் கட்டளையிட்டான். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லாத் திசைகளிலும் கவனம் செலுத்துமாறு கட்டளையிட்டான். இந்த நிலமனைத்தையும் கடைசிக்காலம் வரை உமக்காகவும் உம்முடைய சந்ததியினருக்காகவும் நான் ஆக்கவுள்ளேன் என்ற நற்செய்தியையும், உம் சந்ததியை நிலமண்ணின்  எண்ணிக்கை அளவுக்கு நான் அதிகப்படுத்துவேன் என்ற நற்செய்தியையும் அல்லாஹ் கூறினான்.
அந்த நற்செய்தி இந்தச் சமுதாயத்தை வந்தடைந்தது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை. இந்த முஹம்மத் நபியின் சமுதாயத்தைவிடப் பெரிதாகவும் இல்லை.  



அதை உறுதிப்படுத்துகின்றவிதமாக நபி (ஸல்) அவர்களின் கூற்று அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமிப்பரப்பை எனக்காக ஒன்றாகக் குவித்தான். நான் அதன் மேற்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் அதன் கிழக்கில் அமைந்திருக்கின்ற பகுதிகளையும் ஒருசேரக் கண்டேன். என் சமுதாயத்தின் ஆட்சிஅதில் எனக்காக அல்லாஹ் எவ்வளவு ஒன்றுகுவித்தானோ அதுவரை அடைய இருக்கிறது.

அடக்கி ஆள்கின்ற ஒடுக்குமுறையாளர்களுள் ஒரு குழுவினர்லூத் (அலை) அவர்களைத் தாக்கிவிட்டு,   அவரைக் கைதுசெய்துஅவருடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அவருடைய கால்நடைகளைப் பிடித்துச் சென்றுவிட்டனர்.  இப்ராஹீம் நபிக்கு இச்செய்தி கிடைத்தவுடன், 318 ஆண்களை எதிர்நோக்கிச் சென்று லூத் (அலை) அவர்களை மீட்டிக்கொண்டுஅவருடைய பொருட்செல்வங்களையும் மீட்டிக்கொண்டு வந்தார். அவர்அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரிகளுள் பலரை வெட்டிவீழ்த்தினார். அவர்களை அவர் தோற்கடித்து அவர்களின் பொருட்களை எடுத்து வந்தார். டமாஸ்கசின் வட பகுதியை வந்தடைந்து அதன் வெளிப்புறத்தில் `பரஸா எனும் இடத்தில் முகாமிட்டார். இன்று  மகாமு இப்ராஹீம் எனும் இடத்தோடு `பரஸா எனும் வார்த்தை   இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படுவதற்குக் காரணம் அந்த இடத்தில்தான் இப்ராஹீம் நபியின் படை முகாமிட்டுத் தங்கியது. அதன் காரணமாகத்தான் அப்பெயர் வந்தது என்று தாம் கருதுவதாக இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.

பின்னர்அவர் அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவராக தம் நாட்டுக்குத் திரும்பினார். அதன் பின்னர்பைத்துல் மக்திஸ் நகரைச் சுற்றியிருந்த அரசர்கள் மிகவும் பணிந்தவர்களாகவும் கண்ணியப்படுத்துபவர்களாகவும் வந்து இப்ராஹீம் நபியைச் சந்தித்தார்கள். அந்த ஊரிலேயே இப்ராஹீம்  நபி தங்கிவிட்டார்.

ஸ்மாயீல் நபியின் பிறப்பு

வேதக்காரர்கள் கூறியுள்ளனர்: நிச்சயமாக இப்ராஹீம் நபி தம்முடைய இறைவனிடம் சிறந்தநல்ல சந்ததியைக் கேட்டார். அல்லாஹ்அவ்வாறே தருவதாக அவருக்கு நற்செய்தி கூறினான். இப்ராஹீம் பைத்துல் மக்திஸ் நகருக்கு வந்து பத்தாண்டுகள் ஆனபோதுஒரு நாள் சார்ரா அம்மையார் இப்ராஹீம் நபியிடம்திண்ணமாக இறைவன்எனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தடுத்துவிட்டான். எனவேநீர் என்னுடைய அடிமைப்பெண்ணை உறவுகொள்வீர்! அவள் மூலம் அல்லாஹ் நமக்கு ஒரு வாரிசைத் தரலாம் என்று கூறினார்.

அவர் தம் அடிமைப் பெண்ணை தம் கணவருக்கு வழங்கிய போதுஅவர் அப்பெண்ணுடன் உறவுகொண்டார். எனவேஅப்பெண் அவர் மூலம் கருவுற்றார். அவர் கருவுற்றபோது அவருடைய எண்ணம் உயர்வடைந்தது. அவர் தம்முடைய எஜமானியைவிடப் பெரியவராகக் கருதிக் கொண்டார். எனவேசார்ரா அம்மையார் அவரைப் பார்த்துப் பொறாமைகொண்டார்அதைத்  தம் கணவர் இப்ராஹீமிடம் முறையிட்டார்.

நீர் விரும்பியதைச் செய்துகொள்வீர்! என்று இப்ராஹீம் நபி பதிலளித்தார். எனவேஹாஜர் பயந்து ஓடினார். அங்கிருந்த ஓர் ஊற்றின் அருகில் தங்கினார். அங்குஅவரிடம் தோன்றிய ஒரு வானவர், “நீர் பயப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ்நீர் கருவுற்றிருக்கின்ற இந்தக் குழந்தை மூலம் நன்மையைச் செய்யவுள்ளான். அல்லாஹ் உம்மைத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டிருப்பதுடன்நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர். அவருக்கு இஸ்மாயீல் என்று நீர்  பெயர் சூட்டுவீர் என்ற நற்செய்தியையும் கூறியுள்ளான். அந்தக் குழந்தைதான் எல்லோரின் அன்பிற்குரியவராக ஆகுவார்எல்லோரின் மீதும் அவரின் ஆதிக்கம் இருக்கும்எல்லா மக்களின்  பக்கபலமும் ஆதரவும் அவருக்கு இருக்கும்அவர் அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்வார் என்று கூறினார். இதைக்கேட்ட ஹாஜிர்அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

நற்செய்தி மெய்யாகுதல்

அந்த நற்செய்தி அவருடைய பிள்ளை முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் மெய்யானது. நிச்சயமாகமுஹம்மத் (ஸல்) மூலம் அரபியர்கள் தலைவர்களாயினர். மேற்கிலிருந்து கிழக்கு வரை அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்தனர். முன்சென்ற எந்தச் சமுதாயத்துக்கும் கொடுக்காத பயனுள்ள கல்வியையும் நற்செயல்களையும் இந்த அரபியர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். இதுவெல்லாம்மற்ற இறைத்தூதர்களைவிட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறப்பின் காரணத்தால்தான் கிடைத்தன. அவர்களுடைய தூதுத்துவத்தின் அருளாலும் அந்த நற்செய்தியின் மோட்சத்தாலும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் முழுமையாலும் அவர்கள் இவ்வுலக மாந்தர் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டதாலுமே இந்த உயர்வும் சிறப்பும் அரபியர்களுக்குக் கிடைத்தன. ஆகஹாஜிர் திரும்பி வந்தபோதுஅவர் இஸ்மாயீலைப் பெற்றெடுத்தார்.

வேதக்காரர்கள் கூறுகின்றனர்: அவர் அக்குழந்தையைப் பெற்றெடுத்தபோது இப்ராஹீம் நபியின் வயது எண்பத்து ஆறு.  அது இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகும். இஸ்மாயீல் (அலை) பிறந்தபோதேஅல்லாஹ் சார்ரா அம்மையார் மூலம் இஸ்ஹாக்கை வழங்கப்போவதாக இப்ராஹீமுக்கு நற்செய்தி நவின்றான். இதைக் கேட்டவுடன் அவர் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்துஅவனை வணங்கினார். அப்போது அல்லாஹ் அவரிடம்நான் உமக்கு இஸ்மாயீல் விசயத்தில் பதிலளித்தேன். மேலும்நான் அவர்மீது அருள்புரிந்தேன். அவருக்கு அருள்வளத்தை அதிகப்படுத்தி அவரை மேன்மையடையச் செய்தேன்.  அவருக்கு 12 தலைவர்கள் பிறப்பார்கள். அவரை நான் மிகப்பெரும் சமுதாயத்துக்குத் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.

முஹம்மத் நபியின் சமுதாயம்-ஒரு நற்செய்தி

இந்த  நற்செய்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மிகப்பெரிய சமுதாயம் பற்றிய நற்செய்தியாகும். அந்த 12 தலைவர்கள் எனும் கூற்றுநல்வழிபெற்ற ஜனாதிபதிகளான 12 பேர்களைக் குறிக்கிறது. அவர்களைக் கொண்டே நற்செய்தி கூறப்பட்டது. ஜாபிர் பின் சமுரா (ரளி) அறிவிக்கின்ற நபிமொழி அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பன்னிரண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறகு ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். ஆனால்என்னால் அதை விளங்க முடிய வில்லை. எனவேஅது பற்றி நான் என் தந்தையிடம் கேட்டேன். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்று நபியவர்கள் கூறியதாக அறிவித்தார். (நூற்கள்: புகாரீமுஸ்லிம்)*1

மற்றோர் அறிவிப்பில், 12 கலீஃபாக்கள் வருகின்ற வரைஇவ்விசயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அவர்கள் அனைவரும் குரைஷி வமிசத்தைச் சேர்ந்தவர்கள்  என்று வந்துள்ளது. (நூல்: முஸ்லிம்)
அவர்களுள் உள்ளவர்கள்தாம் நான்கு  இமாம்களான அபூபக்ர்உமர்ஸ்மான் மற்றும் அலீ (ரளி-அன்ஹும்) ஆவர். அவர்களுள் உள்ள மற்றொருவர்உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆவார். அப்பாஸ் (ரளி) அவர்களின் சந்ததிகளுள் சிலரும் அந்த 12 பேர்களுள் உள்ளோராவர். அவர்கள் 12 பேரும் வரிசையாக வருவார்கள் என்று பொருள் இல்லை. மாறாகஅவர்கள் வருவார்கள் என்பது மட்டும் உறுதி.

ஷீஆக்கள் நம்பிக்கைகொண்டுள்ள 12 இமாம்கள் இங்கு நோக்கமன்று. அவர்கள் அந்த 12 இமாம்களுள் முதலாவது இமாமாக அலீ பின் அபீதாலிப் (ரளி) அவர்களைக் கூறுவார்கள். அவர்களுள் கடைசியானவர்சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர் ஆவார். இவர் (வருவார் என) எதிர்பார்க்கப்படுகிறார். இவருடைய பெயர்அவர்கள் எண்ணுவதைப்போல்முஹம்மத் பின் அல்ஹசன் அல்அஸ்கரீ ஆகும். திண்ணமாக  இவர்கள் (ஷீஆக்கள்) கூறுகின்ற 12 நபர்களுள் அலீ (ரளி) அவர்கள் மற்றும் அவரின் மகனார் ஹசன்-இவ்விருவரைத் தவிர மற்றவர்களால் எவ்விதப் பெரும் பயனும் ஏற்படவில்லை.

அலீ (ரளி) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்றுமக்களுக்குப் பெரும் சேவைசெய்தார்கள். ஹசன் (ரளி) அவர்கள் முஆவியா (ரளி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துபெரும் சண்டையைத் தவிர்த்துக்கொண்டார்குழப்பம் எனும் தீயை அணைத்தார்முஸ்லிம்களின் மத்தியில் போர் ஏற்படாமல் அமைதியாக்கினார். மற்றவர்கள்  பொதுமக்களுள் ஒருவராகவே கருதப்பட்டனர். சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த விசயத்திலும் ஆளுமையோ அதிகாரமோ இல்லை.  சாமர்ரா (சுர்ர மர்ரஆ) நகரைச் சேர்ந்த பிஸ்ரிதாப் என்பவர்எதிர்காலத்தில் வருவார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள விசயம் அவர்களின் குறுமதியையே காட்டுகிறது. அது ஓர் உளறலாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

----------------அடிக்குறிப்பு------------------------

*1.(அ.கு) இந்த நபிமொழிக்குப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற ஆட்சித் தலைவர்களாக 12 பேர் வருவார்கள்அவர்களுக்குப் பின் குழப்பம் தலை தூக்கும் என்று சிலர் விளக்கமளித்துள்ளார்கள். இதன்படி வலீத் பின் யஸீத் காலம்வரை இந்நிலை நீடித்தது என்றும்அவரது காலத்தில் குழப்பம் வெடித்து உமய்யா-அப்பாசிய்யா என்ற குழுப்பூசல் தலை தூக்கியது என்றும் கூறப்படுகிறது. வேறு சிலர்உமய்யா ஆட்சியாளர்களுள் முதலாவது நபரான யஸீத் பின் முஆவியாவுக்கும் இறுதியானவரான மர்வானுக்கும் இடையே 12 ஆட்சித் தலைவர்கள் இடம்பெற்றனர்பனூஉமய்யாக்களிடமிருந்து ஆட்சி மாறியபோது பயங்கரமான அரசியல் மோதல் ஏற்பட்டது என்று விளக்கமளித்துள்ளனர். வேறு பல விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.  (நூல்: ஃபத்ஹுல் பாரீ)

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

  

கருத்துகள் இல்லை: